Tuesday, October 12, 2010

கருணாநிதியை சந்திக்கிறார் ராமதாஸ்-'அப்பாயின்ட்மென்ட்' கிடைத்தது!

சென்னை: திமுக, அதிமுக இரண்டுமே எங்களுக்கு ஒன்றுதான் என்று கூறி சில நாட்களே ஆன நிலையில் தற்போது முதல்வர் கருணாநிதியை சந்திக்கப் போகிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

முதல்வரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியும். ஆனால் ஜெயலலிதாவை சந்திக்க காத்துக் கிடக்க வேண்டும் என்றும் அவர் சமீபத்தில் தனது பேட்டியில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அவர் கூறியது உண்மை என்று நிரூபிப்பதைப் போல இப்போது டாக்டர் ராமதாஸ் சந்திக்க நேரம் வேண்டும் என்று கேட்டவுடன் முதல்வர் கருணாநிதி நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம்.

திமுக கூட்டணியை விட்டு துரத்தப்பட்ட பின்னர் டாக்டர் ராமதாஸ், முதல்வரை சந்திக்கப் போவது இதுவே முதல் முறை என்பதால் இது என்ன மாதிரியான சந்திப்பு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மகன் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தர திமுக இழுத்தடித்து கழுத்தறுத்து விட்டதால் கடும் அதிருப்தி அடைந்த டாக்டர் ராமதாஸ் திமுகவையும், திமுக தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதேசமயம், திமுக தரப்புடன் மறைமுகமாக உறவு வைத்துக் கொள்ளவும் தீவிரமாக முயன்று வந்தார். அதேபோல அதிமுக பக்கமும் நூல் விட்டு வந்தார். ஆனால் இரு தரப்பிலுமிருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை. இதனால் வெறுத்துப் போன நிலையில் உள்ளார் ராமதாஸ்.

இந்தநிலையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தை சாக்காக வைத்து முதல்வரை சந்தித்துப் பேச தீவிரமாக முயன்று வந்தார். தற்போது அவரது கடும் முயற்சிக்குப் பலன் கிடைத்துள்ளது. ராமதாஸ் சந்திக்க முதல்வர் கருணாநிதி அனுமதி அளித்துள்ளாராம்.

நாளை அல்லது நாளை மறுதினம் முதல்வரை ராமதாஸ் சந்திப்பார் என்று தெரிகிறது. அப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை வைக்கவுள்ளார் என்று தெரிகிறது. அதேசமயம், கூட்டணி குறித்தும் ராமதாஸ் பேசக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: