Friday, July 23, 2010

கூட்டணியை ராமதாஸ் பார்த்துக் கொள்வார்: அன்புமணி

திருப்பத்தூர்: கூட்டணி பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. அதை தலைவர் ராமதாஸ் பார்த்துக் கொள்வார். பாமக இல்லாமல் யாரும் ஆட்சிக்கு யாரும் வரமுடியாது என்று அக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. அதில்
அன்புமணி பேசுகையி்ல்,

பாட்டாளி மக்கள் கட்சி முதன்மை கட்சியாக வரவேண்டும் என பேசிக் கொண்டே இருந்தால் வராது. தொண்டர்கள் கடுமையாக உண்மையாக உழைக்க வேண்டும். கிராமந்தோறும் வீடு வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 4 சட்டமன்ற உறுப்பினர்களையாவது வெல்ல வைக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை தேர்வு செய்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒவ்வொரு தொகுதியிலும் 5 நாட்கள் தங்கி கிராமம் கிராமமாக சென்று மக்களை உற்சாகப்படுத்த உள்ளோம்.

வெறிபிடித்த அடிமட்ட தொண்டர்கள் இருப்பது நமது கட்சியில் மட்டும் தான். நமது கட்சியை அழிப்பதற்கு யாரும் பிறக்கவில்லை. பிறக்கவும் முடியாது. அப்படி நினைத்தால் அவர்கள் தான் அழிந்து போவார்கள்.

பாமக 7 இடங்களில் தோற்றதும் அழிந்து விட்டது, ஒழிந்து விட்டது என்று பலர் கூறினர். பாமகவை யாராலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது.

கட்சி நிர்வாகிகள் பழைய ஆட்களை சென்று பார்க்க வேண்டும். அவர்களது குறைகளை கேட்டு மீண்டும் அவர்களை அழைத்து வரவேண்டும். வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் நமது கட்சியில் சேர்வதற்கு தயாராக உள்ளனர். அவர்களை அணுகி நமது கட்சியில் புதியதாக சேர்க்க வேண்டும்.

இதற்கு முன்பு எப்படி இருந்ததோ தெரியாது. இனி இப்படி தான் இருக்க போகிறோம். கட்சிக்காக முழு நேரத்தை நான் செலவிட போகிறேன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் இனி அந்த இடத்திற்கு நான் வந்து நிற்பேன். நமது கட்சியில் கோஷ்டிகள் இருக்ககூடாது. நாம் அனைவரும் ராமதாஸ் கோஷ்டி தான்.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. பெரிய மாவட்டமாக உள்ள இதனை பிரித்து திருப்பத்தூரை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாவதற்கு சிலர் தடையாக உள்ளனர். சிலரின் சுயநலனுக்காகப் பிரிக்காமல் இருக்காதீர்கள். மாவட்டத்தை பிரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்தபடியாக பாலாறு பிரச்சனை. இதற்காக பலமுறை நமது கட்சி பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளது. இருப்பினும் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டி வருகிறது. எனது தலைமையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் அணையை உடைக்கும் போராட்டம் விரைவில் நடைபெறும்.

கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உயர்ந்த பொறுப்புகள் வழங்கப்படும். பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பென்னாகரம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் நாம் தோற்கடிக்கப்பட்டோம். அது ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட தேர்தல். நாம் பணம் தராமல் இரண்டாவது இடம் பெற்றோம். இனி பென்னாகரம் தேர்தல் பார்முலாவை பயன்படுத்த உள்ளோம்.

கூட்டணி பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. அதை தலைவர் ராமதாஸ் பார்த்துக் கொள்வார். பாமக இல்லாமல் யாரும் ஆட்சிக்கு யாரும் வரமுடியாது.

வாலாஜா ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று சென்றதால் ரயில்வே துறைக்கு ரூ.5 கோடி வரை லாபம் கிடைத்தது. தற்போது எந்த ரயிலும் நிற்பதில்லையாம். இதுகுறித்து 4 முறை மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

தன்னால் முடியாது என்று அமைச்சர் சொல்லட்டும். நான் நிறுத்திக் காட்டுக்கிறேன் என்றார் அன்புமணி.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: