Thursday, July 15, 2010

28ம் தேதி வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்-ராமதாஸ்

செஞ்சி: வருகிற28ம் தேதி வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

செஞ்சியில் நடந்த கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராமதாஸ். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு வருகிற 28-ந்தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. நமக்கு போராட்டம் என்பது புதிது அல்ல. 1980-ம் ஆண்டில் இருந்து 30 ஆண்டுகள் போராட்டமே வாழ்க்கையாகி விட்டது. இன்னும் நமக்கு வேண்டியது கிடைக்கவில்லை.

69 சதவீத இடஒதுக்கீடு நீடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நல்ல தீர்ப்பு அதற்கு பா.ம.க.வும் ஒரு காரணமாகும். இது சமூக நீதிக்காக போராடும் கட்சி. ஏழை, பணக்காரன் என்றில்லாமல் அனைவரும் சம உரிமை பெற வேண்டும்.

108 ஜாதிகளுக்கு சேர்த்து வழங்கிய ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10 சதவீதம் கூட கிடைக்கவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வேண்டும். இதற்கு கோரிக்கை வைக்க யாரும் முன் வரவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் 41 சதவீதம் குடிசைகளில் வாழ்பவர்கள் வன்னியர்கள். சுதந்திரம் என்ன ஆனது.

விவசாய நிலங்களை மனைகளாக மாற்றி கூறுபோட்டு விற்கிறார்கள். விவசாயம் பாதிக்கப்படக்கூடாது. நம் மண்ணை, நிலத்தை மார்வாடிகளும், ஆந்திராகாரர்களும் வாங்குகிறார்கள். மண்ணை மட்டும் இழக்கவில்லை, விவசாயத்தையும் இழக்கிறோம். விளை நிலங்கள் கூறுபோடுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

வருகிற 28-ந்தேதி தமிழகம் முழுவதும் வன்னியர்களுக்கு வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் நீங்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

மீண்டும் ஜாதி அரசியலில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கும் பாமக, பல வருட இடைவெளிக்குப் பின்னர் வன்னியர்களுக்காக நடத்தும் முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: