Monday, May 17, 2010

தமிழினம் கண் கலங்கி நிற்கிறது-டாக்டர் ராமதாஸ்

Vote this article
Up (0)
Down (0)


சென்னை: இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு பகுதியில் மாநில சுயாட்சி முறையைக் கொண்டு வர உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கடந்த ஆண்டு மே 17ம் தேதி இலங்கையில் நடந்த உச்சகட்ட போரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாமக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்க ராமதாஸ் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்,

ஒரு இனம் திட்டமிட்டு, அழிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய சொந்தங்கள் நம் கண் முன்னே கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நம்மால் எதையும் செய்ய முடியவில்லை.

இன்றைய தினம் தமிழினம் கண் கலங்கி நிற்கிறது. அவர்களுக்கு விடிவு காலம் எப்போது, அவர்கள் எழுந்து வாழும் எப்போது வரும் என்ற ஏக்கம் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களின் கேள்வியாக இருக்கிறது. இதற்கு விடை காணும் காலம் விரைவில் வரும். அந்த வகையில் பாமக தன்னுடைய பணியை தொடர்ந்து செய்யும்.

1989ம் ஆண்டில் பாமக ஆரம்பிக்கப்பட்ட போது நாங்கள் போட்ட ஒரே தீர்மானம் இலங்கையில் தமிழீழம் அமைவது என்பது தான். அதன்பிறகு ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தி, அதில் பேசியதற்காக அப்போது நானும், தீரன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்.

அப்போது நான் சொன்னேன். இலங்கை தமிழர்களுக்காக பேசுவேன். பேசிக்கொண்டே இருப்பேன் என்று. இப்போதும் அதைத்தான் செய்துகொண்டே இருக்கிறேன்.

இலங்கையில் தமிழர்கள் பகுதியில் மீண்டும் புலம் பெயர்ந்த தமிழர்களை குடி அமர்த்த வேண்டும். அவர்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும். வடக்கு-கிழக்கு பகுதிகளை இணைத்து அங்கே தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தர உலக நாடுகள் முன் வர வேண்டும்.

இந்தியாவில் காஷ்மீரில் மாநில சுயாட்சி முறை இருந்து வருகிறது. அதைப் போல் ஈழத்தில் வடக்கு-கிழக்கு பகுதியில் மாநில சுயாட்சியை ஏற்படுத்தித் தர உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை உதவ வேண்டும் என்றார்

Thursday, May 13, 2010

திமுக கூட்டணியில் மீண்டும் பாமக?-கருணாநிதி பேட்டி

சென்னை: உடல் ஓய்வைத் தேடுகிறது, உள்ளம் உழைப்பைத் தொடரச் சொல்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

5வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளைக் கடந்து நேற்று 5வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள அவர் இதையொட்டி அளித்துள்ள சிறப்புப் பேட்டிகளில் கூறியுள்ளதாவது:

மீ்ண்டும் கூட்டணியில் பாமக?:

கேள்வி: ராஜ்யசபா [^] தேர்தலில் திமுக மட்டும் தனியாக 3 இடங்களில் வெற்றி பெற முடியும். இந் நிலையில் உங்களை விட்டுப் பிரிந்து போன பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் உங்களோடு சேரப் போகிறது என்றும், டாக்டர் ராமதாசும், காடுவெட்டி குருவும் உங்களைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள் என்றும், டாக்டர் அன்புமணிக்கு ஒரு சீட் கேட்கப் போகிறார்கள் என்றும் செய்திகள் [^] வருகின்றன.இந்தச் செய்திகள் எல்லாம் உண்மையா

பதில்: இது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கெல்லாம் விடை காணத் தான் 30-5-2010 அன்று கழகத்தின் உயர் நிலை செயல் திட்டக் குழுவினைக் கூட்டியிருக்கிறோம். எங்கள் கட்சி ஒரு ஜனநாயக அடிப்படையிலான கட்சி என்பது உங்களுக்கே தெரியும். என்ன தான் நான் கட்சித் தலைவர் என்ற போதிலும்- இது போன்ற முக்கியமான பிரச்சனைகளில் கட்சியின் முடிவினை அறிந்து கொண்டு தான் முடிவெடுப்பேன் என்பதுதான் உங்களுக்கே தெரியுமே!

திமுகவுடன் நல்லுறவு- கருணாநிதியை மீண்டும் முதல்வராக்குவோம்: கூறுகிறார் காடுவெட்டி குரு

ஜெயங்கொண்டம்: திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையிலான உறவு இப்போது நன்றாக உள்ளது. கருணாநிதி யை அழைத்து மாநாடு நடத்தி, அவரிடம், நீங்கள்தான் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வீர்கள் என்று கூறப் போகிறோம் எனக் கூறியுள்ளார் வன்னியர் சங்கத் தலைவரான காடு வெட்டி குரு.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னரே திமுகவினருக்கும், பாமகவினருக்கும் இடையே இடையில் உறவு கசந்து போனது.

மத்திய அமைச்சர் ராஜா குறித்தும், முதல்வர் கருணாநிதி குறித்தும் மிகக் கடுமையாக பேசியதாகக் கூறி காடுவெட்டி குருவை குண்டர் சட்டத்தில் கைது செய்தது திமுக அரசு. இதைத் தொடர்ந்து கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கியது திமுக.

அதன் பின்னர் வந்த மக்களவைத் தேர்தலில் காடுவெட்டி குருவின் மிகக் கடுமையான வற்புறுத்தலின் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார் டாக்டர் ராமதாஸ்.

ஆனால் இன்று அதே காடுவெட்டி குரு, கருணாநிதியை மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வைப்போம் என முழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

எதிர்கால தேர்தலை கருத்தில் கொண்டு வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை வேலைகளை திட்டமிட்டு தொடங்கியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 120 தொகுதிகளை தேர்வு செய்து பென்னாகரத்தில் திட்டமிட்டு வேலைகள் செய்ததுபோல் உறுப்பினர்கள் சேர்க்கை, கிளைகள் அமைத்தல், கொடியேற்றுதல் என்று வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.

ஒவ்வொரு தொகுதிகளிலும் 60 ஆயிரம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க உள்ளோம்.

வரும் ஜுலை 18ம் தேதி பூம்புகாரில் 10 லட்சம் பெண்களை திரட்டி மகளிர் திருவிழா நடத்தும் பணியும், ஜுலை 28ம் தேதி கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் மற்றும் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான பணிகளையும் செய்து வருகிறோம்.

தமிழக முதல்வர் கருணாநிதியை டாக்டர் ராமதாஸ், அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ஜி.கே.மணி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் சந்தித்து வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்த உள்ளோம்.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு சாலை மறியல்கள் நடந்தபோது 120 சாதிகளுக்கு தனி இடஒதுக்கீடாக முதல்வர் கருணாநிதி, 'இந்த கனியை தருகிறேன் சுவைத்து பாருங்கள்' என்று இடஒதுக்கீடு வழங்கினார்.

வன்னியர்களுக்கு முதலில் இடஒதுக்கீடு வழங்கிய முதல்வர் கருணாநிதியை மீண்டும் சந்தித்து 2 கோடி வன்னியர்களுக்காக தனி இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைக்க உள்ளோம்.

முதல்வர் கருணாநிதியை சந்திப்பது வன்னியர்களுக்காக தனி இடஒதுக்கீடு கோரி மட்டுமே. இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டாம். கூட்டணி என்பது சட்டமன்ற தேர்தல் அறிவித்த பின்னர் டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் தலைமை செயற்குழுவை கூட்டி முடிவு செய்வார்கள்.

ராஜ்யசபா சீட் குறித்து டாக்டர் ராமதாசும், அன்புமணி ஆகியோரும் மற்றும் கட்சி செயற் குழுவும் முடிவு செய்யவர்.

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கருணாநிதி அறிவித்தால் முன்பு மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் கூறியதுபோல் மீண்டும் விழுப்புரத்தில் ஒரு மாநாட்டை கூட்டி இந்த முதல்வர் நாற்காலியில் நீங்கள்தான் (கருணாநிதி) முதல்வராக அமர்வீர்கள் என்று அறிவிப்போம். தற்போது திமுக-பாமக உறவு நன்றாக உள்ளது என்றார் காடுவெட்டி குரு.

எந்த காடுவெட்டி குருவால் திமுகவின் அன்பை இழந்ததோ அதே காடு வெட்டி குருவின் வாயாலேயே திமுகவுடன் நல்லுறவு இருக்கிறது, மீண்டும் கருணாநிதியே முதல்வர் என்று சொல்ல வைத்துள்ளது பாமக என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக- பாமக இடையே மீண்டும் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

Monday, May 10, 2010

போலீஸார் வீட்டுக்கே வந்து புகாரைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்- பாமக

சென்னை: போன் மூலம் யாரேனும் புகார் கொடுத்தால், புகார் கொடுத்தவர்களின் வீடுகளுக்கேச் சென்று போலீஸார் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

சட்டசபையில் நேற்று நடந்த உள்துறை மானிய கோரிக்கையின் மீது மணி பேசுகையில்,

இன்றைக்கு குற்றநிகழ்வுகளுக்கு ஏற்பவும், மக்கள் தொகைக்கு ஏற்பவும் போலீசாரின் எண்ணிக்கையை கூடுதலாக்க வேண்டும். 8 மணி நேர பணி வரம்பு, வார விடுமுறை, 8 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

பல இடங்களில் மக்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்லவே அஞ்சி புகார் செய்யாமலேயே விட்டுவிடுகிறார்கள். புகார் செய்தாலும் வழக்கு பதிவு செய்வதில்லை. புகார் செய்ய சென்றவர் மீதே வழக்கு பதிவு செய்யும் நிலையும் இருக்கிறது.

போன் செய்தால் வீட்டுக்கே சென்று புகாரை பெற்று வழக்கு பதிவு செய்யும் ஒரு சீர்திருத்த முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஏற்று அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாதிரி காவல் சட்டத்தை தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டும்.

சோதனைசாவடி, வாகன சோதனை, நெடுஞ்சாலை ரோந்து சமயங்களில் போலீசார் முறைகேடுகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரையே மிரட்டுகிறார்கள். இதில் தவறான புகார் தரும் வழக்கை பதிவு செய்யாமல் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரப்பனின் அண்ணன் மாதையன் எந்த குற்றமும் செய்யாமல் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

போலீஸ் தேர்வில் ஆண்களுக்கு உயரம் 168 செ.மீ என்பதை 170 ஆகவும் பெண்களுக்கு 157 செ.மீ. என்பதை 159 என்றும் உயர்த்தியதை கைவிட வேண்டும் என்றார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: