Wednesday, January 27, 2010

ஓட்டு போடும்போது ஒரே ஒருதரம் என் பேச்சை கேளுங்கள்-ராமதாஸ்

செஞ்சி: 42 வருடம் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் மாறி மாறி ஆண்டனர். 1 வருடம் கூட வன்னியன் ஆள தகுதி இல்லையா? ஒரே ஒருதரம் தேர்தலில் ஓட்டு போடும்போது இந்த ராமதாசின் பேச்சை கேளுங்கள். 234 தொகுதிகளில் 130 பேர் நாம் ஜெயிக்கலாம். பின்னர் தொடர்ந்து நாமே ஆட்சி செய்யலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

செஞ்சி அருகே அன்னமங்கலத்தில் நடந்த திருமண விழாவில் அவர் பேசுகையில்,

வீர வன்னியர்கள் அக்னியில் பிறந்தவர்கள். நாட்டில் உள்ள 500 ஜாதிகளில் 6 கோடி பேரில் வன்னியர்கள் மட்டும் 2 கோடி பேர் உள்ளனர். இவ்வளவு இருந்தும் சமுதாயத்தில் உரிய பங்கு கிடைக்கவில்லை. யாகத்தில் தோன்றியவன் வீர வன்னியன்.

நம் முன்னோர்கள் ஆண்டவர்கள், ஆட்சி செய்தவர்கள் ஜமின்தாராக இருந்தவர்கள். இப்படி ஆண்ட பரம்பரைக்கு இன்று வேலைவாய்ப்பில் 100ல் ஒரு இடம் தான் கிடைக்கிறது.

அதற்காக 1980 ல் வன்னியர் சங்கம் தொடங்கி டாக்டர் தொழிலில் சம்பாதித்த பணத்தை செலவழித்து கிராமங்களுக்கு சென்று பிரசாரம் செய்தேன். சாலை மறியல் போராட்டம் நடத்தி பலமுறை சிறை சென்று போராடினோம்.

அந்தப் போராட்டங்களில் அதிகமாக கலந்து கொண்டவர்கள் இந்த செஞ்சி பகுதியை சேர்ந்தவர்கள், ஏன் தேர்தலைகூட புறக்கணித்த கிராமங்களில் அண்ணமங்கலமும் ஒன்று. 7 நாள் சாலை மறியல், 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன் பிறகுதான் நமக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது.

தமிழகத்தில் இதுவரை 30 பேர் முதல்வராக இருந்துள்ளனர். இதில் 6 கோடியில் 2 கோடி வரை உள்ள வன்னியர் ஒருநாள் கூட முதல் வராகவில்லை. காரணம் ஒற்றுமை இல்லை. விழிப்புணர்வு இல்லை.

இன்று 130 வன்னியர்கள் நீதிபதிகளாகவும், 3 பேர் கலெக்டராகவும் உள்ளனர் என்றால் இது எனது போராட்டத்தால் கிடைத்தது. தற்போது எனது போராட்டத்தால் 350 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 7 பேர், 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள், 2 செக்ரட்டரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே வன்னியர். எப்போது இதற்கு விடிவுகாலம்?.

தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுக, அதிமுகவிற்கு ஓட்டு போடுகிறீர்கள். நம் ஜாதி இளைஞர்கள் நடிகர் கட்சியை (விஜய்காந்த்) வளர்க்கின்றனர், என்ன சமுதாயம் இது?.

42 வருடம் இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆண்டனர். 1 வருடம் கூட வன்னியன் ஆள தகுதி இல்லையா? ஒரே ஒருதரம் தேர்தலில் ஓட்டு போடும்போது இந்த ராமதாசின் பேச்சை கேளுங்கள்.

234 தொகுதிகளில் 130 பேர் நாம் ஜெயிக்கலாம்.பின்னர் தொடர்ந்து நாமே ஆட்சி செய்யலாம்.

கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ஜெயலலிதாவுக்கு பிறகு சசிகலா, நடராசன் 'மன்னார்குடி மைனர்கள்' எல்லாம் தமிழகத்தை ஆள்வார்கள்.

காங்கிரசில் வன்னியர்களுக்கு முதல்வர் பதவி தர மாட்டார்கள். திமுக, அதிமுக, நடிகர் கட்சி என எதிலாவது வன்னியருக்கு ஒரு உயர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதா? எத்தனை நாள் இவர்களிடம் கெஞ்சுவது.

பென்னகரம் தொகுதியில் 2000 பெண்களை அழைத்து பேசினோம். அவர்களில் யாரிடமும் பட்டுப் புடவையோ, தங்க நகையோ இல்லை. இதற்கு யார் கவலைப்படுவது?.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் எஸ்எஸ்எஸ்சி, பிளஸ் டூ வகுப்பில் பாஸ் செய்வதில் முதல் இடம் விருதுநகர் மாவட்டம், கடைசி இடம் விழுப்புரம் மாவட்டம். ஆனால் குடியில் மட்டும் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு குடிக்கச் சொல்லி அதில் வரும் பணத்தையே உங்களுக்கு வேட்டி, சேலை, டி.வி. என இலவசங்களை தருகின்றனர்.

எனவே நீங்கள் உங்கள் பிள்ளைகளை உங்களுக்காக ரூ.5 கோடியில் 250 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ள கல்வி கோவிலில் சேர்த்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்றவர்களாக உருவாக்குங்கள் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: