Wednesday, November 25, 2009

இடைத்தேர்தல்: பா.ம.க. போட்டியில்லை

சென்னை, நவ. 25: திருச்செந்தூர், வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. எங்கள் ஆதரவு யாருக்கு என்பதை ஓரிரு நாளில் அறிவிப்போம்.

நீதிமன்ற தீர்ப்புகளால் நடைபெறும் இடைத்தேர்தல்களைத் தவிர, பிற காரணங்களால் நடைபெறும் இடைத்தேர்தல்களில், அங்கு ஏற்கெனவே வெற்றி பெற்ற கட்சிக்கே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதை எங்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தேர்தல் நடைமுறைகளில் இதற்கேற்ப மாற்றம் கொண்டு வர வேண்டும். இதற்கு எல்லாக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Tuesday, November 24, 2009

பச்சையாக பணம் கொடுகிறார்கள்: இடைத்தேர்தல் ஒரு தமாஷ்- ராமதாஸ்

திருவண்ணாமலை: இடைத் தேர்தலில் பச்சையாக பணம் கொடுக்கிறார்கள். எனவே இடைத் தேர்தலை நாங்கள் தமாஷாகத்தான் பார்க்கிறோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

கடந்த 3 ஆண்டுகளில் 8 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. தற்போது வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த இடைத்தேர்தல்கள் எப்படி நடந்தது என்பதை பார்க்க வேண்டும்.

வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் எந்தவித புகாரும், எந்தவித குற்றச்சாட்டும் இன்றி சுதந்திரமாக நடக்கும் என்று முதல்வர் அறிவிக்க வேண்டும்.

இந்த தொகுதிகளில் வெளியூர் ஆட்கள் தங்கமாட்டார்கள், வெளி மாவட்ட அமைச்சர்கள் வரமாட்டார்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படமாட்டாது என்று முதல்வர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.

அப்படி உத்தரவாதம் கொடுத்தால் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும். பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே முதல்வர், அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து எந்த கட்சியும் ஓட்டுக்கு ஒரு பைசாக்கூட கொடுக்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதால் மக்கள் அடிக்கடி இடைத் தேர்தலை எதிர்பார்க்கின்றனர். இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும். திருமங்கலம் இடை தேர்தலுக்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுப்பது வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இடைத்தேர்தலை நாங்கள் தமாஷாகத்தான் நினைக்கிறோம். இடைத்தேர்தலே கூடாது என்பதுதான் பாமகவின் கருத்து. ஆளும் கட்சி நபர் ஒருவரையே நியமித்துக் கொள்ளலாம். அரசியலில் சினிமாத்தனமும், சினிமாவில் அரசியலும் வேரூன்றிவிட்டது.

2011ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக் கெடுப்பை சாதி வாரியாக நடத்தவேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது 178 எம்.பிக்களிடம் கையெழுத்து வாங்கி மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் கொடுத்தார். டெல்லியில் நான் கருத்தரங்கமும் நடத்தி இருக்கிறேன். பாமக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தது.

தமிழ்நாடு, இடஒதுக்கீட்டின் பிறப்பிடம், தாய்வீடு என்று சொல்லப்படுகிறது. எனவே மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடுதான் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும். ஆனால் மற்ற மாநிலங்கள் குரல் கொடுத்து அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக எடுப்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொறுப்பேற்க வேண்டும்.

முல்லை பெரியாறு அணை வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. தீர்ப்பு வரப்போகிறது என்று இருக்கும்போது 3 நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விசாரணை தொடங்க பல வருடம் ஆகும். இந்த காலதாமதத்திற்கு முழுக்க முழுக்க தமிழ்நாடு முதல்வர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Friday, November 20, 2009

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி போராட்டம்: ராமதாஸ்

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் சென்னை மாவட்ட மாநாட்டில் பேசிய அவர்,

தமிழகத்தில் தனிப்பெரும் சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது. ஆனால், வன்னியர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்காதவரை இந்த சமூகம் முன்னேறாது. எனவே, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

சென்னை உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டு 135 ஆண்டுகள் ஆகின்றன. நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகிறோம். உயர் நீதிமன்றத்தில் 54 நீதிபதிகளில் 9 பேர் பிராமணர்கள் ஆவார்கள்.

இதில் கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்கவில்லை.

135 வருட உயர் நீதிமன்ற வரலாற்றில் 4 வன்னியர்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்திருக்கின்றனர். 2 கோடி மக்கள் நாம் இருக்கிறோம். ஆனால் சட்டமன்றத்தில் முதல்வர் நாம் 65 லட்சம் பேர் தான் என்கிறார். அவர் பழைய கணக்கெடுப்பை சொல்கிறார். கிராம நிர்வாக அலுவலரிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அவர் சொல்லி விட மாட்டாரா?.

இன்றைய சூழலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேராவது உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் போராடாமல் இது கிடைக்காது.

எனவே வன்னிய சமூகத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கருப்பு அங்கிகளோடு, சென்னை நகர வீதிகளில் இறங்கி போராடத் தயாராக வேண்டும்.

5 வன்னியர்களை நீதிபதிகளாக நியமிக்கும் வரை நமது போராட்டம் ஓயக்கூடாது. தடை விதித்தால், தடையை மீறிப் போராடி சிறை செல்வோம். இதற்காக நான் சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன்.

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால் வன்னியர் ஜனத்தொகை தெரிந்து விடும் என்று பயப்படுகிறார்கள். சாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்தினால் தானே தகுதியின் அடிப்படையில் யாருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரியும்.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து இது குறித்து மனு கொடுக்க இருக்கிறேன். 2011 சென்சஸை தவறவிட்டால் அது 2022க்கு சென்று விடும். போராட்டம் இல்லாமல் எதையும் நாம் சாதிக்க முடியாது. அதனால் நாம் போராடி பெற வேண்டும். நீங்கள் எந்த போராட்டம் நடத்தினாலும் நான் வருகிறேன் என்றார் ராமதாஸ்.

Monday, November 16, 2009

சிலர் சூழ்ச்சியால் வன்னியர்களுக்கு தாழ்வு-ராமதாஸ்

காஞ்சிபுரம்: சிலரது சூழ்ச்சியால் வன்னியராகிய நாம் தாழ்வு நிலைக்கு சென்றுள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனிக் கூட்டணியாக உலா வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மீ்ண்டும் வன்னியர் கோஷத்தைக் கையில் எடுத்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,

வன்னியர் ஜாதி முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக, வன்னிய சங்கம் ஏற்படுத்தப்பட்டது. சிலரது சூழ்ச்சி தந்திரம் காரணமாக நம்மை கீழே தள்ளியுள்ளனர்.

எல்லாருக்கும் ஜாதி ஏக்கம் இருக்கத்தான் செய்கின்றது. இது இல்லாதவர் எவரும் இல்லை என்று கூறலாம்.
நாட்டில் பொருளாதார ரீதியாக பணக்காரன், நடுத்தர வர்க்கத்தினர், ஏழை என ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.

இதில், ஒடுக்கப்பட்டு திட்டமிட்டு ஏமாற்றப்பட்டவர்கள் தான் வன்னியர்கள். வாழ்விழந்த ஜாதி, ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஜாதி என்று கூட கூறலாம்.

முன்பு, 1980 ம் ஆண்டு வன்னியர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரை. பார்க்க தவமாக இருந்தேன். ஏழு நாட்கள் மறியல் போராட்டத்திற்கு பின் தான் சந்திக்க முடிந்தது.

அப்போது, எம்.ஜி.ஆர். உடன் இருந்தவர்கள் அவருக்கு தெரிய வேண்டிய முக்கியத் தகவல்களை தெரிவிக்காமலே காலத்தை ஓட்டிவிட்டனர்.

2011 ம் ஆண்டு ஜாதி வாரியாக, கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது வன்னியர்கள் அதிகம் வசிப்பது தெரிய வரும். இது தெரியக் கூடாது என்பதற்காகவே ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ளனர்.

வன்னியர்கள் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடையை திறந்து வைத்துள்ளனர்.

வன்னியர்கள் குடித்து அரசுக்கு வருவாயை பெருக்கி தருகின்றனர். வருடத்திற்கு 10 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கின்றது என்றார்.

Friday, November 13, 2009

பணம் தர மாட்டோம் என எழுதித் தந்தால் இடைத் தேர்தலில் போட்டி-ராமதாஸ்

சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அனைத்துக் கட்சியினரும் கையெழுத்திடும் ஒரு ஒப்பந்தத்தை முதல்வர் கருணாநிதி ஏற்படுத்தினால்தான் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தலில் பாமக போட்டியிடும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

சட்டமன்ற இடைத் தேர்தல் தொடர்பாக முதல்வர் கருணாநிதி அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேச வேண்டும். வாக்காளர்களுக்கு யாரும் பணம் கொடுக்க மாட்டோம் என்று சர்வ கட்சிகளும் முடிவெடுத்து, அதற்கான ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி, அதில் அனைத்துக் கட்சிகளையும் முதல்வர் கையெழுத்திடச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் முதல்வர் கருணாநிதிக்கு பாமக ஆளுயர மாலை அணிவித்து பாராட்டுவதுடன், இந்த முடிவை செயல்படுத்தினால் இடைத் தேர்தலில் பாமக நிச்சயமாக போட்டியிடும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கே விருப்பமில்லை. அதனால்தான் இது தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண சர்வ கட்சித் தலைவர்களையோ, நிபுணர்களையோ தேர்தல் ஆணையம் கலந்தாலோசிக்கவில்லை (புகாரை தேர்தல் ஆணையம் நிரூபிக்கச் சொல்லி கூப்பிட்டும் இவர் போகவில்லை என்பது நினைவுகூறத்தக்கது)

குறைந்தபட்சம் வாக்காளர்கள் தாங்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலாவது மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை மாற்றியமைக்க வேண்டும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவுவதற்காக முதல்வர் ரூ.100 கோடி நிதியை அறிவித்துள்ளார். நான் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள், காப்பீட்டுத் திட்டம் அவற்றை செயல்படுத்த வேண்டும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக ஏழை உழவர்களின் நிலங்கள் பெரிய தொழிலதிபர்களிடம் தாரை வார்க்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலங்களை கையகப்படுத்தி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவு முறைகேடுகள் நடப்பதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சமூக ஆர்வலரு மான அருணா ராய் தலைமையிலான குழு குறிப்பிட்டுள்ளது.

ஒரு சென்ட் விளை நிலத்தை கூட சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்த மாட்டோம் என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார். ஆனால் தற்போது விளை நிலங்கள்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்படுகின்றன.

நில உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பத்திரப் பதிவுகள் நடக்கும் அராஜகங்களும் அரங்கேறுகின்றன. இது போன்ற தவறுகளுக்கு தமிழக அரசின் நில கொள்கைதான் காரணம்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களின் மூலம் தமிழ்நாட்டில் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நீதிபதி தினகரன் திருத்தணி பகுதியில் 200 ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருப்பதாக மாவட்ட கலெக்டரே அறிக்கை அளித்துள்ளார். இதன் பிறகும் இந்த விஷயத்தில் விசாரணை அவசியமா?.

அவருக்கு பதிலாக அவரது இடத்தில் தகுதி வாய்ந்த ஒரு தலித் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும். நீதிபதிகளை விசாரிப்பதற்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். அந்த சட்டத்தை தாமதமின்றி கொண்டு வர வேண்டும்.

பூரண மதுவிலக்குதான் பாமகவின் கொள்கை. ஆயினும் அந்த நிலை அமல்படுத்தப்படும் வரை டாஸ்மாக் ஊழியர்களுக்கு 6 மணி நேர வேலை, வார விடுமுறை, 75 சதவீதம் போனஸ், விழாக் காலங்களில் இரண்டு நாட்கள் விடுமுறை ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்றார் ராமதாஸ்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: