Friday, November 20, 2009

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி போராட்டம்: ராமதாஸ்

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் சென்னை மாவட்ட மாநாட்டில் பேசிய அவர்,

தமிழகத்தில் தனிப்பெரும் சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது. ஆனால், வன்னியர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்காதவரை இந்த சமூகம் முன்னேறாது. எனவே, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

சென்னை உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டு 135 ஆண்டுகள் ஆகின்றன. நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகிறோம். உயர் நீதிமன்றத்தில் 54 நீதிபதிகளில் 9 பேர் பிராமணர்கள் ஆவார்கள்.

இதில் கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்கவில்லை.

135 வருட உயர் நீதிமன்ற வரலாற்றில் 4 வன்னியர்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்திருக்கின்றனர். 2 கோடி மக்கள் நாம் இருக்கிறோம். ஆனால் சட்டமன்றத்தில் முதல்வர் நாம் 65 லட்சம் பேர் தான் என்கிறார். அவர் பழைய கணக்கெடுப்பை சொல்கிறார். கிராம நிர்வாக அலுவலரிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அவர் சொல்லி விட மாட்டாரா?.

இன்றைய சூழலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேராவது உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் போராடாமல் இது கிடைக்காது.

எனவே வன்னிய சமூகத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கருப்பு அங்கிகளோடு, சென்னை நகர வீதிகளில் இறங்கி போராடத் தயாராக வேண்டும்.

5 வன்னியர்களை நீதிபதிகளாக நியமிக்கும் வரை நமது போராட்டம் ஓயக்கூடாது. தடை விதித்தால், தடையை மீறிப் போராடி சிறை செல்வோம். இதற்காக நான் சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன்.

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால் வன்னியர் ஜனத்தொகை தெரிந்து விடும் என்று பயப்படுகிறார்கள். சாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்தினால் தானே தகுதியின் அடிப்படையில் யாருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரியும்.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து இது குறித்து மனு கொடுக்க இருக்கிறேன். 2011 சென்சஸை தவறவிட்டால் அது 2022க்கு சென்று விடும். போராட்டம் இல்லாமல் எதையும் நாம் சாதிக்க முடியாது. அதனால் நாம் போராடி பெற வேண்டும். நீங்கள் எந்த போராட்டம் நடத்தினாலும் நான் வருகிறேன் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: