Thursday, October 22, 2009

செம்மொழி மாநாட்டில் பங்கேற்கிறோம் - பாமக

சென்னை: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பாமகவும் பங்கேற்கும் என்று கூறி முதல்வர் கருணாநிதிக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்:

2010-ம் ஆண்டு ஜுன் மாதம் 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் கோவை மாநகரில் நடைபெற உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்றும், மாநாட்டிற்கென அமைக்கப்பட உள்ள குழுக்களில் பா.ம.க. சார்பாக பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என்றும் கேட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளீர்கள்.

கட்சி வேறுபாடு இன்றி, தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் அதன் ஆக்கம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இந்த மாநாடு நடைபெறும் என்று உறுதியளித்து ஒத்துழைப்பை கோரியிருக்கிறீர்கள். உங்களது இந்த உறுதிமொழிக்கும், ஒத்துழைப்பு கேட்டு அழைப்பு விடுத்ததற்கும் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

1966-ம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. கோவையில் நடைபெறுகிற மாநாடு இந்த வரிசையில் இடம்பெறுமா? அல்லது உலக தமிழ் செம்மொழி மாநாடு என்பதால் தனித்து நிற்குமா? என்ற சர்ச்சையில் நுழைய விரும்பவில்லை.

எனினும், உலக உருண்டையில் ஒரு பகுதியில் உள்ள தமிழர்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியிருக்கும் நிலையில், தாய் தமிழகத்தில் கோலாகலமாக மாநாடு நடத்தப்படுவது தேவையா? கொஞ்சக்காலம் பொறுத்திருந்து இன்னும் சிறப்பாக நடத்தலாமே என்று எழுப்பப்படுகின்ற வாதத்தை எளிதில் தள்ளிவிட முடியாது என்பதை நினைவூட்டாமல் இருக்க முடியவில்லை.

எனினும் தமிழ், தமிழ் வளர்ச்சி தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பதால் ஆறுதல் கொள்ளலாம். தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைவரும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, இதுபோன்ற தமிழ் வளர்ச்சிக்கான மாநாடுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அதே நேரத்தில், இத்தகைய மாநாடுகளினால் ஏற்படும் விளைவுகள் என்ன? மாநாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் திட்டங்கள் என்ன? இதுவரையில் நடைபெற்றிருக்கும் மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அவற்றிற்கான செயல்திட்டங்களை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டிருக்கிறோமா? என்பவை குறித்து சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தமிழ் ஆட்சிமொழி சட்டம் நிறைவேற்றப்பட்டு 53 ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்னை தமிழுக்கு அரியணையை அளிக்கும் பணியில் முழுமை அடைந்திருக்கிறோமா என்றால், `இல்லை' என்று நீங்களும் ஒப்புக் கொள்ளுவீர்கள். இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொள்வார்கள்.

தமிழ் வளர்ச்சிக்கான மாநாடுகள் எந்தப் பெயரில் நடந்தாலும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி என்பது முழுமை பெறுவதும், தமிழ் பயிற்று மொழி என்பது நடைமுறைப்படுத்துவதும் தமிழ் மொழி வளர்ச்சியில் அழியாத அத்தியாயங்களாக இருக்கும் என்பதில் உங்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

வரும் கல்வியாண்டில் இருந்து சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாய் மொழியான தமிழ் மட்டுமே அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்று மொழியாக இருந்தால் மட்டுமே சமச்சீர் கல்வி நிறைவடையும் என்பது, சமச்சீர் கல்வி குறித்து அரசுக்கு அறிக்கை அளித்திருக்கும் அறிஞர் குழுவினரின் ஒருமித்த கருத்தாகும். இந்த லட்சியத்தை படிப்படியாக எட்டலாம் என்பதை விட்டுவிட்டு, இனி தமிழகத்தில் எல்லா மட்டத்திலும் தமிழே பயிற்சி மொழியாக இருக்கும் என்று சட்டம் இயற்றி அறிவித்து நடைமுறைப்படுத்துங்கள்.

இந்த அவலநிலைகளை எல்லாம் உடனடியாக மாற்ற தமிழ் அறிஞர்களை கொண்ட குழுவினை அமைத்து ஒருசில வாரங்களில் கலந்தாய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவகாசம் இருக்கிறது. தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றன. இந்த அவகாசத்தை பயன்படுத்தி தேவையான சட்டங்களையும், அரசாணைகளையும் வெளியிட்டு அனைத்து நிலையிலும் தமிழ்; அதுவும் கலப்படம் இல்லாத தமிழ் என்ற நிலையினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இம்முயற்சிக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்புத் தருகிறோம்.

இத்தகைய நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில், கோவையில் நடைபெற இருக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற உங்களது அழைப்பை பா.ம.க. ஏற்றுக்கொள்கிறது.

மாநாட்டையொட்டி அமைக்கப்படும் குழுக்களின் விவரங்களை தெரிந்து அதில், பா.ம.க. சார்பில் இடம்பெறும் பிரதிநிதியை உரிய நேரத்தில் அறிவிக்கிறோம். கோவையில் நடைபெறும் மாநாடு தமிழ் மொழியின் ஆக்கம், வளர்ச்சி தவிர அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை என்று நீங்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பை வரவேற்கிறேன். மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற உங்களது அழைப்புக்கு மீண்டும் நன்றி கூறி முடிக்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ் .

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: