Saturday, October 3, 2009

அதிமுக உறவு குறித்து நிர்வாகக் குழு முடிவெடுக்கும்- ராமதாஸ்

சென்னை: அதிமுக கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து பாமக நிர்வாகக் குழு கூடி முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மற்றும் பசுமைத் தாயகம் அமைப்புகளின் சார்பாக தமிழ்நாட்டில் உழவர்களுக்கான கொள்கை அறிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று வெளியிட்டார்.

ஜெ.வுடன் போனில் பேசினேன்...

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

அதிமுக கூட்டணியில் பாமக தொடர்வதா என்பது குறித்தும், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள், நிலைப்பாடுகள் குறித்தும் பாமக நிர்வாகக் குழு கூடி முடிவெடுக்கவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு நான் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை என்று தொடர்ந்து பல்வேறு ஏடுகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் சார்பில் தலா ஒருவர் வெற்றி பெற்றதால் அவர்கள் தங்களது எம்பிக்களை அறிமுகம் செய்துவைக்க ஜெயலலிதாவை சந்தித்தார்கள். எங்கள் கட்சியின் சார்பில் யாரும் வெற்றி பெறாததால் நாங்கள் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

இதனை வைத்து ஜெயலலிதா என்னை சந்திக்க மறுப்பதாக தொடர்ந்து பொய்ச்செய்திகள் வெளியிடப்படுகின்றன. தயவு செய்து யாரும் இதுபோன்ற செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் முடிந்ததும் நானும், ஜெயலலிதாவும் தொலைபேசியில் பேசிக்கொண்டோம்.

ஜெயராம் ரமேஷிடம் கருணாநிதி பேசட்டும்...

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், அது தொடர்பான ஆதாரம் இருந்தால் தாருங்கள் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கேட்டுள்ளார்.

அவர் தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷை கேட்டு இதற்கான விவரங்களை அறியலாம். அல்லது மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

அதைவிட்டுவிட்டு நம்மிடம் ஆதாரம் கேட்கிறார் கருணாநிதி. பல்வேறு ஊடகங்களில் இதற்கான அனுமதி அளித்து ஜெயராம் ரமேஷ் தெரிவித்ததாக செய்திகள் வெளி வந்துள்ள நிலையில், தமிழக அரசு இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வேவு பார்க்கும் இலங்கை தூதர்...

கச்சத்தீவு தொடர்பாக தமிழகத்தில் உள்ள இலங்கை துணைத் தூதர் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.

இலங்கை தமிழர்களை காட்டிக்கொடுப்பதற்கு கருணா, பிள்ளையான் இருப்பது போல இங்கு அவர்களின் பிரதிநிதியாக வேவு பார்ப்பதற்கு இலங்கை துணைத் தூதர் தேவையில்லை. அவரை மத்திய அரசு வெளியேற்ற வேண்டும். ஆனால் அப்படி அவர்கள் வெளியேற்ற மாட்டார்கள்.

தமிழர் உள்ளங்கள் கனன்று கொண்டிருக்கிறது...

டெல்லியில் இலங்கை தூதரகம் தாக்கப்பட்டது தமிழர்களுடைய கோபத்தின் வெளிப்பாடாகும். அனைத்து தமிழர்களின் உள்ளங்களிலும் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான கோபம் எரிமலையாக கனன்று கொண்டு இருக்கிறது.

நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது. அந்த இடங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: