Saturday, August 29, 2009

ராஜப‌‌க்சே, பொ‌‌ன்சேகா ‌மீது போ‌ர்‌க்கு‌ற்ற வழ‌க்கு: ராமதாஸ் வ‌லியு‌றுத்த‌ல்

தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பதறவைக்கும் காட்சிகள் வெளியிட‌ப்ப‌ட்டிரு‌ப்பத‌ன் மூல‌ம் அதிபர் ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே, தளபதி பொன்சேகா ஆகியோர் மீது போர்க்குற்ற வழக்குகள் தொடர ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள் வை‌க்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.


FILEவிழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம், திண்டிவனம் தைலாபுரத்தில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், சமச்சீர் கல்வி அமலாக்கம் கூறித்து முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் அறிவிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீர்க்குமிழி போல் விரைவிலேயே கலைந்து விட்டது.

சமச்சீர் கல்வி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு கொள்கை முடிவு. அதன்படி கல்விமுறையில் மிகப்பெரிய மாற்றங்களை செயல்படுத்த முயலும்போது அதன் தாக்கம் எந்தவொரு பிரிவினருக்கும், பகுதியினருக்கும் பாதகம் ஏற்படுத்தி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் முக்கியமான கடமையாகும்.

ஒரே பாட திட்டம், ஒரே விதமான பாட புத்தகங்கள் என்பனவற்றால் அனைவருக்கும் சமச்சீரான கல்வியை வழங்க முடியாது. அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான, சீரான, ஒரே விதமான கல்வியை வழங்குவதுதான் சமச்சீர் கல்வி. அதற்கு இது வழிவகுக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக பயிற்று மொழியாக தமிழும், தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடரும் என்று அறிவித்திருப்பது சமச்சீர் கல்வி என்ற நடைமுறைக்கு வேட்டு வைப்பதாகும்.

தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிறமொழிகளும் பயிற்றுமொழியாக தொடரும் என்ற அறிவிப்பினால் இப்போது நடைமுறையில் இருந்துவரும் கல்வியில் ஏற்றத்தாழ்வு என்கிற சாபக்கேடு தொடர்ந்து நீடிக்கும்.

சமச்சீர் கல்வி தொடர்பாக முத்துக்குமார் குழு பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இப்போது அறிவித்திருப்பது சமச்சீர் கல்வி திட்டம் அல்ல; இது சமரச கல்வி திட்டம்.

வருகிற 29‌ஆ‌ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலித்து முடிவெடுத்து அறிவிக்கப்போவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்த கால்கிணறு தாண்டும் வேலையை விட்டுவிட்டு எப்படி நுழைவுத்தேர்வை ரத்து செய்வதில் அரசு துணிச்சலோடு முடிவெடுத்ததோ அதைப்போல முத்துக்குமரன் குழுவினரின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தும் முடிவை அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டும்.

உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்த நாட்டின் குடியரசு தலைவருக்கு கிடைக்கின்ற மருத்துவ வசதிகள் மிக சாதாரண குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சி என்ற முறையில் கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் நோக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் இதுபோன்ற பெருந்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரும்போது பொதுவிவாதங்கள் நடத்தி இத்துறை சம்பந்தப்பட்ட அறிஞர்கள், மருத்துவர்கள், மக்கள் நல ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்துப்பேசி அவர்களின் கருத்தை அறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் அண்மைக் காலமாக வன்முறைகளும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான கொலைகளுக்கு ரியல் எஸ்டேட் போட்டிதான் காரணமாக உள்ளது. தமிழகத்தில் 10 ஏக்கருக்கு மேல் யார் நிலம் வாங்கினாலும், விற்றாலும் செல்லாது என்று அறிவிக்க அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். மனை வணிக பேரத்தை ஒழுங்குபடுத்த குழு அமைக்க வேண்டும்.

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற முறையில் தமிழ் இனத்தையே அழித்துக்கொண்டிருக்கும் சிங்கள போர் படையினரின் அட்டூழியங்கள் மற்றும் எல்லையற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இங்கிலாந்து சேனல்-4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆதாரப்பூர்வமான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது. தமிழ் இளைஞர்களை கைது செய்து அவர்களை நிர்வாணமாக்கி கை, கால்கள், கண்களை கட்டி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பதறவைக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அதிபர் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபாய ராஜபக்சே, தளபதி பொன்சேகா ஆகியோர் மீது கொலைக்குற்ற வழக்குகளை தொடர இதைத்தவிர வேறு ஆவணங்கள் தேவையே இல்லை. இந்த ஆதாரங்களை கொண்டு இவர்கள் மீது போர்க்குற்ற வழக்குகள் தொடர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் முதலமைச்சர் வேண்டுகோள் வைக்க வேண்டும் எ‌ன்று ராமதாஸ் கூ‌றினா‌ர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: