Saturday, August 15, 2009

கருணாநிதியை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்-ராமதாஸ் ,நெடுமாறன்

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சே அரசின் அட்டூழியங்களை மறைக்க துணை போகும் வகையில் முதல்வர் கருணாநிதி செயல்படுவதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த கன்னடக் கவிஞர் சர்வஞ்னரின் சிலை திறப்பு விழாவில் பேசிய முதல்வர், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சுமூக நிலை ஏற்பட்டுவிடக் கூடாது எனச் சிலர் விரும்பியதாகவும், இப்போதும்கூட சிலர் அதைக் கிளறி விடுகிறார்கள் என்றும் கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி அமைக்கப்பட்ட வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர், மருந்து இல்லாமல் தினமும் 200 பேருக்கு மேல் இறந்து போகின்றனர்.

தமிழர்களுக்கென தனித் தாயகம் எதுவும் கிடையாது என்று கூறி தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுகின்றனர். இதைத் தான் சுமூக நிலை என்று முதல்வர் குறிப்பிடுகிறாரா?.

இலங்கை அதிபர் ராஜபக்சே அரசின் அட்டூழியங்களை மறைக்க துணை செய்யும் வகையில் கருணாநிதி செயல்படுவதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்:

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராணுவத்தின் தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் தற்போது அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க கடந்த 50 ஆண்டுகளாக போராடி வருகின்ற இயக்கம் திமுக என்று முதல்வர் கருணாநிதி அடிக்கடி கூறுவார்.

இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத்தை உருவாக்கித் தருமானால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே ஆளட்டும். 10 ஆண்டு காலத்திற்கு ஆட்சிக்கு வர திமுக முயற்சி செய்யாது என்றெல்லாம் அன்றைய காலத்தில் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஆனால், காலத்தின் மாற்றம் காரணமாக இதையெல்லாம் இன்றைக்கு அவர் மறந்துவிட்டதன் விளைவாகத்தான் இலங்கையில் சுமூக நிலை திரும்பிவிட்டது என்று துணிந்து சொல்கிறார். மற்றவர்களும் அதை நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

உலகில் உள்ள மற்ற இன மக்களை போல இலங்கைத் தமிழர்கள் தங்களது எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையை என்றைக்குப் பெறுகிறார்களோ அன்றுதான் இலங்கையில் சுமூக நிலை திரும்பிவிட்டது என்று கருத முடியும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: