இது ஒரு சபிக்கப்பட்ட ஈழத்து குரல்.
ஆட்டு மந்தைகளாக, பஞ்சப் பரதேசிகளாக, பிச்சைகாரர்களாக ,அனாதைகளாக....என் இனம்:
யாருமேயில்லாத அனாதைகளாக செத்துக் கொண்டு இருக்கிறோம். தாய் தமிழகம் எங்களை காப்பாற்றும் என்று நம்பி நம்பி லட்ச கணக்கில் அநியாயமாக செத்துக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் பெண்கள் எல்லாம் கேட்பாரற்று கெட்டு சீரழிகின்றார்கள். பாவப்பட்ட பெற்றவர்கள் தடுக்க வழியின்றி செய்வதறியாது கண்ணீரிலேயே கரைந்து கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் பிள்ளைகள் முடமாக்கப்பட்டுள்ளார்கள். பஞ்சப் பரதேசிகளாக, பிச்சைகாரர்களாக கையேந்தி கொண்டிருக்கிறோம். முட்கம்பிக்குள்ளே முடக்கப்பட்டு முடமாகி போனோம்.
எங்கள் குரல் நசுக்கப்பட்டு விட்டது. ஆனால் எங்கள் தொப்புள் கொடிகள் என் மவுனமாகி போனார்கள்? காவட் துறைக்கு பயந்து விட்டார்களா இல்லை அரசின் மாயாஜால கதைகளில் நம்பி உறங்கி விட்டார்களா? நாங்கள் தவித்துக் கொண்டு இருக்கும் போது எங்கே போனார்கள் எங்கள் உறவுகள்? வீறு கொண்டு எழுந்தீர்கள். அப்போது நம்பிக்கை கொண்டோம்.
ஆனால் இன்று ஒரு சத்தத்தையும் காணவில்லையே! ஏன்? உங்கள் கண் முன்னால் எங்கள் அழிவுகள் காட்டப்பட்டால் மட்டுமா துடிப்பீர்கள்? சத்தமில்லாமல் சாட்சிகள் இன்றி சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோமே அது உங்கள் நெஞ்சங்களை நெருக்கவில்லையா? நாளை எங்கள் கதி என்னவாக போகின்றது என்று உங்கள் மனதுக்கு புரியவில்லையா? ஏன் மவுனித்து போனீர்கள்?
ஐநாவில் இலங்கைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தார்கள் வெள்ளை இனத்தவர்கள். ஆனால் அந்த சட்டத்தையும் செல்லக் காசாக்கி விட்டார்கள் நெஞ்சிரக்கமில்லாத படு பாவி நாடுகள். அதற்கு இந்தியா அன்றிலிருந்து இன்று வரை துணை போகிறது. ஓரிரு குரல்கள் இந்தியாவிற்கு எதிராக தாய் தமிழகத்தில் எழுந்தன. பல முத்துக்குமாரார்கள் தன்னையே தியாகம் செய்துமே மதியாத இந்தியா இந்த கண்டனக் குரல்களை எப்படி கணக்கெடுக்கும்?
தமிழனின் உரிமைக்குரலும், தியாகங்களும் பாரத மாதாவிற்கு ஏன் இப்படி செல்லாக் காசாகி போனது? ஏன் என்றால் நாம் உறுதியில்லாதவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். நம் தாய் தமிழக உறவுகள் மீது எந்த நம்பிக்கையில் முத்துக்குமாரர்கள் உயிரை கொடுத்தார்களோ தெரியவில்லை. அவர்களின் விலை மதிக்க முடியாத உயிர்கள் போனதும், ஈழத்தில் நாம் செத்து மடிவதும் தான் வரலாற்றில் மிஞ்சப் போகிறதா?
அப்பாவி மக்கள் எங்களுக்கு ஒரு வழியும் தெரியவில்லை. உலகத்தை நம்பினோம். ஏமாற்றப்பட்டோம். தமிழக மக்களையும், கூடவே தமிழக தேர்தலை நம்பினோம். அதுவும் பொய்த்து விட்டது. ஐநாவை நம்பினோம். அங்கும் இந்தியாவின் கபட நாடகம் தான் அரங்கேரியிருகின்றது. இந்தியாவுக்கு சீனாவும் பாகிஸ்தானும் பகை நாடுகள். ஆனால் ஈழத்து தமிழனை அழிப்பதில் எல்லோரும் நேச நாடுகள். எங்கு போய் சொல்வது எங்கள் வேதனையை? கடவுள் கூட அதர்மத்துக்கு கூட்டாகி போய் விட்டார். தலைவர் இருக்கிறார் என்பதால் கொஞ்சம் மானத்தோடு வாழ்ந்தோம். அவரும் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்தப் பின் நாயை விட கேவலமாகி போனோம். சிங்களவனில் பிச்சைக்காரன் கூட எங்களை ஏறி மிதிக்க போகிறான். ஆண்டியில் இருந்து அரசன்வரை எங்களை கேவலப்படுத்தப் போகிறான். வன்னியில் எங்கள் அழிவுகள் சாட்சியமில்லாமல் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் குட்டி தூக்கத்தில் இருந்து விழித்து தனது பொறுப்பை உணரும் போது, அங்கு எதுவுமே மிஞ்சப் போவதில்லை, எங்கள் நியாயங்களும் வெளியில் தெரியப்போவதில்லை.
மதிப்புக்குரிய ஐயா நீங்களும், வைகோ அவர்களும், திருமாவளவன் அவரகளும் மருத்துவர் ஐயா அவர்களும், வீரமணி அய்யா, சீமான் அவர்கள், சுபா வீரபாண்டியன் அவர்கள், மற்றும் இங்கு குறிப்பிடாத தமிழின பற்றாளர்கள் என்றுமே விடாது எங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றீர்கள். எங்களுக்காக எத்தனையோ துன்பங்களை அனுபவித்தீர்கள். அதனையெல்லாம் இந்த அல்லல்படும் நெஞ்சங்கள் என்றும் மறக்கப் போவதில்லை. ஆனால் ஐயா அவலத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த பாவப்பட்ட தமிழினத்துக்கு உங்களின் பணி இன்னும் தேவை என்பது தாங்களுக்கு நன்றாகவே தெரியும்.
வீறு கொண்டு எழுந்த மாணவா சமுதாயம், சட்டத்தரணி சமுதாயம், திரைப்பட துறையினர் மற்றும் நம் மக்கள் எல்லோரும் மீண்டும் எழுந்து வாருங்கள். அடங்காத போராட்டம் நடத்தி எங்களை காப்பாற்ற வாருங்கள். மத்திய அரசின் இந்த தர்மமற்ற செயலை கண்டித்து தடுத்து நிறுத்துங்கள். தமிழனின் உறுதி, ஒற்றுமை, உணர்வு எல்லாம் உலகத்துக்கு தெரிய வேண்டும். எங்கள் ஒட்டுமொத்த தமிழ் மானம் காக்கப் படவேண்டும். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நாங்கள் அதாள பாதாளத்துக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள். தமிழனின் புல் பூண்டு கூட ஈழத்தில் மிஞ்சப் போவதில்லை. மீண்டும் ஒரு அடிமை சாசனம் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது.
ஐயா அணி திரட்டுங்கள் எங்கள் மக்களை! அவர்கள் எங்களுக்காக நிச்சயம் பாசத்தோடும் உரிமையோடும் போராடுவார்கள். எங்களுக்காக உயிர் கொடுத்த முத்துகுமரன்களை தந்த இந்த தமிழக மண் எங்கள் துயர் துடைக்க பின் நிற்க மாட்டாது. ஆனால் அவர்கள் ஒற்றுமையான ஒரு தலைமையின் தூண்டுதலையும் அதன் வழிநடத்தலையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமைகளின் ஒற்றுமை மேலோங்கும் போது மக்களின் ஒற்றுமையும் சீர்குலையாது. அவர்கள் போராட்டமும் வீறு கொண்டெழும். போராட்டம் வெற்றியும் பெறும்.
ஆவன செய்வீர்களா ஐயா? உங்கள் சொல் கேட்டு அணித்திரள எங்கள் தமிழின உணர்வாளர்கள் என்றும் பின் நிற்பதில்லை. தேர்தலுக்காக இடம் மாறினாலும் எங்கள் இன வெற்றியில் அவர்களுக்கு மாற்று கருத்துக்கள் இல்லை. தமிழின உணர்வாளர்களே கட்சி மறந்து, பேதங்கள் மறந்து தயவு செய்து தமிழின வெற்றிக்காக ஒன்று திரளுங்கள். தமிழ் மானம் காக்க ஒன்று திரளுங்கள். ஈழம் விடிய ஒன்று திரளுங்கள். எங்கள் கண்ணீர் துடைக்க ஒன்று திரளுங்கள். எங்கள் உரிமை வென்றெடுக்க ஒன்று திரளுங்கள். எங்களின் வாழ்வும் சாவும் தமிழ் உறவுகளே உங்கள் கைகளில் மட்டும் தான் இருக்கின்றது. வேறு யாரும் நமக்காக இங்கில்லை என்பது தான் நிதர்சனம்.
thanks to nerudal.com
Thursday, May 28, 2009
எங்கே போனார்கள் தமிழ் உணர்வாளர்கள், தலைவர்கள், போராளிகள்:
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
No comments:
Post a Comment