Wednesday, May 13, 2009

அழக் கூட திராணியில்லை: நார்வே தமிழர் கண்ணீர் பேட்டி

பெங்களூர் : தமிழர்களுக்கு எதிராக அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்தி மிகப் பெரிய தாக்குதலை தொடுக்க இலங்கை ஆயத்தமாகி வருகிறது. ஈழத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களுக்கு யாரும் உதவவில்லை. அழக் கூட எங்களிடம் சக்தி இல்லாமல் போய் விட்டது என்று கண்ணீருடன் கூறுகிறார் நார்வேயில் வசித்து வரும் வி. தமிழன் என்கிற ஈழத் தமிழர்.

தற்போது 36 வயதாகும் தமிழன், 16 வயதாக இருக்கும்போது, தோணி மூலம் தமிழகத்திற்கு அகதியாக வந்து சேர்ந்தார். பின்னர் சில மாதங்கள் கழித்து நார்வே நாட்டுக்கு அகதியாக சென்றார்.

தற்போது நார்வேயில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களோடு இணைந்து, ஈழத் தமிழர்களின் அவலத்தைத் துடைக்க பல்வேறு போராட்டங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
என்றாவது ஒரு நாள் குடும்பத்துடன் இணைவோம் என்ற நம்பிக்கையுடன் போராடி வருகிறார் தமிழன்.

மிட் டே இணையத்திற்கு அவர் இதுதொடர்பாக அளித்துள்ள உருக்கமான பேட்டி...

இங்கிருந்து பார்ப்பவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை குறித்து பேசுவது சுலபமானது. ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதை கற்பனை செய்து பார்த்தோமானால் மிகப் பெரிய துயர நிலை நமக்கு புரியும்.

இந்தக் காயங்கள், எங்களை விட்டு அவ்வளவு சுலபமாக போய் விடாது. ஒரு போதும் இந்த வடுக்கள் மறையாது. சர்வதேச சமுதாயமோ அல்லது மீடியாக்களோ இந்த மரணத்தை தடுத்து நிறுத்தத் தவறி விட்டன. இது சோகமான உண்மை.

இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து நாங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. காரணம், அவர்கள் அவர்களது வாக்கு வங்கி குறித்து மட்டுமே கவலைப்படுகிறார்கள்.
ஆனால் இந்தியாவுக்கும், எங்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்று நாங்கள் எப்போதுமே நினைத்து வருகிறோம்.

ஆனால் கடந்த ஆறு மாதங்களாக அப்படிப்பட்ட உணர்வு இந்தியத் தலைவர்களிடமிருந்து வரவில்லை. தேர்தல் முடிந்தவுடன் இலங்கையை அனைவரும் மறந்து விடுவார்கள்.

கடந்த நாற்பது நாட்களாக தங்களது தேர்தல் கூட்டங்களில் பேசி வந்த ஈழப் பிரச்சினையை கிடப்பில் போட்டு விடுவார்கள்.

ஆனால் யாராவது ஒருவர் எங்களுக்காக எழுந்து வருவார், உதவிக் கரம் நீட்டுவார், குரல் கொடுப்பார் என்ற நம்பிக்கை இன்னமும் எங்களிடம் உள்ளது. அந்த நம்பிக்கையுடன்தான் நாங்கள் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள எங்களது சகோதரர்கள் எங்கள் மீது பரிவுடன் இருக்கிறார்கள். துணிச்சலுடன் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் உள்ள எங்களது தமிழ் சகோதர, சகோதரிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறோம். நாங்கள் எங்கள் நிலத்தை விட்டு வெளியேறியபோது ஒரு நாள் அனைவரும் ஒன்று சேருவோம் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த கனவு இன்னும் கூட உயிருடன்தான் உள்ளது.

பல நாடுகள் எங்களது துயர நிலையை புரிந்து கொண்டு அனுதாபமாக பேசுகின்றன. நாங்கள் கூறுவதை கவனிக்கிறார்கள். தங்களது கவலையையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இவற்றால் எல்லாம் இனப்போரை தடுத்து நிறுத்தி விட முடியவில்லை.
எங்களது வலிகளை உலக சமுதாயம் உணர வேண்டும்.

எங்களது மக்களைக் காக்க அனைவரும் முன்வர வேண்டும். ஏதாவது செய்து எங்களைக் காப்பாற்றுங்கள். உலக சமுதாயத்திலிருந்து எங்களைப் பிரித்துப் பார்க்காதீர்கள். எங்கள் ஒவ்வொருவரையும் தீவிரவாதி போல பாவிக்காதீர்கள்.

டிவியில் ஏகப்பட்ட நாடகங்களைப் பார்த்து நாங்கள் அலுத்துப் போய் விட்டோம். இப்போது எங்களது பெரிய பயமே, தமிழகத்தில் நடந்து வரும் தேர்தலை சாக்காக வைத்துக் கொண்டு இலங்கை அரசு பெரும் தாக்குதலைத் தொடுத்து மிச்சம் மீதி உள்ள தமிழர்களையும் அழித்து விடுமோ என்ற கவலைதான்.

விஷ வாயுக்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துமாறு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிகிறோம். மீதம் உள்ள மூன்றரை சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் பிடித்த பின்னர் போரில் வென்று விட்டோம் என இலங்கை கூறலாம்.

இன்று உணவு கூட கிடைக்காத நிலையில் பரிதவித்து வரும் எங்களது மக்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.

16 வயதாக இருந்தபோது தமிழகத்திற்கு படகில் வந்தேன். பின்னர் நார்வே வந்து சேர்ந்தேன். தமிழர்களுக்காக இங்கு பல போராட்டங்கள் ஏற்பாடு செய்துவருகிறார்கள். அவற்றில் நானும் பங்கெடுத்து வருகிறேன்.

தமிழரின் துயரங்களை நார்வே மக்களுக்கும் எடுத்துச் சொல்லும் வகையில் வெளியிடப்படும் ஆவண உருவாக்கத்தில் நண்பருடன் இணைந்து பங்கெடுத்து வருகிறேன். ஆனால் இலங்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ என்பதை நினைத்தால் எனக்கு தூக்கமே வருவதில்லை.

இந்தப் பிரச்சினை முடியவே முடியாது. தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். அகதிகள் முகாமில் உள்ள எந்த தமிழரையும் போய்க் கேளுங்கள், எந்த இந்தியரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு துயரக் கதைகளை அவர்கள் சொல்வார்கள்.

ஷங்கர், மணிரத்தினம் ஆகியோரை விட மிகப் பெரிய சினிமாக்காரன் ராஜபக்சேதான். ஒவ்வொரு தமிழனையும் அவர் தீவிரவாதியாகவே சித்தரிக்க முயலுகிறார்.

எங்களுக்கு குரல் கொடுக்க எந்த மீடியாவும் இல்லை, எந்த உதவியும் இல்லை, மருந்தும் இல்லை,உணவும் இல்லை. ஏன், அழக் கூட எங்களிடம் சக்தி இல்லை என்றார் தமிழன்.

Thanks to Thatstamil.com

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: