Tuesday, August 19, 2014

மக்கள் நலப் பணியாளர்களை மதுவிலக்கு பணியாளர்களாக நியமிக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மக்கள் நல பணியாளர் பணி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,   அனைத்து பணியாளர்களுக்கும் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் வேலை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மதுவிலக்கு குறித்த அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ள நீதிபதிகள், இப்பணியாளர்களை மது எதிர்ப்பு பரப்புரைக்கு பயன்படுத்திக்கொள்ளவும் ஆணையிட்டுள்ளனர். ஒரே ஆணையில் இரு நண்மைகளை செய்துள்ள இத்தீர்ப்பு பாராட்டத்தக்கது.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு இந்த ஆட்சியில் இழைக்கப்பட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. அ.தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களில் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் சுமார் 13 ஆயிரம் பணியாளர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி, பணி நீக்கப்பட்ட  மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க ஆணையிட்டார். ஆனால், இந்த தீர்ப்பை மதிக்காத தமிழக அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. அதன்மீது தீர்ப்பளித்த 2 நீதிபதிகள் அமர்வு மக்கள் நல பணியாளர்களுக்கு 5 மாத ஊதியத்தை இழப்பீடாக வழங்கிவிட்டு அவர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று ஆணையிட்டது. இதற்கு எதிரான தொழிலாளர்களின் மேல்முறையீட்டை  விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததுடன்  இவ்வழக்கை மறு விசாரணை செய்யும்படி ஆணையிட்டது. அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க முடியாது என்பதற்காக அரசுத் தரப்பில் கூறப்பட்ட காரணங்கள் அனைத்தையும் நிராகரித்த நீதிபதிகள், அவர்களை ஆக்கபூர்வமான வழியில் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் விளக்கியுள்ளனர்.

மக்களின் நுண்ணூட்ட சத்து அளவு, வாழ்க்கைத்தரம், பொது சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவது தான் மக்கள் நல அரசின் பணியாக இருக்க வேண்டும்; மருத்துவ பயன்பாட்டை தவிர்த்து முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தான் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால்,  தமிழக அரசோ ஆண்டு தோறும் மதுவிற்பனையை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மது விற்பனை மூலம் ரூ.21,641 கோடி வருவாய் கிடைத்துள்ள போதிலும், கூடுதலாக ரூ.2000 கோடி லாபம் ஈட்டும் நோக்குடன் வரி மற்றும் விலையை உயர்த்த சட்டத்திருத்தம் செய்திருக்கிறது. இவ்வளவு  வருவாய் கிடைக்கும் போதிலும், மதுவின் தீமைகள் குறித்து பரப்புரை செய்ய வெறும் ரூ.1 கோடியை  மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது போதுமானதல்ல என்பதால் மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தி மது எதிர்ப்பு பரப்புரையில் ஈடுபடுத்தலாம்’’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.


பணி நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது குறித்த வழக்கின் தீர்ப்பில், தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாதது குறித்தும், மதுவின் தீமைகள் குறித்து பரப்புரை செய்யாமல் மது விற்பனையை அதிகரித்து மக்களை கெடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவது குறித்தும் நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பது அவர்களின் சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறது. இந்த சமூக அக்கறை தமிழக அரசுக்கு இல்லாதது தான் அனைத்து சீரழிவுகளுக்கும் அடிப்படை ஆகும்.

இதை உணர்ந்து, மீண்டும் மீண்டும் தவறு செய்யாமல், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் பணி நீக்கப்பட்ட அனைத்து மக்கள் நலப்பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்கி, அவர்களை மது எதிர்ப்பு பரப்புரையாளர்களாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாதது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள கவலையை உணர்ந்து  தமிழ்நாட்டில் மதுவை அறவே ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: இல்லை என்று யாரேனும் சொல்ல முடியுமா: ராமதாஸ் கண்டனம்



சென்னை தேனாம்பேட்டையில் பாமகவின் தென்சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 19.08.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

இந்த ஆட்சியில் மின்சாரத்துறை உள்ளிட்ட எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. தமிழகத்தைப் போல அரசே தண்ணீரை விற்கும் அவலம் வேறு எங்கும் இல்லை. 2023ல் ஒளிமயமான எதிர்காலம் என தமிழக மக்களை அதிமுக ஏமாற்றி வருகிறது.

அரசின் விளம்பரத்தை கருவியாக பயன்படுத்தி, பத்திரிக்கை சுதந்திரத்தை அதிமுக அரசு பறித்து வருகிறது. பத்திரிக்கை சுதந்திரம் கிடையாது. தொலைக்காட்சி சுதந்திரம் கிடையாது. விளம்பரத்தில் இந்த ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவா பத்திரிக்கை சுதந்திரம். இங்கு நடப்பது ஹிட்லர் ஆட்சி. சர்வாதிகார ஆட்சி. இல்லை என்று யாரேனும் சொல்ல முடியுமா. இவ்வாறு பேசினார்.

Sunday, August 17, 2014

2016 தேர்தல் - அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாமக முடிவு!

விழுப்புரம்: 2016 சட்டசபைத் தேர்தலில் பாமக முதல்வர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸை அறிவிக்க பாமக தீர்மானித்துள்ளது.இதுதொடர்பன முடிவை, அக்கட்சியினர், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள டாக்டர் ராமதாஸின் வீட்டில் கூடி ஆலோசித்து எடுத்துள்ளனர்.பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தைலாலபுரத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்தார்
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அமர்வில் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. கூட்டங்களில் கட்சியின் வளர்ச்சி, உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை 2016ல் நடைபெறும் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கலாமா என்று நிர்வாகிகளிடம் கேட்கப்பட்டது. அதற்கு அனைத்து உறுப்பினர்களும் சம்மதம்
இக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், நம்முடைய கட்சியின் கொள்கையான மது ஒழிப்பு, இலவச கல்வி உள்ளிட்ட கொள்கைகளை மக்களிடம் கூறி அனைவரும் உறுப்பினர் சேர்க்கையை விரிவுப்படுத்த வேண்டும். 2
வரும் 2016 சட்டசபைத் தேர்தலில் நம் கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதி. இதற்காக உங்களுடைய சம்மதத்துடன் நம் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க உள்ளோம்.

இம்மாத இறுதியில் நம் கட்சியின் பொது குழு கூட்டம் கூட்டப்பட உள்ளது. அதில் கட்சியின் அனைத்து நிர்வாகிகளின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்படுவார் என்று ராமதாஸ்
 

Sunday, July 20, 2014

பெண் முதல்வரின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது அவமானம் - டாக்டர் ராமதாஸ்

சென்னை: பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது பெரும் அவமானம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அருகில் கல்லூரி மாணவி ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 கயவர்களால் கொடிய முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கரம் தொடர்பான செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.கிருஷ்ணகிரியிலிருந்து காவேரிப்பட்டினம் அருகிலுள்ள சொந்த ஊருக்கு வாடகை வண்டியில் சென்ற மாணவியை, இராயக்கோட்டை அருகில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று இந்த வன்கொடுமையை செய்திருக்கிறது. மாணவியுடன் வந்தவர் இதை தடுக்க முயன்றபோது, அவரைத் தாக்கி கட்டிப் போட்டுவிட்டு கயவர் கும்பல் இரக்கமே இல்லாமல் மாணவியைச் சீரழித்துள்ளது.மிருகத்தனமான இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கவை மட்டுமின்றி தண்டிக்கத்தக்கவையுமாகும். மாணவியை சீரழித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், அவர்களுக்கு நீதிபதி வர்மா குழு பரிந்துரைப்படி உருவாக்கப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்தி கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நடப்பாண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 2603 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன; 333 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு குழந்தையும், 3 பெண்களும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி சீரழிக்கப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் ஒரு மாணவியும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இன்னொரு மாணவியும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியில் 2 குழந்தைகள் பள்ளி விடுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பிறகும் மகளிர் விடுதிகள் கடைபிடிப்பதற்கான விதிகளைத் தான் தமிழக அரசு வகுத்ததே தவிர, மகளிருக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகில் புனிதா என்ற மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படாததால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வழக்கு முடங்கிக் கிடந்தது. அவ்வழக்கில் வாதாட, இரு தினங்களுக்கு முன்பு தான் தற்காலிகமாக ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு உளப்பூர்வமாக எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், அலட்சியம் காட்டுவது தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்கு மிக முக்கிய காரணம் ஆகும்.மொத்தத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவது பெரும் அவமானம் ஆகும். இனியாவது செய்யாத சாதனைகளைப் பாராட்டி வீண் விளம்பரம் செய்வதை விடுத்து தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

பாமக பொதுக்குழு தீர்மானங்கள்



ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கோயம்பேட்டில் இன்று நடந்தது. துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோயம்பேடு வி.ஜே.பாண்டியன் வரவேற்றார்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, பா.ம.க.வின் வெள்ளி விழாவை இந்த ஆண்டு கொண்டாடுகிறோம். ஆனால் இதுவரை சென்னையில் தனித்து நின்று மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற முடியவில்லையே ஏன்? அதற்கான காரணத்தை நீங்கள்தான் சொல்ல வேண்டும். மது ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

இந்த போராட்டங்களின் நன்மைகளும் உங்கள் வீடுகளில் உள்ள மனைவி, குழந்தைகளுக்கு தெரியுமா? முதலில் அவர்களுக்கு இந்த நன்மைகளை சொல்லி கொடுங்கள் அடுத்த கூட்டங்களுக்கு வரும் போது குடும்பத்தோடு வாருங்கள்" என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
* சென்னையில் தினமும் ஒவ்வொரு வீட்டுக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அரசு இலவசமாக வழங்க வேண்டும்.
* மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழக குடும்பங்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும்.
* பா.ம.க. மகளிர் அமைப்பு சார்பில் மது வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வியோடு வீடு வீடாகச் சென்று கையெழுத்து வாங்குவது. பின்னர் அந்த கையெழுத்து பிரதிகளை ஜனாதிபதியிடம் கொடுப்பது.
* சென்னையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 75 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்.
உறுப்பினர் சேர்க்கையை அடுத்த மாதம் 2–ந்தேதி முதல் ஒரு மாதம் நடக்கிறது.
தேர்தலில் வாக்கு சீட்டு முறையை அமுல்படுத்த வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் பெரும் திரளாக பங்கேற்பது. மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Thursday, July 17, 2014

தமிழக சட்டப்பேரவை மரபுகளை ஜெயலலிதா மதிக்க வேண்டும்: ராமதாஸ் அறிவுரை


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 18.07.2014 வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை மானிய கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடைபெற்று, அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்திருக்கிறார்கள். தமிழகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான இந்த துறைகள் தொடர்பான திட்டங்களை அமைச்சர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் வீரமணி, மொத்தம் 18 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவற்றின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெறும் 5.57 கோடி ரூபாய் மட்டுமே.  தமிழக நிதிநிலை அறிக்கையிலேயே மிக அதிகமாக ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சராக உள்ள ஒருவர் வெறும் ஐந்தரை கோடி ரூபாய் அளவுக்கான திட்டங்களை மட்டுமே அறிவித்திருக்கிறார். அதேபோல்,  முதலமைச்சரின் நம்பிக்கைக்குரிய உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அறிவித்த திட்டங்களின் மதிப்பு ரூ. 12.08 கோடி மட்டும் தான். வட்டாட்சியர்களே ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை அறிவித்து செயல்படுத்தும் நிலையில், அதைவிட குறைவான மதிப்புள்ள திட்டங்களை அறிவிக்கும் வாய்ப்பு தான் மாண்புமிகு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், மானியக் கோரிக்கை மீதான பதிலுரையிலோ 3459 ஆசிரியர்கள் மட்டும் தான் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், 17 மாவட்டக் கல்வி அலுவலர்கள், 17 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், 6 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவது குறித்து அமைச்சரின் பதிலுரையில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் கல்வி அமைச்சர் வெளியிடவில்லை.

அதேபோல், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 3,000 மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றி உயர்கல்வித்துறை அமைச்சரின் பதிலுரையில் எந்த அறிவிப்பும் இல்லை. இதுபற்றியெல்லாம் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளிடம் விசாரித்தால், பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் இருப்பதாகவும், அவற்றை அவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என்றும்  தெரிவித்தனர். கல்வித்துறைக்கு பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் தான் என்றாலும், அவை மரபுகள் காற்றில் பறக்க விடப்படுவது தான் மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழக அரசில் 54 துறைகள் உள்ளன. அவற்றுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் விவாதம் நடத்தப்படும் போது, அத்துறைகள் சார்ந்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வெளியிடுவது தான் மரபு ஆகும். ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம், பெயருக்கு சில அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிடுவதும், முக்கியமான அறிவிப்புகள் அனைத்தையும் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் வெளியிடுவதும் எழுதப்படாத சட்டமாகி விட்டது. தமிழக சட்டப்பேரவை விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208(1) பிரிவின்படி இயற்றப்பட்டவை ஆகும். பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிட வேண்டுமானால், அதை அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கலாம் என்றும், இந்த அறிவிப்பின் கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது என்றும் பேரவை விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அரிதிலும் அரிதாகவே விதி எண் 110 பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மரபாகும். 

ஆனால், 2011 ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா நேற்று முன்நாள் வரை மொத்தம் 115 முறை இந்த விதியை பயன்படுத்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டில் பல தருணங்களில் ஒரே நாளில் 5 முறை 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். நடப்புக் கூட்டத்தொடரில் கூட கடந்த 10ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீது பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு, அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், ஐந்து நாட்கள் கழித்து 15 ஆம் தேதி அத்துறை தொடர்பான 8 முக்கிய திட்டங்களை 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார். செய்தி விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் 10 ஆம் தேதி முடிந்த நிலையில், அத்துறை குறித்த இரு முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் கடந்த 14 ஆம் தேதி முதலமைச்சர் வெளியிட்டார். 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்தில் வேட்டி கட்டி செல்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது தொடர்பாக பேரவையில் கடந்த திங்கட்கிழமை விவாதம் நடைபெற்றது. அதற்கு அன்றே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதிலளித்திருக்க முடியும். ஆனால், அமைச்சரை பதிலளிக்க அனுமதிக்காமல், அந்த பிரச்சினை குறித்தும் நேற்று முன்நாள் முதலமைச்சரே 110 விதியின் கீழ் பதிலளித்துள்ளார். 110 விதியை பயன்படுத்துவது முதலமைச்சரின் உரிமை என்ற போதிலும், எப்போதாவது ஒருமுறை பயன்படுத்த வேண்டிய அந்த விதியை மூன்றாண்டுகளில் 115 முறை பயன்படுத்தியிருப்பதும், இது ஒரு சாதனை என்று சட்டப் பேரவைத் தலைவர் பாராட்டுவதும் அவை மரபுகள் மற்றும் விதிகளை கேலிக் கூத்தாக்கும் செயலாகும்.

அ.தி.மு.க.வின் அனைத்தும் ஜெயலலிதா தான் என்றால் அதை உட்கட்சி விவகாரம் என்று ஒதுக்கித் தள்ளி விடலாம். ஆனால், ஏழரை கோடி மக்களின் பிரதிநிதிகள் அவையில் அனைத்துமே முதலமைச்சர் தான்; அமைச்சர்கள் அனைவரும் பொம்மைகள் என்பது போல நடந்து கொள்வதும், குறைகளை சுட்டிக்காட்டிக் காட்டும் எதிர்க்கட்சியினரை ஓடுகாலிகள் என்று அமைச்சர்கள் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், அவையிலிருந்து வெளியேற்றுவதும் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்று சிறப்பு மிக்க விவாதங்களை நடத்திய பெருமை கொண்டது. அதை துதி பாடும் மன்றமாக மாற்றி விடாமல், பெருமையையும், மதிப்பையும் பாதுகாக்கும் வகையிலும், அவையின் விதிகள் மற்றும் மரபுகளை மதித்தும் செயல்பட தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Wednesday, July 16, 2014

இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

 


வெளியுறவு கொள்கையை மாற்றி அமைத்து, இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேரில் வலியுறுத்தினார். 

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை, பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் சமுதாய கூட்டணி ஆலோசகரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் சமுதாய கூட்டணி ஒருங்கிணைப்பாளர்கள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம், டாக்டர் இரா.செந்தில், வக்கீல் க.பாலு ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். 

அப்போது சுஷ்மா சுவராஜிடம், அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

இலங்கை அரசு வெளிப்படையாகவே சீனாவுடன் கைக்கோர்த்துக்கொண்டு செயல்படுகிறது. சீன பாதுகாப்பு அதிகாரிகளை திரிகோணமலை துறைமுகத்திலும், கச்சத்தீவிலும் நுழைய அனுமதிக்கிறது. இவையெல்லாம் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் மட்டுமல்ல. இந்திய வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்து விட்டதற்கான ஆதாரங்களும் ஆகும். 

இலங்கையில் நிலையான அரசு நீடிப்பதற்கு அங்கு அமைதி நிலவ வேண்டியது மிகவும் அவசியம் என்று இந்தியா நம்புகிறது. அதுமட்டுமின்றி, இந்திய பெருங்கடலில் பாதுகாப்பு உத்திகளை இந்தியா மேற்கொள்வதற்கும் இலங்கையில் நிலையான அரசு நீடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆனால், நீதியில்லாமல் அமைதி இருக்க முடியாது என்பதை இந்தியா மறந்துவிட்டது. 

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை கட்டுமானம் என்பது ரகசியம் நிறைந்த, ஆழமில்லாத, நாடாளுமன்றத்தின் மேற்பார்வையில்லாத, ஒரு குழுவினரால் நிர்வகிக்கப்படுவதாக உள்ளது. 

ஜனநாயக நாட்டின் அடிப்படை அம்சங்கள் என்னவோ, அவற்றில் ஒன்று கூட கடைப்பிடிக்கப்படாதது தான் இந்திய வெளியுறவுக் கொள்கை ஆகும். இலங்கை பிரச்சினையில் நிலவும் குளறுபடிகள் தான் இதற்கு சாட்சியமாகும். மத்தியில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு மிகவும் துரிதமாக செயல்படாவிட்டால், இந்த விஷயத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். 

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கையை பாகிஸ்தானும், சீனாவும் எவ்வாறு ஆதரித்தன என்பதிலிருந்தே அவற்றுக்கிடையிலான வஞ்சக உறவை புரிந்து கொள்ளலாம். இந்த உண்மைகளையெல்லாம் இந்திய அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்டு வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்யாவிட்டால், நமது எதிரிகளிடமிருந்து இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். 

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்கும் அதே நேரத்தில், இந்தியாவின் பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய நுணுக்கமான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கடைபிடிக்கவில்லை. மாறாக குறுகிய நோக்கங்களையும், பாரபட்சங்களையும், வணிக நோக்கங்களையும் கொண்ட கொள்கையைத்தான் இந்தியா கடைபிடித்து வருகிறது. 

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் எடுத்திருக்கிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இலங்கை தொடர்ந்து செய்துவரும் துரோகங்களை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, போர்க்குற்ற விசாரணையை இந்தியா ஆதரிப்பதும், அந்த விசாரணை வெற்றி பெறுவதற்காக ஆக்கபூர்வமான வழிகளில் பங்களிப்பதும் தான் சரியானதாகும். 

வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் செய்வது பற்றி மத்திய அரசு ஆராய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த மனுவில் குறிப்பிடப்பட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும்; இலங்கை தீவில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த வேண்டும்; அதன்மூலம் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: