பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் அழிந்து விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டு வந்த நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் தான் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் வரமாக இருந்த இத்திட்டம், அதில் செய்யப்பட்ட திருத்தங்களால் சாபமாக மாறியுள்ளது.
நாடு முழுவதும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்படி ஓர் ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.15,500 வரை இழப்பீடு பெற முடியும். இதற்காக ரூ. 160 மட்டும் பிரிமியம் செலுத்தினால் போதுமானது. இதனால், இந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், இப்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி ஓர் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர் இயற்கைச் சீற்றங்களால் அழிந்து போனால், அதற்காக அதிகபட்சமாக ரூ.2450 மட்டுமே இழப்பீடாக பெற முடியும்.
அதேநேரத்தில் புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்படி ஓர் ஏக்கருக்கான பிரிமியமாக ரூ.350 செலுத்த வேண்டும். கூடுதல் இழப்பீடு தேவையானால், அதற்காக கூடுதல் பிரிமியம் செலுத்தவேண்டும். முந்தைய அளவுக்கு இழப்பீடு பெற வேண்டுமானால், முன்பு செலுத்தியதைவிட சுமார் 12 மடங்கு அதிகமாக பிரீமியம் செலுத்த வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இவ்வளவு பிரிமியம் செலுத்தினால் கூட உரிய இழப்பீடு கிடைக்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.
பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியத்தில் ஒரு பகுதியை விவசாயிகளுக்காக மத்திய, மாநில அரசுகளே செலுத்துகின்றன என்ற போதிலும், இந்த சலுகை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதில்லை. பெரும்பாலான விவசாயிகள் தங்களின் சொந்தப் பணத்தில் பிரிமியம் செலுத்தும் நிலையில், வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் நெற்பயிர் பாதிக்கப்பட்டால் அதற்காக ஏக்கருக்கு ரூ2450 மட்டுமே இழப்பீடு கிடைக்கும் என்பது நியாயமற்றதாகும். இது விவசாயிகள் செலவழிக்கும் தொகையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவாகும். இதனால், விவசாயிகள் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை விட்டு விலகும் நிலை உருவாகும். பழைய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 2012&13ஆம் ஆண்டில் 10 லட்சம் பேர் சேர்ந்திருந்த நிலையில், புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் நடப்பாண்டில் குறிப்பிடத்தக்க அளவில் விவசாயிகள் சேரவில்லை என்பதிலிருந்தே புதிய திட்டத்திற்கு உள்ள எதிர்ப்பை உணரலாம்.
மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்றவாறு உணவு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். இதற்காக விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலான காப்பீட்டுத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். மாறாக வேளாண்மையிலிருந்தே விவசாயிகளை விரட்டியடிக்கும் வகையில் செயல்படக்கூடாது. விவசாயிகள் வேளாண் தொழிலில் இருந்து வேறு தொழிலுக்கு மாற வேண்டும் என 2012ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருந்தார். அந்த மன்மோகன்சிங் அரசு தயாரித்த புதிய தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை அப்படியே செயல்படுத்துவதுவது தேவையா? என்பதை பிரதமர் நரேந்திர மோடி சிந்திக்க வேண்டும்.
இன்னொருபுறம் வறுமையில் வாடும் உழவர்களுக்கு பயிர்க் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் மறுத்து வருகின்றன. இதனால், தமிழ்நாட்டில் நடப்பாண்டில் சம்பா சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு பெருமளவில் குறையும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
எனவே, புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து விட்டு ஏற்கனவே இருந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தவும், கடந்த காலங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களின் பழைய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு புதிய பயிர்க் கடன்களை வழங்கவும் மத்திய & மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment