பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாவட்டம் மேட்டூர் குள்ளவீரன்பட்டியில் காவல்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி 40க்கும் மேற்பட்ட வீடுகள் இராட்சத எந்திரங்களின் மூலம் இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. காவல்துறையினரின் மனிதநேயமற்ற இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
குள்ளவீரன்பட்டியில் வருவாய்த் துறைக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அந்த நிலத்தில் அப்பகுதிகளைச் சேர்ந்த வீடில்லாத மக்கள் வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர். அங்கு 56 ஏக்கர் பரப்பளவில் காவல்துறை பயிற்சிப் பள்ளி அமைக்கத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான நிலம் கடந்த 06.06.2014 அன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய இந்த நிலத்தில் ஏற்கனவே பலர் வீடுகளைக் கட்டியிருந்தார்கள். காவல்துறைக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் சிலர் வீடுகளை கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. காவலர் பயிற்சிப் பள்ளி கட்டுவதற்காக இந்த வீடுகளை இடிக்க காவல்துறை முயன்றதை எதிர்த்து அங்குள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அதை விசாரித்த நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தை அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்திருந்தால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக்கூடாது எனத் தீர்ப்பளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சர்ச்சைக்குரிய நிலத்தில் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக இல்லை என்றும், அந்த நிலம் காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட பிறகு தான் பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டது என்றும் கூறி அங்கிருந்த வீடுகளை காவல்துறையினர் இடித்துள்ளனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை விட, அதை எதிர்த்து போராடிய அப்பாவி மக்களை ஒடுக்க அவர்கள் கையாண்ட அணுகுமுறை மிகவும் மோசமானதாகும். வீடுகளை இடிப்பதை தடுப்பதற்காக, வீட்டுக்கதவை உட்புறமாக மூடிக் கொண்டு உள்ளே இருந்த மக்களை கதவுகளை உடைத்து வெளியேற்றிய காவலர்கள், கொடூரமாக தாக்கியுள்ளனர். கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட இந்தத் தாக்குதலுக்கு தப்பவில்லை. தாக்குதலில் காயமடைந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து கொடுமைப் படுத்தியிருக்கின்றனர்.
காவல்துறையினர் நினைத்திருந்தால் இந்த பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு கண்டிருக்கலாம். ஆனால், மனித நேயமின்றி மூர்க்கத்தனமாக நடந்து கொண்டுள்ளனர். இதனால், 40க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் குடியிருப்பதற்கு கூட இடமின்றி வெட்டவெளியில் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசு மனித நேயத்துடன் செயல்பட்டு ஏழை மக்களின் இந்தத் துயரத்திற்கு முடிவு கட்ட முன்வர வேண்டும். சேலம் மாவட்ட ஆட்சியரும், காவல் அதிகாரிகளும் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாற்று இடம் வழங்கி, வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கும்படி தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.