Saturday, May 31, 2014

அரியலூர் சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அளிக்க வேண்டும்: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் அருகே நேற்று மாலை பேரூந்தும், சரக்குந்தும் மோதிக்கொண்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 10 பேர் அரியலூர் தனியார் மருத்துவமனையிலும் மருத்துவம் பெற்று வருகின்றனர். விபத்தில் 13 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் காயமடைந்த அனைவரும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 இந்தக் கொடிய விபத்துக்கு சரக்குந்து ஓட்டுனரின் அலட்சியம் தான் காரணம் என கூறப்படுகிறது. ஓர் ஓட்டுனரின் தவறால் 13 பேரின் குடும்பங்கள் தீராத துயரத்துக்கு ஆளாகியிருக்கின்றன.

காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் 18 பேரில் பலரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர  மீதமுள்ளோரில் பலர் உடல் உறுப்புகளை இழந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் அளித்து, விரைவாக நலம் பெறச் செய்ய வேண்டும் என தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மருத்துவமனைகளின் மருத்துவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அரியலூர் சாலை விபத்தில் உயிரிழந்த 13 பேரில் ஒரு குழந்தை உள்ளிட்ட 8 பேர் செந்துறை பகுதியையும், 5 பேர் அரியலூர் பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவருமே ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
சுரேஷ், ஆனந்தி, ஜெயந்தி, சித்ரா ஆகிய 4 பேரும் பி.எட் தேர்வு எழுதிவிட்டு திரும்பும் வழியிலும், கவிதா என்பவர் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு திரும்பும்போதும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் இவர்களை நம்பியிருந்த குடும்பங்களின் கனவுகள் ஒரே நிமிடத்தில் சிதைந்து விட்டன.
இதைக் கருத்தில் கொண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அவரது தகுதிக்கேற்ற அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதேபோல் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான மருத்துவம் அளிப்பதுடன் தலா ரூ 3 லட்சம் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மதுக் குடிப்பதால் ஆண்டுக்கு 33 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு: உடனடித் தேவை மதுவிலக்கு: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றி  உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. மதுக் குடிப்பதால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 33 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள் என்பது தான் அந்த அதிர்ச்சி தரும் செய்தியாகும்.
‘‘ஆல்கஹால் மற்றும் சுகாதார நிலைமை குறித்த உலக அறிக்கை &2014’’ என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி,  மது குடிப்பதால் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மதுவால் ஏற்படும் பாதிப்புகள் கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்ததைவிட இப்போது பெருமளவில் அதிகரித்துள்ளது. அப்போது மதுவால் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில் இப்போது அந்த எண்ணிக்கை   33 லட்சமாக உயர்ந்துள்ளது. மது குடிப்பதால் 60 வகை நோய்கள் தாக்கும் என இதுவரைக் கூறப்பட்ட நிலையில், இப்போது 200 வகை நோய்கள் தாக்கும் என்று சுகாதார நிறுவன அறிக்கை எச்சரித்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி, சிலவகை புற்றுநோய்கள் ஏற்படுவதுடன், நிமோனியா, காசநோய் போன்றவையும் எளிதில் தொற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2010 ஆம் ஆண்டு நிலவரப்படி 15 வயதுக்குட்பட்ட ஆண்களில் 32.1 விழுக்காட்டினரும், பெண்களில் 10.60 விழுக்காட்டினரும் மதுவின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட  32% அதிகமாகும். அதுமட்டுமின்றி, மதுப்பழக்கம் உள்ளவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 41 லிட்டர் மது அருந்துகிறார்கள். பெண்களில் 10.60 விழுக்காட்டினர் மது அருந்துகிறார்கள் என்பதும், 12 வயதிலேயே சிறுவர்கள் மது அருந்தத் தொடங்கிவிடுகிறார்கள் என்பதும் கவலையளிக்கிறது. மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு உதாரணமாக காட்டப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைவிட இந்தியாவில் அதிக விழுக்காடு ஆண்களும், பெண்களும் மது அருந்துகின்றனர் என்பதிலிருந்தே மது அரக்கன் இந்தியர்களை எப்படி வளைத்துப் பிடித்திருகிறான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
மதுவின் தீமை அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாசு மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது, மதுக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் தேசிய ஆல்கஹால் கொள்கையை கொண்டு வருவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதுடன், அதற்கான முயற்சிகளிலும்  ஈடுபட்டார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் அதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு மேற்கொள்ள வில்லை. இப்போது அத்தகைய கொள்கையை உருவாக்கும்படி உலக சுகாதார நிறுவனமே வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலோ நிலைமை மேலும் மோசமாக உள்ளது. முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறக்கும் நடவடிக்கைகளில்  அ.தி.மு.க. அரசு ஈடுபட்டிருக்கிறது. எலைட் மதுக்கடைகள் என்ற பெயரில் மதுக்கடைகளை திறந்து வணிக வளாகங்களை மகளிர் நடமாட முடியாத பகுதியாக மாற்றிவரும் அரசு அடுத்தகட்டமாக அனைத்து மாநகராட்சிகளிலும் பீர் விற்பனைக்கென தனிக் கடைகளை திறந்து வருவது கண்டிக்கத் தக்கதாகும்.
மதுப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அடித்துள்ள எச்சரிக்கை மணிக்கு பிறகாவது மதுக்கடைகள் மூலம் வருவாய் ஈட்டும் வழக்கத்தைக் கைவிட்டு, மக்கள் நலனில் அக்கறை செலுத்த தமிழக அரசு முயல வேண்டும். குடியால் குடும்பங்கள் சீரழிவதையும், உயிர்கள் பறிபோவதையும் தடுக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday, May 18, 2014

முதல் முறையாக தேர்தலில் வென்ற அன்புமணி.. உச்சி மோர்ந்த ராமதாஸ்...தைலாபுரத்தில் கறிச்சோறு!!

சென்னை: முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ள பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் வெற்றி, அவரது குடும்பத்தினரை உச்சி குளிர வைத்துள்ளது. குடும்பத்தோடு அன்புமணியின் வெற்றியைக் கொண்டாடியுள்ளது டாக்டர் குடும்பம்.அன்புமணி வெற்றியைத் தொடர்ந்து கட்சியினருக்கு தைலாபுரம் தோட்டத்தில் கறிச்சோறு போட்டு விருந்தும் கொடுத்து மகிழ்வித்துள்ளனர்.டாக்டர் அன்புமணி இதற்கு முன்பு ராஜ்யசபா தேர்தலில் மட்டுமே போட்டியிட்டுள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது இதுவே முதல் முறையாகும். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அவர் தர்மபுரியில் வென்று விட்டார்.

தர்மபுரியில் மட்டும் பிரசாரம் எல்லாம் சரியாகி தொகுதிப் பங்கீடு முடிவடைந்த நிலையில் பாமக வேட்பாளர்களுக்காக அதுவரை பிராசரம் செய்து வந்த டாக்டர் ராமதாஸ், கடைசியில் தனது மகன் போட்டியிட்ட தர்மபுரியில் மட்டுமே தீவிரமாகப் பிரசாரம் செய்தார். மற்ற தொகுதிகளுக்கு அவர் போகவில்லை.

முதல் வெற்றி இத்தொகுதியில் மட்டுமே பாமக இந்தத் தேர்தலில் வென்றுள்ளது. மற்ற தொகுதிகளில் கோட்டை விட்டு விட்டது. பாமக தலைமையும் கூட மற்ற தொகுதிகளைப் பற்றிக் கவலைப்பட்டது போலத் தெரியவில்லை.
உச்சிமோர்ந்த ராமதாஸ் வெற்றிப் பெருமிதத்துடன் தனது தந்தையைச் சந்திக்க தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி வந்தபோது அவரது தந்தை ராமதாஸ் மகனை உச்சிமோர்ந்து உற்சாகத்துடன் வரவேற்றார். அவரது தாயார் மற்றும் குடும்பத்தினரும் அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கறிச்சோறு போட்டு விருந்து இதையடுத்து அன்புமணியின் வெற்றிக்காக உழைத்த அத்தனை பேருக்கும் தைலாபுரம் தோட்டத்திலேயே கறிச்சோறுடன் விருந்து படைக்கப்பட்டது. அனைவரும் சந்தோஷமாக விருந்தை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
 

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பணம் ஆறாக ஓடியது: தருமபுரியில் வெள்ளமாக பாய்ந்தது: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 18.05.2014 ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு 77 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பா.ம.க. போட்டியிட்ட மற்ற தொகுதிகளின் முடிவுகள் மன நிறைவளிக்கும் வகையில் இல்லாவிட்டாலும், தருமபுரி தொகுதி முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் பணம் ஆறாக ஓடியது என்றால், தருமபுரியில் மட்டும் வெள்ளமாக பாய்ந்தது. மருத்துவர் அன்புமணி இராமதாசு வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதையே முக்கிய இலக்காக கொண்டு செயலாற்றிய ஆளுங்கட்சியினர்  அதற்காக எந்தளவுக்கு விதிகளை மீறி செயல்பட முடியுமோ, அந்த அளவுக்கு விதிகளை மீறினார்கள். ஓட்டுக்குப் பணம் , அரசு எந்திரத்தின் தவறான பயன்பாடு, பாட்டாளி மக்கள் கட்சியினரை பணி செய்யவிடாமல் தடுத்தது என எத்தனையோ வழிகளில் பா.ம.க.வின் வெற்றிக்கு அணை போட அ.தி.மு.க முயன்றாலும், அவை அனைத்தையும் முறியடித்து அன்புமணி இராமதாசுவை  வெற்றி பெறச் செய்த தருமபுரி தொகுதி வாக்காளர்களுக்கு எந்த வகையில் நன்றிக்கடன் செலுத்துவது என்றே தெரியவில்லை.
கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே தருமபுரி தொகுதி மக்கள் பா.ம.க.வுக்கு ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறார்கள். தருமபுரி மக்களையும், பா.ம.க.வையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதும், தருமபுரி தொகுதி பா.ம.க.வின் இரும்புக் கோட்டை என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியிருக்கும் தருமபுரி மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி,  பா.ம.க மீது தருமபுரி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம்; நன்றிக்கடன் செலுத்துவோம் என்று கூறி தருமபுரி தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி, சிதம்பரம், ஆரணி, அரக்கோணம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளிலும் பா.ம.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவர்களின் நம்பிக்கையை முழுமையாக பெறும் வகையில், இனிவரும் காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சி பணியாற்றும் என்றும் வாக்குறுதி அளிக்கிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Saturday, May 17, 2014

மத்திய அரசில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம்-ராஜ்நாத்! அப்ப அன்புமணி அமைச்சர்!!!

டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் மத்திய அரசில் பங்கேற்கும் என்று அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதனால் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரே எம்.பி.யான அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையைத் தாண்டி கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும் பாரதிய ஜனதாவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளும் மத்திய அரசில் பங்கேற்கும். இந்த நாட்டை பாஜக வழிநடத்தி செல்ல யார் ஆதரவு அளித்தாலும் அதையும் ஏற்போம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.ராஜ்நாத் சிங்கின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகளில் தமிழகத்தில் வென்ற ஒரே கட்சியான பாமகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்று தெரிகிறது.என்.ஆர். காங்கிரஸ்?அதே நேரத்தில் புதுவையில் பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றதாக சொல்லப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் என்.ஆர். காங்கிரஸும் வேட்பாளரையும் நிறுத்தியது. பாட்டாளி மக்கள் கட்சியும் வேட்பாளரை தேர்தலில் நிறுத்தியது.தற்போது பாமகவை என்.ஆர். காங்கிரஸ் வீழ்த்தியுள்ளது. இதனால் மத்திய அமைச்சரவையில் என்.ஆர்.எஸ்.காங்கிரஸுக்கு வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா என்ற புதிய குழப்பமும் உருவாகியுள்ளது.

 

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்: தேர்தல் ஆணையம் வெளியீடு



நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளை, இந்திய தேர்தல் ஆணையம்  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கட்சிகள் பெற்ற வாக்குகளும், அதன் சதவீதமும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
அ.தி.மு.க. - 1,79,83,168 (44.3 சதவீதம்)

தி.மு.க. - 95,75,850 (23.6)

பா.ஜனதா - 22,22,090 (5.5)

தே.மு.தி.க. - 20,79,392 (5.1)

பா.ம.க. - 18,04,812 (4.4)

காங்கிரஸ் - 17,51,123 (4.3)

ம.தி.மு.க. - 14,17,535 (3.5)

சுயேச்சைகள் - 8,66,509 (2.1)

விடுதலை சிறுத்தைகள் - 6,06,110 (1.5)

புதிய தமிழகம் - 2,62,812 (0.6)

மனிதநேய மக்கள் கட்சி - 2,36,679 (0.6)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2,05,896 (0.5)

ஆம் ஆத்மி - 2,03,175 (0.5)

இந்திய கம்யூ. - 2,19,866 (0.5)

மார்க்சிஸ்ட் கம்யூ. - 2,20,614 (0.5)

பகுஜன் சமாஜ் - 1,55,964 (0.4)

நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) 5,82,062 (1.4)

Wednesday, May 14, 2014

ஈழத் தமிழ் அகதிகளை இன்டர்போல் கைது செய்ய அனுமதிக்கக் கூடாது : ராமதாஸ்



 பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கையில் சிங்கள இராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ள நிலையில், உயிர் பிழைப்பதற்காக கடந்த 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்திற்கு வந்த ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட 10 அகதிகளை தமிழக காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். மனித உரிமையை மீறிய இந்நட வடிக்கையையே அப்போதே கண்டித்திருந்தேன்.
இதைத்தொடர்ந்து தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்ட அகதிகளில் கதிர்வேலு தயாபரராஜா, உதயகலா ஆகிய இருவரையும் சர்வதேச காவல்துறையான இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் இருவரும் இலங்கை யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் பண மோசடி செய்திருப்பதாகவும், அதற்காகவே அவர்களை இன்டர்போல் உதவியுடன் இலங்கை அரசு கைது செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பி வந்த அப்பாவி அகதிகளை நிரூபிக்கப்படாத புகாரின் அடிப்படையில் துரத்தி, துரத்தி கைது செய்ய சிங்கள அரசு துடிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை தடை செய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி கொடூரமான முறையில் கொன்றொழித்துவிட்டு அதற்கான சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள மறுக்கும் இராஜபக்சே, நிரூபிக்கப்படாத பொருளாதார குற்றச்சாற்றுக்காக அகதிகளாக வந்த இருவரை சர்வதேச காவல்துறையை பயன்படுத்தி கைது செய்ய முயல்வது முரண்பாட்டின் உச்சம் ஆகும். இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் தவிர மீதமுள்ள தமிழர்களையும் ஏதேனும் ஒரு வகையில் சித்திரவதை செய்வது அல்லது படுகொலை செய்வது தான் இராஜபக்சேவின் நோக்கமாகும். அதன் ஒருகட்டமாகத் தான் அகதிகளை சர்வதேச காவல்துறை மூலமாக கைது செய்ய இலங்கை முயல்கிறது.
இலங்கையின் இந்த சதிக்கு இந்தியா துணை போனால், அடுத்தகட்டமாக உரிமைகளுக்காக போராடி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்று கொடுமைகளுக்குள்ளாக்க இராஜபக்சே அரசு முயலும். 1951 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அகதிகளின் அந்தஸ்து தொடர்பான ஒப்பந்தத்தில், ‘அகதிகள் எனப்படுபவர்கள் எல்லா சூழல்களிலும் அகதிகளாகவே கருதப்படுவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு நாட்டில் இன அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ ஒருவரின் உயிருக்கோ அல்லது சுதந்திரத் திற்கோ அச்சுறுத்தல் ஏற்படுமென்றால், அந்த நாட்டிற்கு எந்த காலகட்டத்திலும் அவர் தஞ்சம் புகுந்துள்ள நாட்டின் அரசு திருப்பி அனுப்பக்கூடாது என்று இந்த ஒப்பந்தத்தின் 33 ஆவது பிரிவில் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல், ஒரு நாட்டில் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து இருப்பதாக தெரிந்தால் அவரை அந்த நாட்டிற்கு அனுப்பக் கூடாது சித்திரவதைக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்தின் 3 ஆவது பிரிவில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழ் அகதிகள் எவரேனும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால், அவர்களை இலங்கை அரசு தலைவாழை இலை போட்டு உபசரிக்காது; கடுமையான சித்திரவதைக்குத் தான் உள்ளாக்கும் என்பது உலகமறிந்த இரகசியம் ஆகும். ஈழத்தமிழருக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு  மவுனசாட்சியாக இருக்கும் இந்திய அரசுக்கு இந்த உண்மை இன்னும் நன்றாகவே தெரிந்திருக்கும்.
எனவே, தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களை சர்வதேச காவல்துறை மூலம் நாடு கடத்த முயலும் இலங்கையின் திட்டத்திற்கு இந்தியா ஒருபோதும் துணை போகக்கூடாது. தமிழகத்திலுள்ள அகதிகளை அவர்களின் விருப்பமில்லாமல் அவர்களின் நாட்டிற்கு அனுப்ப சம்மதிக்க மாட்டோம் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்டுள்ள 10 ஈழத்தமிழ் அகதிகளையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tuesday, May 13, 2014

தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்க சட்டசபையில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கர்நாடகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் கன்னடத்தை கட்டாய பயிற்று மொழியாக அறிவித்து அம்மாநில அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தாய்மொழி கல்வி ஆதரவான எண்ணம் கொண்ட அனைவருக்கும் இத்தீர்ப்பு பேரதிர்ச்சி அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யவிருக்கும் கர்நாடக அரசு, அதில் நீதி கிடைக்கவில்லை என்றால், கன்னடத்தை கட்டாய பயிற்று மொழியாக்க சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது.அதுமட்டுமின்றி, மற்ற மாநில முதல்-அமைச்சர்களுடன் இது குறித்து விவாதிப்பதுடன், தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்திலும் வலியுறுத்தப் போவதாக கர்நாடக முதல்வர் சித்தராமய்யா கூறியுள்ளார். மேலும், தாய்மொழி வழிக்கல்வியை கட்டாயமாக்கி அரசியல் சட்டத்தை திருத்தும்படி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.அதே நேரத்தில், தமிழ் வழிக்கல்வியைக் கட்டாயமாக்கக் கோரி கடந்த 30 ஆண்டுகளாக தமிழறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்திய போதிலும், தமிழால் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் அவற்றைக்கண்டு கொள்ளவில்லை. கர்நாடகம், கேரளம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் மொழி, கல்வி தொடர்பான விஷயங்களில் அந்தந்த மாநிலங்களின் எழுத்தாளர்கள், மொழி அறிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோரைக் கொண்ட அமைப்புகள் தான் அரசுக்கு வழி காட்டுகின்றன. ஆனால் தமிழகத்தில் அத்தகைய அமைப்புகள் இல்லாததும், இருக்கும் தமிழறிஞர்கள் அரசியல் ரீதியாக பிரிந்து கிடப்பதும் நல்வாய்ப்புக்கு கேடானதாகும்.ஆங்கில வழிக்கல்வி கவர்ச்சிகரமானதாக இருக்கலாம்; ஆனால், தமிழ் வழிக்கல்வி தான் அறிவார்ந்ததாகவும், சிந்தனைத்திறனை தூண்டுவதாகவும் இருக்கும். எனவே, தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்கி தமிழக சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவதுடன், அதற்கு அரசியல் சட்ட பாதுகாப்பையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமின்றி, மொழி, கல்வி பற்றிய விஷயங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்க தமிழறிஞர்கள், கல்வியாளர்களைக் கொண்ட சுதந்திரமாக செயல்படும் அமைப்பையும் தமிழக அரசு உருவாக்கி ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 

Monday, May 12, 2014

தமிழறிஞர்கள் அரசியல்ரீதியாக பிரிந்து கிடப்பது


 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’கர்நாடகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கன்னடத்தை கட்டாய பயிற்று மொழியாக அறிவித்து அம்மாநில அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தாய்மொழி கல்வி ஆதரவான எண்ணம் கொண்ட அனைவருக்கும் இத்தீர்ப்பு பேரதிர்ச்சி அளித்தது.
எனினும், தாய்மொழி வழிக்கல்வியை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கும் கர்நாடக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்யவிருக்கும் கர்நாடக அரசு, அதில் நீதி கிடைக்கவில்லை என்றால், கன்னடத்தை கட்டாய பயிற்று மொழியாக்க சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, மற்ற மாநில முதலமைச்சர்களுடன் இது குறித்து விவாதிப்பதுடன், தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்திலும் வலியுறுத்தப் போவதாக கர்நாடக முதல்–அமைச்சர் சித்தராமய்யா கூறியுள்ளார். மேலும், தாய்மொழி வழிக்கல்வியை கட்டாயமாக்கி அரசியல் சட்டத்தை திருத்தும்படி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். கர்நாடக அரசின் இம்முடிவுக்கு அங்குள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
தாய்மொழி வழிக் கல்விக்காக கர்நாடக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் உண்மையாகவே பாராட்டத்தக்கவை. அதேநேரத்தில் தமிழகத்தின் நிலைமையோ தலைகீழாக உள்ளது. தமிழ்நாட்டை கடந்த 47 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழ்வழிக் கல்வியை திட்டமிட்டு அழித்து வருகின்றன.

1975 ஆம் ஆண்டு வரை சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மதுரை பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சில பள்ளிகளில் மட்டுமே நடைமுறையில் இருந்த பதின்நிலை (மெட்ரிக்) கல்வி முறையை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி கல்வியை வணிக மயமாக்கியதுடன், ஆங்கில வழிக் கல்வி தான் சாலச் சிறந்தது என்ற நச்சு எண்ணத்தை தமிழ்நாட்டு மக்கள் மனதில் ஆழமாக விதைத்த பாவம் இரு திராவிடக் கட்சிகளின் அரசுகளைத்தான் சாரும்.
தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்கக் கோரி கடந்த 30 ஆண்டுகளாக தமிழறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்திய போதிலும், தமிழால் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் அவற்றைக் கண்டு கொள்ளவில்லை. மாறாக, ஆங்கிலப் பள்ளிகளுக்கு போட்டியாக அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை தொடங்குவதில் தான் முந்தைய தி.மு.க. அரசும், இப்போதைய அ.தி.மு.க. அரசும் போட்டி போடுகின்றன.
ஒரு காலில் கட்டி ஏற்பட்டால் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதே சரியான தீர்வாக இருக்கும். மாறாக, ஒரு காலில் ஏற்பட்ட கட்டியைப் போலவே, இன்னொரு காலிலும் கட்டியை உருவாக்குவது எப்படிப்பட்டதாக இருக்குமோ, அதேபோல் தான் மெட்ரிக் பள்ளிகளை ஒழிப்பதை விடுத்து, அதற்கு போட்டியாக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்குவதும் அமையும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கர்நாடகம், கேரளம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் மொழி, கல்வி தொடர்பான விஷயங்களில் அந்தந்த மாநிலங்களின் எழுத்தாளர்கள், மொழி அறிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோரைக் கொண்ட அமைப்புகள் தான் அரசுக்கு வழி காட்டுகின்றன. ஆனால், தமிழகத்தில் அத்தகைய அமைப்புகள் இல்லாததும், இருக்கும் தமிழறிஞர்கள் அரசியல்ரீதியாக பிரிந்து கிடப்பதும் நல்வாய்ப்புக் கேடானதாகும்.
ஆங்கில வழிக் கல்வி கவர்ச்சிகரமானதாக இருக்கலாம்; ஆனால், தமிழ் வழிக் கல்வி தான் அறிவார்ந்ததாகவும், சிந்தனைத் திறனை தூண்டுவதாகவும் இருக்கும். எனவே, தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்கி தமிழக சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவதுடன், அதற்கு அரசியல் சட்ட பாதுகாப்பையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மொழி, கல்வி பற்றிய விஷயங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்க தமிழறிஞர்கள், கல்வியாளர்களைக் கொண்ட சுதந்திரமாக செயல்படும் அமைப்பையும் தமிழக அரசு உருவாக்கி ஊக்குவிக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

Friday, May 9, 2014

வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் தேவை: ராமதாஸ்



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று வெளியிடப்பட்ட 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இதுவரை இல்லாத வகையில் 90.60 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பயின்ற மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி சுஷாந்தி 1200க்கு 1193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். சுஷாந்திக்கும், மாநில அளவில் அடுத்த இரு இடங்களைப் பிடித்த அலமேலு, நித்யா, துளசிராஜன் ஆகியோருக்கும்  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தைப் பார்க்கும்போது இருவிதமான தமிழகம் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். தேர்ச்சி விகிதத்தில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் ஒன்று கூட வட தமிழகத்தைச் சேர்ந்ததில்லை; ஆனால், கடைசி 11 இடங்களில் உள்ள மாவட்டங்களில் திருவண்ணாமலை, அரியலூர், கடலூர், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் வடதமிழகத்தைச் சேர்ந்தவையாகும். இதிலிருந்தே இந்த மாவட்டங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியிருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
சென்னை மாநகருடன் இணைந்த திருவள்ளூரும், காஞ்சிபுரமும் இப்பட்டியலில் முறையே 23 மற்றும் 24 ஆம் இடங்களைப் பிடித்துள்ளன. இம்மாவட்டங்களின் பல பள்ளிகள் சென்னைக்குள் இருப்பதால் அதிக தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இப்பள்ளிகளை தவிர்த்து பார்த்தால் இம்மாவட்டங்களின் தேர்ச்சி விகிதமும் மிகமிக மோசமான நிலையிலேயே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
கல்வி, சுகாதாரம் ஆகியவற்றின் சிறப்பு என்னவென்றால், வளர்ச்சிக்கான மூலப்பொருளாகவும், அடையாளமாகவும் இருக்கக் கூடியவை என்பது தான். அதனால் தான் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்; இவற்றுக்கான தேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கல்வியில் வடமாவட்டங்கள் மிகவும் பின்தங்கியிருப்பதன் மூலம் அம்மாவட்டங்களில் வளர்ச்சி இல்லை என்பதும், எதிர்காலத்தில் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இல்லை என்பது தெளிவாகத் தெரியும். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரையிலான 35 ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்தை ஆய்வு செய்தால் ஒவ்வொரு ஆண்டும் வடமாவட்டங்கள் கடைசி இடங்களைத் தான் பிடித்திருக்கின்றன என்பது கண்கூடாகத் தெரியும்.
 இந்த நிலையை மாற்றி வடமாவட்டங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது தான் வருத்தமளிக்கும் விஷயமாகும். மது விற்பனையில் முன்னணியில் இருக்கும் வட மாவட்டங்கள், கல்வியில் கடைசி இடங்களைப் பிடிப்பது ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றாகும். ஆனால், இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வதில் காட்டும் ஆர்வத்தை, தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதில் தமிழக ஆட்சியாளர்கள் காட்டவில்லை. அதேபோல், தேர்ச்சி விகிதத்திலும், அதிக மதிப்பெண்களைப் பெறுவதிலும் தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகள்  பின் தங்கியிருப்பதும் வருத்தம் அளிக்கிறது. அரசு பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவது தான் இதற்கு முக்கியக் காரணம் ஆகும். ஒவ்வொரு பாடத்திற்கும் ஓர் ஆசிரியர் இருக்க வேண்டிய நிலையில், ஒரே ஆசிரியர் பல பாடங்களை எடுக்க வேண்டியிருப்பதும், பல இடங்களில் ஒரு பள்ளிக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதும் அரசு பள்ளிகளின் அவலத்தை உணர்த்தும். இருக்கும் ஆசிரியர்களை கல்விப் பணியாற்ற விடாமல் மற்ற பணிகளுக்கு அரசு திருப்பிவிடுவதும் கல்வித் தரம் குறைவதற்கான காரணங்களில்  ஒன்றாகும்.
தனியார் கல்லூரிகளை விட அரசு கல்லூரிகள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் நிலையில், அரசு பள்ளிகளின் தரத்தையும் அதேபோல் உயர்த்துவதற்கு எது தடையாக உள்ளது? என தெரியவில்லை. அரசும், ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. எனவே, வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தவும் தமிழக அரசு உடனடியாக சிறப்புத் திட்டத்தைத் தயாரித்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Monday, May 5, 2014

25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட வேண்டிய 25 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டில் வழங்கப் போவதில்லை என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீட்டின்கீழ் இலவசக் கல்வி வழங்கியதற்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை வழங்காததால் இத்தகைய முடிவுக்கு வந்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த 2009 ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும், தொழில்நுட்பக் காரணங்களால் 2010 ஆம் ஆண்டிலிருந்து தான் அச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்பின் 4 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை ஓர் ஆண்டு கூட கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டில் இச்சட்டத்தின்கீழ் நிரப்பப்படவேண்டிய 58,619 இடங்களில் 23,248 இடங்கள், அதாவது வெறும் 40% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 3550 தனியார் பள்ளிகளில் சுமார் 1000 பள்ளிகளில் ஓரிடம் கூட ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. வரும் 2014 & 15 ஆம் ஆண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடைமுறைகள் கடந்த 2 ஆம் தேதி தொடங்கின. ஆனால், 25% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசோ அல்லது தனியார் பள்ளிகளோ தொடங்கவில்லை. இந்த விஷயத்தில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மிகவும் அலட்சியமாக செயல்படுவதை கடந்த  2 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் கடுமையாக கண்டித்திருந்தேன்.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இலவசக் கல்வி வழங்குவதற்காக மாணவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை மே 10 ஆம் தேதி முதல் ஆய்வு செய்து சேர்க்கப்பட்ட மாணவர்கள் பட்டியலை 14 ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இன்னும் விண்ணப்பங்களே வழங்கப்படாத நிலையில், அவற்றை எச்சரிக்கவோ அல்லது விண்ணப்பங்கள் வழங்கப்படுவதையும், மாணவர் சேர்க்கை முறைப்படி நடப்பதையும் உறுதி செய்யவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை. இந்நிலையில் தான் தனியார் பள்ளிகளில் வரும் ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் ஒரு சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்திருப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி, இந்திய அரசியல் சட்டத்திற்கே விடப்பட்ட சவால் ஆகும். இதை மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

ஆனால், தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது தனியார் பள்ளிகள் கட்டுப்படுத்தப்பட வாய்ப்பே இல்லை என்பது போல தோன்றுகிறது. கல்வி பெறும் உரிமைச் சட்டம், கல்விக் கட்டண நிர்ணய நடைமுறை ஆகியவற்றை தனியார் பள்ளிகள் பெயரளவுக்குக் கூட மதிப்பதில்லை. கடந்த 3 ஆண்டுகளாக இந்த அத்துமீறல்கள் தொடர்ந்தாலும் இதைத் தடுக்கவோ அல்லது தவறு செய்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசு முன்வரவில்லை. மாறாக, தமிழக அரசுக்கே சவால் விடுக்கும் அளவுக்கு தனியார் பள்ளிகளுக்கு துணிச்சல் வந்திருக்கிறதென்றால்  அதற்குக் காரணம் ஆட்சியாளர்களுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புரிதல் தான் என்பதை யூகிக்க முடிகிறது.
தனியார் பள்ளிகளை முறைப்படுத்தி, 25% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசு, அந்த இட ஒதுக்கீட்டை அரைகுறையாக செயல்படுத்திய தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ. 4 கோடியை வழங்காமல் பாக்கி வைத்திருப்பதைப் பார்க்கும் போது அரசும், பள்ளிகளும் ஒப்பந்தம் செய்து வைத்துக் கொண்டு நாடகமாடுகிறார்களோ என்ற சந்தேகம் தான் ஏற்படுகிறது. வாக்களித்த மக்களுக்கு தமிழக மக்கள் உண்மையாக நடக்குமானால், 25% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மறுக்கும் தனியார் பள்ளிகளை எவ்வாறு கையாளப் போகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகள் மீது கல்வி பெறும் உரிமைச் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு, அவை அனைத்தும் இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்வதும், மராட்டிய மாநிலத்தில் நடைமுறையில் உள்ளவாறு ஒற்றைச் சாளர முறையில் 25% விழுக்காடு இடங்களுக்கான மாணவர்களை அரசே தேர்வு செய்து  தனியார் பள்ளிகளில் சேர்ப்பதும் தான் ஏழை மாணவர்களுக்கு தரமான, இலவசக் கல்வி வழங்க வகை செய்யும். இவ்வாறு கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: