Tuesday, January 10, 2012

தானே புயல் பாதிப்பை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும்:

தானே புயல் தாக்கியதால் தமிழகத்தில் குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் தாக்கி 12 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்புநிலை திரும்புவதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை.



கடலூர் மாவட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, மா, பலா, முந்திரி உள்ளிட்ட பயிர்களும், சவுக்குமரங்களும் அழிந்துவிட்டன. அது மட்டுமின்றி, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. 4 இலட்சத்திற்கும் அதிகமான குடிசைகளும், வீடுகளும் சேதமடைந்துள்ளன.



இதனால் கடலூர் மாவட்டத்தில் மின்விநியோகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. உண்ண உணவு, குடிக்க குடிநீர், இருக்க இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கடலூர் மாவட்ட மக்கள் பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளனர்.



தானே புயலால் ஏற்பட்ட சேதத்தை இன்னும் துல்லியமாக மதிப்பிடுவதற்குக் கூட இயலாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் மக்களின் உடமைகளும் வாழ்வாதாரங்களும் சூறையாடப்பட்டுள்ளன. முதல்கட்ட கணக்கெடுப்புகளின்படி, கடலூர் மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மின்விநியோகத்தை சீரமைக்கவே இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த நடுவண் குழுவினரை இதுபோன்றதொரு பாதிப்பை தாங்கள் இதுவரை கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்டதொரு பேரழிவை சரிசெய்ய அதிக அளவில் நிதியும், ஆள்பலம் மற்றும் கருவிகளும் தேவை. தமிழக அரசிடம் போதிய அளவு நிதியோ, ஆள்பலமோ இல்லாத நிலையில், புயல் பாதிப்புகளை சரிசெய்வதற்காக மத்திய அரசின் உதவி பெருமளவில் தேவைப்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசியப் பேரழிவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதன் அடிப்படையில், தமிழகத்திற்கு தாராளமாக நிதியுதவி வழங்குவதுடன், மின்விநியோகம் உள்ளிட்ட பாதிப்புகளை சீரமைக்க படைகளையும் அனுப்ப வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தி வரும் நடுவண் குழுவினரிடம் கடலூர், விழுப்புரம் மற்றும் நாகை மாவட்ட பா.ம.க. நிருவாகிகள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.



புதுச்சேரி மாநிலம் ஏற்கெனவே பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று நடுவண் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: