Tuesday, January 24, 2012

மக்கள் நலப் பணியாளர்களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,




தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்து கடந்த நவம்பர் மாதம் அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும் அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



பணிநீக்கம் செய்யப்பட்டதால் கடந்த இரண்டரை மாதங்களாக வறுமையில் வாடிய மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வயிற்றில் இத்தீர்ப்பு பால் வார்த்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பாமக சார்பில் முழுமனதுடன் வரவேற்கிறேன்.



மக்கள் நலப்பணியார்கள் அனைவரும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுபவர்கள். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இவர்களின் பங்கு மகத்தானது. அவ்வாறு இருக்கும்போது திமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களை பணிநீக்கம் செய்தது முறையல்ல.



சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பை மதித்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த காலத்திற்கும் ஊதியம் வழங்கப்படவேண்டும்.



சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்து மாணவர்களின் விலை மதிப்பற்ற நேரத்தை வீணடித்ததைப்போல இந்த வழக்கிலும் செய்யக்கூடாது. அதிமுக அரசின் முடிவுகள் உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றத்தாலும் தொடர்ந்து கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் இந்த வழக்கிலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மீண்டும் ஒருமுறை விமர்சனத்திற்குள்ளாக கூடாது. மக்கள் நலப்பணியாளர்களின் குடும்ப சூழ்நிலையும், மக்கள் நலப்பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்கும்படி தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Thursday, January 12, 2012

புதுவைக்கு இணையாக தமிழகத்திலும் இழப்பீடு: ராமதாஸ்

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதுவைக்கு இணையாக தமிழகத்திலும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.



ஒருவாரத்துக்குள் தனது கோரிக்கையை ஏற்று செயல்படுத்தாவிட்டால் 20 ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.



இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:



தமிழகத்திலும் புதுவையிலும் ஒருமாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் புதுவையில் அறிவிக்கப்பட்டதைவிட தமிழகத்தில் குறைந்த அளவிலேயே இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை புதுவை அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ரூ 10 ஆயிரம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது. வாழைக்கு புதுவையில் ரூ 35 ஆயிரம் வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் ரூ 7500 மட்டுமே வழங்கப்படுகிறது.



எனவே புதுவையில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு இணையான இழப்பீட்டுத் தொகையை கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட உழவர்களுக்கும் அரசு வழங்க வேண்டும். ஒருவாரத்துக்குள் தனது கோரிக்கையை ஏற்று செயல்படுத்தாவிட்டால் 20 ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்.



இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, January 10, 2012

தானே புயல் பாதிப்பை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும்:

தானே புயல் தாக்கியதால் தமிழகத்தில் குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் தாக்கி 12 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்புநிலை திரும்புவதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை.



கடலூர் மாவட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, மா, பலா, முந்திரி உள்ளிட்ட பயிர்களும், சவுக்குமரங்களும் அழிந்துவிட்டன. அது மட்டுமின்றி, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. 4 இலட்சத்திற்கும் அதிகமான குடிசைகளும், வீடுகளும் சேதமடைந்துள்ளன.



இதனால் கடலூர் மாவட்டத்தில் மின்விநியோகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. உண்ண உணவு, குடிக்க குடிநீர், இருக்க இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கடலூர் மாவட்ட மக்கள் பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளனர்.



தானே புயலால் ஏற்பட்ட சேதத்தை இன்னும் துல்லியமாக மதிப்பிடுவதற்குக் கூட இயலாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் மக்களின் உடமைகளும் வாழ்வாதாரங்களும் சூறையாடப்பட்டுள்ளன. முதல்கட்ட கணக்கெடுப்புகளின்படி, கடலூர் மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மின்விநியோகத்தை சீரமைக்கவே இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த நடுவண் குழுவினரை இதுபோன்றதொரு பாதிப்பை தாங்கள் இதுவரை கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்டதொரு பேரழிவை சரிசெய்ய அதிக அளவில் நிதியும், ஆள்பலம் மற்றும் கருவிகளும் தேவை. தமிழக அரசிடம் போதிய அளவு நிதியோ, ஆள்பலமோ இல்லாத நிலையில், புயல் பாதிப்புகளை சரிசெய்வதற்காக மத்திய அரசின் உதவி பெருமளவில் தேவைப்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசியப் பேரழிவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதன் அடிப்படையில், தமிழகத்திற்கு தாராளமாக நிதியுதவி வழங்குவதுடன், மின்விநியோகம் உள்ளிட்ட பாதிப்புகளை சீரமைக்க படைகளையும் அனுப்ப வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தி வரும் நடுவண் குழுவினரிடம் கடலூர், விழுப்புரம் மற்றும் நாகை மாவட்ட பா.ம.க. நிருவாகிகள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.



புதுச்சேரி மாநிலம் ஏற்கெனவே பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று நடுவண் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

Monday, January 9, 2012

சத்தியமா சொல்றேன், இனி யாருடனும் கூட்டணி கிடையாது-அன்புமணி

தர்மபுரி: சத்தியமாக சொல்கிறேன். இனி திராவிடக் கட்சிகள் எதனுடனும் பாமக கூட்டணி வைக்காது என்று கூறியுள்ளார் பாமக இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்.

தர்மபுரி மாவட்ட பாமக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தை 45 ஆண்டு காலம் திராவிடக் கட்சிகள் ஆண்டது போதும். இனி பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும். இதற்கான புரட்சியை இங்குள்ள இளைஞர்கள்தான் செய்ய வேண்டும்.

திராவிட கட்சிகள் சாராயத்தையும், இலவசத்தையும் கொடுத்து நம்மை ஏமாற்றி விட்டார்கள். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும். அதற்காக நமது இளைஞர்கள் இப்போதே தயாராக வேண்டும்.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை கொடுக்க மாட்டோம். அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் ஆகியவற்றை இலவசமாக வழங்குவோம்.

எந்த காரணத்தை கொண்டும், எந்த தேர்தலிலும் பா.ம.க. இனி கூட்டணி சேராது. இது சத்தியம். குறிப்பாக திராவிட கட்சிகளுடன் நாங்கள் சேர மாட்டோம்.
பா.ம.க. தலைமையில் திராவிடக்கட்சிகள் அல்லாத பிற கட்சிகள் வந்தால் அந்த கட்சிகளை எங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.

தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், அரசு மருத்துவக் கல்லூரி, பல்வேறு புதிய ரயில்கள், உள்ளிட்ட பல திட்டங்களை பா.ம.க. கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற பல திட்டங்களை பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் கொண்டு வரும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வருவதுதான். இதுபோன்ற நல்ல நோக்கங்களை கொண்ட பா.ம.க. ஆட்சிக்கு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.

Saturday, January 7, 2012

தேர்தல் அறிக்கையில் சொன்னபடி செய்யலை: ராமதாஸ்

சென்னை : "கரும்பு விலையை டன்னுக்கு, 100 ரூபாய் மட்டும் உயர்த்திருப்பது, விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் கரும்பு அரவை பருவம் துவங்கி, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலையை, தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு டன் கரும்புக்கு போக்குவரத்து செலவுடன் சேர்த்து, 2,100 ரூபாய் கொள் முதல் விலை வழங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு, தமிழக உழவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், டன்னுக்கு வெறும், 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
உழவர்களின் நலனைக் காப்பதில், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது என்று கூறிக்கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா, மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் கரும்பு கொள்முதல் விலையைக் குறைத்து நிர்ணயித்திருப்பது நியாயமல்ல. இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Monday, January 2, 2012

கடலூர் மாவட்ட புயல் பாதிப்பை இன்று பார்வையிடுகிறார் ராமதாஸ்

சென்னை: கடலூரில் தானே புயல் தாக்கிய பகுதிகளை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பார்வையிடுகிறார். பொதுமக்களையும், விவசாயிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிக்கையில்,

தானே புயல் தாக்கியதால் தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படாததால் மக்கள் குடிநீர், பால், மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பார்வையிட உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று கூறியுள்ளார் மணி.

கடலூர் மாவட்டத்தில் முந்திரி, பலா விவசாயிகள் மிகப் பெரிய சேதத்தையும், பாதிப்பையும் சந்தித்து பெரும் கவலையிலும், அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளனர்.

அவர்களையும் டாக்டர் ராமதாஸ் சந்திப்பார் என்று தெரிகிறது.

Sunday, January 1, 2012

புயல் பாதிப்பு இழப்பீடு: ராமதாஸ் கோரிக்கை

’’புயல் காரணமாக தமிழகத்தில் ரூ 1000 கோடி அளவுக்கும், புதுவையில் 2000 கோடி அளவுக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி மத்தியக் குழுவை வரவழைத்து புயல் சேதத்தை மதிப்பிடவும்,







அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து இழப்பீடு பெறவும் தமிழகம் மற்றும் புதுவை மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மத்திய அரசின் நிதி வருவதற்காக காத்திருக்காமல் தமிழக அரசு அதன் சொந்த நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

புதுவையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 2 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் புயல் பாதித்த பகுதிகளில் அதேபோல வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: