Friday, September 2, 2011
தூக்கு தண்டனையை ரத்து செய்ய மாநில அமைச்சரவைக்கு அதிகாரமுண்டு: ராமதாஸ்
சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மாநில அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது என்றும், அது தொடர்பான தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
``சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியை தமிழக சட்டப்பேரவை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது'' என்கிற வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டு வந்தமைக்காக நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே நேரத்தில், அரசியல் அமைப்பின் 161ம் பிரிவின் கீழ் மாநில அரசின் அமைச்சரவை மூலமாக கவர்னருக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 3 பேரின் தூக்கு தண்டனையை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
3 பேரின் தூக்கு தண்டனையை குறைப்பது தொடர்பாக 29.8.2011 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரால் அளிக்கப்பட்ட அறிக்கையில் - ``ஜனாதிபதியால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கருணை மனுவை மாநில கவர்னர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என 1991ம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கியுள்ளது.
5.3.1991 நாளிட்ட கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சரகம் - மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்பு சட்டம் 72-ன் கீழ் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 161-ன்படி உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்பு சட்டத்தின் பிரிவு கூறு 257(1)-ன்படி கட்டளையிடுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த தெளிவுரை மாநில கவர்னரையோ, மாநில அரசையோ கட்டுப்படுத்த கூடியது அல்ல. நமது அரசமைப்பு சட்டத்தின்படி சில அதிகாரங்கள் மத்திய அரசிடமும், சில அதிகாரங்கள் மாநில அரசிடமும் தன்னாட்சி உரிமையுடன் அளிக்கப்பட்டுள்ளன. எந்த அரசியல் சாசனத்திலிருந்து மத்திய அரசு அதிகாரத்தைப் பெறுகிறதோ, அதே அரசியல் சாசனத்திலிருந்துதான் மாநில அரசும் அதிகாரத்தைப் பெறுகிறது.
அரசியல் அமைப்பு சட்டத்தின் 72வது பிரிவின் கீழ் மத்திய அமைச்சரவையின் மூலமாக ஜனாதிபதிக்கு மன்னிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே அரசியல் சட்டத்தின் 161-ம் பிரிவின் கீழ் மாநில அமைச்சரவையின் மூலமாக மாநில கவர்னருக்கு மன்னிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இருவரின் அதிகாரங்களும் சரிசமமானவை ஆகும். இதுகுறித்து ``கவர்னர் மற்றும் அவரது அமைச்சரவை ஜனாதிபதியை விட உயர்வானது அல்ல எனும் கருத்திலிருந்து அரசியல் அமைப்பின் 161-ம் பிரிவு விதிவிலக்கானதாகும்'' என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது மன்னிக்கும் அதிகாரம் எந்த அளவுக்கு ஜனாதிபதிக்கு உள்ளதோ, அதே அளவுக்கு அதிகாரம் மாநில கவர்னருக்கும் உண்டு. தண்டனையை குறைப்பதிலும், மன்னிப்பதிலும் மாநில அரசும், மத்திய அரசும் சரிசமமானவைதான்.
மாநில அமைச்சரவை என்ன முடிவெடுக்கிறதோ அதனை கவர்னர் அப்படியே ஏற்கவேண்டும். அரசியல் சட்ட விதி 161ன் கீழ் கவர்னர் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. மாநில அமைச்சரவையின் முடிவை மறுக்கவும் முடியாது. மாநில கவர்னரின் மன்னிக்கும் அதிகாரத்தை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாது.
அரசியலமைப்பு சட்டம் 161ன் கீழான மாநில அரசின் இறையாண்மை அதிகாரம், கட்டுப்பாட்டிற்கோ, தடை செய்வதற்கோ உரியது அல்ல. இதனை வெறும் சுற்றறிக்கையால் மட்டுமல்ல - நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களால்கூட தடுக்க முடியாது. `இந்த அதிகாரம் முழுமையானது, கட்டற்றது, விதிகளால் தடுக்க முடியாதது' என ஏற்கனவே உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
உண்மை இவ்வாறிருக்கையில் மத்திய உள்துறை அமைச்சகம் 5.3.1991ல் அனுப்பிய தெளிவுரை அரசியலமைப்பு சட்டப்படி மதிப்புடையது அல்ல. செல்லுபடியாக கூடியதும் அல்ல. உள்துறை அமைச்சகத்தின் இந்த சுற்றறிக்கை ஒரு நீதிமன்ற வழக்கில் விளக்கமளிப்பதற்காக அனுப்பப்பட்டதாகும். அந்த வழக்கில்கூட இந்த விளக்கம் ஏற்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கடந்த 19.4.2000 அன்று தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின்படிதான் தமிழக கவர்னரால் மூன்று பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அப்போதைய முதல்வர் கருணாநிதியின் இந்த வரலாற்று பிழையை இப்போதைய முதல்வரால் மாற்ற முடியும். எனவே, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை குறைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிற நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த மூன்று பேரிடமும் மீண்டும் புதிய கருணை மனுவைப் பெற்று, மாநில அமைச்சரவைக்கு விதி 161ன் கீழ் உள்ள `இறையாண்மை அதிகாரத்தை' பயன்படுத்தி - அவர்களது தூக்கு தண்டனையை குறைக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ராமதாஸ் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
No comments:
Post a Comment