Sunday, August 21, 2011

இனி தனித்து போட்டியிடுவோம் என்றால் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்: ராமதாஸ்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்று அறிவித்ததும் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவின் திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று மணவாளநகரில் நடந்தது. அதில் கலந்து கொண்ட கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி, மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி சட்டசபை தொகுதிகளில் கட்சியை மேலும் வலுப்படுத்தவும், இளைஞர் படையை அமைக்கவும், தொகுதி வளர்ச்சிக்காகவும் ஆட்களை தேடினோம். அப்போது பாலா என்ற பாலயோகியின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவரை மாநில துணை பொதுச் செயலாளர் ஆக்கியுள்ளோம். அவருக்கு நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் பாமக மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறது. மக்களை வறுமையில் தள்ளி, இலவசங்களைக் கொடுத்து தமிழகத்தையே சீரழித்த திராவிடக் கட்சிகளை ஒழித்துக் கட்ட ஒவ்வொரு இளைஞனும், இளம்பெண்ணும் சபதம் எடுக்க வேண்டும். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தமிழகத்தில் குறைந்தது 13 இடங்களையாவது கைபற்றும்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக மிகப் பெரிய வெற்றி அடையப் போகிறது. 1989-ம் ஆண்டு கட்சியை ஆரம்பித்த புதிதில் தனித்து போட்டியிட்டு 17 லட்சம் வாக்குகள் பெற்றோம். மீண்டும் 1991-ம் ஆண்டு தனித்து நின்று 1 எம்.எல்.ஏ. வைப் பெற்றோம். 1996-வது ஆண்டிலும் தனித்தே நின்று 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம். அதன் பிறகு தான் கூட்டணி வைத்தோம். தற்போது வெறும் 3 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர்.

பாமக தனித்து போட்டியிடும் என்றதுமே கேலியும், கிண்டலும் செய்கிறார்கள் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: