Monday, August 29, 2011

அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்

சென்னை: கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், அதை மாற்றுவதற்கு முதலமைச்சர் என்ற முறையில் தமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி தமது கடமையிலிருந்து விலகிக் கொள்ள முதல்வர் ஜெயலலிதா முயன்றிருக்கிறார். இது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுக்களும் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவர்களை தமிழக முதல்வர் காப்பாற்றுவார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் நம்பிக்கொண்டிருக்கிறது.

ஆனால், கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், அதை மாற்றுவதற்கு முதல்வர் என்ற முறையில் தமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி தமது கடமையிலிருந்து விலகிக் கொள்ள ஜெயலலிதா முயன்றிருக்கிறார். இது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.

3 பேரின் தூக்கு தண்டனை தொடர்பாக தமிழகச் சட்டப் பேரவையில் விளக்கமளித்த முதல்வர், 1991ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தை காரணம் காட்டி, இம்மூவரையும் தம்மால் காப்பாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியிருப்பது வெறும் கடிதம் மட்டுமே. அந்தக் கடிதத்தைவிட அதிகாரம் படைத்த அரசியல் சட்டத்தில், ""ஒருவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்தாலும், அவர் மீண்டும் ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்யலாம். அதன்மீது மாநில அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று ஆளுநர் முடிவெடுக்கலாம்'' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரத்தை ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் வழங்கும் அரசியல் சட்டத்தின் 161ஆவது பிரிவு தீர்ந்து போகாத இறையாண்மை கொண்டது என்றும், ஒருவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்ததாலேயே, அவரின் கருணை மனுவை மீண்டும் ஆய்வு செய்யும் அதிகாரம் மாநில ஆளுநரிடமிருந்து பறிக்கப்படாது என அரசியல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஆந்திரத்தைச் சேர்ந்த பூமய்யா, கிருஷ்ட கவுடு ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 1976ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ""ஒருவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டதாலேயே, சம்மந்தப்பட்டவரின் 2ஆவது கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கோ அல்லது ஆளுநருக்கோ இல்லாமல் போகாது'' என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறது. இந்த கருத்தை அரசியல் சட்ட வல்லுநர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

எனவே இந்த மூவரின் சார்பிலும் ஆளுநரிடமும், முதல்வரிடமும் அளிக்கப்பட்டுள்ள கருணை மனுக்கள் மீது முதலமைச்சர் அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி சாதகமான முடிவை எடுக்க முடியும்.

கேரளத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சி.ஏ. பாலன் என்பவரின் கருணை மனுக்களை குடியரசு தலைவரும், ஆளுநரும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், 1957ஆம் ஆண்டில் கேரள சட்ட அமைச்சராக பொறுப்பேற்ற வி.ஆர். கிருஷ்ணய்யர், அப்போதிருந்த மத்திய அரசிடம் போராடி அவருக்கு விடுதலை பெற்றுத் தந்தார். இதையெல்லாம் முன்னுதாரணமாகக் கொண்டு மூவரின் உயிரையும் காப்பாற்ற முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டப்படியான உரிமைகள் ஒருபுறம் இருக்க, இம்மூவரையும் காக்க அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொள்ள இயலும்.

இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி பெருமை தேடிக் கொண்ட முதல்வர் அவர்கள், இம்மூவரின் தூக்கு தண்டனையையும் இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

மூவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் அவர்கள் மனது வைத்தால், அதை சாதிக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அவை அனைத்தையும் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Sunday, August 21, 2011

இனி தனித்து போட்டியிடுவோம் என்றால் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்: ராமதாஸ்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்று அறிவித்ததும் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவின் திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று மணவாளநகரில் நடந்தது. அதில் கலந்து கொண்ட கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி, மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி சட்டசபை தொகுதிகளில் கட்சியை மேலும் வலுப்படுத்தவும், இளைஞர் படையை அமைக்கவும், தொகுதி வளர்ச்சிக்காகவும் ஆட்களை தேடினோம். அப்போது பாலா என்ற பாலயோகியின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவரை மாநில துணை பொதுச் செயலாளர் ஆக்கியுள்ளோம். அவருக்கு நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் பாமக மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறது. மக்களை வறுமையில் தள்ளி, இலவசங்களைக் கொடுத்து தமிழகத்தையே சீரழித்த திராவிடக் கட்சிகளை ஒழித்துக் கட்ட ஒவ்வொரு இளைஞனும், இளம்பெண்ணும் சபதம் எடுக்க வேண்டும். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தமிழகத்தில் குறைந்தது 13 இடங்களையாவது கைபற்றும்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக மிகப் பெரிய வெற்றி அடையப் போகிறது. 1989-ம் ஆண்டு கட்சியை ஆரம்பித்த புதிதில் தனித்து போட்டியிட்டு 17 லட்சம் வாக்குகள் பெற்றோம். மீண்டும் 1991-ம் ஆண்டு தனித்து நின்று 1 எம்.எல்.ஏ. வைப் பெற்றோம். 1996-வது ஆண்டிலும் தனித்தே நின்று 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம். அதன் பிறகு தான் கூட்டணி வைத்தோம். தற்போது வெறும் 3 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர்.

பாமக தனித்து போட்டியிடும் என்றதுமே கேலியும், கிண்டலும் செய்கிறார்கள் என்றார்.

Sunday, August 14, 2011

ஒருமாதம் நான் சொல்வதை கேட்டால் போதும்: ராமதாஸ்

கும்பகோணம்:""ஒருமாதம் நான் சொல்வதை தமிழக அரசு கேட்டால் போதும்,'' என்று கும்பகோணத்தில் நடந்த தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.அவர் பேசியதாவது:தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 20 ஆண்டுகளும், திராவிட கட்சிகள் 44 ஆண்டுகளும் ஆட்சி நடத்தியுள்ளது. ஆனால், தமிழக மக்கள் எதிலும் முன்னேற்றம் அடையவில்லை.தமிழக மக்களுக்கு இலவசமாக பல்பொடி வழங்குவதில் துவங்கி, இன்று ஆட்டுகுட்டியில் வந்து நிற்கிறது.

இந்த இலவசங்களை நாங்கள் எதிர்க்கிறோம்.திராவிட கட்சிகளோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை. இனிமேல் தமிழகத்தில் பா.ம.க., தலைமையில் தான் கூட்டணி அமையும்.தமிழக மக்கள் நலனில் கடந்த அரசுகளுக்கு அக்கறை இல்லை. ஆனால் கல்வி, பொருளாதாரம், ஆகியவற்றில் நாம் வளர்ச்சி பெறவில்லை. ஒருமாதம் நான் சொல்வதை இந்த அரசு கேட்டால் போதும்; நான் கடந்த அரசிடமும் சொன்னேன், இப்போதும் செல்கிறேன்.சமமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம்.

தமிழகத்தில் உள்ள 49 கட்சிகளுக்கு இந்த கொள்கை இல்லை. தமிழகத்தின் முக்கிய பிரச்னையான காவிரி பிரச்னைக்கு காரணமாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும்தான்.காவிரி பிரச்னை தொடர்பாக இடைக்காலத் தீர்ப்பு, இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஏன் முயற்சிகள் எடுக்கவில்லை.தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தார்கள். திராவிட கட்சிகள் காலத்தில் தான் தமிழன் எலிகறி சாப்பிடும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் அரிசியில் தான் அரசியல் நடத்துகின்றனர்.

தமிழக மக்களுக்கு தரமான கல்வி, விவசாய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை கொடுத்தால், அதன்மூலம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வார்கள். இனி கடலில் நீர் உள்ள அளவும், வானத்தில் மேகம் உள்ள அளவும் பா.ம.க., யாரோடும் கூட்டு வைக்காது.வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிருபிப்போம். தமிழகத்தில் பா.ம.க.,வால் மட்டுமே கல்வி புரட்சி, தொழில்புரட்சி, விவசாய புரட்சி ஆகியவற்றை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

Thursday, August 11, 2011

பா.ம.க., : அரசுப் பள்ளிகளில், 60 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும்

சென்னை: ""பக்கத்து மாநிலங்களில் மது விற்பனை நடந்து, தமிழகத்தில் மட்டும் மது விலக்கை அமல்படுத்தினால், கள்ளச்சாராயக் கடத்தலுக்கு வழிவகுக்கும்'' என்று, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.பட்ஜெட் மீது, சட்டசபையில் நடந்த விவாதம்:கலையரசன் - பா.ம.க., : அரசுப் பள்ளிகளில், 60 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும். மதுவால் இளைய தலைமுறை ஒருபுறம் சீரழிவதோடு, ஏழைக் கூலி தொழிலாளர்களும், தங்களது கூலியை இதற்காகச் செலவிடுகின்றனர். கள்ள மது மற்றும் மது கடத்தல் சம்பவங்களும் நடக்கின்றன.அமைச்சர் விஸ்வநாதன் : முந்தைய ஆட்சியில் தான், ஆட்சியாளர்கள் உதவியுடன், மது கடத்தல் நடந்தது. தற்போது, கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க, கடும் நடவடிக்கை எடுக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், பலர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.கலையரசன் : மதுவின் தீமை பற்றி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்து வருகிறார். பூரண மது விலக்கை அமல்படுத்த, வலியுறுத்தி வருகிறார்.அமைச்சர் விஸ்வநாதன் : மதுவின் தீமையை, இந்த அரசும் உணராமல் இல்லை. மது விலக்கு வேண்டும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பக்கத்து மாநிலங்களில் மது விலக்கை அமல்படுத்தாமல்,

தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தினால், தமிழகம் ஒரு தீவு போல ஆகிவிடும். எனவே, அடுத்த மாநிலங்களில் அமல்படுத்தினால் தான், அது முழுமை பெறும். அல்லது கள்ளச் சாராயக் கடத்தலுக்கு வழிவகுக்கும்.கலையரசன் : உண்மையான நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம். ஆனால், முன்பு நிலத்தை விற்றவர்கள், தற்போது அந்த நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால், அதிக விலை கிடைக்கும் என்பதற்காக, புகார் கொடுப்பதும் நடக்கிறது. அரிசி கடத்தல் தொடர்கதை ஆகிவிட்டது.
அமைச்சர் செல்லூர் ராஜு: எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், இலவசமாக 20 கிலோ அரிசி இங்கு வழங்கப்படுகிறது. இந்த அரிசி, முந்தைய தி.மு.க., அரசு வழங்கியதை விட, தரமானதாக உள்ளது. எனவே, அனைத்துத் தரப்பு மக்களும் வாங்குகின்றனர்.ஆரம்பத்தில், கடத்தல் ஒரு சில இடங்களில் நடந்தது. ஆனால், தீவிர கண்காணிப்பு காரணமாகவும், பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்காமல், குண்டர் சட்டம் ÷பான்றவற்றில் கைது செய்யப்பட்டனர். யார் ஈடுபட்டார்களோ அவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களது சொத்துக்கள் மீதும், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கலையரசன் : கடந்த இரண்டு மாதங்களில், 1,519 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,877 குவின்டால் கடத்தல் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, 65 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் செல்லூர் ராஜு: எந்த அரசு, இவ்வளவு தூரம் சிறப்பாகச் செயல்பட முடியும். கடந்த ஆட்சியில், வேன், லாரி, கப்பல் என பல வழிகளில் அரிசி கடத்தினர். பெயருக்கு கைது நடவடிக்கைகள் இருந்தன. தற்போது, சரியான அதிகாரிகளைக் கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏதாவது ஒரு பகுதியில், அரிசி கடத்தல் நடந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.கலையரசன் : பா.ம.க.,வினர் யாரும், அரிசி கடத்தலில் ஈடுபடவில்லை.அமைச்சர் செல்லூர் ராஜு: பா.ம.க., அரிசி கடத்தியதாகக் கூறவில்லை. கடந்த ஆட்சியில் நிர்வாகிகள் செய்தனர். ஆனால், அவர்களுக்கு அன்றும் துணை நின்றீர்கள். இன்னும் துணை நிற்கிறீர்கள்.கலையரசன் : வேலூரில், பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையில், 4 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி : யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது.

"மக்களுக்காக அரசியல்':பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

கிருஷ்ணகிரி: ""திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், "மக்களுக்காக அரசியல்' என்ற செயல் திட்டத்தை, ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டில் இருந்து, முழுமையான சமச்சீர் கல்வி திட்டத்தை, நடைமுறைப்படுத்த வேண்டும். காமராஜர் காலத்தில், 12 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தது. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின், 11 ஆயிரம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துவங்கப்பட்டன. திராவிட கட்சிகள், கல்வியை கொள்ளையர்களுக்கு தாரை வார்த்துவிட்டன.
சமச்சீர் கல்வி முழுமையாக செயல்படுத்தப்பட்டால், மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு வேலையே இல்லை. 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ள தலைமைச் செயலக கட்டடத்தை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் கூட்டணி வைப்பது குறித்து நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். "திராவிடம்' என்ற சொல்லை நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், "மக்களுக்காக அரசியல்' என்ற செயல்திட்டத்தை ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Wednesday, August 10, 2011

திராவிட கட்சிகள் இந்தளவு பாழ்படுத்தி விட்டது.: ராமதாஸ்

வேலூர்: ""கடந்த, 49 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க.,பொதுக் குழு கூட்டம் வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில்நடந்தது. பா.ம.க., மாநில தலைவர் மணி தலைமை வகித்தார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: திராவிட கட்சிகளால் தமிழகம் சீரழிந்து விட்டது. இப்போதாவது தனித்து போட்டி என்ற எடுத்துள்ள முடிவில் உறுதியாக இருப்பீர்களா என, என்னிடம் பலர் கேட்கின்றனர். காரிருள் உள்ள வரை, கடல் நீர் இருக்கும் வரை தனித்துப் போட்டி என்ற கொள்ளையில் இருப்போம். காங்கிரஸ் தமிழகத்தை சீரழித்து விட்டது. இதை மாற்ற வேண்டும் .காங்கிரஸை ஒழிப்பது தான் திராவிடக் கட்சிகளின் கொள்கை என, 1949ம் ஆண்டில் இருந்து கூறி வந்தவர்கள் கொள்கை அழிந்து விட்டது. எனவே, 49 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிடக் கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை. திராவிட கட்சிகளின் ஆட்சியை மாற்ற நம்மால் தான் முடியும். இலவசங்கள், சினிமா, மது கொடுத்து ஏமாற்றி விட்டனர். விவசாயம் அழிந்து விட்டது. திராவிட கட்சிகள் கட்டாய கல்வி, இலவச கல்வி, தரமான கல்வியை அளிக்கவில்லை. இதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். திராவிடக் கட்சிகளை தூக்கி எறிய வேண்டும். இந்த கட்சி கொடிகளை பார்க்கும் போது இந்த எண்ணம் நமக்கு வர வேண்டும். இப்போது சமச் சீர் கல்வி திட்டம் கொண்டு வர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நிறைய மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், சி.பி.எஸ்.சி.,க்கு மாற்றுவதற்கு தயாராகி வருகின்றனர். இப்படி மாற்றினால் இந்த பள்ளிகள் முன் கடுமையான முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழி பாடமாக இருக்க வேண்டும். அனைத்து பாடங்களும் தமிழில் தான் இருக்க வேண்டும். இதை அமுல்படுத்தாத பள்ளிகள் அரசுடமையாக்கப்படும் என இந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இந்த தைரியம் அரசுக்கு உள்ளதா? சாயக் கழிவுகளால் நொய்யலாறு மாசுபட்டுள்ளதை தடுக்க, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர். ஆனால் பாலாற்றை தூய்மையாக்க இந்த அரசு என்ன செய்தது? தமிழகம் முழுவதும் காயம்பட்டு கிடக்கின்றது.
ரணம் அதிகம் உள்ளது. திராவிட கட்சிகள் இந்தளவு பாழ்படுத்தி விட்டது. ரணத்தை ஆற்ற வேண்டிய பொறுப்பு, பா.ம.க.,வுக்கு வந்து விட்டது. வரும் உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., வை மட்டும் தான் வெற்றி பெறணும். மற்ற கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., இளவழகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் வேலு, பொன்னுசாமி, சண்முகம், அணைக்கட்டு எம்.எல்.ஏ., கலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Friday, August 5, 2011

மக்களை நம்பி தான், கட்சியை தொடங்கினேன்: ராமதாஸ் பேச்சு

Print | E-mail
சனிக்கிழமை, 6, ஆகஸ்ட் 2011 (8:36 IST)

[X]
Click Here!



மக்களை நம்பி தான், கட்சியை தொடங்கினேன்: ராமதாஸ் பேச்சு



கள்ளக்குறிச்சியில் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் 05.08.2011 அன்று மதியம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். அப்போது பேசிய டாக்டர் ராமதாஸ்,


கடந்த மாதம் 27ந் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்றும், இனிமேல் தனித்துநின்று போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நமது கொள்கை விரும்பி, மக்களுக்காக போராடும் கட்சி மற்றும் சங்க அமைப்புகள் நமது கூட்டணிக்கு வந்தால் தேர்தலில் போட்டியிடுவோம். இங்கு பேசிய ஒருவர் பா.ம.க. தான் சிறந்த கட்சி என்று கூறினார். இதைத்தான் 3 ஆண்டுகளாக நான் சொல்லிவருகிறேன்.


மக்களை நம்பி தான், நான் 1989 ல் கட்சியை தொடங்கினேன். ஒரு கட்சி தொடங்குவது மற்றொரு கட்சியை ஆட்சியை அமர்த்துவதற்கு அல்ல. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நாம் ஆட்சியில் அமர்த்தி வந்தோம். இனி இதுபோன்று கூடாது. எனவேதான் தனித்துப்போட்டியிடுவது என்று முடிவு எடுத்தோம். இதை நல்லவர்கள், படித்தவர்கள், நடுநிலையார்கள், உயர்அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.


தனித்து போட்டி என்ற முடிவை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எடுத்திருந்தால் தற்போது நாம்தான் ஆட்சி நடத்துவோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 11 சதவீதம் புதிய வாக்காளர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். இவர்கள் அ.தி.மு.க.வை விரும்பி வாக்களிக்கவில்லை. தி.மு.க. வரக்கூடாது என்ற என்னத்தில், 3 வது அணி இல்லாத காரணத்தால் வாக்களித்தனர். அப்படி 3வது அணியாக நாம் இருந்திருந்தால் நமக்குத்தான் அந்த வாக்குகள் கிடைத்திருக்கும் என்றார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields
Name * :
Email Id * :

Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :

இலவசங்களை மக்கள் கேட்டார்களா? ராமதாஸ்

ள்ளக்குறிச்சியில் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் 05.08.2011 அன்று மதியம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ்,


மாணவர்களுக்கு தரமான கல்வி, மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை இலவசமாக வழங்க கொடுக்கவேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி பெறும்.


இலவசங்களை மக்கள் கேட்டார்களா?. மதுபான கடைகளை மூடிவிட்டு விவசாயத்துக்கான வளர்ச்சியை பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் இந்த பட்ஜெட்டில் விவசாய உற்பத்தியை பெருக்க எதுவும் ஒதுக்கவில்லை.

ஏனென்றால் இவர்களுக்கு விவசாயம், வேளாண்மை பற்றி ஒன்றும் தெரியாது. நமக்கு இதுபற்றி தெரிந்ததால்தான் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து விவசாயத்துக்காக தனி பட்ஜெட் போடுகிறோம். நாம் சொல்லும் பட்ஜெட்டை நிறைவேற்றினால் நாடு பெரும் வளர்ச்சி அடையும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்

விழுப்புரம்: திராவிட கட்சிகளோடு, இனி கூட்டணி வைக்க மாட்டேன் என்பதை, தீக்குளித்து நிரூபிக்கவும் தயார் என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். விழுப்புரத்தில்,

நேற்று மாலை நடந்த பா.ம.க., பொதுக்குழுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது: பொதுக்குழு கூட்டி, இனி திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளுடன் கூட்டணியில்லை என்ற, தீர்மானத்தை நிறைவேற்றினோம். நமது கொள்கையைப் பின்பற்றும் கட்சியோடு, அணிவகுப்போம். திராவிடன் என கூறுவதை விட, தமிழன் என்பதில் பெருமை கொள்வோம். திராவிடம் எனக் கூறி நம்மையும், மக்களையும் ஏமாற்றினர், ஏமாந்தோம். அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்றனர். அந்தக் கொள்கையை, சுடுகாட்டுக்கு அனுப்பியது தான் மிச்சம்.
"மானாட மயிலாட' பார்க்க, கட்சிக்கு ஒரு "டிவி' துவக்கியுள்ளனர். திராவிட கட்சிகள் ஆட்சியில் சினிமா, அரசியல் காரணமாக சீரழிவுகள் தான் அதிகம். நீங்களும் திராவிட கட்சிகளிடம், கூட்டணி வைத்தீர்களே என கேட்கிறார்கள். கூட்டணியில் இருந்த, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நான்கு ஆண்டுகளும் எதிர்க்கட்சியாகவே இருந்து, எதிர்த்து கேள்வி கேட்டோம். தி.மு.க.,வினர் கூட பயந்திருந்தனர். தி.மு.க., ஆட்சியில், நாம் கொடுத்த தொல்லையில், கருணாநிதி தலையில் அடித்துக்கொண்டு, தொலைந்து போ என்றதால் வெளியேறினோம்.
தனித்து நிற்க நல்ல முடிவெடுத்துள்ளீர்கள், உறுதியாக இருப்பீர்களா என்று கேட்கின்றனர். உறுதியாக இருப்போம் என்று நிரூபிக்க, தீக்குளிக்கனுமா.. எங்கிருந்தாவது குதிக்கனுமா, சொல்லுங்க தயார். இவர்களிடம், இனி எக்காலத்திலும் உறவும் இல்லை; ஒட்டும் இல்லை என்பது உறுதி. தனித்து நிற்கும் முடிவை வரவேற்று, தென்மாவட்டங்களில் இருந்தும், அதிகக் கடிதங்கள் வருகின்றன. மதுவைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள், ஓட்டு போய்விடும் எனலாம். போகட்டும் நமக்கு ஓட்டு வேண்டாம். இவ்வாறு, பா.ம.க., ராமதாஸ் பேசினார்.

Tuesday, August 2, 2011

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி பாமக போராட்டம்- ராமதாஸ் கைதாகி விடுதலை

திண்டிவனம்: தமிழகத்தில் சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்தக் கோரி பாமக சார்பில் இன்று தமிழகத்தின் வட பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது. டாக்டர் ராமதாஸ், திண்டிவனத்தில் போராட்டம் நடத்தி கைதானார். பின்னர் அவரை விடுவித்து விட்டனர்.

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மாணவர்களுக்கு புத்தகம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த பாமக அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி தமிழகத்தின் வட பகுதிகளிலும், மேற்குப் பகுதிகளில் சில ஊர்களிலும் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர் ராமதாஸ், திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஆடு, மாடு வேண்டாம், கல்வி வேண்டும்-ராமதாஸ்:

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுப்பது பாமகதான். சமச்சீர் கல்வி கொண்டுவர வேண்டும் என்று போராடியது பாமகதான். தமிழக அரசு இலவச மாடு, ஆடு, கிரைண்டர், மிக்சி தருவதாக கூறுகிறது. தமிழக மக்களுக்கு இலவச கல்வியை மட்டும் அரசு கொடுத்தால்போதும். வேறு எதுவும் இலவசமாக தமிழக அரசு கொடுக்க வேண்டாம்.

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதுதொடர்பான தீர்ப்பு தாமதமாக வந்தாலும், நல்ல தீர்ப்பு வரும் என்று பாமக எதிர்பார்க்கிறது. கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வியை சரியாக திட்டமிட்டு செயல்படுத்தியிருந்தால், தற்போது இவ்வளவு பெரிய பிரச்சனையாக வந்திருக்காது என்றார்.

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்

சென்னை: ""தமிழகத்தில், சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,'' என, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பா.ம.க., சார்பில் தமிழகம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, கண்டன ஆர்ப்பட்டத்தை துவக்கி வைத்து பா.ம.க., தலைவர் மணி பேசும் போது, ""தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படாததால், தவித்து வருகின்றனர். காலதாமதம் தொடர்ந்தால், பாடங்களை முழுவதுமாக நடத்துவது சிரமம் என ஆசிரியர்கள் கூறுகின்றனர். ""சமச்சீர் கல்வியை தாமதமின்றி அமல்படுத்தப்பட வேண்டும் என மாணவர்களின் பெற்றோரும் வலியுறுத்தி வருகின்றனர். இவைகளை அரசு கண்டுகொõள்ளாமல் உள்ளது. கல்வித் துறை செயல் இழந்து விட்டது. எல்லாருக்கும் தரமான, சீரான கல்வி கிடைக்க, சமச்சீர் கல்வி அவசியம். சமச்சீர் கல்வியை உடனடியாக செயல்படுத்த வேண்டும்'' என்றார்

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: