Tuesday, June 7, 2011

சமச்சீர்க் கல்வியை தமிழக அரசு கைவிடக் கூடாது-ராமதாஸ்

சென்னை: சமச்சீர்க் கல்விமுறை அனைத்து தரப்பினரிடமும் வரப்வேற்பை பெற்றுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடாமல் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் ஏழை பணக்காரர் வேறுபாடின்றி அனைவருக்கும் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்களும் அறிஞர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், சமச்சீர்க் கல்வி முறையை நிறுத்தி வைப்பதற்கான சட்டத்திருத்த முன்வடிவை தமிழக அரசு சட்டப்பேரவையில் அவசர அவசரமாக கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதற்காக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள முன்வடிவில், முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்படாதது உட்பட சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிக்கிறது.

இதன்மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, சமச்சீர்க் கல்வி திட்டம் முதன் முறையாகக் கொண்டுவரப்பட்டது, பா.ம.க. சார்பில் பேசிய சட்டப்பரவைக் கட்சித் தலைவர் ஜி.கே. மணி சமச்சீர்க் கல்விக்கான சட்ட முன்வடிவில் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், முத்துக்குமரன் குழு அறிக்கையில் என்ன பரிந்துரை சொன்னார்களோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறியதை சுட்டிக்காட்டி, இது தொடர்பான பா.ம.க.வின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என்று வினா எழுப்பியிருக்கிறார்.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக பா.ம.க.வின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாகத்தான் உள்ளது. தமிழக அரசு சுட்டிக்காட்டியிருப்பதை போல, சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் சில குறைகள் இருப்பதை பா.ம.க. எப்பாதும் மறுக்கவில்லை. ஆனால், அந்த குறைகளைக் காரணம் காட்டி சமச்சீர்க் கல்வித் திட்டத்தை நிறுத்திவிடக்கூடாது என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு.

சமச்சீர்க் கல்வித் திட்டம் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே அதிலுள்ள குறைகளை களைய வேண்டும் என்றுதான் நான் வலியுறுத்தினேன்.

சமச்சீர்க் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. சமச்சீர்க் கல்வித் திட்டம் மீண்டும் எப்போது செயல்படுத்தபடும் என்று அவையில் உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில் அளிக்கவில்லை.

இவற்றையெல்லாம் வைத்துபார்க்கும்போது சமச்சீர்க் கல்வித் திட்டத்தை கிடப்பில் போட அரசு திட்டமிட்டிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

சமச்சீர்க் கல்விமுறை அனைத்து தரப்பினரிடமும் வரப்வேற்பை பெற்றுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடாமல் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். செயல்படுத்திக்கொண்டே அதிலுள்ள குறைகளை களைய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: