Thursday, February 24, 2011

பாமகவுக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தைப் போல விடுதலைச் சிறுத்தைகளும் பெற வேண்டும்-திருமாவளவன்

காரியாபட்டி (விருதுநகர்): டாக்டர் ராமதாஸ் யாரை ஆதரிக்கச் சொன்னாலும் அதை பாமகவினர் கேட்கின்றனர். அதுதான் ஒரு அரசியல் கட்சிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம். அதேபோன்ற அங்கீகாரத்தை விடுதலைச் சிறுத்தைகளும் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

மதுரை அருகே விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், நடந்த விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

ஒரு கட்சியின் கட்டுப்பாட்டை மதிப்பது, அந்த கட்சியின் தலைமை கோட்பாடு, கொள்கைகளை மதிப்பது போன்ற மனப் பக்குவத்தை தொண்டர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பா.ம.க. தலைவர் ராமதாஸ் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாலும் அதே போல அக்கட்சியின் தொண்டர்கள் தலைவரின் ஆணையை மதித்து செயல்படுகிறார்கள். இந்த முறை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க. 31 தொகுதிகளை பெற்றுள்ளது. இது அக்கட்சிக்கு கிடைத்த அரசியல் அங்கீகாரமாகும்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தலித் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு சிதறிக்கிடந்த தலித் சமுதாயத்தை ஒன்று திரட்டி அவர்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை பெற்றுத் தருவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தலித் சமுதாயம் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இணைந்து கலைஞரை மீண்டும் முதல் அமைச்சர் பதவியில் அமர வைக்க பாடுபடுவோம். நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கும். குறிப்பாக தென் மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான தொகுதிகளை கேட்டுள்ளோம் என்றார் திருமாவளவன்.

'2க்கு மேல் எப்போதும் வேண்டாம்':

முன்னதாக நேற்று திருவண்ணாமலையில் நடந்த திமுக இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் பேசுகையில், 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பது பொன்மொழி. அந்த சிறப்பான வாழ்வை, திமுக தலைவர் கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தருவார் என்று நம்புகிறேன் என்று பேசினார்.

அவர் 16 என்று கூறியது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுகவிடமிருந்து எதிர்பார்க்கும் சீட்டைத்தான். இதற்கு கருணாநிதி பேசுகையில் தனது பாணியில் பதிலளித்தார். அவர் கூறுகையில், 16 பெற்றால் பெருவாழ்வு என்பதை ரவிக்குமார் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்.

இப்போதெல்லாம் ஒன்றுக்கு மேல் ஒன்றும் வேண்டாம், இரண்டுக்கு மேல் வேண்டவே வேண்டாம் என்றுதான் கூறுகிறார்கள் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: