Sunday, February 27, 2011

நாளை டாக்டர் ராமதாஸ் பேரன் திருமணம்-கருணாநிதி பங்கேற்பு-இன்று வரவேற்பு

சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகள் காந்தி அம்மையின் மகன் டாக்டர் சுகந்தன் திருமணம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். இன்று இரவு நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் பர்னாலா பங்கேற்கிறார்.

டாக்டர் ராமதாஸின் மகள் காந்தி அம்மை-பரசுராமன் தம்பதியின் மகன் டாக்டர் சுனந்தன். இவருக்கும், ராணிப்பேட்டையைச் சேர்ந்த சாந்தி-குணசேகரன் தம்பதியின் மகள் டாக்டர் டீனாவுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

இந்த திருமணம் நாளை சென்னை, எம்.ஆர்.சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி மணமக்களை வாழ்த்துகிறார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பல்துறைப் பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.

இவர்களது திருமண வரவேற்பு இன்று மாலை நடைபெறுகிறது. இதில் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா கலந்து கொண்டு வாழ்த்துகிறார்.
English summary

Saturday, February 26, 2011

அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்தவில்லை: பா.ம.க. அறிவிப்

சென்னை, பிப். 26: தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன், பா.ம.க. எந்த ஒரு கட்டத்திலும் பேச்சு நடத்தவில்லை என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிகளை பங்கீடு செய்வதில் பா.ம.க.-தி.மு.க இடையே சுமுகமான உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஒரே சந்திப்பில் இந்த உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
இந்த உடன்பாடு கையெழுத்தான நாளுக்கு முன்தினமோ, எந்த ஒரு கட்டத்திலோ பா.ம.க. தலைவர்களும், அ.தி.மு.க. தலைவர்களும் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் ஜி.கே. மணி

Friday, February 25, 2011

தமிழகம்தமிழகத்துக்கு ஏமாற்றம்: ராமதாஸ், வைகோ கருத்து

சென்னை, பிப். 25: ரயில்வே பட்ஜெட் தமிழகத்துக்கு ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

விரைவில் நடைபெறவுள்ள மேற்கு வங்க பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பட்ஜெட் என்பதைவிட மேற்கு வங்கத்துக்கான பட்ஜெட் என்று சொன்னால் மிகையாகாது.

தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 56 ரயில்களில் ஒரு சில ரயில்கள் மட்டுமே தமிழகத்திற்குள்ளும், தமிழகத்தின் வழியாகவும் செல்லக் கூடியவை. இதில் 2 ரயில்கள் மட்டுமே தினமும் இயக்கப்படுவை.

விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பகல், இரவு நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மின்மயமாக்கும் திட்டம், இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.

பாமக அமைச்சரின் முயற்சியால் சென்னை பரங்கிமலையில் இருந்து புதுச்சேரிக்கு அறிவிக்கப்பட்ட ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று ராமதாஸ் கூறியுள்ளார்

Thursday, February 24, 2011

பாமகவுக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தைப் போல விடுதலைச் சிறுத்தைகளும் பெற வேண்டும்-திருமாவளவன்

காரியாபட்டி (விருதுநகர்): டாக்டர் ராமதாஸ் யாரை ஆதரிக்கச் சொன்னாலும் அதை பாமகவினர் கேட்கின்றனர். அதுதான் ஒரு அரசியல் கட்சிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம். அதேபோன்ற அங்கீகாரத்தை விடுதலைச் சிறுத்தைகளும் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

மதுரை அருகே விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், நடந்த விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

ஒரு கட்சியின் கட்டுப்பாட்டை மதிப்பது, அந்த கட்சியின் தலைமை கோட்பாடு, கொள்கைகளை மதிப்பது போன்ற மனப் பக்குவத்தை தொண்டர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பா.ம.க. தலைவர் ராமதாஸ் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாலும் அதே போல அக்கட்சியின் தொண்டர்கள் தலைவரின் ஆணையை மதித்து செயல்படுகிறார்கள். இந்த முறை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க. 31 தொகுதிகளை பெற்றுள்ளது. இது அக்கட்சிக்கு கிடைத்த அரசியல் அங்கீகாரமாகும்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தலித் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு சிதறிக்கிடந்த தலித் சமுதாயத்தை ஒன்று திரட்டி அவர்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை பெற்றுத் தருவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தலித் சமுதாயம் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இணைந்து கலைஞரை மீண்டும் முதல் அமைச்சர் பதவியில் அமர வைக்க பாடுபடுவோம். நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கும். குறிப்பாக தென் மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான தொகுதிகளை கேட்டுள்ளோம் என்றார் திருமாவளவன்.

'2க்கு மேல் எப்போதும் வேண்டாம்':

முன்னதாக நேற்று திருவண்ணாமலையில் நடந்த திமுக இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் பேசுகையில், 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பது பொன்மொழி. அந்த சிறப்பான வாழ்வை, திமுக தலைவர் கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தருவார் என்று நம்புகிறேன் என்று பேசினார்.

அவர் 16 என்று கூறியது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுகவிடமிருந்து எதிர்பார்க்கும் சீட்டைத்தான். இதற்கு கருணாநிதி பேசுகையில் தனது பாணியில் பதிலளித்தார். அவர் கூறுகையில், 16 பெற்றால் பெருவாழ்வு என்பதை ரவிக்குமார் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்.

இப்போதெல்லாம் ஒன்றுக்கு மேல் ஒன்றும் வேண்டாம், இரண்டுக்கு மேல் வேண்டவே வேண்டாம் என்றுதான் கூறுகிறார்கள் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 22, 2011

திருமாவளவனை இலங்கை திருப்பி அனுப்பிய விவகாரம்: ராமதாஸ், வீரமணி கண்டனம்

சென்னை, பிப். 22: விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கை சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியது.

இதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பார்வதி அம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நான் இலங்கை சென்றேன். எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அவர்கள் கூறிய விளக்கம் ஏற்கும்படியாக இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினரான என்னை திருப்பி அனுப்பியது இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானமாகும். இந்தப் பிரச்னையை நான் நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்றார்.

ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருமாவளவனுக்கு "டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்' உள்ளது. அதன் மூலம் எந்த நாட்டுக்கும் எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியும்.

இந்த சிறப்பு பாஸ்போர்ட்டை மதிக்காமல் அவரை திருப்பி அனுப்பியிருப்பதன் மூலம் இந்தியாவையும், இந்திய வெளியுறவுத் துறையையும் இலங்கை அவமதித்துள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்

Friday, February 18, 2011

திமுக அணியில் பா.ம.க: 31 இடங்களில் போட்டி

சென்னை, பிப். 18: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.முதல்வர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெள்ளிக்கிழமை சந்தித்தார். அவருடன் கட்சித் தலைவர் ஜி.கே. மணியும் சென்றார். நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு, அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்தச் சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.

சந்திப்புக்குப் பிறகு, தி.மு.க. - பா.ம.க. இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

இதுதொடர்பாக, நிருபர்களிடம் அவர் கூறியது:

தில்லிக்கு நான் சென்றிருந்தபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தேன். அப்போது வரும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இப்போது பா.ம.க.வுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு, இந்தத் தேர்தலில் தி.மு.க.வுடன் இணைந்து பா.ம.க. போட்டியிடும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார் கருணாநிதி.

அதன்பிறகு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

என் பேரன் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு வந்தேன். அதோடு சேர்த்து தேர்தல் உடன்பாடும் ஏற்படுத்திக் கொண்டுள்ளேன். மகிழ்ச்சியோடு கருணாநிதியைச் சந்திக்கச் சென்றேன். மகிழ்ச்சியோடு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்.

பா.ம.க.வுக்கு 31 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை இரு கட்சிகளின் தேர்தல் குழுக்கள் கூடி முடிவு செய்யும்.

திருமண அழைப்பிதழை கொடுக்க வந்த நான், இந்த தேர்தல் உடன்பாட்டையும் எதிர்பார்த்துதான் வந்தேன்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. அணியில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைத் தவிர, மேலும் பல கட்சிகள் சேர இருக்கின்றன. இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

தேர்தலில் அதிக தொகுதிகளைப் பெறுவதற்கான பா.ம.க.வின் பேரம் பேசும் திறன் குறையவும் இல்லை, கூடவும் இல்லை என்றார் ராமதாஸ்.

சோனியாவைச் சந்திப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி, சோனியாவைச் சந்தித்து உள்ளார் என்றார் ராமதாஸ். கடந்த பேரவைத் தேர்தலில் இதே எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்றபோது, தொகுதிகளை அள்ளியும் கொடுக்கவில்லை - கிள்ளியும் கொடுக்கவில்லை என்று சொன்னீர்கள். இப்போதும் அதே அளவுக்குதான் தொகுதிகளைப் பெற்றிருக்கிறீர்களே என்று கேட்டபோது, இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் ராமதாஸ்.



பேரவைத் தேர்தலில் இதுவரை பா.ம.க.

1991 பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 1996 பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளை வென்றது.

2001 பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் சேர்ந்த பா.ம.க. 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2006 பேரவைத் தேர்தலில் தி.மு.க. அணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க., 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளை வென்றது.

இப்போது மீண்டும் தி.மு.க. அணியில் இடம்பெறும் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Thursday, February 17, 2011

சோனியாவுடன் அன்புமணி சந்திப்பு-திமுக கூட்டணியில் பாமக

திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க சோனியா காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார். இந் நிலையில் திமுக, அதிமுக என இரு தரப்புடனும் பாமக பேச்சு நடத்தி வந்தது. திமுக கூட்டணியில் சேருவதையே அன்புமணி விரும்புவதாகவும் கூறப்பட்டது.

இதற்காக சோனியாவை சந்தித்து சமாதானப்படுத்த பாமக முயன்று வந்தது. ஆனால், கடந்த 3 வாரங்களாக சோனியாவை சந்திக்க பாமக தரப்புக்கு அப்பாயின்மெண்ட் தரப்படவில்லை.

இந் நிலையில் நேற்று சோனியாவை சந்திக்க அன்புமணிக்கு வாய்ப்பு தரப்பட்டது. இதையடுத்து டெல்லி விரைந்த அன்புமணி சோனியாவுடன் பேச்சு நடத்தினார்.

அப்போது தமிழகத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் உடனிருந்தார். இவர் பாமகவை திமுக கூட்டணியில் சேர்க்க ஆர்வம் காட்டி வரும் முக்கியத் தலைவராவார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பாமகவும் காங்கிரசும் கூறினாலும் கூட்டணி குறித்தே பேசப்பட்டதாகத் தெரிகிறது. தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறுவது சரியல்ல என பாமகவிடம் காங்கிரஸ் எடுத்துச் சொன்னதாகவும் தெரிகிறது.

சந்திப்பின்போது தனது சகோதரியின் இல்லத் திருமண பத்திரிக்கையும் சோனியாவிடம் அன்புமணி வழங்கினார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நேரில் சந்தித்து அன்புமணி அழைப்பிதழை வழங்கினார்.

முன்னதாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுக் கூட்டம் குலாம் நபி ஆசாத்தின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, திமுக கூட்டணியில் பாமக இணைவதை காங்கிரஸ் வரவேற்பதாகக் கூறினார்.

பாமக விஷயத்தில் காங்கிரஸ் முடிவெடுக்காத வரை கூட்டணி தொடர்பாக அடுத்தகட்டமாக பேச்சுவார்த்தைகள் நகர்வது சாத்தியமில்லை என்று காங்கிரசிடம் திமுக கூறிவிட்டதையடுத்தே அன்புமணியை சோனியா சந்தித்தததாகத் தெரிகிறது.

இதையடுத்து கூட்டணியில் பாமக இடம் பெறும் செய்தி விரைவில் வெளியாகவுள்ளது.

Saturday, February 12, 2011

தமிழகம்பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை, பிப். 12: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கால்நடைத் தீவனத்தின் விலை மற்றும் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு பாலை எடுத்துச் செல்லும் வாகனச் செலவு ஆகியவை உயர்ந்து கொண்டே போகும் நிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாதது.

பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால், பால் விநியோக விலையை அரசு உயர்த்திவிடக் கூடாது. இதைச் சமாளிக்க ஆவின் நிறுவனங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம், மானியம் வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவை அரசு சமாளிக்கலாம்.

மேலும் பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தடையாக இருந்தபோதும், அந்தத் தடையை நீக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமதாஸ் கொடுத்த "டீ பார்ட்டி': எம்.எல்.ஏ.,க்களுக்கு "அட்வைஸ்'

சட்டசபை தேர்தல் பணியில் முழுவீச்சில் இறங்குவதற்காகவும், கூட்டணி குறித்த குழப்பங்களை தீர்ப்பதற்காகவும் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வைத்த, "டீ-பார்ட்டி' பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பா.ம.க.,வைப் பொறுத்தவரை, தேர்தல் காலங்களில் தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணியை எப்படியாவது முன்கூட்டியே உறுதி செய்துவிடும். ஆனால், இந்த தேர்தலில் அது உடனடியாக சாத்தியமாகாமல், காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் சந்தித்த படுதோல்வி, பென்னாகரம் இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி ஆகியவற்றை வரவுள்ள சட்டசபை தேர்தலில் சரிக்கட்டி விடலாம். அதற்கு, சாதகமாக கூட்டணியை அமைத்துக் கொள்ளலாம் என்று பா.ம.க., தெம்பாக இருந்தது. இந்நிலையில், பா.ம.க., கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்ததாக தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்து பா.ம.க., மத்தியில் இறுக்கத்தை அதிகரித்தது. இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார். ஜி.கே. மணியும், வேல்முருகனும் தி.மு.க., தரப்புடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், கூட்டணி பற்றி மகிழும்படியான தகவல்கள் பா.ம.க.,வுக்கு கிடைக்கவில்லை.



இதற்கிடையே, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி சேர முக்கிய கட்சிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது பா.ம.க.,வுக்கு ஆறுதல் அளிப்பதாக இல்லை. தே.மு.தி.க.,வுக்கு ஏற்பட்டு வரும் முக்கியத்துவம் தங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பா.ம.க., தலைமை கருதுகிறது. இந்நிலையில், இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த வியாழன் இரவு கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, "டீ பார்ட்டி' கொடுத்து ராமதாஸ் ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ராமதாஸ் உறவினர் வீட்டில் நடந்த இந்த, "டீ பார்ட்டி'யில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி மற்றும் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டணி அமைப்பதில் ஏற்பட்டு வரும் தாமதம் குறித்து அப்போது சிலர் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக, தி.மு.க.,வும், காங்கிரசும் தங்களை இழுத்தடிப்பதாவும் சில எம்.எல்.ஏ.,கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அதன் பின் ராமதாஸ் பேசும் போது, " கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் கவலைப்படாதீர்கள். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியை தீவிரப்படுத்துங்கள்' என்று எம்.எல்.ஏ.,க்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.



இது குறித்து பா.ம.க., நிர்வாகிகளிடம் கேட்ட போது, "சட்ட சபை இறுதி கூட்டம் முடிந்து விட்டதால், இனி எம்.எல்.ஏ.,க்கள் சென்னையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டசபையில் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகளை பாராட்டுவதற்காக, "பார்ட்டி' ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், தேர்தல் குறித்தும் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டன. தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடுமாறு ராமதாஸ் கேட்டுக் கொண்டார்' என்றனர். பா.ம.க., தலைவர் நடத்திய, "டீ பார்ட்டி'யில் பரிமாறப்பட்ட தகவல்கள் குறித்து தெரிந்து கொள்வதில் ஆளுங்கட்சியும் ஆர்வம் காட்டியுள்ளது. தி.மு.க., கூட்டணியையே, பா.ம.க., விரும்புவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து ஆளுங்கட்சி தரப்பிலும் ஆலோசனை தீவிரமாகியுள்ளது.

அள்ளிக் கொடுக்கிற மக்களுக்கு, கிள்ளிக் கொடுப்பது தவறில்லை-ராமதாஸ்

சென்னை: பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நியாயமானது தான் என்றும், பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால், மக்களுக்கு வினியோகிக்கும் பாலின் விலையை அரசு உயர்த்தக் கூடாது என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உற்பத்தியாளர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கையும், போராட்டமும் மிகவும் நியாயமானதுதான். பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளின் வியர்வைதான் பாலாக கறக்கப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை.

அரசு புறம்போக்கு நிலத்திலும், மற்றவர்கள் நிலத்திலும் தண்ணீர் எடுத்து லிட்டருக்கு 15 முதல் 20 ரூபாய் வரையில் விற்பனை செய்து சிலர் கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நிலையில், நாள் முழுவதும் உழைத்து வியர்வை சிந்தி பால் கறந்து தருகிற விவசாயிகளுக்கு அதிக விலை கொடுப்பது நியாயமானதே.

ஒருவாரக் காலமாக நடந்துவரும் இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். போராட்டம் தீவிரமானால் மாநிலம் முழுவதும் பால் விநியோகம் பாதிக்கப்பட்டு, பால் நுகர்வோர்களான பொதுமக்கள் அவதிக்குள்ளாவார்கள். இந்தப் பாதிப்பு மாநிலத்தில் ஒவ்வொவரு குடும்பத்திற்கும் ஏற்படும்.

இத்தகைய ஆபத்தான நிலையைத் தவிர்க்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பால் உற்பத்தியாளர்கள் கோரியபடியே, பசும்பாலுக்கு லிட்டருக்கு 22 ரூபாயும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு 33 ரூபாயும் விலை நிர்ணயித்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

கால்நடை தீவணத்தின் விலை மற்றும் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு பாலை எடுத்துச் செல்லும் வாகனச் செலவு ஆகியவை உயர்ந்துகொண்டே வரும் நிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகும்.

மேலும், பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கங்களில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் இரவு-பகலாக உழைத்து வருகின்றனர். அவர்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தடையாக இருக்கும்பட்சத்தில், அந்தத் தடையை தகர்ப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் இந்த தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யவேண்டும்.

பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால், பால் விநியோக விலையை உயர்த்தும் முடிவுக்கு அரசு அவசரப்பட்டு வந்துவிடக்கூடாது. கொள்முதல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆவின் நிறுவனத்திற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

மதுவினால் மக்கள் இந்த அரசுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். அப்படி அள்ளிக் கொடுக்கிற மக்களுக்கு, கிள்ளிக் கொடுக்கும் வகையில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால், ஏற்படும் கூடுதல் செலவை அரசே மானியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்

Friday, February 11, 2011

திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்

புதுக்கோட்டை: திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும். வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் அவர்களை வெளிப்படையாகவே அழைக்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், தமிழ் மக்கள், தமிழ் மண்ணுக்காக போராடி, வாதாடி வரும் இயக்கம்தான் இந்த இயக்கம். இது தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கமல்ல.

நாங்கள் திமுக கூட்டணியில்தான் உள்ளோம் என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி உள்ளோம்.

விடுதலை சிறுத்தைக்கு 230 தொகுதிகளிலும் ஓட்டு வங்கி உள்ளது. 120 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும சக்தியாக உள்ளோம். எனவே விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் தேர்தல் முடிவை தீர்மானிக்க முடியாது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு 1 தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். மற்றொரு தொகுதியில் 2,000 ஓட்டுக்களில் மட்டுமே தோல்வி அடைந்தோம். 2 தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தால் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைத்திருக்கும்.

வரும் சட்டசபை தேர்தலில் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்க அதிக தொகுதிகளை கேட்போம். இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இந்த 2011ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் ஆண்டாக அமையும் என்றார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்போம். காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு எங்கள் கட்சியுடனான பேச்சுவார்த்தையை திமுக தொடஙகும்.

திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும். வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் அவர்களை வெளிப்படையாகவே அழைக்கிறோம் என்றார்.

பாமகவுக்கு வாக்களித்தால் அன்புமணி முதல்வராவார்-குரு

புதுச்சேரி: தமிழகம், புதுவையில் நமது தயவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. வன்னியர் சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பாமகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் டாக்டர் அன்புமணி முதல்வராக வருவார் என்று வன்னியர் சங்கத் தலைவர் 'காடுவெட்டி' குரு கூறினார்.

புதுச்சேரி மாநில வன்னியர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சங்க கொடியேற்று விழா அரியாங்குப்பத்தில் நடந்தது. அதில் பேசிய குரு,

புதுச்சேரி மாநிலத்தில் வன்னியர்கள் 60 முதல் 70 சதவீதம் வரை வசிக்கின்றனர். இவர்கள் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்தால் நாம் இன்னும் வளர்ச்சி காணலாம். பிறருக்கு கொடி பிடித்து, கோஷம் போடும் நிலையை மாற்றி நாம் நாட்டை ஆள வேண்டும் என்று தான் டாக்டர் ராமதாஸ் கூறுகிறார்.

வன்னியர் சமுதாயம் மற்ற சமுதாயத்துக்கு எதிரானது அல்ல. இந்த சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

பின்னர் டாக்டர் ராமதாஸ் வந்தார். நமக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு 1980ல் போராட்டம் அறிவித்தார். இதற்காக 21 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். அதன் பின்புதான் இடஒதுக்கீடு கிடைத்தது. இருந்தபோதிலும் புதுவையில் இந்த இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. அதையும் போராடி பெற்றுத் தந்தார்.

எத்தனையோ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் முதல்வராகி உள்ளனர். ஆனால் பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தாழ்த்தப்பட்டவர் இன்னும் முதல்வராகவில்லை. இதற்காக டாக்டர் ராமதாஸ் போராடுகிறார்.

வட தமிழ்நாட்டில் 120 தொகுதிகளில் நாம் பெரும்பான்மையாக உள்ளோம். நமது சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஓட்டும் மாம்பழ சின்னத்திற்குதான் என்று முடிவு செய்தால், யார் தயவும் இன்றி நாம் ஆட்சியைப் பிடிக்க முடியும்.

புதிய கட்சிகள் தொடங்கும்போது அதற்காக உயிர் தியாகம் செய்பவர்கள் வன்னியர்கள்தான். ஜெயலலிதா கைதான போது பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி தற்போது தூக்கு தண்டனை கைதிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். பல கட்சிகளை நாம் வாழ வைத்தோம். நம்மை யாரும் வாழ வைக்கவில்லை.

தமிழகம், புதுவையில் நமது தயவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. வன்னியர் சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பாமகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் டாக்டர் அன்புமணி முதல்வராக வருவார்.

இந்த சமுதாயத்தை டாக்டர் ராமதாசால்தான் வாழ வைக்க முடியும் என்றார் குரு.

Tuesday, February 8, 2011

கூட்டணி முடிவாகும் வரை வாய் திறக்க மாட்டேன்: ராமதாஸ்

சென்னை: ""கூட்டணி முடிவாகாததால் அது பற்றி பேச மாட்டேன்; எந்த கட்சியுடனும் பணியாற்ற தொண்டர்கள் தயாராக வேண்டும் '' என்று ராமதாஸ் பேசினார்.



சென்னை திரு.வி.க,நகர் தொகுதி பா.ம.க., தேர்தல் களப் பணியாளர் ஆலோசனை கூட்டம் ஓட்டேரியில் நடந்தது. கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: இளைஞர்களை மையமாக வைத்து தேர்தல் வியூகம் அமைத்துள்ளோம். சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களாக, இளைஞர்கள் மாற வேண்டும். சினிமாக்காரர்கள் பின்னால் சென்று சீரழியாதீர்கள்; கொள்கைப்பிடிப்புடன் வாழ உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை குறி வைத்து தீவிரமாக பணியாற்றுங்கள். கூட்டணி இன்னும் முடிவாகாததால், அது பற்றி இப்போதைக்கு ஏதும் பேச முடியாது. எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் பணியாற்ற தயாராக இருங்கள். தொப்புளில் பம்பரம் விடும் நடிகரின் கட்சி வரும் தேர்தலில் புறக்கணிக்கப்பட வேண்டும். இரண்டு திரைப்படம் நடித்தவர்கள் கூட முதல்வராக ஆசைப்படுகிறார்கள். சினிமாக்காரர்களின் கையில் தமிழகம் சிக்கினால் என்னவாகும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நடிகர்கள் தங்களை தெய்வங்களாக எண்ணி கொள்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி வர வேண்டும். ஆந்திராவில் முதல்வர் கனவோடு கட்சி தொடங்கிய சிரஞ்சீவி போனியாகாமல் கட்சியை ஊற்றி மூடிவிட்டார். இந்த நிலைமை தமிழகத்தில் உள்ள சில கட்சிகளுக்கும் உருவாகும். பா.ம.க.,வை விட நல்ல கொள்கைகள் உள்ள கட்சி தமிழகத்தில் இருப்பது நிருபிக்கப்பட்டால், அந்த கட்சியில் நான் சேர்ந்துவிடுகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Sunday, February 6, 2011

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உறுதி? வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்

சேலம்:வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ள நிலையில், வடமாவட்டங்களில் 50 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் பா.ம.க., தயாரித்துள்ளது. மேலும், தி.மு.க.,வின் உள்ளடி வேலைகளில் இருந்து தப்பிக்கும் வகையில், அமைச்சர்களுடன் மோதலில் ஈடுபட்டவர்கள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட மாட்டர் என, பா.ம.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின், பா.ம.க., தனது செல்வாக்கை மீட்க வேண்டும் எனில், வரும் சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., தரப்பில் தே.மு.தி.க.,வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், கூட்டணியில் சேர பா.ம.க.,வின் மிரட்டல் அங்கு எடுபட வில்லை.
அதே நேரத்தில், தி.மு.க.,வும் கை விரித்து விடக்கூடாது என்ற பயத்தில், தி.மு.க., கூட்டணியில் சேர்வதை உறுதி செய்து உள்ளது. பா.ம.க.,- தி.மு.க., கூட்டணியில் இணையும் பட்சத்தில், தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர்களை களத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



தமிழகத்தின் வடமாவட்டங்களில் பா.ம.க., செல்வாக்குள்ள 50 தொகுதிகளை தேர்வு செய்து, ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, பா.ம.க., மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில், சேலம் மேற்கு, ஓமலூர், மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி ஆகிய ஐந்து தொகுதிகளை கேட்டு பெறவும் திட்டமிட்டுள்ளது.கடந்த 2006 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 31 தொகுதிகள் குறையாத வகையில், பா.ம.க., தலைவர் மணி தி.மு.க.,விடம் பேசி வருகிறார். கடந்த முறை போட்டியிட்ட 31 தொகுதிகளுடன், மேலும் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.



பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, தொகுதியில் உள்ள செல்வாக்கு, பணபலம், தி.மு.க.,வினர் இடையே அவர்கள் மீதான நன்மதிப்பு, கட்சியினரை அரவணைத்து செல்லும் பாங்கு என, அவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை வேட்பாளராக நிறுத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.



தற்போதுள்ள 18 எம்.எல்.ஏ.,க்களில், பாதிக்கும் மேலானவர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதியவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவும், பா.ம.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது.தி.மு.க.,வின் உள்ளடி வேலைகளில் இருந்து தப்பிக்கும் வகையில், வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், உணவுத்துறை அமைச்சர் வேலு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரிடம் நேரடி மோதலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.,க்களில் பலருக்கு இந்த முறை போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது என்பதே தற்போது பா.ம.க., வட்டாரங்களில் பரபரப்பு பேச்சாக உள்ளது.



பட்டியலில் உள்ளவர்கள் யார்?சேலம் மேற்கு தொகுதிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் அருள், பசுமை தாயக மாநில செயலாளர் சத்ரியசேகர், மாநகர செயலாளர் கதிர்ராசரத்தினம், ஆறுமுகம், சாம்ராஜ்.மேட்டூர் தொகுதிக்கு, தற்போதைய எம்.எல்.ஏ.,வும் மாநில தலைவருமான மணி, அவரது மகன் தமிழ்குமரன், தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ., காமராசு, மினரல் சதாசிவம், ராஜேந்திரன்.இடைப்பாடி தொகுதிக்கு, தற்போதைய எம்.எல்.ஏ., காவேரி, யூனியன் சேர்மன் தொப்பாக்கவுண்டர், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜமாணிக்கம், கொழந்தாகவுண்டர்.ஓமலூர் தொகுதிக்கு, தற்போதைய எம்.எல்.ஏ., தமிழரசு, டாக்டர் மாணிக்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, மாவட்ட வன்னியர் சங்க தலைவர் முருகன்.சங்ககிரி தொகுதிக்கு, தாரமங்கலம் எம்.எல்.ஏ., கண்ணையன், அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட தலைவர் பூ.தா.கணேசன் ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பா.ம.க.வின் தயக்கமும், தி.மு.க.வின் வியூகமும்

கூட்டணி பேரம் நடக்கும் முன்னே, தேர்தல் வரும் பின்னே' என்பது தமிழக அரசியலில் கடந்த 40 ஆண்டுகளாக எழுதப்படாத சட்டம். "மியூசிக்கல் சேர்' ஆட்டத்தில் சுற்றிச் சுற்றி ஓடி, கிடைத்த இடத்தைப் பிடித்துக் கொள்ளும் ஆர்வத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் அல்லாத ஏனைய கட்சிகள் நடத்தும் தகிடுதத்தங்கள் ஏராளம் ஏராளம்.

÷பல கட்சிகளுக்கும் இப்போதுதான் தங்களது சுயமரியாதை நினைவுக்கு வரும். ஜாதிய பலமும், வாக்கு வங்கிப் புள்ளிவிவரங்களும் பயன்படும். கடந்த முறை பெற்ற இடங்களைப் பற்றியே கவலைப்படாமல், கடந்த தேர்தலில் போட்டியிட்ட இடங்களைவிட அதிக இடங்களில் போட்டியிட்டுத் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும்.

÷தில்லியில் சோனியா காந்தியைச் சந்தித்து தி.மு.க.வுடனான காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்து கொள்ளச் சென்ற முதல்வர் கருணாநிதி, பா.ம.க. தங்களது கூட்டணியில் இருக்கிறது என்று அறிவிக்க, பா.ம.க. தர்மசங்கடத்தில் நெளிய இப்போது அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருப்பது, பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கூட்டணியில் இணையப் போகிறது என்பதுதான்.

÷பென்னாகரம் இடைத்தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு 41,282 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்த பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, ஏதாவது கூட்டணியில் அங்கம் வகித்ததாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. சட்டப்பேரவையில் உறுப்பினர் பலம் இல்லாமல் போனால், அந்த அரசியல் இயக்கம் வலுவிழந்துவிடும் என்பதை ம.தி.மு.க.வின் அனுபவத்திலிருந்து பா.ம.க. பாடம் கற்றுக் கொண்டிருக்கிறது.

÷""பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க., அ.தி.மு.க. என்று இரண்டு கட்சிகளிடமும் அதிக இடங்களுக்காக பேரம் நடத்திக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் முதல்வர் கருணாநிதி, பா.ம.க. தங்கள் கூட்டணியில் இருப்பதாக அறிவித்தார். எதிர்பாராத இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் ராமதாஸ், நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அவசரப்பட்டு அறிவித்திருக்க வேண்டாம்'' என்று கருத்துத் தெரிவித்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

÷முதலில் பா.ம.க. தங்களது கூட்டணியில் இருக்கிறது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி பிறகு பொதுக்குழுவில், "எதிரிகளை நம்பலாம், துரோகிகளை நம்பக்கூடாது' என்று சோனியா காந்தி கருத்துத் தெரிவித்ததாகக் கூறியிருப்பது ஏன் என்ற கேள்விக்கு- ""இதையெல்லாம் யார் சோனியா அம்மையாரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளப் போகிறார்கள்? பா.ம.க.வை வழிக்குக் கொண்டுவர முதல்வரின் ராஜதந்திரமாகக் கூட இருக்கலாம் அது'' என்று பா.ம.க.விலேயே பலர் விமர்சிக்கிறார்கள்.

÷தி.மு.க., இந்தத் தேர்தலில் "ஸ்பெக்ட்ரம்' ஊழல் என்கிற மிகப்பெரிய சுமையுடனும், அரைகுறை மனதுடன் கூட்டணியில் தொடரும் காங்கிரஸ் எந்த அளவுக்கு உதவும் என்று தெரியாத மனநிலையுடனும்தான் மக்களைச் சந்திக்க இருக்கிறது. கூட்டணி ஆட்சி என்கிற உத்தரவாதம் அளிக்காத வரையில் காங்கிரஸ் தொண்டர்களின் முழுமனதுடனான ஆதரவு கூட்டணிக்கு இருக்காது என்பதை தி.மு.க. தலைமை நன்றாகவே உணர்ந்திருக்கிறது.

÷மேலும், காங்கிரஸ் தலைமை, தி.மு.க. கூட்டணிக்குச் சம்மதித்தாலும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணியை ஏற்றுக் கொண்டாலும், சராசரி காங்கிரஸ் வாக்காளர்கள் எந்த அளவுக்கு தி.மு.க. கூட்டணியை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற கேள்விக்குறி, தி.மு.க. தலைமையை அலட்டவே செய்கிறது. மக்களவைத் தேர்தலில் ஆதரவளித்த காங்கிரஸ் வாக்காளர்கள் இப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் 1980-ல் நடந்ததுபோல தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கக் கூடும் என்கிற சந்தேகமும் பரவலாகவே காணப்படுகிறது.

÷ஆரம்ப காலம் முதலே தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பைக் கணிசமாகத் தருவது வன்னியர்கள் அதிகமாக உள்ள வட மாவட்டங்கள்தான். ஏறத்தாழ 100 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வட மாவட்டங்களில் அதிக இடங்களில் தி.மு.க. போட்டி போட விரும்புவதும் அதனால்தான். கூட்டணிக் கட்சியான காங்கிரஸýக்குக் குறைந்தது 20 இடங்களையாவது வட மாவட்டங்களில் தரவேண்டிய நிலையில், பா.ம.க.வுக்கும் கணிசமான தொகுதிகளை அளித்தால் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளே சுமார் 50க்கும் குறைவானதாக இருக்கும்.

÷""50 இடங்களில் போட்டியிட்டால் 50 தொகுதிகளிலுமா வெற்றி பெற்றுவிட முடியும்? வெறும் 30 இடங்களில்தான் வட மாவட்டங்களில் வெற்றி பெறுகிறோம் என்றால், கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்குக் கிடைத்த 60 இடங்கள்தான் தி.மு.க.வுக்கும் கிடைக்கும். பா.ம.க.வைச் சேர்த்துக் கொள்ளாமல் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டும் இருந்தாலே வட மாவட்டங்களில் மட்டும் நாம் 60க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற முடியும்'' என்பது தி.மு.க.வில் பரவலாக இருக்கும் கருத்து.

÷அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமானால், கொங்கு மண்டலத்தில் ஒற்றை இலக்க இடங்கள்தான் தி.மு.க. கூட்டணிக்குக் கிடைக்கும் என்று தி.மு.க.வினரே முடிவுக்கு வந்துவிட்டனர். தென் மாவட்டங்களில் தி.மு.க. கணிசமான இடங்களில் வெற்றி பெற்றாலும், அந்த உறுப்பினர்கள் அழகிரிக்கு வேண்டியவர்களாக இருப்பார்கள் என்றும் தேர்தலுக்குப் பிறகு நடக்கும் பதவிப் போட்டியில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் கரம் பலவீனமாகாமல் இருக்க வட மாவட்டங்களில் தி.மு.க. கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

÷பா.ம.க.வைப் பொறுத்தவரை, தனியாகப் போட்டியிடுவது என்பது விஷப்பரீட்சை என்பது ராமதாஸýக்குத் தெரியும். அதே நேரத்தில், தி.மு.க.வுடனான கூட்டணி என்றால், எந்த அளவுக்கு அந்தக் கட்சியில் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் பா.ம.க.வுடன் ஒத்துழைப்பார்கள் என்பதுதான் டாக்டர் ராமதாஸின் கவலைக்கான காரணம்.

÷""தி.மு.க.வைப் பொறுத்தவரை, வட மாவட்டங்களில் மாவட்ட மற்றும் வட்டத் தலைவர்களில் பெரும்பாலோர் வன்னியர்கள். தங்களுக்குப் போட்டியாக பா.ம.க.வினர் வளர்ச்சி அடைவதை ஒருபோதும் விரும்பாதவர்கள். அதனால்தான், 2001 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 27 இடங்களில் போட்டி போட்டு 20 இடங்களில் வெற்றி பெற்ற பா.ம.க., 2006 தேர்தலில் வலுவான தி.மு.க. கூட்டணி இருந்தும் 31 இடங்களில் போட்டியிட்டு வெறும் 18 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. பா.ம.க. அதிக இடங்களில் வெற்றி பெற முடியாமல் போவதற்குத் தி.மு.க.வில் கீழ்மட்டத் தலைவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்ததுதான் காரணம்'' என்று குறிப்பிட்டார் குடியாத்தத்தைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் ஒருவர்.

÷அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்துக் கொள்வதிலும் பா.ம.க.வுக்கு சில தர்மசங்கடங்கள் இருக்கின்றன. என்னதான் வலியுறுத்தியும் சி.வி. சண்முகம் கொலை முயற்சி வழக்கை அ.தி.மு.க. தலைமை திரும்பிப் பெற ஒத்துழைப்பு நல்குவதாக இல்லை. தேர்தல் உறவு தனிப்பட்ட பகையை அகற்றுவதாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது எப்படி என்கிற தயக்கமும் பா.ம.க. தரப்பில் காணப்படுகிறது.

÷கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் சூழல் ஏற்பட்டால், அ.தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கு எத்தனை இடங்களை அளித்துவிட முடியும் என்கிற சந்தேகத்தை எழுப்புகிறார்கள் பார்வையாளர்கள். தே.மு.தி.க.வைவிடக் குறைவான இடங்களில் போட்டியிட பா.ம.க. தயங்கக் கூடும். 2001-ல் நடந்ததுபோல குறைந்த இடங்கள் நிறைவான வெற்றி என்று அமையுமானால் மட்டுமே, குறைந்த இடங்களை பா.ம.க. ஏற்றுக் கொள்ள முன்வரும். பா.ம.க. கேட்கும் தொகுதிகளை எல்லாம் அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் விட்டுக் கொடுக்குமா என்பது அடுத்த பிரச்னை.

÷அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி உறுதியானால், பா.ம.க.வுக்கு அந்தக் கூட்டணியில் குறைந்த இடங்களே தரப்படும் என்பது தி.மு.க. தலைமைக்குத் தெரியும். ""குறைந்த இடங்களை பா.ம.க. எங்கள் கூட்டணியில் ஏற்றுக்கொண்டால் நல்லது. பலமான கூட்டணி அமையும். இல்லையென்றால், பா.ம.க.வைத் தனிமைப்படுத்தித் தனித்துப் போட்டியிட வைப்பது என்பதுதான் முதல்வர் கருணாநிதி வகுக்கும் வியூகம்'' என்று சொல்லி நிறுத்தினார் மூத்த தி.மு.க. தலைவர் ஒருவர்.

÷தி.மு.க.வைப் பொறுத்தவரை எப்படியும் மும்முனைப் போட்டியை ஏற்படுத்தினால் மட்டுமே தங்களது அணிக்கு வெற்றி வாய்ப்பு என்று கருதுகிறது. ஒன்று, தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டு எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரிக்க வேண்டும். இல்லையென்றால், பா.ம.க. தனிமைப்படுத்தப்பட்டு தனித்துப் போட்டியிட்டுத் தனது செல்வாக்கை இழக்க வேண்டும். அ.தி.மு.க. அணியையும் பலவீனமாக்க வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் பலன் கிடைக்கும். பா.ம.க. பலவீனப்படுவதால் தி.மு.க. பலப்படும் என்று தி.மு.க.விலுள்ள வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.

÷தி.மு.க. அணியும், அ.தி.மு.க. அணியும் ஒரு விஷயத்தை மறந்துவிடுகின்றன. வட மாவட்டங்களில் ஏறத்தாழ 120 தொகுதிகளுக்கு மேல் பரவலாக வன்னியர் வாக்கு வங்கி இருக்கிறது. இதில் 50 தொகுதிகளில் வன்னியர்கள் நிர்ணாயகமாக இருக்கிறார்கள். இந்த 50 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சராசரியாக 20,000 வாக்குகளுக்கு மேல் இருக்கிறது. பா.ம.க.வைத் தனிமைப்படுத்துவதாலோ, மாற்று அணியில் இணையவிடுவதாலோ இந்த வாக்குகளை அந்தக் கூட்டணி இழக்க நேரிடும்.

÷""இந்தக் கணக்கெல்லாம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே எங்களுக்குச் சாதகமாக இருக்கும். தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் எங்கள் வாக்குகளை அவர்கள் பெறுவார்கள். வெற்றி அடைவார்கள். ஆனால், நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க.வினர் எங்களை வெற்றி பெறச் செய்வதில்லை'' - இது பரவலாகப் பா.ம.க.வினர் மத்தியிலுள்ள அபிப்பிராயம்.

÷தி.மு.க. கூட்டணியில் சேர்வதில் பா.ம.க. தயக்கம் காட்டுவதன் காரணம் இதுதான். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் இடம் பெறுமானால் தங்களுக்கு அங்கே என்ன மரியாதை இருக்கும் என்பது இன்னொரு தயக்கம். தனித்துப் போட்டியிட்டால், பென்னாகரத்தில் ஏற்பட்டதுபோல சில இடங்களில் இரண்டாவது இடமும், பல இடங்களில் மூன்றாவது இடமும், 1996-ல் தனித்துப் போட்டியிட்டு 4 இடத்தில் வெற்றிபெற்றது போல சில வெற்றிகளும் பெற முடியுமே தவிர, கணிசமான எம்.எல்.ஏ.க்களைப் பெற முடியாது என்கிற தயக்கம்.

÷பா.ம.க.வின் இந்த தயக்கத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறது தி.மு.க. ஒன்று, குறைந்த இடங்களைக் கொடுத்துக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது. இல்லையென்றால், மும்முனைப் போட்டியை ஏற்படுத்தி, எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரித்து அதில் குளிர்காய்வது.

÷பா.ம.க.வின் தயக்கம் விலகுமா, இல்லை, தி.மு.க.வின் வியூகம் ஜெயிக்குமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்

Saturday, February 5, 2011

கூட்டணி குறித்து 4 நாளில் முடிவு, 45 தொகுதிகள் கேட்போம்-ராமதாஸ்

பர்கூர்& நாகப்பட்டிணம்: சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து 4 நாளில் முடிவெடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கூட்டணியில் பாமகவுக்கு 40 முதல 45 இடங்களைக் கோருவோம் என்றும் அவர் கூறினார்.

பர்கூரில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், எந்தக் கூட்டணியாக இருந்தாலும் பர்கூர் தொகுதியை நிச்சயம் கேட்டுப் பெறுவோம் என்றார்.

முன்னதாக நேற்று நாகப்பட்டிணம் மாவட்டம், பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்கான கிளை நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தரங்கம்பாடியில் நடந்தது. அதில் பேசிய ராமதாஸ்,

சுமார் 43 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா தொழில் சார்ந்தவர்களே தமிழகத்தை ஆள்கின்றனர். இந்த நிலையை பாமகவினால்தான் மாற்ற முடியும். இதற்கு கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

தமிழகத்தில் வன்னியர்கள் அதிகமாக இருந்தாலும், அவர்களிடம் ஒற்றுமை இல்லாததால்தான் தமிழகத்தை பாமகவால் ஆள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாக்கு வங்கியாக மட்டுமே செயல்படும் வன்னிய சமூகத்தினர் அனைவரின் உள்ளங்களிலும், தமிழகத்தை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆள வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக கூட்டணி அமைத்தே போட்டியிடும். போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சி வெற்றி பெற தொண்டர்களும், நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும். தற்போது பாமக வசம் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் கூட்டணிக் கட்சியினரிடமிருந்து கேட்டுப் பெற்று, அந்தத் தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெறுவது அவசியம் என்றார் ராமதாஸ்.

இதற்கிடையே திமுக கூட்டணியில் பாமகவை மீண்டும் சேர்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதையடுத்து சோனியாவை பாமகவும் திமுகவும் சமாதானப்படுத்த முயன்று வருகின்றன.

ஆனால், சோனியா சாமாதானமாகவில்லை என்று கூறப்படுகிறது. அவரை எப்படியும் சமாதானப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் திமுக உள்ளது.

அதே நேரத்தில் சோனியாவின் கோபத்தையே காரணமாகக் காட்டி பாமகவுக்கு 18 இடங்கள் தான் தர முடியும் என்று திமுக கூறிவிட்டது.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் மட்டும் பாமக வென்றது. இப்போது பாமகவுக்கு 18 இடங்கள் மட்டுமே தர முடியும் என திமுக கூறியுள்ளது.

மேலும் புதிய நிபந்தனையாக, நாங்கள் கொடுக்கும் 18 இடங்களை வாங்கிக் கொள்ள வேண்டும், இந்தந்த தொகுதிகள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கக் கூடாது என்றும் திமுக கூறிவிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பாமக அதிமுகவுடன் பேச்சு நடத்த ஆரம்பித்துவிட்டது.

ஆனால் அங்கும் எதிர்பார்த்த அளவுக்கு பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்படவில்லை. தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூட்டணிக்குள் வந்துவிட்டால், கடைசி நேரத்தில் பாமகை ஜெயலலிதா கழற்றிவிடவும் தயங்க மாட்டார் என்பதால், திமுகவுடனும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது.

கடந்த முறை கிடைத்த 31ல் 6 இடங்களை விட்டுத் தருகிறோம். 25 இடங்கள் தரப்பட்டால் கூட ஓ.கே. என திமுகவிடம் லேட்டஸ்டாக பாமக தெரிவித்துள்ளது.

ஆனால், திமுக இவ்வளவு இடங்கள் தருமா என்பது சந்தேகமாகவே உள்ளதால் தான் 40 முதல் 45 இடங்கள் கேட்போம் என்று குண்டை வீசியுள்ளார் ராமதாஸ் என்கிறார்கள்.

மேலும் 4 நாளில் கூட்டணி குறித்து முடிவு என்று அறிவித்துவிட்டதன் மூலம், அதிமுக கூட்டணிக்குச் செல்லவும் தயார் என்பதை திமுகவுக்கும், குறிப்பாக, சோனியாவுக்கும் உணர்த்தியுள்ளார் ராமதாஸ்

Friday, February 4, 2011

பாமக வென்ற தொகுதிகளை மீண்டும் கேட்போம்: ராமதாஸ்

மயிலாடுதுறை, பிப். 4: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வென்ற தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளிடம் மீண்டும் கேட்போம் என்றார் அக் கட்சியின் நிறுவனர் ச. ராமதாஸ்.

நாகை மாவட்டம், பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்கான கிளை நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ராமதாஸ் பேசியது:

கட்சிப் பணியில் சரியாகப் பணியாற்றாத நிர்வாகிகளை மாற்றி, இளைஞர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 43 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா தொழில் சார்ந்தவர்களே தமிழகத்தை ஆள்கின்றனர். இந்த நிலையை பாமகவினால்தான் மாற்ற முடியும். இதற்கு கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

தமிழகத்தில் வன்னியர்கள் அதிகமாக இருந்தாலும், அவர்களிடம் ஒற்றுமை இல்லாததால்தான் தமிழகத்தை பாமகவால் ஆள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாக்கு வங்கியாக மட்டுமே செயல்படும் வன்னிய சமூகத்தினர் அனைவரின் உள்ளங்களிலும், தமிழகத்தை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளவேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக கூட்டணி அமைத்தே போட்டியிடும். போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சி வெற்றி பெற தொண்டர்களும், நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும். தற்போது பாமக வசம் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் கூட்டணிக் கட்சியினரிடமிருந்து கேட்டுப் பெற்று, அந்தத் தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெறுவது அவசியம் என்றார் ராமதாஸ்

Wednesday, February 2, 2011

தி.மு.க., நம்பிக்கை வீண் போகாது: பா.ம.க., முடிவு மீண்டும் மாற்றம்?

சேலம் : ""தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உள்ளதாக, கருத்து தெரிவித்த, முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கை, வீண் போகாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.



சேலம் மாவட்டத்தில், இரண்டு நாட்களாக, மேட்டூர், இடைப்பாடி, ஓமலூர் தொகுதிகளில், பா.ம.க.,வின் கிளை நிர்வாகிகள் பயிற்சி முகாமில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். சேலத்தில் தங்கியிருந்த அவரிடம், நிருபர்கள் கேள்வி, எழுப்பினர்.



முதல்வர் கருணாநிதி, கூட்டணி குறித்து தெரிவித்த கருத்துக்கு உங்கள் பதில் என்ன?
முதல்வர் கருணாநிதி கூறியதை, நானும் பத்திரிகையில் படித்தேன். அதுசம்பந்தமாக, இப்போது எதுவும் தெரிவிக்க இயலாது. நிருபர்களை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. தனி அறையில் நிருபர்களை சந்திக்கவே விரும்புகிறேன். தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உள்ளதா என்பது குறித்து, எவ்வித கருத்தும் இப்போது தெரிவிக்க இயலாது.



தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெறுமா?
தி.மு.க., கூட்டணியில் இல்லை என்று, எதுவும் சொல்வதற்கில்லை.



பா.ம.க., மீது, முதல்வர் கருணாநிதி வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உங்கள் பதில் என்ன?
முதல்வர் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது.இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.



ஊழல், லஞ்சப் பணத்தை வாங்குங்கள்: பா.ம.க.,வினருக்கு ராமதாஸ் அட்வைஸ் : இடைப்பாடி, தொகுதியில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. ராமதாஸ் பேசியதாவது: இடைப்பாடி தொகுதி என்பது, 30 கி.மீ., தூரத்துக்குள் தான் அடங்கி உள்ளது. தொகுதிக்குள் இருந்து கொண்டே, நீங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள காலதாமதம் செய்யலாமா?இடைப்பாடி தொகுதி நமது கோட்டை. அருகில் உள்ள சங்ககிரி தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுகள், பா.ம.க.,வுக்கு, கிடைக்கும் என்கின்றனர். நமது கோட்டையான இடைப்பாடியில், அதை விட அதிக அளவில் ஓட்டுகள் பெற வேண்டும்.



இத்தொகுதியில், 2.10 லட்சம் ஓட்டுகள் உள்ளன. இத்தொகுதியில் விரைவில் மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டிற்கு, 50 ஆயிரம் பேரை, நீங்கள் அழைத்து வரவேண்டும். அவ்வாறு அழைத்து வந்தால், நாம் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.இத்தொகுதி, பா.ம.க.,வின் கோட்டை என்பது, மற்ற கட்சிகளுக்கு தெரிந்து விடும். தேர்தல் நேரத்தில், ஓட்டுகளுக்கு, 100, 200 ரூபாய் மட்டுமின்றி, 1,000 ரூபாய் வரை கொடுப்பர். இந்த பணம் கொள்ளை, ஊழல், லஞ்சமாக பெற்றது தான். இந்த பணத்தையும் வாங்கிக் கொண்டு நீங்கள் பா.ம.க.,வுக்கு ஓட்டுப் போடுங்கள்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: