Sunday, January 2, 2011

எங்களை மதிக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி-பாமக தீர்மானம்

திண்டிவனம்: பாமகவை மதித்து நடத்தும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்று அக்கட்சியின் பொதுக்குழு தீர்மானம் போட்டுள்ளது.

கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பீனிக்ஸ் பறவை போல புத்துயிர் பெற்ற பாமக

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் உண்மையான வெற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்குதான் என்று நடுநிலையாளர்கள் பாராட்டினார்கள். இந்த சாதனையின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி பீனிக்ஸ் பறவையைப்போல அரசியலில் புத்துயிர் பெற்று புதிய உற்சாகத்துடன் இந்த சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கிறது.

மதிக்கிற கட்சியுடன் கூட்டணி

கூட்டணியை பொறுத்தவரை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் முடிவே இறுதியானது. கட்சிக்கு எது நல்லது, எது வெற்றியை தேடி தரும் என்பதை அலசி ஆராய்ந்து நம்மை மதிக்கிற கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதற்கான முடிவை தக்க தருணத்தில் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார்.

இலங்கை போரின் போதும், போருக்கு பின்னரும் இலங்கை ராணுவத்தினர் நடத்திய மனித உரிமை மீறல்களையும், அத்துமீறல்களையும் போர் குற்றங்களாக கருதி விசாரணை நடத்த இங்கிலாந்து உள்ளிட்ட சில மேலை நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் முன்வந்திருப்பதை பொதுக்குழு வரவேற்கிறது.

ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்

இந்த விசாரணையை விரைவாக நடத்தி முடித்து, ராஜபக்சே, அவரின் சகோதரர்கள், அவருக்கு கீழ் பணியாற்றிய ராணுவ தளபதிகள், போர் கைதிகளாக பிடிக்கப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சுட்டுக்கொலை செய்த அக்கிரமத்திற்கு காரணமான ராணுவ அதிகாரிகள் ஆகியோரை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

இலங்கையில் மத்திய அரசு தமிழக பகுதிகளில் நடத்துகின்ற விழாக்களில் இனிமேல் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் பாடப்படும் என்ற ராஜபக்சே அரசின் அறிவிப்பை பா.ம.க. பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. இது தமிழர்கள் மீது சிங்களத்தை கட்டாயமாக திணிப்பதற்கு ஒப்பாகும். இந்த கட்டாய சிங்கள திணிப்பை கைவிட இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்தியா உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அப்படி ஒப்புதல் பெறாமல் இன்னமும் தொடரும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக மீனவர்களை காக்க வேண்டும் என்ற குரல் தமிழகம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதன் விளைவாக உயர்நிலை கல்வி முதல் தடவையாக ஊர்புறங்களை எட்டிப்பார்க்கிறது. இப்போது அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு என்றால் சமுதாயத்தில் பெரும் எண்ணிக்கையிலான இந்த பிரிவினர் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிற மாற்றத்தை இழக்க நேரிடும்.

பொது நுழைவுத் தேர்வு கூடாது

எனவே அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு என்ற திட்டத்தை தமிழகம் எப்பாடு பட்டேனும் தடுத்து நிறுத்த வேண்டும். இட ஒதுக்கீட்டிற்கும், சமூக நீதிக்கும் ஆபத்து வந்தபோது எப்படி தமிழகம் ஒன்றுபட்டு போராடி உரிமையை நிலைநாட்டியதோ, அதேபோல இப்போது தமிழகத்தின் உயிர்மூச்சு கொள்கைக்கு வேட்டு வைக்க காத்திருக்கும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு என்ற திட்டத்தை ரத்து செய்ய ஒன்றுபட வேண்டும்.

இந்த ஆண்டு நெல்கொள்முதல் விலையை உயர்த்த அரசு முன்வர வேண்டும். விலைவாசி உயர்வினால் அல்லல்படுகிற ஏழை, எளிய மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் காய்கறிகள் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசும், அதனோடு இணைந்த மாநில அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வீட்டுக்கடனை வட்டியோடு ரத்து செய்ய வேண்டும்.

நூல் தட்டுப்பாட்டிற்கு பருத்தி, பஞ்சு ஏற்றுமதியே காரணம். வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதைப்போல நூல் தட்டுப்பாட்டை போக்குவதற்கு பருத்தி மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்தி கேட்டுக்கொள்வது என்பன போன்ற தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

தமிழ் கலாசாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரானது ஆங்கிலம். அதனால்தான் ஆங்கில புத்தாண்டை கொண்டாட எனக்கு விருப்பமில்லை. எனவே புத்தாண்டு பிறந்த 2-வது நாள் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. வருகிற 15-ந் தேதி, தமிழ் புத்தாண்டை நீங்கள் உங்களது உறவினர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

லட்சக்கணக்கான இளைஞர்கள் கொண்ட கட்சி பா.ம.க. தியாகம் செய்து, தழும்புள்ள நிர்வாகிகளாக நீங்கள் இல்லாமல் கட்சி இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்க முடியாது. அப்படி பாடுபட்டு, கஷ்டப்பட்டு உழைத்ததால்தான் நாமும் 10 ஆண்டுகளாக டெல்லியில் நடந்த ஆட்சியில் பங்கு பெற்றோம்.

கடந்த ஆண்டு ஒவ்வொரு பொறுப்பாளர்களும் குறைந்த பட்சம் 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என கூறினேன். ஆனால் அதை நீங்கள் முழுமையாக செய்யவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பொறுப்பாளர்கள் அனைவரும் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என அமல்படுத்துவேன். பசுமையை உருவாக்கிய கட்சி என்று அனைத்து கட்சியினரும் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியிலும் 100 இளைஞர்கள் ரத்தம் கொடுக்க முன்வர வேண்டும். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். நமது கட்சியின் கொள்கைகளை போல வேறு எந்த கட்சியிலும் கிடையாது என்றும், அப்படி இருந்தால் அந்த கட்சியோடு சேர்ந்துவிடுகிறேன் என 3 ஆண்டுகளாக சவால் விட்டு வருகிறேன். நம்முடைய கட்சியில் உயர்ந்த, உன்னதமான, காலத்திற்கு ஏற்ற, மக்களுக்காக, மக்களை சார்ந்த கொள்கைகள் உள்ளன.

தமிழகத்தில் மதுவை ஒழிக்க போராடி வருகிறோம். நம்முடைய பொறுப்பாளர்கள் யாரும் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகவில்லை என நம்புகிறேன். அப்படி மது பழக்கத்தில் இருந்தவர்கள் எல்லாரும் தற்போது மீண்டு விட்டார்கள். இந்தியாவில் உள்ள எந்த கட்சியாவது பொறுப்பாளர்கள் குடிக்க கூடாது என வற்புறுத்தி சொல்வார்களா? சொல்ல மாட்டார்கள்.

இந்த ஆண்டு இளைஞர்கள் ஆண்டு என டாக்டர் அன்புமணி கூறினார். அவர் அப்படி சொல்லும்போது நானும் இளைஞராக மாறிவிட்டேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் நமது இளைஞர்கள் பேட்ஜ் அணிந்து மற்ற கட்சியினர் வியக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். .

பா.ம.க. தேர்தலுக்கு, தேர்தல் அணி மாறுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதில் எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல என ஏற்கனவே நான் கூறியிருந்தேன். எந்த கட்சியும் தனித்து நின்று வெற்றி பெறவில்லை.

அரசியலில் கூட்டணி குறித்து அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். முதல் இந்த காலத்து கலைஞர் வரை பல்வேறு காரணங்களை சொல்லியிருக்கிறார்கள். அரசியலில் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். மக்களின் உணர்வுகள், எண்ணங்களை காலம் எப்படி மாற்றுகிறதோ? அதற்கு ஏற்ப கூட்டணி என்று கலைஞர் சொல்லியிருக்கிறார்.

மாறிவரும் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு எடுப்பதுதான் புத்திசாலிதனம். அதுதான் நல்ல முடிவும், அரசியலும் கூட என்று வெங்கட்ராமன் கூறியிருக்கிறார். நாமும் செய்வது நல்ல அரசியல்தான். இப்படி கடந்த காலத்தில் இருந்து தற்போது வரை அரசியலில் கூட்டணி மாறி, மாறி வருகின்றன.

இவையெல்லாம் தேர்தலின் ஆதாயத்தின் அடிப்படையில் கட்சிகள் சேர்கின்றன. தனித்தனியாக செயல்படுகிறவர்கள் ஒரு ஆண்டுகூட பிரிந்து இருக்க மாட்டார்கள். கூட்டணியில் இருந்தவர்கள் 6 மாதம் கூட கூட்டாக இருந்தது கிடையாது. அரசியலில் அணி மாறாதவர்கள் யார்? பா.ம.க.வை மட்டும் பழி சொல்வது ஏன்?

கூட்டணி கட்சியுடன் தென் மாவட்டங்களில் தொகுதி கேட்டு போட்டியிடுவோம். எந்த தொகுதியில் போட்டியிடுவது பற்றி சூசகமாக கேட்போம். பொங்கலுக்கு பிறகு டாக்டர் அன்புமணி மதுரைக்கு செல்வார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசுவார் என்றார் அவர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: