Thursday, September 16, 2010

இதுதான் கூட்டணி தர்மமா?: திமுக மீது ராமதாஸ் கடும் தாக்கு

ஜெயங்கொண்டம்: திமுக மீது கடும் தாக்குதல் தொடுத்துள்ளார் பாமக, நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

ஜெயங்கொண்டத்தில் நடந்த பாமக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் சங்க பயிற்சி முகாமில் அவர் பேசுகையில்,

கடந்த சட்டசபை தேர்தலில் வன்னியர் சங்கத் தலைவர் குருவை திட்டமிட்டு தோற்கடித்தனர். கூட்டணியினர் வெற்றி பெற நாம் திட்டமிடுகிறோம். கூட்டணியை தோற்கடிக்க அவர்கள் (திமுக) திட்டமிடுகின்றனர். இதுதான் கூட்டணி தர்மம் என கூறுகின்றனர்.

குரு திருவண்ணாமலையில் போட்டியிட்டு டெல்லிக்கு சென்றால் இந்த தேசத்துக்கே ஆபத்து எனக் கூறி அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடுகின்றனர்.

அடைந்தால் திராவிட நாடு. இல்லையேல் சுடுகாடு எனக் கூறிய இவர்கள் மீது காங்கிரஸ் கட்சி, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போடவில்லை.

ஆனால், ஒரு மண்டபத்தில் பேசிய பேச்சுக்காக குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போட்டனர். குரு தனி மனிதர் அல்ல. இரண்டரை கோடி வன்னியர்களுக்கும் உரிமை வேண்டும் என கிராமம் கிராமமாக சென்று தட்டி எழுப்பி போராடும் போராளி.

அவரை சிறையில் தள்ளுவது இரண்டரை கோடி வன்னியர்களை சிறையில் தள்ளுவதற்கு சமம். குரு மீது இன்னும் கூட தொடர்ந்து வழக்கு போட்டு வருகின்றனர். வன்னியர் சங்கத்துக்கு குரு தலைவர் தான். ஆனால், வன்னியர் சங்க நிறுவனர் நான் தான். அவரது பேச்சுக்காக என் மீது எந்த வழக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். என் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயட்டும்.

குருவை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, உளவுத்துறை முயற்சி செய்தது. இதை விட வெட்கக்கேடு வேறு என்ன வேண்டும். இதுகுறித்து உள்துறை செயலாளரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

இந்த பகுதியில் பாமக துவங்கப்பட்டிருக்காவிட்டால், குரு இன்னொரு தமிழரசன் ஆகியிருப்பார். அந்தப் பாதை வேண்டாம் என தடுத்து, அவரை ஜனநாயக பாதையில் அழைத்துச் சென்றோம் என்றார் ராமதாஸ்.

விஜய்காந்தின் தேமுதிக-பாமக கூட்டணி உருவாகலாம் என்று கருதப்படும் நிலையில் திமுக மீது ராமதாஸ் கடும் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: