Tuesday, June 9, 2009

பெண்களுக்கான இட ஒதுக்கீடு:டாக்டர் ராமதாஸ்

கிருஷ்ணகிரி: பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வரவேண்டும். இந்த விஷயத்தில் சரத் யாதவ், முலாயம் சிங், லாலு ஆகியோர் கூறுவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கையை சேர்ந்த ஆறுமுக தொண்டைமான் மற்றும் சிவலிங்கம் ஆகிய எம்பிக்கள் திமுக எம்பி கனிமொழியை சந்தித்து, இலங்கை பிரச்னை குறித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்த இருவரும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக பாடுபட்டவர்கள் அல்ல. இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியில் இவர்கள் அமைச்சர்களாக இருப்பர். விரைவில் இலங்கையில் தேர்தல் வர இருப்பதால் இவர்கள் நாடகம் ஆட ஆரம்பித்துள்ளனர்.

அதே போல உள்துறை அமைச்சர் சிதம்பரம் , முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த இருவரும் தேர்தல் நேரத்தில், இலங்கையில் சண்டையை நிறுத்திவிட்டோம் என்று கூறி நாடகமாடியதை தமிழக மக்கள் மறக்கவில்லை.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து கொள்வது குறித்து கருத்து தெரிவித்ததற்கு, இலங்கை ராணுவத்துறை செயலாளரும் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோதபய, இலங்கை விஷயத்தில் தலையிட நீ யார் என்று இந்தியாவை கேள்வி கேட்டுள்ளார். ராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை குப்பையில் தூக்கி எறிவோம் என்றும் கூறியிருக்கிறார்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வரவேண்டும். இந்த விஷயத்தில் சரத் யாதவ், முலாயம் சிங், லாலு ஆகியோர் கூறுவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். உள் ஒதுக்கீடு இல்லாமல் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற கூடாது.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வரும் 10ம் தேதி சென்னையில் கூடி முடிவெடுக்கவுள்ளோம். தற்போது, இந்த இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை.

தேர்தலில் தோற்று விட்டதாக பாமகவை திமுகவினர் ஏளனம் செய்கின்றனர். லோக்சபா தேர்தல் வெற்றி உண்மையானதல்ல. அது பணம் கொடுத்தும், மோசடி வேலை செய்து பெற்ற வெற்றி. வரும் 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்.

தேர்தலில் வெற்றி-தோல்வி சகஜம். கடந்த 1977ம் ஆண்டு முதல் 95ம் ஆண்டு வரை 7 தேர்தல்கள் நடைபெற்றன. அதில் 5 தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்துள்ளது. இரண்டு தேர்தலில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது.

பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். அவர் உரிய நேரத்தில் வெளியே வருவார் என்றார் ராமதாஸ்.

பணமில்லாமல் தேர்தலை சந்தி்க்க..

பின்னர் தர்மபுரி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,

நடந்து முடிந்த தேர்தலில் திமுக பண பலத்தால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து முதல்வர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் கூறுகையில் பாமகவை போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோற்கடித்து விட்டோம் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பணத்தை அள்ளி வீசி ஓட்டை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெற்றுள்ளனர்.

பணத்தால் சாதித்தது மட்டுமல்லாமல் சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் திட்டமிட்டு சில தில்லு முல்லுகளை செய்து வெற்றி பெற்றுள்ளனர்.

இனி வரும் காலங்களில் பணமில்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டுமானால் இப்போதே இளைஞர்களை தயார்படுத்த வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் மகளிர் கல்லூரி தொடங்கப்படும். அதற்கான இடம் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே 15 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

மேலும் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் கோனேரி குப்பத்தில் கல்விக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் என்ஜினீயரிங், சட்டம், விஷூவல் கம்யூனிகேசன் போன்ற பாடப் பிரிவுகள் கொண்டுவரப்பட உள்ளன.

அதில் தங்களது குழந்தைகளை சேர்த்து பயன் பெறலாம். விடுதி முதல் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: