Tuesday, November 15, 2011

கல்பாக்கம் அணுஉலையை மூடவேண்டும்: ராமதாஸ்

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தை வரும் 2020ம் ஆண்டுக்குள் மூடவேண்டும் என பா.ம.க., தலைவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விரைவில் பா.ம.க., சார்பில் மருத்துவக்குழு ஒன்று செல்லவுள்ளதாகவும், அக்குழு அணுகதிர் வீச்சு காரணமாக அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள தீமைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப்போக்கும் வகையில், அணுஉலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் எனவும், உலகின் மிகப்பழமையான தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கல்பாக்கம் அணுஉலையை வரும் 2020ம் ஆண்டுக்குள் மூட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Sunday, November 13, 2011

பிஞ்சிலேயே பழுத்தது, பயன்படாது என்று தூக்கிப்போட்டுட்டோம்: வேல்முருகன் பற்றி ராமதாஸ்

கடலூர்: கொசு கடித்ததால் தட்டினேன், அது விழுந்துவிட்டது. அது பிஞ்சிலேயே பழுத்தது, அதனால் எதற்கும் பயன்படாது என்று தான் தூக்கிப்போட்டுவிட்டோம் என்று பாமகவில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் பற்றி அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

வேல்முருகனுக்கு அதிக ஆதரவு உள்ளதாகக் கூறப்படும் கடலூரில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது,

பாமக பொதுக்குழு கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி சென்னையில் கூடியது. இனி வரும் காலத்தில் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று அதில் முடிவு செய்யப்பட்டது. இது பொதுக்குழுவின் முடிவன்று, காலத்தின் கட்டளை.

கடந்த 45 ஆண்டுகளாக மாறி, மாறி ஆண்டு வரும் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை சின்னாபின்னமாக்கிவிட்டன. அவர்களால் சீரழிக்கப்பட்ட தமிழகத்தை சீரமைக்கும் கொள்கையுடைய ஒரே கட்சி பாமக தான். இன்னும் நான்கரை ஆண்டுகள் நாம் மக்களை சந்தித்து அவர்களுக்கு அரசியலில் புதிய நம்பிக்கை ஏற்படுத்த பாடுபட வேண்டும். நம் பேச்சைக் கேட்டுவிட்டு அவர்கள் இதுவல்லவோ அரசியல் கொள்கை என்று கூற வேண்டும்.

இவர்கள் ஏன் இத்தனை ஆண்டுகளாக தனித்து நிற்காமல் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார்கள் என்று மக்கள் கேட்க வேண்டும். பத்திரிக்கைகளுக்கு பரபரப்பு செய்திகள் தேவையானது தான். ஆனால் அதனால் மக்களுக்கு என்ன பயன் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்ன இப்படி நடந்துவிட்டது என்றார். அதற்கு நான் அது பிஞ்சிலேயே பழுத்தது, அதனால் எதற்கும் பயன்படாது என்று தான் தூக்கிப்போட்டுவிட்டோம். கொசு கடித்ததால் தட்டினேன், அது விழுந்துவிட்டது என்றேன்.

இது பற்றி வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்றார். இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றேன். இங்கும் அதையேத் தான் சொல்கிறேன். பாமக என்பது ஒரு பெரிய ஆலமரம். ஏராளமான சங்க மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் அதன் விழுதுகளாக உள்ளனர்.

இந்த வளர்ந்த ஆலமரத்திற்கு தற்போது இளைஞர்கள் புதிய வேர்களாகவும், விழுதுகளாகவும் வருகின்றனர். இதில் பறவைகள் வந்து தங்கலாம், பழுக்கும் பழத்தை உண்ணலாம். அதற்கு எந்தவித தடையும் இல்லை என்றார்.

Wednesday, November 9, 2011

மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம்: ஜெயலலிதா போக்கு மாறவேவில்லை- பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: 12,000 மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தன்மூலம் முதல்வர் ஜெயலலிதாவின் போக்கு மாறவேயில்லை என்பது தெரிகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

தமிழக அரசு மக்கள் நலப் பணியாளர்களை திடீர் என்று பணி நீக்கம் செய்தது கண்டனத்திற்குரியது. கடந்த 2003ம் ஆண்டில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய 2 லட்சம் அரசு ஊழியர்களை அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஒரே இரவில் பணிநீக்கம் செய்தது. அதற்காக உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்தது.

தற்போது அவர் திடீர் என்று மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் போக்கு மாறவேயில்லை என்பது இதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு 12,000 மக்கள் நலப் பணியாளர்களின் பணி நீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: