Wednesday, September 30, 2015

நீதி கிடைக்க பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்ற விசாரணை தேவை: ஐ.நா. மனித உரிமை பேரவையில் அன்புமணி பேச்சு

 

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் பாமக எம்பி அன்புமணி இராமதாசு கலந்து கொண்டிருக்கிறார்.  இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை மீதான பொது விவாதம் இன்று மாலை நடைபெற்றது. அந்த விவாதத்தில் அன்புமணி இராமதாசு பேசுகையில்,

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை அறிக்கையை பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வரவேற்கிறேன்.

இலங்கைத் தமிழர்களின் நலன், உரிமைகள் மற்றும் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள, 7.7 கோடி மக்களின் சார்பில் நான் இங்கு பேசுகிறேன். 

இலங்கையில் நடைபெற்ற போரின் போதும், போருக்கு பிறகும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வலிமையான, விரிவான  அறிக்கையை தாக்கல் செய்ததற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மனித உரிமை ஆணையர் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் யார் என்பது  கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமானால், உள்நாட்டு நீதிமன்ற விசாரணைக்கு மேலான விசாரணை அமைப்பு தேவையாகும்.

மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான் குற்றச்சாற்றுகள் குறித்து கீழ்க்கண்ட தனித்தனி தலைப்புகளில் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

*சட்டவிரோத படுகொலைகள்
*சுதந்திரம் பறிக்கப்பட்டது தொடர்பான விதிமீறல்கள்
*கட்டாயக் ஆள்கடத்தல்கள்
*சித்திரவதைகள் மற்றும் பிற வடிவிலான கொடுமைகள், மனிதத்தன்மையற்ற மற்றும் சிறுமைப்படுத்தும் வகையில் நடத்தப்படுதல்
*பாலியல் மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகள்
*18 வயதுக்கு மேற்பட்டோரை கடத்துதல் மற்றும் கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தல்
*குழந்தைகளை படையில் சேர்த்து போரில் பயன்படுத்துதல்
*போரின் காரணமாக அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் பயன்பாட்டுக்கான பொருட்கள் மீது ஏற்பட்ட தாக்கம்.
*மக்கள் நடமாட்டத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
*மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை செய்வதற்குக் கூட அனுமதி மறுத்தல்
* அடைக்கப்பட்ட முகாம்களுக்குள் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த உள்நாட்டு மக்களின் சுதந்திரத்தை பறித்தல் மற்றும் அவர்களை சோதனைக்கு உள்ளாக்குதல்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக உள்ளக விசாரணையை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று இலங்கை திட்டவட்டமாக கூறிவிட்டது. இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத வகையில் கூட்டுத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை மனதில் கொண்டு, போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு விடப்பட்டுள்ள இந்த சவாலை சமாளிக்க சரியான நடவடிக்கை தேவைப்படுகிறது. 

போர்க்குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு, அதன் குற்றங்கள் குறித்து விசாரித்து தீர்ப்பளிக்க தார்மீக உரிமை கிடையாது. மனித உரிமை ஆணையர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இலங்கை புதிதாக பதவியேற்ற அரசு கூட மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணைக் குழுவை  இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களாக இலங்கைத் தமிழர்கள் இன்னும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ் கிராமங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் இன்னும் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. கற்பழிப்புகளும், சித்திரவதைகளும் தொடர்கின்றன. தமிழ் மக்கள் இன்னும் அச்சத்தில் வாழ்கின்றனர். அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னும் அப்படியே நீடிக்கின்றன. 

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்ற விசாரணை கோரி ஐ.நா. மனித உரிமை பேரவையில் வலிமையான தீர்மானத்தை இந்திய அரசே கொண்டு வர வேண்டும் என்று கோரி 15.09.2015 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இந்த விஷயத்தில் பன்னாட்டு விசாரணை கோர வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக இந்திய அரசு அமைதி காப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

போர்க்குற்றம் தொடர்பான விசாரணையின் சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதற்கு வசதியாக  இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கிளை அலுவலகங்களை அமைக்க வேண்டும்  என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை பசுமைத்தாயகம் அமைப்பு கேட்டுக் கொள்கிறது. 

இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நீதி கிடைப்பதை உறுதி செய்ய வசதியாக பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடைமுறையையும், பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கான அமைப்பையும் ஏற்படுத்தும்படி சர்வதேச சமுதாயத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Tuesday, September 29, 2015

மின் கொள்முதலில் ரூ.415 கோடி இழப்பு: சி.ஏ.ஜி. புகார் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்

மின் கொள்முதலில் ரூ.415 கோடி இழப்பு: சி.ஏ.ஜி. புகார் பற்றி விசாரணை தேவை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியாரிடமிருந்து குறுகிய கால ஒப்பந்தங்களின்படி மின்சாரம் வாங்கியதில் மின்வாரியத்திற்கு ரூ.415 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு ஆட்சிகளிலுமே மின்சாரக் கொள்முதலில் ஊழல் நடந்ததை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.

2013-14 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மின்சாரக் கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. 2010 ஆம் ஆண்டில் தொடங்கி 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை குறுகிய கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் மின்சாரம் வாங்கியதில் ரூ.109.60 கோடி மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதே அளவு தொகை தனியார் நிறுவனங்களுக்கு லாபமாக கிடைத்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மின்சாரத் தட்டுப்பாடு எவ்வளவு, எந்தெந்த காலத்தில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை துல்லியமாக கணக்கிடாமல் ஒரே காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது தான் இந்த இழப்புக்கு காரணம் என்றும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த இழப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது என்பது தான் உண்மை.தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில புள்ளி விவரங்களின் அடிப்படையில் இதை நிரூபிக்கலாம். உதாரணமாக, பவர் டிரேடிங் கார்ப்பரேசன்(Power Trading Corporation Limited-PTC) என்ற நிறுவனத்திடமிருந்து 2011 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த மின்சாரம் போதாது என்று  தோன்றியதால் 2011 மார்ச், ஏப்ரல் மாதங்களில் கூடுதலாக 700 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு 2011 பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. முதல் ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் ரூ.4.76 என்றும், இரண்டாவது ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் ரூ.6.75 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

முதல் ஒப்பந்தப்படி 2011 மார்ச் மாதத்தில் ஒரு யூனிட் ரூ.4.76 என்ற விலையில் 2.02 கோடி யூனிட் மின்சாரத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் அதில் பாதியளவு, அதாவது 1.18 கோடி யூனிட் மின்சாரத்தை மட்டுமே வழங்கியது. அதேநேரத்தில் யூனிட் ரூ.6.75 என்ற விலையில் 1.37 கோடி யூனிட் வழங்குவதற்கு பதிலாக 2.08 கோடி யூனிட் மின்சாரம் வழங்கியிருக்கிறது. ஒரே நிறுவனத்திடம் இரு விலைகளில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதால் குறைந்த விலையில் வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை உரிய அளவில் வழங்காமல், அதிக விலைக்கு வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை அதிக அளவில் வழங்கியிருக்கிறது. 2011 ஏப்ரல் மாதத்திலும் இதே நிலை  நீடித்தது. இதனால் 2 மாதங்களில் ஒரே ஒரு நிறுவனத்திடம் மட்டும் ரூ. 7.94 கோடி இழப்பு ஏற்பட்டது.

2014 ஆம் ஆண்டு வரை இதே போல் இரு விலைகளில் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டு, அதிக விலையில் கூடுதல் மின்சாரம் வாங்கியதாக கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது. இந்த வகையில் தான் ரூ.109 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. முதல் ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை வழங்கி முடித்த பிறகு தான் இரண்டாவது ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என நிபந்தனை விதிக்கப் பட்டிருந்தால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது. மின் நிறுவனங்களின் தவறுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அதை ஈடுகட்டவும் ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அதாவது குறைந்த விலையில் மின்சாரம் வழங்க ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்கள் அதன்படி மின்சாரம் வழங்கத் தவறினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.1 வீதம் இழப்பீடு வசூலிக்க முடியும். அந்த வகையில் தனியார் நிறுவனங்கள் குறித்த காலத்தில் வழங்காத 264.90 கோடி யூனிட்டுகளுக்கு ரூ.280.37 கோடி இழப்பீடு வசூலித்திருக்க வேண்டும். ஆனால், ஒரு பைசா கூட இழப்பீடாக வசூலிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, 2011 நவம்பர் முதல் 2012 ஜூன் வரையிலான காலத்தில் ஒப்பந்தப்படி மின்சாரம் வழங்காததற்காக தனியார் நிறுவனங்களிடம் இழப்பீடாக வசூலிக்கப்பட்ட ரூ.36 கோடி காரணமின்றி திரும்பத் தரப்பட்டு விட்டது. 

மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் சில தி.மு.க. ஆட்சியிலும், பல அ.தி.மு.க. ஆட்சியிலும் கையெழுத்திடப்பட்டவை. அதனால் அதில் நடந்த ஊழலுக்கு இரு கட்சி அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், வழங்கப்படாத மின்சாரத்திற்காக இழப்பீடு வசூலிக்க வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க. அரசுக்கு தான் இருந்தது. அந்த அரசு தான் இழப்பீட்டை வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால், மின் நிறுவனங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கு இடையிலான பேரங்கள் காரணமாக இழப்பீடு வசூலிக்கப்படவில்லை; இழப்பீட்டை வசூலிக்காமல் இருந்ததற்காக ஆட்சியாளர்களுக்கு பொருளாதாரப் பயன்கள் கிடைத்தன என்பதே உண்மை. இதுதவிர தனியார் நிறுவனங்கள் வழங்கும் மின்சாரத்திற்கான கடன் உத்தரவாதக் கடிதத்தை மின்சார வாரியம் தராததால் சில நிறுவனங்கள் மின்சாரம் தர மறுத்து விட்டன. அதே மின்சாரத்தை வேறு நிறுவனங்களிடமிருந்து  அதிக விலை கொடுத்து வாங்கியதால் கூடுதலாக அரசுக்கு ரூ.25.64 கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உடன்குடி மின்திட்டம் தொடர்பாக பெல் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டிருந்த கூட்டாண்மை ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் ரூ.21.64 கோடியும், நீர் மின் நிலையங்களில் மின்னுற்பத்தி கருவிகளை அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரூ.29.79 கோடியும் இழப்பு ஏற்பட்டன. இந்த இழப்புகள் தவறுதலாக ஏற்பட்டவை கிடையாது; இவை தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டவை என்பதால் இவற்றை ஊழலாகத் தான் கருத வேண்டும். எனவே, இந்த இழப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, இழப்புக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம் படைப்போம்... பாமகவின் அடுத்த பிரசார வாசகம்!

சென்னை: பாமக தனது 3வது பிரசார வாசகத்தை மக்கள் முன் வைத்துள்ளது. 50 ஆண்டு ஊழலுக்கு முடிவு கட்டுவோம். ஒரு பைசா ஊழல் இல்லா தமிழகம் படைப்போம் என்பதே அந்த மூன்றாவது வாசகம்.டாக்டர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கையோடு சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகி விட்டது பாமக. ஊர் தோறும் மாநாடுகள், கூட்டங்கள் என டாக்டர் அன்புமணியும், டாக்டர் ராமதாஸும் தீவிரப் பணியாற்றி வருகின்றனர்.மேலும் மக்களிடம் ரீச் ஆகும் வகையில் புதுப் புது பிரசார வாசகங்களையும் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
 
50 ஆண்டு ஊழலுக்கு முடிவு கட்டுவோம் இப்போது வெளியாகியுள்ள 3வது ஸ்லோகன் இது. 50 ஆண்டு ஊழலுக்கு முடிவு கட்டுவோம். ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று இந்த வாசகம் கூறுகிறது.

Monday, September 28, 2015

பாமக மாநாட்டிற்கு வெற்றிலை–பாக்கு வைத்து அழைப்பு



 
 
 


நெல்லையில் நடைபெறும் மாநாட்டில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக தமிழர் மரபுப்படி பொதுமக்களை வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் நிகழ்ச்சியை நெல்லை சந்திப்பில் ஜி.கே.மணி தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,   ‘’நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்கள் சார்பாக தென்மண்டல 9–வது அரசியல் மாநாடு வருகிற 11–ந்தேதி நெல்லையில் நடக்கிறது. இதற்கு பொதுமக்களை வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளேன்’’என்று கூறினார்.
 

Thursday, September 24, 2015

மின்சாரக் கொள்முதலால் பல லட்சம் கோடி இழப்பு; கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்க: ராமதாஸ்

மின்சாரக் கொள்முதலால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, எனவே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் இழப்புகள் குறித்த விவரங்களை மின்வாரிய பொறியாளர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. மின்சாரக் கொள்முதலில் நடைபெற்று வரும் ஊழல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மொத்தம் 3,300 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய 11 தனியார் மின் நிறுவனங்களுடன் மின் வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.60க்கு கிடைக்கும் நிலையில், தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் ரூ.4.91 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.2688 கோடி வீதம் ஒப்பந்த காலமான 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.40,327 கோடி இழப்பு ஏற்படும் என மின்வாரிய பொறியாளர்கள் அமைப்பு குற்றஞ்சாற்றிருக்கிறது. இக்குற்றச்சாற்றுகளை ஆதாரமற்றவை என ஒதுக்கி விட முடியாது.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சாரம் கொள்முதல் செய்வதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக பல ஆண்டுகளாகவே நான் குற்றஞ்சாற்றி வருகிறேன். மின்தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி ஊழல் செய்யும் கலாச்சாரம் முந்தைய தி.மு.க. ஆட்சியில்  தொடங்கியது. அ.தி.மு.க. ஆட்சியில் மின் கொள்முதல் ஊழல் தொடர்வது மட்டுமின்றி, அதிகரித்தும்  வருகிறது. தனியார் நிறுவனங்களுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி மின்சாரத்தை வாங்கினாலும், வாங்காவிட்டாலும் அவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் அதிக அளவில் உற்பத்தியான நேரத்தில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து அனல் மின்சாரத்தை கொள்முதல் செய்யாமலேயே அதற்கான கட்டணத்தை மின்சார வாரியம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் மின்வாரியத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அனல் மின்சாரம் மட்டுமின்றி சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களை செய்து கொள்வதிலும் மின்சார வாரியத்திற்கு திட்டமிட்டு இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதானி குழுமம் உட்பட மொத்தம் 32 நிறுவனங்களிடம் இருந்து 1084 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை  யூனிட் ரூ.7.01 என்ற விலையில் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதுதவிர 107 நிறுவனங்களிடம் இருந்து 2722.5 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் விரைவில் கையெழுத்திடவிருக்கிறது. அதுமட்டுமின்றி, அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு பன்னாட்டு  நிறுவனங்கள் 5345 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையங்களை அமைக்க சம்மதம் தெரிவித்துள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்திடமிருந்தும் ஒரு யூனிட் ரூ.7.01 என்ற விலையில்  சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதனால் ஒரு மெகாவாட்டுக்கு ரூ.9 கோடி வீதம் மொத்தம் ரூ.82,359 கோடி இழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே கடுமையான இழப்பை சந்தித்து வருகிறது. மின் வாரியத்தின் மொத்தக் கடன் சுமை ஒன்றரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. இந்த நிலையில் தமிழக ஆட்சியாளர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்பதை தமிழக முதலமைச்சர் விளக்க வேண்டும். மக்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் தமிழக அரசே மின் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியிருக்க முடியும். அவ்வாறு செயல்படுத்தியிருந்தால் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. ஆனால், ஊழல் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தமிழக ஆட்சியாளர்கள் மின் நிலையங்களை அமைத்தால் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கி கமிஷன் பெற முடியாது என்பதால் மின் திட்டங்களைத் தாமதப்படுத்துகின்றனர். எண்ணூர் மின்திட்டம், உடன்குடி மின் திட்டம் ஆகியவற்றை குறைந்த செலவில் அமைத்துத் தர சீன நிறுவனம் முன்வந்த போதிலும், அதனால் மின்சார வாரியத்திற்கு ரூ.3000 கோடி அளவுக்கு லாபம் கிடைக்கும் என்றாலும், அதைப் பொருட்படுத்தாமல் அமைச்சருக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு தான் ஒப்பந்தம் தருவோம் என்று தமிழக அரசு கூறுவதில் இருந்தே ஆட்சியாளர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

தனியார் நிறுவனங்களுடன் தமிழக அரசு செய்து கொண்டுள்ள மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்கள்  தொடர்பான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். சந்தை விலையை விட அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

சென்னை: தமிழக சட்டசபையில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தீர்மானத்தை அவருக்கு விளக்கிட வேண்டும் என்று பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

சென்னை: தமிழக சட்டசபையில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தீர்மானத்தை அவருக்கு விளக்கிட வேண்டும் என்று பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
 

Wednesday, September 23, 2015

எங்கு வேண்டுமானாலும் சொல்வேன்... ஜெயலலிதா நிர்வாகம் மிக மோசமான நிர்வாகம்.. ராமதாஸ்

எங்கு வேண்டுமானாலும் சொல்வேன்... ஜெயலலிதா நிர்வாகம் மிக மோசமான நிர்வாகம்.. ராமதாஸ்

சென்னை: ஜெயலலிதா அரசின் நிர்வாகம் நல்ல நிர்வாகம் அல்ல. மிக மோசமான நிர்வாகம். இதை எந்த மேடையில் வேண்டுமானாலும் வந்து சொல்ல நான் தயார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.சென்னை தி.நகர் பஸ் நிலையம் அருகில் பாமக சார்பில் வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை விளக்கிப் பேசினார். அவரது பேச்சிலிருந்து...

மோசமான நிர்வாகம் தமிழகத்தில் ஜெயலலிதா அளித்து வரும் நிர்வாகம் நல்ல நிர்வாகம் அல்ல. இதை எந்த மேடையில் வேண்டுமானாலும் பேச தயாராக இருக்கிறேன். அதிமுக சார்பில் யார் வேண்டுமானாலும் இது குறித்து என்னிடம் விவாதிக்கலாம். இதை சொன்னால் என் மீது அவதூறு வழக்கு தொடருவார்கள்.
தலையில்தான் அடித்திருப்பார்கள் இதைப் பார்த்து மாநாட்டிற்கு வந்தவர்கள் தலையில் தான் அடித்து கொண்டிருப்பார்கள். முதல்வர் கூறியபடி முதலீடா வரப்போகிறது? நிச்சயம் ஒரு முதலீடும் வராது.

விஷ்ணுப்பிரியா கொலை வழக்கு விஷ்ணு பிரியா கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஒவ்வொரு மணித்துளியும் பாமகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

நேர்மையான முதல்வரா நீங்கள்? நேர்மையான முதல்வராக இருந்தால் ஜெயலலிதா வரும் தேர்தலில் காசு கொடுக்க மாட்டேன் என்று அறிவிக்க தயாரா? தமிழ்நாடு தற்போது ஐசியூவில் இருக்கிறது.
அமைச்சர்களே முதல்வரைப் பார்க்க முடியவில்லை அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக ஊழல் மாறி விட்டது. அமைச்சர்களே கூட முதல்வரை பார்க்க முடியாது என்ற நிலை தான் உள்ளது.

வீடியோவில் மட்டுமே முதல்வரைப் பார்க்க முடிகிறது தனி மனிதருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றினார்கள். காணொலி காட்சி மூலம் மட்டுமே முதல்வர் அனைத்து திட்டங்களையும் திறந்து வைக்கிறார். தற்போதைய ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. மொத்தத்தில் சுனாமி ஊழல் கட்சியாக அதிமுக தற்போது விளங்கி வருகிறது என்று காட்டமாக பேசினார் டாக்டர் ராமதாஸ்.

Tuesday, September 22, 2015

பா.ம.க.-வின் வரைவு தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடிக்கிறது... அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை : அண்மையில் வெளியிடப்பட்ட பா.ம.க.வின் வரைவு தேர்தல் அறிக்கையை தி.மு.க காப்பியடிப்பதாக, அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.பா.ம.க.வின் சட்டப்பேரவை வரைவு தேர்தல் அறிக்கை தொடர்பான பயிற்சிக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அண்மையில் பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்ட வரைவு தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்தும், அதை மக்களிடம் எடுத்துச் செல்வது பற்றியும் நிர்வாகிகளுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகள், தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியில் 70 சதவிகிதத்தை நிறைவேற்றவில்லை என்று புகார் கூறினார்.பா.ம.க ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் கடைக்கோடியில் வசிப்பவருக்கும் கல்வி உறுதி செய்யப்படும் என்று ராமதாஸ் உறுதியளித்தார். நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், பா.ம.க.வின் வரைவு தேர்தல் அறிக்கையை, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் காப்பியடிப்பதாக குற்றம்சாட்டினார்.பா.ம.க ஆட்சிக்கு வந்தால், 15 நாட்களுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும், 60 வயது மேற்பட்டவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 

Monday, September 21, 2015

விஷ்ணுபிரியா தற்கொலை; CBI விசாரணைக்கு அனுப்ப தமிழக அரசு மறுப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: ராமதாஸ்

விஷ்ணுபிரியா தற்கொலை, சிபிஐ விசாரணைக்கு அனுப்ப தமிழக அரசு மறுப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நாளை நடைபெறவிருக்கிறது. இதற்கு ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த மார்ச் & ஏப்ரல் மாதங்களில் நடைபெற வேண்டிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 6 மாதம் தாமதமாக இப்போது நடைபெறவுள்ளது. இதில் காட்டிய ஆர்வத்தை காவல்துறையை மேம்படுத்துவதில் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானதாக போற்றப்பட்ட தமிழ்நாட்டு காவல்துறை இப்போது சோமாலியா நாட்டு காவல்துறையைவிட மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இழந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. வேறு பல வழக்குகளிலும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழக காவல்துறைக்கு இதற்கு முன் இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இவை அனைத்துக்கும் காரணம் காவல்துறை தவறாக வழி நடத்தப்படுவது தான். காவல்துறையின் திறன் மேம்பாட்டுக்காக அத்துறை அமைச்சர் ஜெயலலிதா துரும்பைக் கூட கிள்ளிப் போட வில்லை. இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் கூறலாம். தமிழக காவல்துறையில் 01.01.2015 நிலவரப்படி 21,110 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு லட்சத்து 20,996 பேர் இருக்க வேண்டிய காவல்துறையில் 99,896 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அதாவது 750 பேருக்கு ஒரு காவலர் மட்டுமே உள்ளார். காலியிடங்களை நிரப்புவதில் மட்டுமின்றி, பதவி உயர்வு வழங்குவதிலும் தாமதம் செய்யப்படுகிறது.  

உதாரணமாக, தமிழக காவல்துறைக்கு தலைமை இயக்குனர் (DGP) மொத்தம் 6 பேர் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 2 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களிலும் சட்டம் & ஒழுங்குப் பிரிவு தலைமை இயக்குனரான அசோக் குமார் ஓய்வு பெற்று பதவி நீட்டிப்பில் தான் இருக்கிறார். அதேபோல், 5 கூடுதல் தலைமை இயக்குனர்கள்(ADGP), 14 காவல்துறை தலைவர்கள்(IG), 12 காவல்துறை துணைத் தலைவர்கள் (DIG) என ஏராளமான பதவிகள் காலியாக உள்ளன. இவற்றில் இரண்டாம் நிலைக் காவலர்களைத் தவிர மற்ற பணியிடங்களில் பெரும்பாலானவை பதவி உயர்வின் மூலம் நிரப்பட வேண்டியவை ஆகும். ஆனால், அதற்கான கோப்பில் கையெழுத்திட முதல்வருக்கு நேரமில்லை.

சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் காவலர்களும், உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர்களும் தான். காவலர்கள் நிலையிலேயே 17,000 பணியிடங்களும், உதவி ஆய்வாளர் நிலையில் 4200 பணியிடங்களும் காலியாக உள்ளன. பல ஆண்டுகளாக காலியாக கிடக்கும் இந்த இடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

கடந்த 23.04.2013 அன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா 17,138 காவலர்கள், 1091 உதவி ஆய்வாளர்கள், 1005 தீயவிப்பு  படை வீரர்கள் அந்த ஆண்டு இறுதிக்குள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்தார். ஆனால், அதன்பின்  2 ஆண்டுகளும் 5 மாதங்களும் ஆகிவிட்ட நிலையில் இதுவரை காவலர்களோ, உதவி ஆய்வாளர்களோ நியமிக்கப்படவில்லை. 298 பெண் உதவி ஆய்வாளர்களை  தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. காவல்துறையின் செயல் வேகம் இந்த லட்சனத்தில் தான் இருக்கிறது.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கூலிப்படையினரைக் கொண்டு செய்யப்படும் கொடூரக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ரூ.1500 கொடுத்தால் கள்ளத் துப்பாக்கி வாங்கலாம் என்ற அவல நிலை நிலவுகிறது. குற்றங்களை துப்பு துலக்கி, குற்றவாளிகளை கைது செய்வதில் தமிழக காவல்துறைக்கு ஈடு இணை யாருமில்லை என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் இராமஜெயம் 29.03.2012 அன்று திருச்சியில் கொடூரமாக கொல்லப்பட்டார். அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை இந்த வழக்கில் துப்புதுலங்கவில்லை. அதேபோல், மதுரையில் மு.க. அழகிரிக்கு நெருக்கமான பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டு  32 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அட்டாக் பாண்டியை  வல்துறையால் இன்னும் கைது செய்ய முடியவில்லை. அவர் அடிக்கடி பத்திரிகை அலுவலகங்களை தொடர்பு கொண்டு தொலைபேசி வழியில் பேட்டி கொடுத்துவரும் நிலையில், அவரை காவல்துறையால் பிடிக்க முடியாதது ஏன்? எனத் தெரியவில்லை. ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையாக தமிழக காவல்துறை இருந்தால் அதன் செயல்பாடுகள் செயல்பாடுகள் நிச்சயமாக இப்படி இருக்காது. 2011-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை கிட்டத்தட்ட 9000 கொலைகளும், 88,500-க்கும் அதிகமான திருட்டு, கொள்ளைகள் நடந்துள்ளன.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை, பாலியல் குற்றங்களில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தின் (Protection of Children from Sexual Offences Act - POCSO) 4 மற்றும் 6ஆவது பிரிவில் பதிவு செய்துவிட்டு தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களே நடக்கவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் போக்கு தான் இங்கு நிலவுகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் குற்றங்கள், பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவை காவல்துறை இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், குற்றங்கள் அதிகரிப்பது குறித்த தகவல்கள் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக இணையதளத்தில்  அந்த புள்ளி விவரங்களை வெளியிடுவதை அரசு நிறுத்திவிட்டது. ஏற்கனவே இருந்த தகவல்களையும் அகற்றி விட்டது. மிகவும் சிக்கலான வழக்குகளைக் கூட எளிதாக துப்புதுலக்கிய தமிழக காவல்துறை  சீப்பை ஒளித்துவிட்டால் திருமணம் நின்றுவிடும் என்று நம்பும் நிலைக்கு வந்திருப்பது அவலம் தான்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சிக்கலில் பல மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மர்மங்களை விலக்க வேண்டுமானால் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்ப வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு மறுப்பது அதன் நேர்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் தமிழக காவல்துறையை பற்றி பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை. காவல்துறையினரின் திறமையோ, நேர்மையோ குறைந்துவிட்டதாக கூற முடியாது. அவர்களை வழிநடத்துபவர்கள் தான் இத்தனை அவலத்திற்கும் காரணம். அவர்களை வரும் தேர்தலில் மக்கள் தண்டிப்பர் என்பது நிச்சயம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Sunday, September 20, 2015

கடைசி நேர ஊழல் வேட்டையில் முழு வீச்சில் ஈடுபட்டிருக்கும் ஆட்சியாளர்கள்: பாமக குற்றச்சாட்டு



பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மண்டல அரசியல் மாநாடு திருச்சி, பஞ்சப்பூரில் 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில், 

வறுமை இல்லாத,  வளமையும், செழுமையும் நிறைந்த தமிழகத்தை உருவாக்க பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம் 

ஒரு நாட்டில் நிலமும், வளமும் பெருகிக் கிடந்தால் கூட அந்த நாட்டை வழி நடத்திச் செல்ல நல்ல தலைமை இல்லா விட்டால் எல்லா வளமும் வீணாகி விடும். அதே நேரத்தில் எந்த வளமும் இல்லாவிட்டால் கூட வலிமையான தலைமை இருந்தால் நாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றிச் செல்ல முடியும். தலைமை நல்லதாக இல்லாததுடன் நாட்டை சுரண்டுவதாகவும் அமைந்து விட்டால் அதை விட அந்த நாட்டுக்கு கேடு வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்டதொரு அவல நிலை தான் தமிழகத்தில் நிலவி வருகிறது. தமிழகத்தின் வீழ்ச்சிக்கு இது தான் அடிப்படைக் காரணம் ஆகும்.

கல்வி, விவசாயம், தொழில் துறை ஆகிய மூன்று துறைகள் தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழி வகுப்பவை ஆகும். ஆனால், தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே  இந்த துறைகளின் வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மாநிலத்தையும், மக்களையும் சீரழிக்கும்  விஷயங்களில் மட்டுமே அளவுக்கு அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றன என்பது வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.

திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயமே முதன்மை தொழிலாக இருந்து வந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. காரணம் பாசன ஆதாரங்கள் இல்லாததால் ஒரு காலத்தில் பால்வனமாக இருந்த காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிட்டது தான். எப்போதும் முப்போகம் விளையும் காவிரி பாசன மாவட்டங்களில் ஒரு போக சம்பா விளைவதே அதிசயமாக மாறி விட்டது. நெல் கதிர்கள் நிறைந்திருந்த வயல்கள் எல்லாம் கருங்கற்களால் பாகம் பிரிக்கப்பட்டு வீட்டு மனைகளாகிவிட்டன. இதற்கெல்லாம் காரணம் வற்றாநதியாக ஓடிக்கொண்டிருந்த  காவிரி இன்று வாய்க்கால் அளவுக்கு கூட தண்ணீர் ஓடாத மண் பாதையாக மாறி விட்டது தான்.  தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் விட வேண்டும் என்பது நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு. இத்தீர்ப்புக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டிருந்தால் காவிரி கரை புரண்டு ஓடியிருக்கும்; காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் முகங்களில் களை நிறைந்திருக்கும். ஆனால், இறுதித் தீர்ப்பு வெளியாகி 4 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த முந்தைய தி.மு.க. அரசு, இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. அதி.மு.க. அரசு பதவியேற்று விரைவில் ஐந்தாண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், இறுதித் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் செய்வதற்கு கடிதங்களை எழுதியதைத் தவிர துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. 

குப்புறத் தள்ளிய குதிரை குழியையும் பறித்த கதையாக காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு எந்த உதவியையும் செய்ய அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் உபத்திரவங்களை செய்வதற்கு மட்டும் தவறவில்லை. முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்காக கிரேட் ஈஸ்ட்ரன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great Eastren Energy Corporation Limited) என்ற நிறுவனத்திற்கு காவிரிக் கரையோரப்பகுதிகள் தாரை வார்க்கப்பட்டன. மக்கள் போராட்டத்திற்கு பிறகு அம்முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், அதே ஆபத்து இப்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் வடிவில் வந்திருக்கிறது. இந்த ஆபத்தை முறியடிக்க அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களும், கடலூர், அரியலூர் மாவட்டங்களும் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. ஆனால், கடைசி நேர ஊழல் வேட்டையில் முழு வீச்சில் ஈடுபட்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு  உழவர்களின் பிரச்சினை காதிலும் விழவில்லை; கண்களிலும் படவில்லை.

தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில் உற்பத்தியில் 60 விழுக்காடு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், 15%  கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் நடைபெறுகிறது. திருச்சி மண்டலத்தைப் பொறுத்தவரை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பொன்மலை தொடர்வண்டி பணிமனை, காமராசர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) ஆகியவற்றைத் தவிர படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எந்த தொழிற்சாலையும் இந்தப் பகுதியில் அமைக்கப்படவில்லை. 86 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் போதிலும் அவர்களின் கனவை நனவாக்க குறைந்தபட்ச நகர்வுகளைக் கூட மேற்கொள்ள ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் தயாராக இல்லை.
கடந்த 50 ஆண்டுகளில் நடந்தவை எதுவும் நல்லதாக இல்லாத நிலையில், இனி நடப்பவையாவது நல்லதாக இருக்க வேண்டும் என்பதால் தான், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தி வரும் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்கொள்ளவிருக்கிறது. 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகளுக்கு தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததால், தமிழகத்தை வளப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை; அதற்கான அரசியல் துணிச்சலும் இல்லை. அதன் விளைவு தான் முதன்மை மாநிலமாக உருவெடுத்திருக்க வேண்டிய தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இந்த நிலையை மாற்றுவதற்கான வலிமையும், திறமையும் பா.ம.க.வுக்கு மட்டுமே உண்டு....
வலிவான தலைமை
தெளிவான பொருளாதாரத் திட்டம்
ஒளிமயமான, அதிக பாதுகாப்பான எதிர்காலம்  என்பதே பா.ம.க.வின் லட்சியம் -வாக்குறுதியாகும்.
எனவே,
ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம்,
ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம்,
வேளாண் செழுமை நிறைந்த தமிழகம்,
தொழில் வளம் மிகுந்த தமிழகம்,
வேலைவாய்ப்பு நிறைந்த தமிழகம்,
வறுமை இல்லாத தமிழகம்,
அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த தமிழகம் அமைக்க மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சி அமைக்க பா.ம.க.வின் மத்திய மண்டல மாநாடு உறுதி ஏற்கிறது.

தமிழகத்தில் நடப்பது சர்வாதிகாரி ஆட்சி: அன்புமணி ராமதாஸ் பேச்சு

 


பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மண்டல அரசியல் மாநாடு திருச்சி, பஞ்சப்பூரில் 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய அக்கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ்,

ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்தவைகளில் 90 விழுக்காடுகளை நிறைவேற்றவில்லை. இன்னும் 6 மாதம் இருக்கிறது. என்னிடம் பெரிய பட்டியலே இருக்கிறது. அதை நான் படிக்க வேண்டும் என்றால் ஒன்றரை மணி நேரம் ஆகும். 

தமிழ்நாடு போக்குவரத்துத்துறையை பார்த்து எல்லோரும சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒரு வாட்ஸ் அப் வீடியோ வந்தது. அதில் தமிழக அரசு பேருந்து கேரளா செல்கிறது. கேரளாவில் உள்ள புனலூரில் அந்த பேருந்தில் சென்ற பெண்மணி ஒருவர் பேருந்தில் இருந்து திடீரென்று கீழே விழுந்துவிடுகிறார். நல்ல நேரம் பின்னால் எந்த வாகனமும் வரவில்லை. உயிர் தப்பித்தார். காயம் ஏற்பட்டுள்ளது. இது தமிழக அரசு பேருந்துகளின் நிலை. அரசுக்கு இதுபற்றி எல்லாம் கவலைக்கிடையாது. 600 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டு துருபிடித்து நின்றது. ஏனென்றால் இந்த அம்மா வந்துதான் கொடி அசைக்கனும் என்று நின்றது. 

தமிழகத்தில் நடப்பது சர்வாதிகாரி ஆட்சி. மக்களைப் பற்றி கவலைக்கிடையாது. இந்த அம்மாவுக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்யவேண்டும். பிடிக்கவில்லை என்றால் மூடிவிட வேண்டும். புதிய சட்டமன்றத்தை கலைஞர் கட்டினார். இரவு, பகலாக அங்கேயே இருந்து கட்டினார். திறந்து வைத்தார். இந்த அம்மா வந்தாங்க மூடு. ஏன் என்றால் அவங்களுக்கு பிடிக்கவில்லையாம். 1000 கோடி. யார் பணம் அது. நம்ம பணம். அந்தக் கட்டிடத்தை மூடு. இல்லையென்றால் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்றார்கள். மருத்துவமனை கட்ட வேண்டும் என்றால் திட்டமிட்டு செய்ய வேண்டும். இவங்க என்ன நினைக்கிறார்களோ அதான் நடக்கிறது. சமச்சீர் கல்வியை எடுத்தார்கள். அதில் பாமக போராடி வெற்றி பெற்றுது. 

காவிரியில் தண்ணீர் திறந்து விட மாட்டோம் என்று கர்நாடக அரசு சொல்கிறது. இந்த அம்மா பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். இல்லையென்றால் சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவார். இலங்கை பிரச்சனையில் தீர்மானம் போட்டதுபோன்று. காவிரிப் பிரச்சனை பற்றி திமுக அதிமுகவுக்கு கவலை இல்லை. கடிதம் எழுதுவார்கள். இல்லையென்றால் சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவார்கள். இவ்வாறு பேசினார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மண்டல அரசியல் மாநாடு திருச்சி [Thanks to Nakkheeran.in]

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=151523 [Thanks to Nakkheeran.in]

நாங்கள் விளம்பரத்துக்காக செய்யவில்லை: காப்பியடிக்கவில்லை: சுயமாக வடிவமைத்தது: ராமதாஸ்



பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மண்டல அரசியல் மாநாடு திருச்சி, பஞ்சப்பூரில் 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

பாமகவைச் சேர்ந்த முன்னாள் மந்திரி வேலுவுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன். அவர் மட்டுமல்ல எம்பியா இருந்தவர்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். ஒரு நாள் இரவு ஒரு கிராமத்திற்கு சென்று தங்கி, சாப்பிட்டு, அங்கேயே படுத்திருக்க வேண்டும் என்று சொன்னேன். இதுவரை எந்தக் கட்சியாவது இதுபோன்று செய்திருக்கிறார்களா. வேலு ஒரு கிராமத்திற்கு சென்று இந்த ஊரில் கதவு இல்லாத, மின்சார வசதி இல்லாத வீடு இருக்கிறதா என்று கேட்டார். இருக்கிறது என்றதும், அந்த வீட்டிற்கு சென்றார். அந்த வீட்டில் கட்டில் கூட கிடையாது. மந்திரி வந்திருக்கிறார் என்று வேறொரு வீட்டில் இருந்து கட்டில் கொண்டு வந்து போட்டார்கள். அங்கேயே தங்கினார். என்ன வேலு சாப்பிட்டீங்க என்றேன். ஏதோ ஒரு கஞ்சு கொடுத்தாங்க, குடிச்சேன் என்றார். அது ஒரு அருந்ததியர் வீடு. இதை நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை. பத்திரிகைகளும் அப்போது இல்லை. கேமரா, பத்திரிகைகளை அழைத்துப்போய் இதுபோன்று செய்கிற பழக்கம் இல்லை. 

15 வருடங்களுக்கு முன்பு நான் ஈரோடு சென்றிருந்தேன். அப்போது சாப்பாட்டு நேரம் வந்தவுடன் சாப்பாடு வருகிறது என்றனர். நான் கேட்டேன். நம்ம கட்சியின் ஏழ்மையான தொண்டர். குடிசையில் இருக்கிற தொண்டர் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டு, அங்கு சென்றோம். குடிசைக்குள் குனிந்துதான் செல்ல வேண்டும். என்ன இருக்கு என்றோம். பழைய கஞ்சி இருக்கிறது என்றதும், அதை வாங்கி சாப்பிட்டோம். இதையெல்லாம் நாங்க என்ன விளம்பரத்துக்காகவா செய்தோம். நம்ம தொண்டர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக செய்வது இதுதெல்லாம். 

அப்ப செய்ததை இப்ப நான் செய்தால் மற்றக் கட்சிக்காரர்கள் காப்பியடிப்பார்கள். காப்பியடிக்கிறார்களே அதனை மறைமுகமா அடிச்சா பரவாயில்லை. ஈயடிச்சான் காப்பியடிக்கிறார்கள். தேர்தல் அறிக்கையை காப்பியடிக்கிறார்கள். அதனை காப்பியடிச்சாலும் ஒன்றும் நடக்காது. நாங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். A to Z. ஒரு குழந்தை தாயின் அரவணைப்பில் இருந்து அதனுடைய கல்வியின் முழு செலவினையும் ஏற்று, அதன் பிறகு 88, 90 வயது ஆகும் வரை பாதுகாக்க தேவையான பட்ஜெட்டை போட்டுவிட்டோம். நாங்கள் சொல்லாத விசயம் என்ன இருக்கு. பொருளாதாரம், தொழில், நல்ல ஆட்சி, வேளாண்மை, கல்வி, தரமான சுகாதாரம் என எதையும் விடவில்லை. ஏதோ 4 வரி அல்ல. ஒவ்வொன்றிலும் 15 பாயிண்ட் என பாமக திட்டங்களை சொல்லியிருக்கிறோம். இதனை நாங்கள் காப்பியடிக்கவில்லை. சுயமாக நாங்கள் வடிவமைத்தது. இவ்வாறு பேசினார்.

Friday, September 18, 2015

50 வருடங்களாக தமிழக வளங்களை கொடூரமாக சுரண்டிய திமுக-அதிமுக: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: "தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் மக்கள் நலனுக்காக செய்யப்பட வேண்டிய மிகப்பெரிய பணி ஒன்று உண்டென்றால், அது அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பது தான். கடந்த 50 ஆண்டுகளின் தமிழகத்தின் அனைத்து வளங்களையும் மிகக்கொடூரமான முறையில் சுரண்டிய கட்சிகள் அவை" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், திருச்சி மாநாட்டிற்கு பெருமளவில் கூடுமாறு தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாற்றம்... முன்னேற்றம் என்ற முழக்கத்துடன் சேலத்தில் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியின் லட்சியப் பயணம் எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
 
வடக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து திசைகளிலும் வலிமையை நிரூபித்த பா.ம.க. அடுத்த கட்டமாக மத்திய மண்டலத்தில் புதிய வரலாறு படைக்கவிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஆறாவது அரசியல் மாநாடு வரும் 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு திருச்சியை அடுத்த பஞ்சப்பூரில் நடைபெறவிருக்கிறது.தமிழ்நாட்டைப் பொருத்தவரை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் முற்றிலும் வித்தியாசமான தேர்தல் ஆகும். 1967 ஆம் ஆண்டு முதல் 2011 வரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் முக்கியமான பிரச்சினையாக இருந்திருக்கிறது.ஆனால், இந்தத் தேர்தல் தான் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து நடைபெறவிருக்கிறது.பாட்டாளி மக்கள் கட்சி வித்தியாசமான அரசியல் கட்சி....தமிழகத்தின் மற்ற கட்சிகள் அரசியல் லாபத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால் பா.ம.க. மக்கள் நலனை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் கட்சி என்பது பல்வேறு கால கட்டங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வரும் தேர்தலில் அனைவரின் தேர்வும் பா.ம.க.வாகவே இருக்கும்.தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் மக்கள் நலனுக்காக செய்யப்பட வேண்டிய மிகப்பெரிய பணி ஒன்று உண்டென்றால், அது அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பது தான். கடந்த 50 ஆண்டுகளின் தமிழகத்தின் அனைத்து வளங்களையும் மிகக்கொடூரமான முறையில் சுரண்டிய கட்சிகள் அவை.ஒருகாலத்தில் கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்த தமிழகம் இன்று மது விற்பனை, ஊழல், இயற்கை வளச் சுரண்டல் ஆகியவற்றின் அவல அடையாளமாக மாறியிருப்பதற்கு காரணம் இந்த 2 கட்சிகள் தான். இந்த நிலையை மாற்றி தமிழகம் இழந்த பொலிவை மீண்டும் பெற வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒற்றை இலக்காகும்.மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நமது பயணத்தில் முன்னேற்றங்கள் தொடர்கதையாகி வருகின்றன. சேலத்தில் தொடங்கி மதுரை வரை நடத்தப்பட்ட 5 அரசியல் மாநாடுகளும் நமது வலிமையை தமிழகத்திற்கு உணர்த்தியிருக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வரும் மது ஒழிப்பு போராட்டங்களுக்கு பெருகிவரும் ஆதரவு, தமிழகத்தில் பெண்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கு என்பதற்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது.முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு 7 மாதங்களில் ஆறாவது மாநாட்டை நடத்தும் கட்சி என்ற பெருமை நமக்கு கிடைத்திருக்கிறது. இதுவரை இவ்வளவு குறுகிய இடைவெளியில் இத்தனை மாநாடுகளை தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் நடத்தியதில்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றனர்.இதுவரை நடத்தப்பட்ட 5 மாநாடுகளும் வெற்றிகரமானவையாக அமைந்தன. அவற்றை விஞ்சும் வகையில் மத்திய மண்டல மாநாடு அமைய வேண்டும்; மலைக்கோட்டை மாநகரம் மனிதத் தலைகளால் நிறைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம். எனது அன்புக் கட்டளைகள் அனைத்தையும் நிறைவேற்றிய நீங்கள் இதையும் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.இதைவிட மிகவும் முக்கியம் நமது கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உங்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பது தான். பொதுமக்களுக்கும், போக்குவரத்தும் எந்தவித இடையூறுமின்றி, அமைதியாகவும், பாதுகாப்பாகவும் திருச்சி பஞ்சப்பூரில் நடைபெறவிருக்கும் மத்திய மண்டல அரசியல் மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்ற ஒன்றை மட்டும் தான் உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன்.

முதல்வருக்காக அப்பாவி மக்கள் உயிரை விட வேண்டுமா? : அன்புமணி


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை:
’’கேரள மாநிலம் புனலூர் என்ற இடத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பேரூந்தில் திடீரென ஓட்டை ஏற்பட்டு, அதன் வழியாக சுவாதி என்ற பயணி சாலையில் விழுந்தது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நல்வாய்ப்பாக அந்த பயணிக்கு பெரிய  பாதிப்பு ஏற்படவில்லை என்பது நிம்மதி அளித்தாலும், நெரிசல் மிகுந்த இடங்களில் இந்த நிகழ்வு நடந்திருந்தால் என்னவாகும் என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பேரூந்துகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மொத்தம்  22,500 பேரூந்துகள் இயக்கப்படும் நிலையில் அவற்றில் 70 விழுக்காட்டுக்கும் கூடுதலான பேரூந்துகள்  பயணம் செய்வதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இவற்றை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அரசுப் பேரூந்துகளில் பெரும்பாலானவற்றில் அமருவதற்கான இருக்கைகள் கூட சரியாக இருப்பதில்லை. பணிமனைகளில் இருந்து புறப்படும் பேரூந்துகள் திரும்ப வந்தால் தான் நிச்சயம் என்ற நிலை தான் தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. பேரூந்துகளில் உள்ள குறைக் காரணம் காட்டி அவற்றை இயக்க மறுக்கும் ஓட்டுனர்கள் மிரட்டப்படுகிறார்கள். பல ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தங்களின் சொந்த செலவில் பேரூந்துகளில் உள்ள குறைகளை சரி செய்து இயக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது.

புனலூரில் ஓட்டை விழுந்த பேரூந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டத்திற்கு சொந்தமானது ஆகும். இந்த போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் பதவி கடந்த 8 மாதங்களாக காலியாக உள்ள நிலையில், அதை நிரப்ப தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புனலூரில் நடைபெற்றது போன்ற நிகழ்வுகளும், விபத்துக்களும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கடந்த ஜனவரி 20 ஆம் தேதி ஒகேனக்கல்  மலைப்பகுதியில் பேரூந்து கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்ததற்கு பேரூந்து சரியான நிலையில் இல்லாதது தான் காரணம் ஆகும். அதன்பின் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தருமபுரியில் நடுசாலையில் பழுதடைந்து நின்ற பேரூந்தை நானும், என்னுடன் வந்தவர்களும் தள்ளி ஓட வைத்தோம். தமிழகம் முழுவதுமே இதே நிலை தான் காணப்படுகிறது.

ஒரு பேரூந்து அதிகபட்சமாக 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ. மட்டுமே இயக்கப்பட வேண்டும்.  ஆனால், அரசுப்போக்குவரத்துக் கழக பேரூந்துகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவை ஆயுள்காலம் முடிந்த பிறகும் இயக்கப்படுகின்றன. அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு இதுதான் முக்கியக் காரணம் ஆகும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 7153 புதிய பேரூந்துகளை வாங்க ஆணையிடப்பட்டது. ஆனால், அவற்றில் இதுவரை 4939 பேரூந்துகள் மட்டுமே தயார் செய்யப்பட்டு சாலைகளில் இயக்கப் படுகின்றன. பல பேரூந்துகள் இயக்குவதற்கு தயார் நிலையில் இருந்தாலும், அவற்றை ஜெயலலிதாவின் திருக்கரங்களால் தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று கூறி, இயக்காமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியில் ஜெயலலிதா நீக்கி வைக்கப்பட்டிருந்த  நேரத்தில், புதிதாக கூடு கட்டப்பட்ட பேரூந்துகள் ஒன்று கூட பயணிகள் போக்குவரத்துக்காக இயக்கப்பட வில்லை. இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பை சுட்டிக்காட்டி, அவற்றை உடனடியாக இயக்க வேண்டும்  என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியிருந்தார். அதன்பிறகு ஜெயலலிதா மீண்டும் பதவியேற்ற பிறகு கடந்த ஜூன் 18 ஆம் தேதி மொத்தம் 290 புதிய பேரூந்துகளை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதன்பின் கடந்த 3 மாதங்களில் மொத்தம் 422 புதிய பேரூந்துகள் கூடு கட்டப்பட்டு, இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளன. இவற்றில் 202 பேரூந்துகள் நீண்ட தூரம் செல்லும் சொகுசுப் பேரூந்துகள் ஆகும். இவை அனைத்தும் ஜெயலலிதா கைகளால் தான் தொடங்கி வைக்கப்பட வேண்டும் என்று கூறி, இவற்றை அதிகாரிகள் இயக்காமலேயே முடக்கி வைத்திருக்கின்றனர். இதனால் பல கோடி இழப்பு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இதைப்பற்றியெல்லாம் தமிழக அரசு கவலைப்படவில்லை.

ஒருபுறம் ஓட்டைப் பேரூந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் பாதிக்கப்படுவதும், விபத்தில் சிக்காமலேயே காயமடைவதும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இருக்கும் புதிய பேரூந்துகளை இயக்காமல் முடக்கி வைத்திருப்பது முறையல்ல. எத்தனை உயிர்கள் போனாலும் பரவாயில்லை... ஜெயலலிதாவின் கைகளால் தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது. எனவே, தயார் நிலையில் உள்ள புதிய பேரூந்துகள் அனைத்தையும்  உடனடியாக இயக்கவும், பழுதடைந்த பேரூந்துகளை சீரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் பேரூந்துகளின் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

Wednesday, September 16, 2015

சென்னைவாசிகளுக்கு இலவச பஸ் பயணம், அனைவருக்கும் இலவச கல்வி: பாமக வரைவு தேர்தல் அறிக்கை

சென்னை: மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் வரை தினமும் ஒரு லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள வரைவு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2016 சட்டசபை தேர்தலுக்கு பா.ம.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கட்சியின் வரைவு தேர்தல் அறிக்கையை இன்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு பேசினார்.ADVERTISEMENT"கட்சியின் வரைவு தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். பல தரப்பு மக்களிடமும் ஆசிரியர், அரசு அலுவலர், நெசவாளர்கள், விவசாயிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் அன்புமணி ராமதாஸ் இந்த வரைவு தேர்தல் அறிக்கை பற்றி விவாதிப்பார். ஜனவரி 25ம்தேதிக்குப் பின்னர் அவர்கள் சொல்லும் ஆலோசனைகளுக்கு ஏற்ப இறுதி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜனவரி மாதம் 25ம்தேதிக்குள் வெளியிடப்படும் என்றார் டாக்டர் ராமதாஸ்.பாமகவின் 2016 சட்டசபை தேர்தலுக்கான வரைவுத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்:

Monday, September 14, 2015

அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த ஜெ. அரசு தவறிவிட்டது: பட்டியலிட்டு ராமதாஸ் குற்றச்சாட்டு

 

அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது எனறு பட்டியலிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், தமிழக அரசோ இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தற்பெருமை பேசி கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் வெங்காயம் விலை கடந்த 50 நாட்களாக அதிகரித்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.20&க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் இப்போது 500% விலை உயர்ந்து  ரூ.100&க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலைகளும் எட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. சென்னையில் ஒருகிலோ துவரம் பருப்பு ரூ.175, உளுத்தம்பருப்பு ரூ.165 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வசதி படைத்தவர்கள் மட்டும் தான் தங்களது உணவில் பருப்பும், வெங்காயமும் சேர்த்துக் கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. வெங்காயம் மற்றும்  பருப்பு வகைகள் விலை உயர்ந்ததற்கு அவற்றின் விளைச்சல் குறைந்தது தான் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இது உண்மை தான் என்ற போதிலும், பதுக்கலும் விலை உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

உதாரணமாக, ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை சென்னையில் ரூ.175 ஆக இருக்கும் நிலையில்,  மும்பையில் ரூ.135&க்கும், தில்லி மற்றும் கொல்கத்தாவில் ரூ.130&க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், உளுத்தம்பருப்பு விலையிலும் சென்னைக்கும் மற்ற நகரங்களுக்கும் இடையே கிலோவுக்கு  ரூ.45 வரை வித்தியாசம் காணப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பருப்பு வகைகளின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. விளைச்சல் குறைவு என்றால் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாகத் தான் விலை இருக்கும். ஆனால், சென்னையில் மட்டும் விலை அதிகமாக இருப்பதற்குக் காரணம் சென்னையில் பருப்பு வகைகள் அதிகமாக பதுக்கப்படுவது தான்.  வெங்காயத்தின் விலை மற்ற நகரங்களை விட சென்னையில் மிக அதிகமாக இருப்பதற்கும் பதுக்கல் தான் காரணமாகும்.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்தே அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. உதாரணமாக 2011 ஆம் ஆண்டில் ரூ.35 ஆக இருந்த ஒருகிலோ வெள்ளைப் பொன்னி  அரிசியின் விலை இப்போது ரூ.55 ஆக உயர்திருக்கிறது. நல்லெண்ணை விலை 130 ரூபாயிலிருந்து  100% அதிகரித்து ரூ.260 ஆக உள்ளது. உளுத்தம் பருப்பு 55 ரூபாயிலிருந்து மும்மடங்கு அதிகரித்து ரூ.165 ஆக உள்ளது. துவரம் பருப்பு 52 ரூபாயிலிருந்து ரூ.175 ஆகவும், புளி ரூ.55 ரூபாயிலிருந்து ரூ.180 ஆகவும் அதிகரித்துள்ளது. மிளகாய் 72 ரூபாயிலிருந்து ரூ.180 ஆக உயர்ந்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தது இரு மடங்கு முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது. ஆனால், இந்த விலை உயர்வை அரசு கட்டுப்படுத்தவில்லை.

பொதுவாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும்போது, அவற்றின் பதுக்கலைக் கட்டுப்படுத்துவது, நியாயவிலைக்கடைகளில் அதிகமாக விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ள வில்லை. குறிப்பாக நியாயவிலைக்கடைகளில் அனைவருக்கும் முறைப்படி பருப்பு வழங்கப்பட்டிருந்தாலே வெளிச்சந்தையில் பருப்பு விலை வீழ்ச்சியடைந்து இருக்கும். ஆனால், அவ்வாறு செய்ய அரசு தவறி விட்டது. வெளிச்சந்தையில் பருப்புவிலையைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 107க்கும், முதல் ரக உளுத்தம்பருப்பு ரூ.112க்கும், இரண்டாம் ரகம் ரூ.99&க்கும் விற்பனை செய்யும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால், இப்போது அந்தக் கடைகளில் இந்த விலையில் பருப்புகள் விற்கப் படுவதில்லை. பண்ணைப் பசுமைக்கடைகளில்  வெங்காயம் சற்று குறைந்த விலையில் விற்கப்படும் போதிலும், அத்திட்டத்தால் ஒரு சிறிய குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பயனடைகின்றனர். தமிழகஅரசின் இப்போக்கால் வெங்காயம்  பருப்பு  போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் ஏழை, நடுத்தர மக்கள் வாழ வழியில்லாமல் போய்விடும்.

எனவே, வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்வதன் மூலமும்,  பதுக்கலைத் தடுப்பதன் மூலமும் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். 

Sunday, September 13, 2015

பா.ம.க வரைவு தேர்தல் அறிக்கை 16-ஆம் தேதி வெளியீடு: ராமதாஸ் அறிவிப்பு

 

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ம.க.வின் வரைவுத் தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை மறுநாள் 16ஆம் தேதி வெளியிடப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பும், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையும் இணைந்து அண்மையில் சென்னையில் நடத்திய ‘ஜனநாயகத்துடன் கூடிய வளர்ச்சி’ என்ற தலைப்பிலான கருத்தங்கில் அறிவுப்பூர்வமாகவும், மக்கள் மீதான அக்கறையுடனும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அறிவார்ந்த, ஜனநாயக நலன் சார்ந்த முன்முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. 

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரியுமான எம்.ஜி. தேவசகாயம் உள்ளிட்ட சான்றோர் பங்கேற்ற இந்தக் கருத்தரங்கில் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. 

அதில் முதன்மையானது அரசியல் கட்சிகள் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்கான செயல் திட்டத்தை தேர்தல் அறிக்கையாக மக்களிடம் முன் வைக்க வைக்க வேண்டும்; அப்போது தான் அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுக்க மக்களுக்கு போதிய அவகாசம் கிடைக்கும் என்பதாகும். ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் முன் வைக்கப்பட்டுள்ள இந்த யோசனையை பா.ம.க முழுமையாக ஏற்கிறது.

தமிழ்நாட்டில் அறிவார்ந்த அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்; மக்களின் யோசனைகள் தான் அரசின் திட்டங்களாக உருப்பெற வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். அதனால் தான் கடந்த காலங்களில் மக்களின் விருப்பத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட திட்டங்களை எதிர்த்து கடுமையான போராட்டங்களை பா.ம.க. நடத்தியிருக்கிறது. 

அந்த வகையில், வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தை மக்கள் ஆராய்வதற்கு அவகாசம் வழங்கும் வகையிலும், மக்களின் மேலான ஆலோசனைகளை பெறும் வகையிலும் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ம.க.வின் வரைவுத் தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை மறுநாள் 16&ஆம் தேதி வெளியிடப்படும்.

தமிழகம் இப்போது எதிர்கொண்டு வரும் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வு அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும். தமிழகத்தின் பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்திருப்பவை கல்வி, சுகாதாரம், விவசாயம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள சீரழிவுகள் தான். தொழில் வளர்ச்சி என்பது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி தமிழகத்திற்கு பெரும் முதலீடு வந்துவிட்டதாக நாடகங்கள் நடத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் செயல்பட்டு வந்த நோக்கியா, ஃபாக்ஸ்கான் போன்ற பெரு நிறுவனங்களும், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்களும் ஆந்திரம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

இதற்குக் காரணம் தமிழகத்தில் போதிய அளவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாதது தான். தமிழகத்தில் 86 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

மின் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு, பொதுப்போக்குவரத்துக் குறைபாடுகள், குடிநீர் தட்டுப்பாடு, நகரமயமாக்கல், ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதியின்மை என தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கெல்லாம் மேலாக சமூகத்தை அழித்து வரும் மது அரக்கனை ஒழிக்க வேண்டிய பெரும் கடமையும் ஆட்சியாளர்களுக்கு உள்ளது. 

இவை அனைத்துக்கும் எத்தகைய தீர்வுகளை ஒரு கட்சி முன்வைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அக்கட்சியின் நிர்வாகத் திறனையும், மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையையும் உணர முடியும். பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது என்பதையும், நிர்வாகத் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் அதன் வரைவு நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கும் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

வரைவு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு பொதுமக்களிடமும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களிடமும் கருத்துக்கள் கோரப்பட்டு, அவர்கள் தெரிவிக்கும் ஆக்கப்பூர்வமான யோசனைகளும்  சேர்க்கப்பட்டு நிறைவு நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். அது அடுத்த ஐந்தாண்டு ஆட்சியில் தமிழக  வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நலப்பணிகள் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி செய்து கொள்ளும் சமூக ஒப்பந்தமாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

நேதாஜி குறித்த ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்! : ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை;
’’உலகில் உடைக்கப்படாத மர்மங்களில் முதன்மையானது இந்திய விடுதலைக்காக படை அமைத்து போராடிய சுபாஷ் சந்திரபோசின் இறுதிக்காலம் ஆகும். இந்த மர்மத்திற்கு விடை காணும் முயற்சிகளின்  தொடக்கமாக நேதாஜி பற்றிய 64 ஆவணங்கள் வரும் 18 ஆம் தேதி கொல்கத்தாவில் வெளியிடப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இந்திய விடுதலை அறவழியில் சாத்தியமாகாது; ஆயுத வழியில் தான் சாத்தியமாகும் என்பதில் உறுதியாக இருந்தவர் நேதாஜி. இதற்காக பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று படைகளையும் திரட்டினார். 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. 18.08.1945 அன்று நேதாஜி பயணித்த விமானம் தைவான் நாட்டில் விபத்தில் சிக்கியதாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் & செப்டம்பர் மாதங்களில் தங்களது நாட்டில் விமான விபத்து எதுவும் நடக்கவில்லை என்று தைவான் கூறிவிட்டது.

 பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமும் அவர் விமான விபத்தில் உயிரிழக்க வில்லை என்பதை உறுதி செய்தது. நேதாஜி ரஷ்யாவில் வாழ்ந்தார் என்றும், சீனத்தில் வாழ்ந்தார் என்றும் செய்திகள் உலவின. உத்தரப்பிரதேசத்தில் பகவான்ஜி என்ற பெயரில் 1985 ஆம் ஆண்டு வரை துறவியாக வாழ்ந்து மறைந்தார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இவற்றில் எதையும் உறுதி செய்ய முடியவில்லை. நேதாஜி குறித்த மர்மம் 70 ஆண்டுகளாக நீடிக்கிறது. 

இந்திய மண்ணை மீட்க வேண்டும் என்பதற்காக பல நாடுகளுக்குச் சென்று படை திரட்டிய ஒரு தலைவர் எந்த மண்ணில் வாழ்ந்தார், எந்த மண்ணில் மறைந்தார் என்பதைக் கூட வரலாற்றில் பதிவு  செய்யாமல் இருப்பது அந்த தலைவருக்கு செய்யப்படும் அவமரியாதை ஆகும். லட்சக்கணக்கான இளைஞர்கள் நேதாஜியை தங்களின்  முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் கொண்டிருந்தனர்; இப்போதும் இளைஞர்களைக் கவர்ந்த புரட்சியாளர்கள் வரிசையில் நேதாஜிக்கு இடம் உண்டு. ஆனால்,  அவரது இறுதிக்காலம் குறித்த தகவல்களை மத்திய அரசு திட்டமிட்டே மறைப்பது சரியல்ல. 

நேதாஜியின் உறவினர்களை நேரு அரசு உளவு பார்த்ததாக சில ஆண்டுகளுக்கு முன் தகவல்கள் வெளியாயின. இத்தகைய சூழலில் நேதாஜி குறித்த ஆவணங்கள் மறைக்கப் படுவது பல யூகங்களை ஏற்படுத்துகிறது.

மேற்கு வங்க அரசு வெளியிடவிருக்கும் 64 ஆவணங்கள் மூலம் நேதாஜியின் இறுதிக் காலம் தொடர்பான சில உண்மைகள் வெளியாகும் என்ற போதிலும், அனைத்து மர்மங்களும் விலகும் என எதிர்பார்க்க முடியாது. மத்திய அரசிடம் இருக்கும் ஆவணங்களின் மூலம் தான் இந்த மர்மங்களை போக்க முடியும். நேதாஜி தொடர்பாக தங்களிடமுள்ள ஆவணங்களை மேற்கு வங்க அரசால் வெளியிட முடியும் போது, மத்திய அரசால் ஏன் வெளியிட முடியாது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. நேதாஜி குறித்த உண்மைகளை வெளியிட வேண்டிய கடமை நரேந்திர மோடி அரசுக்கு அதிகமுள்ளது.

பிரதமராவதற்கு முன்பே குஜராத் முதலமைச்சர் என்ற முறையில் கொல்கத்தா சென்ற மோடியை  09.04.2013 அன்று நேதாஜியின் உறவினர்கள் சந்தித்து நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட  உதவும்படி கோரினர். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நேதாஜி குறித்த ஆவணங்கள் வெளியிடப்படும் என்று அப்போதைய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் வாக்குறுதி அளித்தார். கடந்த மே மாதம் 9 ஆம் தேதி நேதாஜி குடும்பத்தினர் பிரதமரை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, தங்களின்  கோரிக்கைகள் குறித்து நினைவூட்டிய போது, ‘‘ இதை மக்களின் கோரிக்கை என்று கூறாதீர்கள்... நாட்டின் கடமை என்று கூறுங்கள் (do not call this a people’s demand. It is the nation’s duty)’’ என்று கூறி அக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அதன்பின் 4 மாதங்கள் ஆன பிறகும் அதற்காக எந்த நடவடிக்கைடையும் மத்திய அரசு மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

நேதாஜி குறித்த ஆவணங்களைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப் பித்தபோது, நேதாஜி பற்றிய தகவல்களை வெளியிட்டால் பல நாடுகளுடனான உறவில் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, அவற்றை வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது. வெளியுறவு விஷயங்களைக் காரணம் காட்டி ஒரு தேசத் தலைவர் குறித்த உண்மைகள் மறுக்கப்படுவதை ஏற்க முடியாது. எனவே, நேதாஜி பற்றி தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.’’

டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் அறிமுகம்: திமுக,அதிமுக மீது அன்புமணி குற்றச்சாட்டு


 
 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை:

’’மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டாத தமிழக அரசு, மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுப்பதில் மட்டும் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது. அதன் ஒரு கட்டமாக டென்மார்க் தயாரிப்பான கார்ல்ஸ்பெர்க் என்ற புதிய பீர் வகையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்து வரும் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம்  விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கால்பதித்து  பீர் உற்பத்தியைத் தொடங்கியது. எனினும் தமிழகத்தில் இந்த பீர் வகை அனுமதிக்கப்படவில்லை. 2011 ஆம் ஆண்டில் இந்த பீர் வகை ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டாலும்,  மிகக்குறுகிய காலத்திலேயே அதன் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது. இத்தகைய சூழலில் கார்ல்ஸ்பெர்க் பீர் வகையை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் நேற்று கையெழுத்தாகியிருக்கிறது. அதன்படி அடுத்த சில நாட்களில்  இந்த புதிய பீர் விற்பனைக்கு வரவிருக்கிறது. 650 மி.லி. கொண்ட கார்ல்ஸ்பெர்க் பீர்பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.140 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக  டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு முக்கிய அம்சம், முதலில் வெளிநாடுகளில் இருந்தும், பின்னர் வெளி மாநிலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த வகை பீர் இப்போது தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சேவையை செய்து தருவது தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கான சொந்தமான பீர் ஆலை தான். அதனிடமிருந்து முதல்கட்டமாக ஒரு லட்சம் பெட்டிகள் கார்ல்ஸ்பெர்க் பீர் வாங்க ஆணையிடப்பட்டிருப்பதாகவும் டாஸ்மாக் வட்டாரங்களில் பேசப் படுகிறது.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா 34 ஆண்டுகளாக போராடி வருகிறார். மதுவை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம்  முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் எனது தலைமையில்  மது ஒழிப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக மதுவுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் கொந்தளித்துள்ளனர். ஆனால், இதைப் பற்றியெல்லாம் சற்றும் கருத்தில் கொள்ளாமல் மது விற்பனையை பெருக்க வேண்டும் என்பதையே நோக்கமாக  கொண்டிருப்பது மிகக் கொடிய குற்றமாகும். 

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மதுவகைகளில் பாதி  தி.மு.க.வினருக்கு சொந்தமான மது ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்று தொடர்ந்து நான் குற்றஞ்சாற்றி வருகிறேன். மது குடிப்பதால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும்,  இவர்களில் ஒரு லட்சம் பேர் தி.மு.க.வினர் உற்பத்தி செய்யும் மதுவைக் குடிப்பதால் உயிரிழப்பவர்கள் என்றும் கூறிவருகிறேன். இந்த உயிரிழப்பைத்தடுக்க தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகளை மூடும்படி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு இதுவரை  பதில் வரவில்லை. 

ஆனால், தமிழகத்தில் மதுவை வெள்ளமாக பாய விட வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வெளிநாட்டு பீர் வகைகளை தயாரித்து வழங்க  தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரின் மது ஆலை முன்வந்திருப்பது கண்டிக்கத்தக்கது. ‘‘எத்தனை லட்சம் மக்கள் உயிரிழந்தாலும் பரவாயில்லை... மதுவை விற்று வருவாய் ஈட்ட வேண்டும்’’ என்பது தான் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் பொதுவான கொள்கையாக உள்ளன. அரசியலில் எதிரெதிர் துருவங்களில் இருந்தாலும் மதுவைக் கொடுத்து மக்களை அழிப்பதில் கூட்டணி அமைத்து செயல்படும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் மக்கள் விரட்டியடிப்பது உறுதி.’’

சகாயம் விசாரணையை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துங்கள்: ராமதாஸ் கோரிக்கை

மதுரை: மதுரை பகுதியில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் சகாயம் குழுவின் விசாரணையை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். அப்போது அவர் கூறியதாவது

வறுமையில் தள்ளிய திராவிடக் கட்சிகள்இலவசம், சாராயம், சினிமா மோகத்தை 50 ஆண்டுகளாக கடைப்பிடிக்கும் திராவிட கட்சிகளால் மக்கள் வறிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயம் பாதிக்காத தொழில் கொள்கையை பாமக விரைவில் அறிவிக்கும்.திட்டக் கமிஷன் கருத்து ஏற்புடையதல்லவிளை நிலங்களை கையகப்படுத்தும் மசோதாவை வாபஸ் பெற்றதாக மத்திய அரசு கூறுகிறது. இதன் முந்தைய சட்டத்தை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என திட்ட கமிஷன் கூறுவது ஏற்புடையதல்ல.10 மடங்கு நஷ்ட ஈடு தேவைவிளை நிலங்களை கையகப்படுத்தும் போது விவசாயிகளுக்கு பத்து மடங்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய 20 ஆண்டுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். தற்போதைய மின் தேவை நாள் ஒன்றுக்கு ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது.நிலம் அளித்தவருக்கு வேலைதொழில் வளர்ச்சிக்காக நிலத்தை கையகப்படுத்தலாம். அவ்வாறு கையகப்படுத்தும் விவசாய நிலத்துக்கு 10 மடங்கு விலை தர வேண்டும். அங்கு அமையும் தொழிற்சாலையில் நிலம் அளித்தவருக்கு வேலை, தொழிற்சாலை இயக்குநர் குழுவில் இடமளிப்பது அவசியம்.கிரானைட் முறைகேடுமதுரை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள கிரானைட் முறைகேட்டில் நில உச்சவரம்புக்கும் கூடுதலாக நிலம் வாங்கிய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கூடுதல் நிலத்தை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.வெள்ளை அறிக்கை தேவைதமிழக வளர்ச்சிக்கு 15 லட்சம் கோடி ரூபாயில் 2020 திட்டம் அறிவிக்கப்பட்டு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.நில உச்சவரம்பு மீறல்கிரானைட் சுரண்டலில் நில உச்சவரம்பு மீறப்பட்டுள்ளது. மதுரையைப்போல அனைத்து மாவட்டங்களிலும் கனிமவள முறைகேடு குறித்த விசாரணையை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மூலமாக மேற்கொள்ள வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.

 

Saturday, September 12, 2015

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துப் போட்டி: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

மதுரை: தமிழகத்தில் 2016ல் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துப் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் பா.ம.க. எங்கள் அணிக்கு வரும் என, பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறி இருப்பது நிறைவேறாத ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் கூறியதாவது:விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் கைவிடப்படும் என பிரதமர் அறிவித்தார். இதனால் விளை நிலத்திற்கான ஆபத்து விலகிவிட்ட நிலையில் அதைவிட பெரிய ஆபத்து ஏற்பட்டு உள்ளது.மத்திய திட்ட நிதி ஆணைய துணை தலைவர் கூறும்போது, தேசிய அளவில் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டு விட்டதால் மாநிலங்கள் தங்கள் இஷ்டம்போல் தனித்தனியே நிலம் கையப்படுத்தும் திட்டத்தை நிறை வேற்றிக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறார்.தமிழக அரசு சில திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. இது சிறப்பாக இருப்பதாகவும், அதைபோல மற்ற மாநிலங்களும் இதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறி கூறி இருக்கும் கருத்து மிகவும் ஆபத்தானதாகும்
 

Monday, September 7, 2015

தமிழகம் மதுவால் சீரழிந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமக மகளிர் அணி சார்பில் திங்கட்கிழமை இன்று சென்னை சேப்பாக்கத்தில் மது ஒழிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,

தரமான கல்வியையும், வேலைவாய்ப்பையும், ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சி வழங்க வேண்டிய தமிழக அரசு மதுவிற்பனை செய்து வருகிறது. தமிழகம் மதுவால் சீரழிந்து வருகிறது' என குற்றம் சாட்டினார். 

தொடர்ந்து மதுஒழிப்பை வலியுறுத்தி போராடி வருகிறது பாமக. வருகிற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தால் தங்களது முதல் கையெழுத்து மது விலக்கை அமுல் படுத்துவதாகத் தான் இருக்கும் என தெரிவித்துள்ளார். 

இந்தப் போராட்டத்தில் சுவாமி அக்னிவேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநில தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, துணைத் தலைவர் கே.என். சேகர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Sunday, September 6, 2015

காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதா? கர்நாடக அரசை கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: காவிரியில் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது பேச்சு நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காத வகையில் இருப்பது மட்டுமல்ல, இரு மாநில மக்களிடையே நிலவும் நல்லுறவை சீர்குலைப்பதாகவும் உள்ளது என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

அன்புமணி தலைமையில் நாளை 5000 பெண்கள் பங்கேற்கும் மதுஒழிப்பு போராட்டம்

சென்னை: பாமக முதல்வர் வேட்பாளரும், அக்கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை சென்னையில் சுமார் 5000 பெண்கள் பங்கேற்கும் மதுஒழிப்பு போராட்டம் நடைபெற உள்ளது.தொடர்ந்து மதுஒழிப்பை வலியுறுத்தி போராடி வருகிறது பாமக. வருகிற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தால் தங்களது முதல் கையெழுத்து மது விலக்கை அமுல் படுத்துவதாகத் தான் இருக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இதன் அடுத்த கட்டமாக பாமக மகளிர் அணி சார்பில் நாளை சென்னை சேப்பாக்கத்தில் மது ஒழிப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார். சுவாமி அக்னிவேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மாநில தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, துணைத் தலைவர் கே.என். சேகர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.இது தொடர்பாக ஏ.கே.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல், மொழி, மதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டு மக்களை சிதைத்து வருவது மது. எனவே மதுவை ஒழிக்க அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் அணிதிரண்டு வந்து ஆதரவு தரவேண்டும். மது ஒழிக்கப்படும்வரை பா.ம.க. போராடும்' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

Saturday, September 5, 2015

சீனப்பட்டாசுகள் இறக்குமதிக்கு தடை வேண்டும்... மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அன்புமணி கடிதம்

சென்னை : சீனப்பட்டாசுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.சீனப்பட்டாசுகளின் வரவால் சிவகாசி மிகப்பெரிய அச்சுறுத்தல்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளததாகவும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது...ADVERTISEMENTஇந்தியாவில் பட்டாசு உற்பத்தியில் 5 லட்சம் பேர் நேரடியாகவும், 85 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். நாட்டுக்கு தேவையான 90 சதவீத பட்டாசுகள் உற்பத்தி செய்து சிவகாசி பட்டாசுகளின் முனையமாக திகழ்கிறது. சீனப்பட்டாசுகளின் வரவால் சிவகாசி மிகப்பெரிய அச்சுறுத்தல்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 35 சதவீத பட்டாசுகள் தேக்கமடைந்து, பட்டாசு தொழிற்சாலைகளுக்கு இழப்பு எற்பட்டது. டெல்லி, குஜராத், மராட்டியம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்யும் நோக்கில் இலக்கு நிர்ணயித்து நவிமும்பை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்கள் வழியாக சீனப்பட்டாசுகள் இறக்குமதி செய்து கொண்டுவரப்படுகிறது.கடந்த 6 ஆண்டுகளில் ‘பொம்மைகள்'என்று தவறாக குறிப்பிட்டு 600 கண்டெய்னர்களில் சீனப்பட்டாசுகள் கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.700 கோடி ஆகும். வணிக ரீதியாக உலை வைக்கும், சீனப்பட்டாசு பொதுமக்கள் பாதுகாப்புக்கு, இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடியது. பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் பெர்குளோரைடு உள்பட பல்வேறு ஆபத்து விளைவிக்கும் வேதி பொருட்களை உள்ளடக்கியது.ஆகவே சீனப்பட்டாசுகள் இறக்குமதி செய்வதை தடை செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமது பட்டாசுகளுக்கு வெளிநாட்டில் அதிக வரவேற்பு மற்றும் தேவை உள்ளது.ஆனால் துறைமுகங்களில் போதுமான வசதி இல்லாததால் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி செய்யமுடியாத நிலை உள்ளது. சீன பட்டாசுகள் இறக்குமதி செய்வதை விட, சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.இவ்வாறு செய்தால் ரூ.6 ஆயிரம் கோடியில் உள்ள வர்த்தகம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். சிவகாசியில் தற்போது ரூ.5 லட்சமாக உள்ள ஆட்களின் எண்ணிக்கை, 15 லட்சமாக அதிகரிக்கும். சிவகாசியின் கட்டுமான வளர்ச்சி மேம்படும். பட்டாசு வர்த்தகத்தையே நம்பி இருக்கும் 50 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
 

Friday, September 4, 2015

பாமக தலைமையில் மாற்றுக் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக அல்லாத மாற்றுக் கூட்டணி பாமக தலைமையில் அமைக்கப்படும் என்று அக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கூறினார்.
 அந்தக் கூட்டணிக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரலாம் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
 பாமக சார்பில் "மாற்றத்திற்காக' ("Anbumani for Change') என்ற இலவச புதிய செல்லிடப்பேசி செயலி தொடக்க நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த செயலியைத் தொடக்கி வைத்து அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
 அச்சு, காட்சி ஊடகங்களைத் தொடர்ந்து தற்போது சமூக ஊடகங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அமெரிக்க தேர்தலில் ஒபாமாவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சமூக ஊடகங்கள். அதேபோன்று மோடியின் வெற்றிக்கும் முக்கியக் காரணமாக இருந்தது சமூக ஊடகங்களே. ஆகையால் சமூக ஊடகங்களை முழுமையாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
 அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாமக சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செல்லிடப்பேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது.
 அதில் கட்சி சார்ந்த தகவல்களுடன், எங்களை பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
 வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத மாற்றுக் கூட்டணி பாமக தலைமையில் அமைக்கப்படும். இந்தக் கூட்டணிக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரலாம் என்றார்.

Thursday, September 3, 2015

அன்புமணி பார் சேஞ்ச்"…. களம் இறக்கப்பட்டது பாமகவின் செல்போன் "ஆப்ஸ்"

சென்னை: ‘அன்புமணி பார் சேஞ்ச்' என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மொபைல் அப்ளிகேஷன் துவங்கப்பட்டுள்ளது. இதனை பாமகவின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.இணைய தளங்களில் வாக்காளர்களை அட்டாக் செய்த அரசியல் கட்சியினர் இப்போது செல்போனில் தங்களின் கட்சி, கொள்கைகள் செயல்பாடுகளை பரப்பி வருகின்றன.ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கான ஆப்களை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளன். இந்த வகையில் பாமகவின் ஆப்ஸ் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடக்கி வைத்துப் பேசிய பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி, திமுக, தேமுதிக அப்ளிகேஷன்களை விட பாமக.,வின் அப்ளிகேஷன் வித்தியாசமானது. பாமக.,வின் இணையதள தொண்டர்கள் இந்த அப்ளிகேஷனை நிர்வகிப்பார்கள் என தெரிவித்துள்ளார்
 

அதிமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: 2016ல் பாமக ஆட்சி: அன்புமணி ராமதாஸ் பேட்டி

அதிமுக ஆட்சி மீது மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர் என்று பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் பாமக சார்பில் புதிய செல்போன் செயலி வெளியீடு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, 

புதிய செயலி மூலம் பாமக கொள்கைகள், லட்சியங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படும். பாமக நடத்தும் கருப்புக் கணிப்பு விவரமும் செயலி மூலம் எடுத்துச் செல்லப்படும். சமூக ஊடகங்களை பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர். பாமகவும் சமூக ஊடகங்களை திறமையாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. 

அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நிர்வாகம் செயலற்று கிடக்கிறது. அதிமுக ஆட்சி மீது மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கிறது. ஆட்சி மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். தேர்தலுக்காக சில அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. 

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அரசு நிர்வாகத்தில் 4 லட்சத்து 15 ஆயிரம் கோடி கடன் உள்ளது. நிர்வாக கடன் என்று பார்த்தால் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி. கடன் வாங்கி என்ன செய்தார்கள். மக்கள் மாற்றத்திற்கான முடிவை எடுக்க உள்ளனர். மதுவுக்கு எதிரான போராட்டத்தில் பாமக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வரும் 7ஆம் தேதி சென்னையில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். 2016ம் ஆண்டில் பாமக ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன் என்றார்

Tuesday, September 1, 2015

அண்ணாமலை பல்கலை. நிதி நெருக்கடியை தமிழக அரசு உடனடியாக தீர்க்க வேண்டும்: ராமதாஸ்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்பதைப் போல அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மாறினாலும், அது எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்படவில்லை. இதற்கான தீர்வு உயர்கல்வி மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில்  நடந்த முறைகேடுகள் காரணமாக கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதைச் சமாளிக்க பல்கலைக் கழக ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களை நீக்கம் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நான், அண்ணாமலை பல்கலைக்கழகத்தைக் காப்பாற்ற அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அடுத்த சில மாதங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. 

நிர்வாகம் மாறினாலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை போக்க தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது.

இதனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 12,500 பணியாளர்களுக்கு  வழங்கப்பட வேண்டிய 6 தவணை அகவிலைப்படி நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. 2011&ஆம் ஆண்டு முதல் பணியாளர்களின் விடுப்பு ஒப்படைப்பு பணம் வழங்கப்படுவதில்லை. ஆசிரியர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக 2012 ஆம் ஆண்டு முதல் யாருக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் 15 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் இதுவரை ஒரு பதவி உயர்வு கூட பெற முடியாமல் அதே நிலையில் தொடர்கின்றனர். பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்பட வில்லை. இதனால் ஏற்பட்ட நெருக்கடியை தாங்க முடியாமல் இதுவரை 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 45 பேர் ஓய்வு பெற்ற பின் அதற்காக பயன்களை பெறாமல் இறந்து விட்டனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நடப்பாண்டில் ரூ.110 கோடி நிதி வழங்கியுள்ளது. இதையும் பிற வருவாயையும் சேர்த்து பல்கலைக்கழகத்தின் மொத்த வருமானம் ரூ.350 கோடியாக உள்ளது. அதேநேரத்தில் பல்கலைக்கழகத்தின் ஆண்டு செலவு ரூ.700 கோடியாக உயர்ந்து விட்டது. மேலும், பல்கலைக்கழக பணியாளர்களுக்கும் ஓய்வுதியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.500 கோடியாக அதிகரித்துள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால்  பல்கலைக்கழகத்தின் செலவுகள் ஆண்டுக்கு ரூ.1000 கோடி ஆக உயர்ந்து விடும். இவ்வாறு தொடர்ந்து அதிகரிக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

1. பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க சிறப்பு நிதியாக ரூ.500 கோடி வழங்க வேண்டும்.

2. அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட் டிலிருந்து பிரித்து அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுடன், அதனுடன் இணைந்த மருத்துவமனையை உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதன் மூலம் பல்கலைக்கழக செலவு குறைவதுடன், மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதும் முடிவுக்கு வரும்.
3. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை ஒருமை பல்கலைக்கழகம் என்ற நிலையிலிருந்து இணைவு பெற்ற பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். அதனுடன், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இணைக்க வேண்டும். 

4. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் எண்ணிக்கையை 5456 ஆக உயர்த்த தமிழக அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு உடனடியாக நிர்வாக ஒப்புதல் வழங்க வேண்டும். மீதமுள்ள பணியாளர்களை பணி நிரவல் மூலம் மற்ற பல்கலைக்கழகங்களில்  பணியமர்த்தலாம்.

மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை சீரமைக்க முடியும். அதுமட்டுமின்றி, அப்பல்கலைக்கழகம் நிதி தன்னிறைவு அடையும் என்பதால் அரசின் உதவி தேவைப்படாது. எனவே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை சரி செய்ய  மேற்கண்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.’’

நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பா.ம.க. பங்கேற்கும்: அன்புமணி இராமதாஸ்

 


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்திற்கு மாற்றாக சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இச்சட்டத்தை எதிர்த்து நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்வதாக அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த மசோதாவை பா.ம.க. கடுமையாக எதிர்ப்பதாகவும், இதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்களை பா.ம.க. ஆதரிக்கும் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அறிவித்திருந்தேன். இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இப்போராட்டம் பற்றி இன்று செய்தியாளர்கள் என்னிடம் கேட்ட போது, போராட்டத்தில் பா.ம.க. பங்கேற்காது என்று தவறுதலாக கூறிவிட்டேன். நாளைய வேலைநிறுத்தத்தில் பா.ம.க. பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உலகிலேயே அதிக அளவில் சாலை விபத்து நடக்கும் நாடு என்ற அவப்பெயரை  இந்தியா பெற்றுள்ள நிலையில், சாலைப் பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  சாலை பாதுகாப்பு குறித்து இந்த சட்டத்தில் உள்ள சில அம்சங்களை பா.ம.க. ஆதரிக்கிறது. ஆனால், பெரும்பாலான அம்சங்கள் சாலைப்பாதுகாப்பைக் காரணம் காட்டி மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை பறிக்கும் வகையிலும், அனைத்து சேவைகளையும் தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் இருப்பதாலும் இந்த மசோதாவை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: