Saturday, September 28, 2013

இலங்கை இனப்பிரச்சனைக்கு மாற்றுத் தீர்வு தேவை; ராமதாஸ்



இலங்கை இனப்பிரச்சனைக்கு மாற்றுத் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 13வது திருத்தத்தின்படி, நிலங்களை நிர்வகிக்கும் அதிகாரம் ராஜபக்சே தலைமையிலான தேசிய அரசுக்கு மட்டுமே உண்டு என்றும், மாநில அரசுகளுக்கு இல்லை என்றும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரங்களையாவது பெற்றுத் தரும் முயற்சிகளுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை வடக்கு மாநிலத்திற்கு அண்மையில் நடைபெற்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியைப் பிடித்தது. தமிழர்களுக்கு ஓரளவாவது அதிகாரங்களைப் பெற்றுத் தருவதற்கு இது நல்ல தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நேரத்தில் தான் மாநில அரசுகளுக்கு நில அதிகாரம் கிடையாது என்ற அதிர்ச்சியூட்டும் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. நில நிர்வாகம் தொடர்பாக இதற்கு முன் இலங்கை உச்சநீதிமன்றம் அளித்த இரு தீர்ப்புகளில் மாநில அரசுகளுக்கே அந்த அதிகாரம் இருப்பதாக தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், வடக்கு மாநிலத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்ற நிலையில், மாநில அரசுகளுக்கு நில அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.
வடக்கு மாநிலத்தில் தமிழர்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாநில அரசுக்கு நில அதிகாரம் இருந்தால் மட்டுமே, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பது சாத்தியமாகும்.
மாநில அரசுகளுக்கு நில அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், தமிழர்கள் தங்களின் நிலங்களை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலை தான் ஏற்படும்.
இலங்கை இனச் சிக்கலுக்கு தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என உலகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், 1987 ஆம் ஆண்டின் இந்திய& இலங்கை ஒப்பந்தப்படி  இலங்கையில் செய்யப்பட்ட 13வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் தமிழர்களுக்கு சம அந்தஸ்தும், அதிகாரமும் பெற்றுத் தரப்படும் என்று இந்தியா கூறி வருகிறது.
குறிப்பிட்ட அதிகாரங்களுடன் மாநில அவைகளை ஏற்படுத்துவது தான் 13 ஆவது அரசியல் சட்டத்தின் நோக்கம் ஆகும். அதன்படி 1988 ஆம் ஆண்டே மாநில அவைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், 25 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை மாநில அவைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. வட மாநிலத்திற்கு நிலம் மற்றும் காவல்துறை அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது தான் ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
ஆனால், மாநிலங்களுக்கு நில அதிகாரம் இல்லை என நீதிமன்றத்தின் மூலமாக இராஜபக்சே அரசு கூறிவிட்டது. இதே அரசு தான் இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி மேற்கொள்ளப்பட்ட வடக்கு & கிழக்கு மாநிலங்களின் இணைப்பு செல்லாது என்று உச்சநீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பளிக்க வைத்தது.
நில அதிகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின் நோக்கமே சிதைக்கப்பட்டு விட்ட நிலையில், ஈழத் தமிழர்களுக்கு எத்தகைய அதிகாரத்தையும், அந்தஸ்தையும் இந்தியா பெற்றுத் தரும் என்பது தெரியவில்லை.
நிலம் மற்றும் காவல்துறை அதிகாரத்துடன் 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செயல்படுத்தப்பட்டால் கூட அது தமிழருக்கு போதிய அதிகாரத்தை பெற்றுத் தராது. நிலம் மற்றும் காவல்துறை அதிகாரம் இல்லாமல் மற்ற அதிகாரங்கள் மட்டும் வழங்கப்பட்டால் ஓர் ஊராட்சி மன்றத்திற்குரிய அதிகாரம் மட்டுமே மாநில அரசுக்கு இருக்கும்.
எனவே, 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தருவோம் என்று கூறி,  தன்னையும் ஏமாற்றிக்கொண்டு, ஈழத் தமிழர்களையும் ஏமாற்றும் முயற்சியில் இந்தியா ஈடுபட வேண்டாம்.
மாறாக, உலகம் முழுவதுமுள்ள ஈழத் தமிழர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி, அவர்களின் விருப்பப்படி, இலங்கை இனப்பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய அன்புமணிக்கு வரவேற்பு



 


ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பசுமைத் தாயகம் அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு சனிக்கிழமை காலை சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Friday, September 27, 2013

மீனவர் பிரச்சனை: 28வது கடிதத்தை எழுதிவிட்டு அமைதியாகிவிடுவாரா ஜெயலலிதா: ராமதாஸ் கேள்வி



மீனவர் பிரச்சினை பற்றி கடந்த 27 மாதங்களில் 27 முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும் பயனில்லை என்பதை  முதலமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். இனியாவது அவர் தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து இலங்கையை கண்டிக்கும்படி வலியுறுத்துவாரா? அல்லது 28 ஆவது கடிதத்தை எழுதிவிட்டு அமைதியாகிவிடுவாரா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, காரைக்கால் பகுதி மீனவர்கள் 34 பேரை கடந்த ஜூலை 30 ஆம் தேதி  சிங்களக் கடற்படை கைது செய்தது. அவர்களை இம்மாதம் 4 ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த போதிலும், அவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தங்களின் படகுகளை மீட்பதற்காக, விடுதலையான பிறகும் தாயகம் திரும்பாமல், இலங்கையில் இருந்தவாறே போராடினர்.
ஒரு கட்டத்தில் இப்பிரச்சினையில் தலையிட்ட இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள், படகுகளை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்த பிறகே 34 மீனவர்களும் கடந்த 22 ஆம் தேதி தாயகம் திரும்பினர். தங்களின் விசைப்படகுகள் விரைவில் கிடைத்துவிடும் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில் தான் அவர்களின் படகுகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட செய்தி வந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஒவ்வொன்றும் ரூ. 50 லட்சம் மதிப்புள்ளவையாகும். இவற்றைப் பறித்ததன் மூலம் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இலங்கை அரசு அழித்துள்ளது.  இலங்கை சிறைகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்ட 41 ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் 35 பாம்பன் மீனவர்களின் படகுகளையும் திரும்பத் தர இலங்கை அரசு மறுத்துவிட்டது. இதனால், தங்கள் படகுகளை மீட்பதற்காக அவர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். இவர்கள் தவிர நாகை, புதுக்கோட்டை, இராமேஸ்வரம்,  பகுதிகளைச் சேர்ந்த 70 மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் சொந்தமான மேலும் 22 படகுகளையும் முடக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இதுவரை தமிழக மீனவர்களை தாக்கியும், சுட்டுக்கொன்றும் கொடுமைப்படுத்தி வந்த சிங்களக் கடற்படை,  இப்போது படகுகளை பறிக்கும் புதிய பாதகத்தைத் தொடங்கியிருக்கிறது. மீனவர்களின் பிழைப்புக்குத் தேவையான படகுகளை பறித்துக் கொண்டு அவர்களை விடுதலை செய்வது,  உயிரைப் பறித்துக் கொண்டு நடைபிணமாக அனுப்புவற்கு ஒப்பானதாகும்.  மீனவர்களின் படகுகளை மீட்டுத் தருவதாக உறுதியளித்திருந்த இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள், அதற்காகத் துரும்பைக் கூட அசைக்க வில்லை என்பது தான் வேதனை அளிக்கும் உண்மையாகும்.
காமன்வெல்த் மாநாட்டிற்கு  அழைப்பு விடுப்பதற்காக தில்லி வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீசிடம், தமிழக மீனவர்களை விடுதலை செய்யும்படி பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தினார். ஆனால், அதன்பிறகு தான் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யும் வேகம் அதிகரித்தது. இந்தியப் பிரதமரின் வார்த்தைகளுக்கு, நம்மிடம் உதவி பெற்று பிழைக்கும் நாடான இலங்கை எவ்வளவு மதிப்பளிக்கிறது என்பதற்கு இதுவே உதாரணமாகும். கடந்த காலங்களில் இலங்கையின் தவறுகளை இந்தியா கண்டிக்காதது தான் இந்த அவல நிலைக்கு காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழக மீனவர்களின் படகுகளை பறித்து வைத்துக் கொண்டு தர முடியாது என்று மறுப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் செயலாகும். இலங்கையின் இச்செயலை இப்போதாவது இந்திய அரசு கடுமையாக கண்டித்து நடவடிக்கை எடுக்கப்போகிறதா? அல்லது இலங்கை எங்களின் நட்பு நாடு என்று கூறிக்கொண்டு, அதன் தவறுகளுக்கெல்லாம் துணை போகப் போகிறதா என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் மனதைத் துளைத்தெடுக்கும் முதல் கேள்வி .
மீனவர்களின் நலன்களை பாதுகாக்கும் கடமை தமிழக அரசுக்கு உள்ளது. மீனவர் பிரச்சினை பற்றி கடந்த 27 மாதங்களில் 27 முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும் பயனில்லை என்பதை  முதலமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். இனியாவது அவர் தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து இலங்கையை கண்டிக்கும்படி வலியுறுத்துவாரா? அல்லது 28 ஆவது கடிதத்தை எழுதிவிட்டு அமைதியாகிவிடுவாரா? என்பது விடைதெரியாத அடுத்த வினா .
இந்த இரு வினாக்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் சரியாக பதிலளித்து, மீனவர்களின் நலனை பாதுகாக்காவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் சரியான பதில் தருவது உறுதி என்று கூறியுள்ளார்

Thursday, September 26, 2013

ல் விலை உயரும் போது மக்கள் பாதிப்பை போக்க ஜெயலலிதா எதையும் செய்யவில்லை: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெட்ரோல் விலையை மீண்டும் ஒருமுறை லிட்டருக்கு ரூ.2.07  உயர்த்தி ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. சென்னையில் நேற்றுவரை ரூ.77.48 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இன்று ரூ.79.55 ஆக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும், அமெரிக்க டாலர் மதிப்பும் குறைந்துவருவதால்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.50 வரை குறைக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர் விவேக் ரே நேற்று முன்னாள் கூறியிருந்தார்.
இதனால் பெட்ரோல் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
செப்டம்பர் முதல் தேதியன்று 114.07 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, நேற்றைய நிலவரப்படி 110.61 டாலராக குறைந்திருக்கிறது. அதேபோல் டாலர் மதிப்பும், இதேகாலத்தில், ரூ.66.13-லிருந்து ரூ.63.07 ஆக குறைந்திருக்கிறது.
ஆனால், எண்ணெய் நிறுவனங்களோ கச்சா எண்ணெய் விலை 117 டாலராகவும்,  டாலர் மதிப்பு ரூ.66.02 ஆகவும் அதிகரித்துவிட்டதாக கூறி பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளன.
பொய்யான தகவல்களைக் கூறி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருப்பது பகல்கொள்ளைக்கு ஒப்பானது ஆகும். ஏழை மற்றும் நடுத்தர மக்களைச் சுரண்டும் இந்தப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
கடந்த ஜூன் மாதம் தொடங்கி இன்று வரையிலான மூன்றரை மாதங்களில் பெட்ரோல் விலை 7 தவணைகளாக  மொத்தம் ரூ.13.65 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது இதுவரை இல்லாத  விலை உயர்வாகும்.
கடந்த 2008 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலைகள் வரலாறு காணாத அளவை எட்டிய போது கூட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55.07 என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெயின் விலை110 டாலர் என்ற குறைந்த  அளவில் இருக்கும்நிலையில், பெட்ரோல் விலையை அப்போதிருந்ததைவிட 50 விழுக்காடு அதிகமாக நிர்ணயித்திருப்பது ஏற்கத் தக்கதல்ல.
வணிக லாபம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது எண்ணெய் நிறுவனங்களுக்கு அழகல்ல. எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை உயர்வை திரும்பப்பெறும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, பெட்ரோல் டீசல் விலைகளை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு திரும்பபெற வேண்டும்.
ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலை உயரும் போதும் அதனால் ஏழை & எளிய மக்கள் பாதிக்கப்படுவதாக கூறும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அந்த பாதிப்பை போக்க எதையும் செய்யவில்லை.
கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் மட்டும் தமிழக அரசுக்கு லிட்டருக்கு ரூ. 2.85 கூடுதலாக வரி வருவாய் கிடைக்கிறது. ஜெயலலிதா நினைத்தால், கூடுதலாக கிடைக்கும் வரி வருவாய் தேவையில்லை என்று கூறி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 வரை குறைக்க முடியும். ஏழை மக்களின் நலனில் ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் மதிப்பு கூட்டு வரியை குறைத்து அதன் மூலம் பெட்ரோல் விலையை குறைக்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tuesday, September 24, 2013

இலங்கை இனப் படுகொலை: சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடுக: அன்புமணி உரை



ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பசுமைத் தாயகம் சார்பில் அதன் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு கலந்து கொண்டிருக்கிறார். 24.09.2013ல் நடைபெற்ற ஆணையத்தின் பொது அமர்வில் அவர் ஆற்றிய உரை:
உலகில் அனைத்து வகையான இன வெறியையும், அது தொடர்பான சகிப்புத் தன்மையின்மையையும் எவ்வளவு கடுமையாகக் கண்டிக்க முடியுமோ, அவ்வளவு கடுமையான வார்த்தைகளால் பசுமைத் தாயகம் கண்டிக்கிறது. இன வெறியால் அன்றாட ஒடுக்குமுறை முதல் ஒட்டுமொத்த இனப்படுகொலை வரை பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றில் இரண்டாவது விளைவான இனப்படுகொலை துரதிருஷ்டவசமாக இன்று இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இனப்படுகொலை என்பது அப்பாவி மக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்வது என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. இனப்படுகொலை திட்டமிட்டுச் செய்யப்படும் ஒன்று என்பதால், அது மிகவும் கொடூரமானதாகவும், நிரூபிக்க முடியாததாகவும் இருக்கும். இனப்படுகொலைக்கு எதிரான இரண்டாவது பிரிவின்படி, ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதும் ஒரு வகையான இனப்படுகொலை ஆகும்.
இலங்கை வடக்கு மாநிலத்தில் செயல்பட்டுவரும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கைகளில், தமிழ்ப் பெண்களை மிரட்டிக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது குறித்து ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வடக்கு மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்களை, அவர்களின் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக, கிளிநொச்சி பகுதியில் உள்ள வேராவில் அரசு மருத்துவமனைக்கு வரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி அவர்கள் அங்கு சென்ற போது, அவர்களை மோசடி செய்து நீண்டகாலம் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கான ஊசியை அவர்களின் கைகளில் செலுத்தியுள்ளனர். கருத்தடை செய்துக் கொள்ளாவிட்டால், அந்த அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் எந்த சிகிச்சையையும் இனி பெற முடியாது என்று அப்பெண்கள் மிரட்டப் பட்டிருக்கின்றனர்.
விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தமிழ்ப் பெண்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தால் கடந்த 2007 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அறிக்கையை விக்கிலீக்ஸ் அண்மையில் அம்பலப்படுத்தியது. இந்தக் கட்டாயக் கருக்கலைப்புகளை இலங்கை அரசுடன் இணைக்கப்பட்டுள்ள துணை ராணுவக் குழுவான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் செய்திருக்கிறார்.
கட்டாயக் கருத்தடையும், கருக்கலைப்பும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித நேயச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். நலிவடைந்த மக்களுக்குத் தேவைப்படும் அடிப்படை சுகாதார சேவைகளை, கட்டாயக் கருத்தடைக்காகப் பயன்படுத்திய இலங்கை அரசின் செயல் மூர்க்கத்தனமானது; தார்மீக ரீதியில் கண்டிக்கத் தக்கது என்று ஒரு மருத்துவர் என்ற முறையில் நான் கருதுகிறேன். இந்தக் குற்றச்சாற்றுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பால் விசாரிக்கப்பட வேண்டும்.
இந்தக் குற்றங்கள் அனைத்தும், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை வரலாற்றில் அண்மையில் நடைபெற்றவையாகும். 2009 ஆம் ஆண்டில் இந்த அட்டூழியங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தன. அப்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் விளைவாக இலங்கை கடற்கரை ஓரத்தில் குருதி வெள்ளம் ஓடியது; பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
எனவே, இலங்கை அரசின் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து விசாரிக்க சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைக்கும்படி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

Sunday, September 22, 2013

இலங்கை பிரச்சனைக்கு தமிழீழமே தீர்வு என்பதை ஈழத் தமிழர்கள் மீண்டும் உறுதி செய்துள்ளனர்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை வடக்கு மாநில அவைக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு  அதிக இடங்களை வென்று, ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததுடன், நான்கு லட்சம் தமிழர்களை அகதிகள் என்ற பெயரில் ஆடு மாடுகளைப் போல கொட்டடியில் அடைத்து வைத்து சிங்கள அரசு கொடுமைப் படுத்தியது. போருக்குப் பிறகும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தன. வடக்கு மாநிலம் முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. தமிழர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. இதற்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது. இதைத் தடுக்கும் நோக்குடனும், ஜனநாயகத்தில் தமக்கு நம்பிக்கை உள்ளது என்ற மாயத் தோற்றத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்துவதற்காகவும் இந்தத் தேர்தலை  இராஜபக்சே அரசு நடத்தியது.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்தே அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த வேட்பாளர்கள் மீதும், அவர்களின் வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப் பட்டன. வாக்குப்பதிவு நாளன்றும் தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டனர். இந்த அடக்குமுறைகளை எல்லாம் தாண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. வடக்கு மாநிலத்தில் உள்ள 36 இடங்களில் 28 இடங்களை அந்தக் கட்சி பெற்றிருக்கிறது. வடக்கு மாநிலத்தை சிங்கள மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதுடன், சில தமிழ் துரோகிகளை விலைக்கு வாங்கிய போதிலும் இராஜபக்சே கட்சியால் வெறும் 7 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக பதிவான சுமார் 5 லட்சம் வாக்குகளில் 80 % வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை வடக்கு மாநிலத்தைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1976 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களும் தமிழீழ கோரிக்கை மீதான வாக்கெடுப்பாகவே நடைபெற்றுள்ளன. அப்படி நடந்த அனைத்து தேர்தல்களிலுமே தமிழ் கட்சிகள் தான் வென்றுள்ளன. முதன்முறையாக இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணத்திற்காக தமிழீழம் தேவையில்லை; அதிகாரப்பகிர்வு போதும் என்ற முழக்கத்துடன் போட்டியிட்டனர். ஆனாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அது தமிழீழக் கோரிக்கைக்கு வலு சேர்த்து விடும் என்பதால், அக்கூட்டமைப்பை முறியடிக்க வேண்டும் என  இராஜபக்சே கட்சி பிரச்சாரம் செய்தது. ஆனால், இராசபக்சே கட்சிக்கு படுதோல்வியை பரிசாக கொடுத்திருப்பதன் மூலம் இலங்கை பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்பதை ஈழத் தமிழர்கள் மீண்டும் உறுதி செய்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு வெற்றிகளை மட்டுமே குவித்து வந்த இராஜபக்சே கட்சியை முதல்முறையாக படுதோல்வியடையச் செய்திருப்பதன் மூலம் தமிழர்கள் தங்களின் தமிழீழக் கோரிக்கையில் எவ்வளவு உறுதியாக உள்ளனர் என்பதை உலக சமுதாயம் உணர்ந்து கொள்ள முடியும். 

எனவே, இலங்கை வடக்கு மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஈழ மக்களின் இந்த உணர்வுகளை மதித்து செயல்பட வேண்டும். அதேபோல் இலங்கை அரசும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வட மாநிலத்திலிருந்து இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். இத்தேர்தல் முடிவு தமிழீழ கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்பதால், ஈழத் தமிழர்களின் இந்த விருப்பத்தை ஐ.நா. மூலம் நிறைவேற்ற இந்தியாவும், உலக நாடுகளும் முன்வர வேண்டும்.

Saturday, September 21, 2013

ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கிறார்: ராமதாஸ் அறிக்கை


டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இலங்கை சென்று விசாரணை நடத்திய மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை அவரது அறிக்கையை வரும் 25–ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கிறார். இலங்கை இனப்படுகொலைக்கு நீதி வேண்டி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் இது முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.
அந்த வகையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்தக் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் அதன் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒரு குழு கலந்து கொள்கிறது. அக்குழுவில் பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர. அருள், புதுவை சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.கே. அனந் தராமன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் நாளை சென்னையிலிருந்து ஜெனீவா புறப்பட்டுச் செல்கின்றனர்.
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழுவினர் பின்னர் மனித உரிமை ஆணையத்தின் நிர்வாகிகளை சந்தித்து, இலங்கை இனப்படுகொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச உள்ளனர்.
ஜெனிவாவில் கூடியுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூட்டத்திலும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று இது பற்றி வலியுறுத்துவார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதர்களையும் மருத்துவர் அன்புமணி சந்தித்து பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, September 19, 2013

தமிழ்நாட்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்க நிதி ஒதுக்கீடு



 பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்படி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு பாதியாக குறைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாகும்.
இந்தியாவில் கல்வி கற்காத குழந்தைகளே இருக்கக்கூடாது என்ற எண்ணத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி கடந்த 2009-10 ஆண்டில் ரூ.862 கோடியாக இருந்த தமிழகத்திற்கான நிதிஒதுக்கீடு படிப்படியாக அதிகரித்து கடந்த ஆண்டில் ரூ.1988.24 கோடியாக அதிகரித்தது.


நடப்பாண்டில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.3000 கோடியாக உயர்த்தித் தரும்படி மத்திய அரசை  தமிழக அரசு கோரியிருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட மத்திய அரசு, கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட சுமார் ரூ. 500 கோடி குறைவாக ரூ. 1500 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது.
14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதென்றால் ஒவ்வொரு ஆண்டும் புதிய பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்; ஏற்கனவே திறக்கப்பட்டப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப் பட வேண்டும் என்பது தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. இவற்றையெல்லாம் செய்து தர அதிக அளவில் நிதி உதவி தேவைப்படும் நிலையில், ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வந்த நிதியில் 25 விழுக்காட்டை குறைத்திருப்பது எந்த வகையிலும்  நியாயமாக இருக்காது.
அனைவருக்கும் கல்வி இயக்க நிதி இந்தளவுக்கு குறைக்கப்பட்டால் புதிய பள்ளிகளை தொடங்க முடியாத நிலை எற்படுவதுடன், இருக்கும் பள்ளிகளையும் மூட வேண்டிய அவலம் உருவாகும்.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற் காக கடந்த ஆண்டை விட 17 விழுக்காடு அதிகமாக ரூ. 27,258 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொகை போதுமானதல்ல என்று எதிர்க்கட்சிகள் கூறியபோது கல்வித் துறையை பொறுத்தவரை பணம் ஒரு பொருட்டல்ல என்றும், தேவையான நேரத்தில், தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மத்திய அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.


ஆனால், அந்த உத்தரவாதத்திற்கு மாறாக  தமிழ்நாட்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்க நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஏற்கக் கூடியதல்ல.
இந்தியாவில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பது உண்மை தான். அதை சமாளிப்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது போன்ற சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தலாம். அதைவிடுத்து கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது நாட்டின் வளர்ச்சியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
எனவே, அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தவும், புதிய பள்ளிகளைத் தொடங்கவும் வசதியாக மாநில அரசு கோரியவாறு ரூ. 3000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு இது தேசிய அவமானம் : ஜி.கே.மணி



சேலம் மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பாமக நிர்வாகிகள் 3 பேர்  விடுவிக்கப்பட்டனர்.  அவர்களை வரவேற்பதற்காக சென்ற ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர்,  ‘’தமிழகத்தில் பாமகவினர் மீது போலீஸார் தொடர்ந்து பொய் வழக்குகள் தொடர்ந்து வருகின்றனர். போலீஸாரின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது.
இலங்கை ராணுவத்திடம் இருந்து தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. மீனவர்கள் பிரச்னைக்கு ஒரே நிரந்தரத் தீர்வு கட்சத் தீவை மீட்பது மட்டுமே.
இலங்கைச் சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், வெள்ளைக் கொடியுடன் இலங்கை அரசிடம் சரணடைய இருப்பதாக, காரைக்கால் முதல் ராமேசுவரம் வரையிலான மீனவர் சங்கங்கள் அறிவித்திருப்பது மத்திய அரசுக்கு ஒரு தேசிய அவமானம்.
எனவே, இனியாவது மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களைக் காக்க முன் வர வேண்டும்’’ என்றார்.

ஜெ., அவதூறு வழக்கு : ராமதாஸ் நேரில் ஆஜராக விலக்கு

அரியலூரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக பேசியதாக அம்மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் ராமதாசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இம்மாதம் 24ம் தேதி நேரில் ஆஜராவதற்கு ராமதாஸுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதற்கு விலக்கு அளிக்க கேட்டும், அது தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ் அரியலூர் கோர்ட்டில் ராமதாஸ் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்தார்

Tuesday, September 17, 2013

விஜயகாந்த் மீது 34 அவதூறு வழக்குகள் போட்டு அவரை முடக்கியுள்ளார் ஜெ.: ராமதாஸ் தாக்கு

சென்னை: தமிழகத்தில் நடப்பது அண்ணா திமுக அரசா அல்லது அடக்குமுறை திமுக அரசா என்ற ஐயம் ஏற்படுகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில் அமைச்சர்கள் உறங்கும் படத்தை வெளியிட்ட ஒரு நாளிதழுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு விளம்பரம் நிறுத்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்ததற்காக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இது கடந்த இரு ஆண்டுகளில் அவர் மீது தொடரப்பட்ட 12 ஆவது அவதூறு வழக்காகும்.
ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டித் திருத்துவது தான் எதிர்க்கட்சிகளின் முதன்மைக் கடமையாகும். ஆனால், ஆயிரம் தவறுகளை செய்தாலும் அரசை எவரும் விமர்சிக்கக் கூடாது என்ற பிடிவாதத்துடன் செயல்படும் முதலமைச்சர் ஜெயலலிதா, தமது தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அதன் ஒரு கட்டமாகத் தான் 90 வயதான கலைஞரை நீதிமன்றங்களின் படிகளில் ஏற வைக்க வேண்டும் என்பதற்காக அவதூறு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
கலைஞர் மட்டுமின்றி, மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் விருப்பம்போல அவதூறு வழக்குகளை முதலமைச்சர் தொடர்ந்து வருகிறார். தமிழகம் வறுமையில் வாடும்போது, கொடநாடு மாளிகைக்கு சென்று முதலமைச்சர் ஓய்வெடுப்பது முறையா? என்று கேட்டதற்காக 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்தில் அரியலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக 4 மாதம் கழித்து என் மீது இரண்டாவது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
அதே போல் சட்டப்பேரவையில் முதலமைச்சரிடம் சவால் விட்டுப் பேசினார் என்பதற்காக அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் விஜயகாந்த் மீது மொத்தம் 34 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர் மீது கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது இத்தனை அவதூறு வழக்குகளைத் தொடர்ந்த அநியாயம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இதுவரை நடைபெற்றதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அவரது கடமையை செய்யக் கூடாது என்பதற்காகவே அவர் மீது ஆட்சியாளர்கள் இத்தனை வழக்குகளைத் தொடர்ந்து முடக்கி வைத்திருக்கிறார்கள்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீதும் 5 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. ஊடகங்களும் ஜெயலலிதாவின் அவதூறு வழக்குகளுக்கு தப்பவில்லை. தமிழ்நாட்டில் இரு நாளிதழ்களைத் தவிர மற்ற அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு பாய்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்களுக்கு வழங்கப்படும் விளம்பரங்களை நிறுத்தி அவற்றை முடக்கும் செயலிலும் அரசு ஈடுபட்டிருக்கிறது.
தமிழக அரசும், முதலமைச்சரும் தொடர்ந்துள்ள வழக்குகள் அனைத்துமே அடிப்படை ஆதாரமற்றவை. இவற்றில் எந்த வழக்கிற்குமே முதல்நோக்கு ஆதாரம் கூட கிடையாது. எதிர்க்கட்சித் தலைவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்குகள் தொடரப்படுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியை ஒடுக்குவதற்காக என்னையும், கட்சியின் முன்னணி தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது, 8000 நிர்வாகிகளை சிறையில் தள்ளி கொடுமைப் படுத்தியது, 123 பேர் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டத்தை ஏவியது என ஏராளமான அடக்குமுறைகளை இந்த அரசு கட்டவிழ்த்து விட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரான ஜெ.குருவை ஆதாரமே இல்லாமல் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த தமிழக அரசு, அந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் இரத்து செய்த பிறகும் மீண்டும், மீண்டும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சியிருக்கிறது. மூன்று மாதங்களில் அவர் மீது மூன்று முறை தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சி மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட முதலமைச்சர், மற்ற கட்சிகளை அடக்க அவற்றின் மீது அவதூறு வழக்குகளை பாய்ச்சி வருகிறார். தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அடக்குமுறைகளில் மட்டும் தான் தான் முதன்மை மாநிலமாக்கியிருக்கிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் அவதூறு வழக்குகளை தொடர்ந்து ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார். இந்த ஆட்சி முடிவதற்குள் இன்னும் எவ்வளவு வழக்குகளைத் தொடர்ந்து எத்தனை சாதனைகளை படைக்கப்போகிறாரோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் இப்போது கட்டவிழ்த்து விடப்படுவது போன்ற அடக்குமுறைகள் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழகத்தில் நடப்பது அண்ணா திமுக அரசா? அல்லது அடக்குமுறை திமுக அரசா? என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழக அரசின் இத்தகைய அடக்குமுறைகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
தமிழக நீதிமன்றங்களில் ஏற்கனவே லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கும் நிலையில், தேவையில்லாத அவதூறு வழக்குகளைத் தொடருவதன் மூலம் நீதிமன்றங்களின் மாண்பை குறைக்க முயல்கிறார். பழிவாங்கும் நோக்கத்துடன் பொய் வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிக்கும் நடவடிக்கைகளை நீதித்துறையும் கண்டும் காணாமல் இருப்பது கவலையளிக்கிறது.
தமிழ்நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது, அவற்றைத் தீர்ப்பதில் அக்கறை செலுத்தாமல், எதிர்க்கட்சிகளையும், ஊடகங்களையும் ஒடுக்குவதில் மட்டும் முதலமைச்சர் தீவிரம் காட்டுவது அவரது பழிவாங்கும் உணர்வையே காட்டுகிறது. தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த, தமிழக மக்களின் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகளுடன் கலந்து பேசி, அவற்றுக்கு தீர்வு காண ஆளுங்கட்சி முயன்றால், அது தான் ஆக்கபூர்வமான அரசியலுக்கு உதாரணமாக இருக்கும். அதைவிடுத்து அவதூறு வழக்குகள் மற்றும் அடக்குமுறைகளின் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கிவிடலாம் என்று முதலமைச்சர் கருதினால் அவர் பகல் கனவு காண்கிறார் என்று தான் அர்த்தம். இத்தகைய அடக்குமுறைகளின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியையோ அல்லது மற்ற எதிர்க்கட்சிகளையோ ஒடுக்க முடியாது. அதே நேரத்தில் தொடர்ந்து ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும் தமிழக அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும், ஊடகங்களும் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Saturday, September 14, 2013

2016-ல் பா.மக. ஆட்சி அமையும்: அன்புமணி ராமதாஸ்



பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் செஞ்சியில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ம.க.வை சேர்ந்த 123 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத செயல் இது. சிறையில் உள்ள அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும். மரக்காணம் கலவரம்  நீதி விசாரணை கோரினோம். இதுவரை இல்லை. இந்த பிரச்சினைக்கு தி.மு.க. இதுவரை கருத்தோ கண்டனமோ தெரிவிக்க வில்லை.
வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். வரும் 2016-ல் பா.மக. ஆட்சி அமையும், அதற்கேற்ப மக்கள் எங்கள் மீது நம்பிக்கை பெற பாடுபடுவோம். பாராளுமன்ற தேர்தலில் தனியாக எதிர்கொள்ள சபதம் ஏற்று பல்வேறு அமைப்புகள், இயக்கங்களுடன் கூட்டணி அமைத்து 15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார்.

ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால்.... : ராமதாஸ்



பாமக நிறுவனர் ராமதாஸ் எண்ணெய் நிறுவனங்கள் ஏழைகளை சுரண்டுவதாகக் கூறியுள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பெட்ரோல் விலையை மீண்டும் ஒருமுறை லிட்டருக்கு ரூ.2.07  உயர்த்தி ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. சென்னையில் நேற்றுவரை ரூ.77.48 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இன்று ரூ.79.55 ஆக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும், அமெரிக்க டாலர் மதிப்பும் குறைந்து வருவதால்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.50 வரை குறைக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர் விவேக் ரே நேற்று முன்னாள் கூறியிருந்தார். இதனால் பெட்ரோல் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
செப்டம்பர் முதல் தேதியன்று 114.07 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, நேற்றைய நிலவரப்படி 110.61 டாலராக குறைந்திருக்கிறது. அதே போல் டாலர் மதிப்பும், இதே காலத்தில், ரூ.66.13-லிருந்து ரூ.63.07 ஆக குறைந்திருக்கிறது. ஆனால், எண்ணெய் நிறுவனங்களோ கச்சா எண்ணெய் விலை 117 டாலராகவும்,  டாலர் மதிப்பு ரூ.66.02 ஆகவும் அதிகரித்துவிட்டதாக கூறி பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளன. பொய்யான தகவல்களைக் கூறி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருப்பது பகல் கொள்ளைக்கு ஒப்பானது ஆகும். ஏழை மற்றும் நடுத்தர மக்களைச் சுரண்டும் இந்தப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
கடந்த ஜூன் மாதம் தொடங்கி இன்று வரையிலான மூன்றரை மாதங்களில் பெட்ரோல் விலை 7 தவணைகளாக  மொத்தம் ரூ.13.65 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது இதுவரை இல்லாத  விலை உயர்வாகும். கடந்த 2008 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலைகள் வரலாறு காணாத அளவை எட்டிய போது கூட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55.07 என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெயின் விலை110 டாலர் என்ற குறைந்த  அளவில் இருக்கும்நிலையில், பெட்ரோல் விலையை அப்போதிருந்த தைவிட 50 விழுக்காடு அதிகமாக நிர்ணயித்திருப்பது ஏற்கத் தக்கதல்ல. வணிக லாபம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது எண்ணெய் நிறுவனங்களுக்கு அழகல்ல.
எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, பெட்ரோல் டீசல் விலைகளை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு திரும்பபெற வேண்டும்.
ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலை உயரும் போதும் அதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதாக கூறும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அந்த பாதிப்பை போக்க எதையும் செய்யவில்லை.
 கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் மட்டும் தமிழக அரசுக்கு லிட்டருக்கு ரூ. 2.85 கூடுதலாக வரி வருவாய் கிடைக்கிறது. ஜெயலலிதா நினைத்தால், கூடுதலாக கிடைக்கும் வரி வருவாய் தேவையில்லை என்று கூறி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 வரை குறைக்க முடியும். ஏழை மக்களின் நலனில் ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் மதிப்பு கூட்டு வரியை குறைத்து அதன் மூலம் பெட்ரோல் விலையை குறைக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Friday, September 13, 2013

நமது சமுதாயத்தை அடக்க நினைக்கிறார்கள் : அன்புமணி ராமதாஸ்



விழுப்புரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சமுதாயக்கூடத்தில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும் மாநில இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் பேசியபோது,
’’இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும். அடுத்து 2016 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று பா.ம.க. ஆட்சியை பிடிக்க வேண்டும். நமது சமுதாயத்தை அடக்க நினைக்கிறார்கள்.
மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து 8 ஆயிரம் பேர் கைது, 123 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதிகாரிகளே உங்கள் கடமையை உணர்ந்து செயல்படுங்கள். இன்னும் 2 வருடங்கள்தான். அதன் பிறகு எங்கள் ஆட்சி நடக்கும். தமிழகத்தில் மின்சாரம் இல்லை.
சட்டம் ஒழுங்கு சரியில்லை. பா.ம.க.வின் முக்கிய 2 கோரிக்கைகள். பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். அதற்கு முன்பு திருமணம் நடக்க வேண்டுமென்றால் பெற்றோரின் அனுமதி பெற வேண்டும். அடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்.
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு. ஒரு சொட்டு சாராயமும் இருக்காது. அனைத்து கடைகளையும்
மூடி விடுவோம். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
தனியாக தான் போட்டியிட போகிறோம். யாருடனும் கூட்டணி கிடையாது. 2016-ல் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி நடக்கும். இதற்கு ஒவ்வொருவரும் சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.’’என்று தெரிவித்தார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: