Monday, July 30, 2012

தொடர்வண்டித்துறை சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்: ராமதாஸ்





டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் வந்த போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 35 பயணிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘மின்கசிவு காரணமாக ரயில் விபத்து ஏற்பட்ட போதிலும், விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்ட பெட்டியின் கதவுகளை திறக்க முடியவில்லை என்றும், அதனால்தான் உயிரிழப்பு அதிகரித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இவை உண்மையாக இருந்தால் தொடர்வண்டி பராமரிப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டிய அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பதை அறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் உயிரிழந்தேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 5 லட்சம் ரூபாய் இழப்பீடு போதுமானதல்ல. தொடர்வண்டித்துறை சார்பில் 10 லட்சம் ரூபாயும், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தனியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

Sunday, July 29, 2012

நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை வைக்க வேண்டாம்: ராமதாஸ் பேச்சு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடியில் வந்தவாசி சட்டமன்ற தொகுதி பா.ம.க. சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த கூட்டத்தில் இளைஞர் அதிகமாக உள்ளனர். வன்னியர்கள் இதுவரை ஆளவில்லை. காரணம் வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை என்றனர். ஆனால் இப்போது ஒற்றுமை வந்து விட்டது. நாம் ஆள வேண்டும்.

இந்த முறை நாம் ஆண்டே தீரணும். இதற்கு எந்த தியாகத்தையும் செய்ய நமது இளைஞர்கள் தயாராக உள்ளனர். நமது இனத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் மாம்பழத்திற்கு ஒட்டு மொத்தமாக ஒட்டு போட தயாராகி விட்டனர்.

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் அரசியல் கட்சிகள். இதில் எந்த அரசியல் கட்சி தலைவர்களும் வன்னியரை பற்றி சிந்தித்தது கிடையாது, பேசியது கிடையாது.

சினிமா படங்களை பாருங்கள் ஆனால் அடிமைகளாக மாறிவிடாதீர்கள். நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை வைக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

போதை பாக்குகளுக்கு தடை கோரி ராமதாஸ் போராட்டம்


 பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இந்தியாவில் மிகப்பெரிய உயிர்க் கொல்லியாக குட்கா மற்றும் போதை பாக்குகள் உருவெடுத்துள்ளன. போதைப் பாக்குகளில் புகை யிலை, சுண்ணாம்பு போன்றவை கலந்திருப்பதால் அவை புற்றுநோயை உருவாக்கும் தொழிற் சாலை களாக திகழ்கின்றன.
போதைப் பாக்குகளின் தீமையை உணர்ந்த மத்திய அரசு, அவற்றை தடை செய்வதற்கு வசதியாக உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதி முறைகள் -2011 என்ற பெயரில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.

இந்த விதிமுறைகளின்படி குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள் தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை பயன்படுத்தி கடந்த சில மாதங்களில் மத்தியபிரதேசம், கேரளா, பீகார், மராட்டியம், இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, சண்டிகார், சத்தீஸ்கர் ஆகிய 9 மாநிலங்கள் போதைப் பாக்குகளுக்கு தடை விதித்துள்ளன.

ஆந்திரா, அசாம், ஒரிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் போதைப் பாக்குகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றன.

மத்திய அரசின் விதிமுறைகளை பயன்படுத்தி தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் பிற புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசை இரண்டு முறை அறிக்கைகள் மூலம் நான் வலியுறுத்தியிருந்தேன்.
முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மே 31-ந்தேதியும், ஜூலை 16-ந்தேதியும் தமிழக முதல் - அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் போதைப் பாக்குகளை தடை செய்ய தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் தாக்குவதற்கு போதைப் பாக்குகள்தான் 90 விழுக்காடு காரணம் என்பதால், அதை தடுத்து நிறுத்தவேண்டிய பெரும் கடமை தமிழக அரசுக்கு உண்டு.
எனவே குட்கா, போதைப் பாக்கு மற்றும் பிற புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி, பசுமை தாயம் அமைப்பின் சார்பில் வரும் ஆகஸ்டு 2-ந்தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நினைவரங்கம் எதிரில் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Monday, July 23, 2012

விலையை உயர்த்தி மக்களை கொள்ளையடிக்கும் சிமெண்ட் நிறுவனங்கள்! ராமதாஸ் கண்டனம்!




பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் சிமெண்ட் மற்றும் பிற கட்டுமான பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சிமெண்ட் விலை மூட்டைக்கு 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டிலும் பிற தென் மாநிலங்களிலும் உள்ள சிமெண்ட் ஆலைகள் தங்களுக்குள் முறைகேடான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றன.

சிமெண்ட் ஆலைகளில் வாரத்தின் 7 நாட்களும் சிமெண்ட் உற்பத்தி நடைபெறும் போதிலும், 4 நாட்கள் மட்டுமே சிமெண்ட் மூட்டைகள் சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், ஏற்படும் தேவை அதிகரிப்பை பயன்படுத்திக்கொண்டு சிமெண்ட் நிறுவனங்கள் விருப்பம்போல விலையை உயர்த்துகின்றன.

சிமெண்ட் நிறுவனங்களின் இந்த முறைகேடான செயலுக்கு இந்திய போட்டித்தன்மை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் 6300 அகாடி ரூபாய் அபராதமும் விதித்தது. அதன்பிறகும் சிமெண்ட் நிறுவனங்கள் விலையை உயர்த்தி மக்களை கொள்ளையடிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கடந்த 2010ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் ரூ.180ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்டின் விலை தற்போது 2 மடங்கு உயர்ந்து ரூ.350 என்ற விலையை எட்டியுள்ளது. சிமெண்ட் நிறுவனங்களின் சட்டவிரோத கூட்டணியை தகர்த்து, சிமெண்ட் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது.

சிமெண்ட் விலை உயர்வால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. வறட்சி காரணமாக வேளாண் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில், கட்டுமான தொழிலும் முடங்கினால் இலட்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.


இந்த ஆபத்தை தடுக்க, தமிழ்நாட்டில் சிமெண்ட் விலையை அத்துறை வல்லுனர்களின் உதவியுடன் அரசு நிருணயிக்கவேண்டும். அந்த விலைக்கு சிமெண்ட் மூட்டைகளை விற்பனை  செய்ய மறுக்கும் சிமெண்ட் நிறுவனங்களை அரசுடமையாக்கவேண்டும். கடந்த 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மலிவு விலை சிமெண்ட் விற்பனை திட்டம் தற்போது தொய்வடைந்துள்ளது. இத்திட்டத்தை சீரமைத்து, வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை இறக்குமதி செய்து, அவற்றை மூட்டை ரூ.200 என்ற விலையில் தமிழகத்தின் அனைத்து வட்ட தலைநகரங்களிலும் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ்

செய்யாறு: பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். இனி மற்ற கட்சி கொடியை வன்னியர் பிடிக்க மாட்டான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
செய்யாறில் பாமக சார்பில் 'புதிய அரசியல், புதிய நம்பிக்கை' விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஜி.கே.மணி தலைமை தாங்கிய அக் கூட்டத்தில் பேசிய கூறுகையில்,
இந்த மாவட்டத்தை ஆண்ட மன்னர் சம்புவராயர் அவரது பெயரில் இந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என இருந்தது. இதனை பொறுக்காதவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் என மாற்றி விட்டனர். நாங்கள் ஆள வந்தவுடன் மீண்டும் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என மாற்றுவோம்.
ஆட்சி வரும் முன்னே 10 வருடங்களாக தனி பட்ஜெட் போட்ட ஒரே கட்சி பா.ம.க மட்டும் தான். எங்களுக்கு யார் குடியையும் கெடுக்க தெரியாது நீங்கள் குடியை கொடுத்து எங்கள் குடியை கெடுக்கிறீர்கள்.
இனியும் இலவசங்களை பெற கியூவில் நிற்க மாட்டோம், தன்மானம் உள்ளவர்கள் நாங்கள். உயர் நீதிமன்றத்தில் 54 பதவிகளில் 1 வன்னியர் மட்டும்தான் நீதிபதியாக உள்ளார். 32 மாவட்டக் கலெக்டர்களில் ஒருவர் மட்டும்தான் வன்னியர்.
இலவசம் வேண்டாம், தரமான கல்வி, கட்டாய கல்வியை கொடுங்கள், அம்பானி குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும். அதற்காக தான் 10 வருடங்களுக்கு முன்பே சமச்சீர் கல்வி முறைக்கு போராட்டம் செய்தேன்.
உங்களில் சிலருக்கு சந்தேகம் இருக்கும். தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டனி வைப்பாரா என சந்தேகம் வேண்டாம்.
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து போட்டியிடும். இனி மற்ற கட்சி கொடியை வன்னியர் பிடிக்க மாட்டான்.
வரும் செப்டம்பர் 17ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 20 சதவீதம் இடஓதுக்கீடு வன்னியருக்கு வழங்கிட வலியுறுத்தி நாடே மிறளும் அளவிற்கு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் ராமதாஸ்.

Sunday, July 22, 2012

விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்வதோடு, ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வேண்டும்: ராமதாஸ்


சென்னை: 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கோரியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுத்துவிட்டதாலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டு இருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் வழங்க மறுத்துவிட்டதாலும், மேட்டூர் அணையில் 75 அடி மட்டுமே தண்ணீர் இருப்பதாலும், உரிய காலம் கடந்து 50 நாட்கள் ஆகியும் இன்று வரை தண்ணீர் திறக்கப்படவில்லை.
விவசாயிகளுக்கு நாள்தோறும் 12 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தபோதும் அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் பம்பு செட்டுகளை நம்பி பயிரிடப்பட்ட குறுவைப்பயிர்கள் வாடும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டு, அங்குள்ள உழவர்கள் கடன் வலையில் சிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் ஏரி, குளங்கள் வறண்டு வருவதால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யும் நோக்குடன் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
காவிரிப் பாசனத்தை நம்பியுள்ள 11 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவில் கூட குறுவை சாகுபடி செய்யப்படவில்லை. ஆடி மாதம் பிறந்தும் தண்ணீர் திறக்கப்படாததால் சம்பா சாகுபடிக்கும் வாய்ப்பில்லை என உழவர்கள் கூறியுள்ளனர். 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் வறட்சி காரணமாக விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இதே நிலைதான் காணப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஏரி, குளங்கள் வறண்டு வருவதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யும் நோக்குடன் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். உழவர்கள் பெற்ற பயிர் கடனையும், நில வரியையும் ரத்து செய்வதுடன், ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை நாள்களின் எண்ணிக்கையை 100 நாள்களில் இருந்து 300 நாள்களாக உயர்த்த மத்திய அரசுடன் தமிழக அரசு கலந்து பேச வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Saturday, July 21, 2012

தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை: ராமதாஸ்

கோவை:""தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை. போதை மருந்து, மதுபானத்தால் பாலியல் வன்முறைகள் பெருகியுள்ளன; குடும்ப வன்முறைகள் அதிகரிக்கின்றன'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

கோவை, காந்திபுரத்தில் பா.ம.க., சார்பில், நேற்று மது ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. கண்காட்சியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் துவக்கி வைத்தார்.

முன்னதாக, நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ராமதாஸ் கூறியதாவது:

அக்கறை இல்லை:
தமிழகம் மதுவால் தள்ளாடிக் கொண்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, குடிக்கும் வயது 25 ஆக இருந்தது. தற்போது 13 வயதிலேயே, பள்ளிச் சிறுவர்கள் கூட, குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர். 2003ம் ஆண்டு, "டாஸ்மாக்' துவங்கியபோது, 2,800 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கிடைத்தது. தற்போது, 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. திராவிட கட்சிகளுக்கு, மக்கள் நலனில் அக்கறை இல்லை. ஆனால், 22 ஆண்டுகளாக, பா.ம.க., மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.மதுக்கடைகளை, அரசே நடத்தும் கொடுமை, தமிழகத்தில் மட்டுமே உள்ளது.

ஆறு மாதம் கெடு:தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட, அரசுக்கு, நாங்கள் ஆறு மாதம் "கெடு' விதிக்கிறோம். அதற்குள் படிப்படியாக, அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்; பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். மதுக்கடைகளை அரசு மூடாவிட்டால், நாங்களே பூட்டு போட்டு, கடைகளை மூடி, போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை. போதை மருந்து, மதுபானத்தால் பாலியல் வன்முறைகள் பெருகியுள்ளன. தினமும் 100 ரூபாய்க்கு மது குடிப்பதால், தனி மனிதன் ஒருவரிடம் இருந்து, ஐந்தாண்டுகளுக்கு அரசுக்கு, ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், குடிப்பழக்கம் மனிதனை மிருகமாக்குகிறது.போதையில் வரும் கணவன், மனைவியை தாக்கி, துன்புறுத்துகிறான்; மகளிடம் கூட தவறாக நடக்கிறான். மதுவை ஒழிப்பதால், இது போன்ற வன்முறைகள் நடக்காமல் இருக்கும்.இவ்வாறு, ராமதாஸ் தெரிவித்தார்.

"இனி, தனியாக நிற்கப் போகிறோம்!'"சட்டசபை தேர்தலில் கூட்டணி வைக்கும்போது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்ற நிபந்தனையை, நீங்கள் முன் வைத்திருக்கலாமே...' என, ராமதாசிடம் கேட்டபோது, ""இனி தான், நாங்க, தனியாக நிற்கப்போகிறோமே... திராவிடக் கட்சிகளை ஒழிப்பதற்கு காலம் எங்களுக்கு இட்டிருக்கிற கட்டளை இது. தமிழகத்தில், ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளை அப்புறப்படுத்த யார் முன்வருவார்கள் என்ற எண்ணம், மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில், மது ஒழிப்பு கொள்கையை மட்டும் முன்வைத்து, நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம். நாங்கள் ஆட்சியமைத்தால், முதல் கையெழுத்தே, தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தும் உத்தரவு தான்,'' என்றார்

அரசுக்கு ராமதாஸ் விதித்த ஆறு மாத கெடு

அரசுக்கு ராமதாஸ் விதித்த ஆறு மாத கெடு
கோவை, காந்திபுரத்தில் பா.ம.க., சார்பில், நேற்று மது ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. கண்காட்சியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் துவக்கி வைத்தார்.
முன்னதாக, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,   ‘’தமிழகம் மதுவால் தள்ளாடிக் கொண்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, குடிக்கும் வயது 25 ஆக இருந்தது. தற்போது 13 வயதிலேயே, பள்ளிச் சிறுவர்கள் கூட, குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர்.

2003ம் ஆண்டு, "டாஸ்மாக்' துவங்கியபோது, 2,800 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கிடைத்தது. தற்போது, 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. திராவிட கட்சிகளுக்கு, மக்கள் நலனில் அக்கறை இல்லை. ஆனால், 22 ஆண்டுகளாக, பா.ம.க., மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.மதுக்கடைகளை, அரசே நடத்தும் கொடுமை, தமிழகத்தில் மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட, அரசுக்கு, நாங்கள் ஆறு மாதம் "கெடு' விதிக்கிறோம். அதற்குள் படிப்படியாக, அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்; பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். மதுக்கடைகளை அரசு மூடாவிட்டால், நாங்களே பூட்டு போட்டு, கடைகளை மூடி, போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை.

போதை மருந்து, மதுபானத்தால் பாலியல் வன்மு றைகள் பெருகியுள்ளன. தினமும் 100 ரூபாய்க்கு மது குடிப்பதால், தனி மனிதன் ஒருவரிடம் இருந்து, ஐந்தாண்டுகளுக்கு அரசுக்கு, ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

ஆனால், குடிப்பழக்கம் மனிதனை மிருகமாக்குகிறது.போதையில் வரும் கணவன், மனைவியை தாக்கி, துன்புறுத்துகிறான்; மகளிடம் கூட தவறாக நடக்கிறான். மதுவை ஒழிப்பதால், இது போன்ற வன்முறைகள் நடக்காமல் இருக்கும்’’என்று தெரிவித்தார்.

Tuesday, July 17, 2012

டாஸ்மாக் கடைகளுக்கு பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: ராமதாஸ் உள்பட 2,000 பேர் கைது

டாஸ்மாக் கடைகளுக்கு பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: ராமதாஸ் உள்பட 2,000 பேர் கைது

 Pmk S Lock The Tasmac Shops Protest
 
சென்னை: பாமக சார்பில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் 2,000 பேர் கைது செய்யப்பட்டு சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாமக சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டுப் போடும் போராட்டம் நடந்தது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சென்னையில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தலா 5 போலீசார் நிறுத்தப்பட்டனர்.
கடைகளுக்கு பூட்டுப் போட முயற்சிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்தனர். சென்னை தி. நகரில் நடந்த போராட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் ம.பொ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவிட்டு வந்து போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
மது என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த தமிழகத்தில் கடந்த 1971ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி மதுக்கடைகளை திறந்து வைத்தார். அப்போது மூதறிஞர் ராஜாஜி தனது தள்ளாத வயதிலும் நேரில் சென்று மதுக்கடைகள் திறக்க வேண்டாம் என்றார். ஆனால் அவர் சொன்னதையும் சரி, பெரியார், அண்ணா சொன்னதையும் சரி யாரும் கேட்கவில்லை.
மக்களை காப்பதா? அல்லது மதுவை விற்று மக்களை கொல்வதா? என்ற நானும் 22 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு திராவிடக் கட்சிகள் இன்னும் பதிலளிக்கவில்லை. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் மது வகைகள், போதைப் பொருட்களை மருத்துவத் தேவைகளைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அரசியல் சட்டத்தைக் கூட திராவிடக் கட்சிகள் மதிக்கவில்லை.

அனைத்து மதங்களும் மது கூடாது என்று வலியுறுத்துவதையும் கேட்கவில்லை. வருவாயை மனதில் கொண்டு வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறக்கிறார்கள். இந்த ஆண்டு மட்டும் மதுக்கடைகள் மூலம் ரூ.18,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் அந்த மதுவால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் நோய் தாக்குதல்களாலும் அரசுக்கு ரூ. 1லட்சம் கோடிக்கு மேல் செலவாகிறது.
வாக்குகளைப் பெற ஆண்ட கட்சிகளும் சரி, ஆளுகின்ற கட்சிகளும் சரி மக்களுக்கு இலவசங்களை வாரிக் கொடுத்து அவர்களை ஏமாற்றுகின்றன. மதுவால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஒரேயடியாக மதுக்கடைகளை மூட முடியாது என்றால் படிப்படியாக மூடுங்கள். மும்பையில் ஒரு பகுதியைச் சேர்ந்த 25 சதவீத பெண்கள் கையெழுத்துப் போட்டால் அங்குள்ள மதுக்கடைகளை மூடுகிறார்கள். அந்த சட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும்.
மதுக்கடைகளை மூட இன்னும் 6 மாத கால அவகாசம் தருகிறோம். அதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுபோன்று வீதிக்கு வீதி வந்து போராடாமல் இரவோடு, இரவாக மதுக்கடைகளுக்குப் பூட்டு போடுவோம் என்றார்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மட்டும் போராட்டம் நடத்திய சுமார் 2,000 பாமகவினர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனவைரும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.
இதே போன்று மாநிலம் முழுவதும் ஏராளமான பாமகவினர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, July 16, 2012

குன்னூரில் இருந்து இலங்கை விமானப்படை அதிகாரிகளை திருப்பி அனுப்பவேண்டும்: ராமதாஸ்




இந்தியாவில் பயிற்சி பெற வந்துள்ள இலங்கை விமானப்படை, கடற்படை அதிகாரிகளை உடனடியாக திருப்பி அனுப்பவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏற்கெனவே இலங்கை விமானப்படை வீரர்கள் 9 பேருக்கு சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்ததையடுத்து அவர்களுக்கான பயிற்சி பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்தும் அவர்களை வெளியேற்றவேண்டும் என்ற கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் குன்னூரில் உள்ள பாதுகாப்பு சேவை அதிகாரிகள் கல்லூரியில் நடைபெறும் பயிற்சிகளை பார்வையிட அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கைப் படையினருக்கு இந்தியாவின் எந்த பகுதியிலும் பயிற்சி அளிக்கப்படக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் நிலையில், சிங்கள அதிகாரிகளை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வந்து பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமதிக்கும் செயலாகும்.

எனவே, குன்னூருக்கு வந்துள்ள இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கும், பெங்களூரில் சிங்கள விமானப்படை வீரர்களுக்கும் அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை உடனடியாக நிறுத்தி அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக சார்பில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம்

சென்னை: பாமக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 6,172 மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நாளை (ஜூலை 17ம் தேதி) நடைபெற உள்ளது.
இது குறித்துப் பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மதுவின் தீமைகள் பெருகிவிட்டது. இதனால் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுக்கடைகளுக்குப் பூட்டுப்போடும் போராட்டத்தை கடந்த ஜுலை 11ம் தேதி நடத்துவது என பாமக நிர்வாகக்குழு கூட்டத்திலும், செயற்குழு கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் பாமக இளைஞரணி செயலாளர் அறிவுச்செல்வன் சாலை விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வாரத்திற்கு துக்கம் கடைபிடிக்கப்பட்டது. இதனால் இப்போராட்டம் ஜுலை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 6,172 மதுக்கடைகளுக்கு அடையாள பூட்டுப்போடும் அறவழி போராட்டம் ஜூலை 17ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
சென்னை தியாகராயநகர் தெற்கு போக் சாலையில் ம.பொ.சி. சிலைக்கு எதிரில் உள்ள மதுக்கடைக்கு முன்பு நடைபெறும் போராட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், காஞ்சீபுரத்தில் பாமக இளைஞரணி செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸும் தலைமை வகிக்கின்றனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Friday, July 13, 2012

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து கபில் சிபலை நீக்க வேண்டும்: ராமதாஸ்



சமூக நீதிக்கு எதிராக செயல்படும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபலை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து 13.07.2012 அன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாநிலங்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள உயர்கல்வி சட்ட மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் உருவாக்கியுள்ள உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் சட்டக் கல்வியை ஒழுங்குமுறை செய்யும் அதிகாரம் இந்திய பார் கவுன்சிலிடமிருந்து பறிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.

 இதனால் சாதாரணமானவர்களால் வழக்குரைஞர்களாக முடியாமல் போய்விடும். அதுமட்டுமன்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த வழக்குரைஞர்களும், சட்ட நிறுவனங்களும் கொல்லைப்புறம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நிலை ஏற்படும். இதனால் இந்திய வழக்குரைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

 இந்த உயர்கல்வி சட்ட மசோதா தவிர, உயர்கல்விக்கான தேசிய அங்கீகார ஒழுங்குமுறை ஆணைய சட்ட மசோதா, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் சட்ட மசோதா, தேசிய சட்டப் பள்ளி மசோதா என மேலும் மூன்று மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அமைச்சர் கபில் சிபல் திட்டமிட்டுள்ளார். இவை அனைத்துமே வழக்குரைஞர்களின் நலன்களுக்கு எதிரானவை.

 மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக கபில் சிபல் பொறுப்பேற்ற நாளிலிருந்தே சீர்திருத்தம் என்ற பெயரில் சமூக நீதிக்கும், சாதாரண மக்களின் கல்வி பெறும் உரிமைக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார். ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதைத் தடுக்க வேண்டிய அவர், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு கதவுகளை திறந்துவிட்டு வெண்சாமரம் வீசும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

 எனவே, அவரை அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு எதிரான நான்கு சட்ட மசோதாக்களையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tuesday, July 10, 2012

கண்ணீரில் மிதக்கிறேன்! பாமக நிறுவனர் ராமதாஸ்!




பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அறிவுச் செல்வன் மறைவையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அறிவுச் செல்வன் திருச்சி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், வேதனையும், ஆற்றொனாத் துயரும் அடைந்தேன்.

அறிவுச்செல்வன் பாமக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியில் பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளர், மண்டல மாணவரணி செயலாளர், மாநில மாணவரணித் தலைவர், மாநில இளைஞரணித் தலைவர், மாநில இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து திறம்படி செயலாற்றி வந்தவர். கட்சியின் வளர்ச்சிக்காகவும், பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம்மையே அர்பணித்துக்கொண்டவர். என் மீது மிகுந்த பாசமும், மதிப்பும், மரியாதையும் கொண்டவர். பாமக சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிறைக்கு சென்றவர்.
மாணவர் பருவத்தில் இருந்தே பாட்டாளி மக்கள் கட்சியில் துடிப்புடன் செயல்பட்டு வந்த அறிவுச்செல்வன் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவு செய்தியை தாங்கிக் கொள்ளமுடியாமல் கண்ணீரில் மிதக்கிறேன். அவரது மறைவால் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒன்றாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Sunday, July 8, 2012

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த தவறிய அதிமுக அரசு: ராமதாஸ் தாக்கு

சென்னை: அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கடமையில் இருந்து தமிழக அரசு தவறிவிட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அரிசி விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண வகை அரிசியின் விலை கிலோ ரூ.5ம், சன்னரக அரிசி விலை கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையும் உயர்ந்துள்ளது. காய்கறிகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகளும் ஏற்கனவே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இந்த நிலையில் அரிசி விலையும் பெருமளவு உயர்ந்திருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது.
அதிக லாபம் ஈட்டும் நோக்குடன் அரிசி ஆலை அதிபர்களும், வணிகர்களும் அரிசியைப் பதுக்கி வைத்திருப்பது தான் விலை உயர்வுக்குக் காரணமாகும். கடந்த ஆண்டில் சாதனை அளவாக 105 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டதாக நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்திருந்தது. தேவைக்கும் அதிகமாக நெல் உற்பத்தி செய்யப்பட்ட பிறகும், அரிசி விலை உயர்ந்திருப்பது அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கடமையில் இருந்து தமிழக அரசு தவறி விட்டது என்பதையே காட்டுகிறது.
எனவே, பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசியை வெளிக்கொண்டு வந்து வெளிச்சந்தையில் அரிசி விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசியை வரவழைக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகளை மூடவில்லை என்றால் பூட்டு போட்டு நிரந்தரமாக மூட வைப்போம்! ராமதாஸ் பேச்சு!

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வருகிற 11ந் தேதி அரசு மதுகடைகளுக்கு பூட்டு போடும் போராட்டைத்தை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் கூடுவாஞ்சேரி கூட்ரோடு அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆரோக்கியமான இளைஞர்கள் தேவை. ஆகையால் தான் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன்.
ஏதோ இந்த ராமதாஸ் ஒட்டுக்காகவும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் மது ஒழிப்பை கொண்டு வர சொல்லவில்லை. எங்களுக்கு வருங்கால தலைமுறையான இளைஞர்கள் தான் முக்கியம். அவர்கள் சீரழிவதை தடுக்க வேண்டும். இளைஞர்கள் சீரழிவதை தடுக்க தமிழக அரசுமதுக்கடைகளை மூட வேண்டும்.

1989ம் ஆண்டு ஜுலை மாதம் 16 ந் தேதி பா.ம.க தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கிய 2 மாத்திலேயே காந்தி பிறந்த அக்டோபர் 2 ந் தேதி பெண்களை திரட்டி மதுகடைகளை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம். இன்று வரை மதுவுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.
கடந்த ஆண்டு அரசுக்கு மது விற்பனை மூலம் ரூ.18 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்தது. வரும் ஆண்டு அரசு மது விற்பனையை ரூ.21 ஆயிரம் கோடியாக நிர்ணயம் செய்து உள்ளது. என்னுடைய தலைமையில் வருகிற 11 ந் தேதி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் அறவழிப்போராட்டம் நடைபெறுகிறது. இன்னும் 6 மாதத்திற்குள் அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடவில்லை என்றால் நாங்கள் பூட்டு போட்டு நிரந்தரமாக மூட வைப்போம். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அரிசி விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண வகை அரிசியின் விலை கிலோவுக்கு 5 ரூபாயும், சன்னரக அரிசி விலை கிலோவுக்கு ரூ 10 முதல் ரூ 15 வரையும் உயர்ந்துள்ளது.

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லாத நிலையில் பெரும்பான்மையான மக்கள் வெளிச்சந்தையில் இருந்து அரிசி வாங்க வேண்டிய நிலையில்தான் உள்ளனர். எனவே வெளிச்சந்தையில் அரிசி விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் குறுவை சாகுபடி பரப்பு பாதிக்கும் கீழாக குறைந்துவிட்டது. இதனால் இனிவரும் மாதங்களில் அரிசி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே அரிசி விலையை கட்டுக்குள் வைக்க தொலைநோக்கு பார்வையுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Saturday, July 7, 2012

ஜி.கே.மணி உள்பட 300 பாமகவினர் கைது




சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளாவின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்த பாமக, மத்திய அரசு தலையிட்டு கேரளாவின் முயற்சியை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தியது. தமிழக கேரள எல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட 300 பாமகவினர் கைது செய்யப்பட்டனர். ஆணைக்கட்டி சோதனைச்சாவடி அருகில் மறியலில் ஈடபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டை குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்றால் பொருத்தமாக இருக்கும்! ராமதாஸ் பேச்சு!




மதுக்கடைகளுக்கு 11ந் தேதி பா.ம.க. சார்பில் பூட்டுப் போடும் போராட்டத்தை விளக்கி கூடுவாஞ்சேரி கூட்டுரோடு பகுதியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: 

இளைஞர்களை கெடுக்கும், இளம் விதவைகளை உருவாக்கும், விபத்துக்களை ஏற்படுத்தும், உழைக்கும் மக்களை சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும் குடி மக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு வருகிற 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் நடைபெற உள்ளது.

நாங்கள் மக்களை பற்றி கவலைபடுகிறோம். சாராயம் குடிக்க கூடாது என்று மக்கள் மத்தியில் சொல்கிறோம். இளைஞர்களிடத்தில் சொல்கிறோம். சாராய கடைகளை மூடு என்று சொல்கிறோம். அதற்காக போராட்டம் நடத்துகிறோம்.

சமூக பிரச்சினைகளுக்கான கூட்டம், வாழ்கின்ற சமூகத்தில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர் பாதிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கவலை கரிசனம் நமக்கு மட்டும்தான் உண்டு. வேறு யாருக்கும் இருக்காது. கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி, அடுத்த வருடத்திற்கு ஒரு இலக்கு வைத்துள்ளனர். 2013 ல் ரூ. 21 ஆயிரம் கோடி கிடைக்கும்.
தெரு தெருவாக சாராய கடைகளை திறந்து குடி மக்களாக ஆக்கி விட்டார்கள். தமிழகத்தையே சீரழித்து விட்டார்கள். தமிழ்நாட்டை குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்றால் பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தில் மது வெள்ளமாக ஓட அரசியல்வாதிகள் பணத்தில் மிதக்கிறார்கள். இந்த பிரச்சினையை தமிழ் நாட்டில் பா.ம.க. மட்டும்தான் எடுத்து சொல்கிறது. பா.ம.க. 1989 ல் உதயமானது. 2 மாதம் கழித்து அக்டோபர் 2 ந்தேதி காந்தி பிறந்த நாளன்று பெண்களை கொண்டு தமிழ்நாடு முழுவதும் மது ஒழிப்பு போராட்டம் நடத்தினோம். நமது கட்சிக்கு சமூகத்தை பற்றிய கவலை இருக்கிறது.

பா.ம.க. சமூக இயக்கம். இளைஞர்களுக்கு வழி காட்டுவது தொடர்ந்து 22 வருடமாக செய்து கொண்டிருக்கிறது. 13 வயது சிறுவன் கூட குடிக்கின்றான். சாராய கடைகளை இவர்கள் மூட மாட்டார்கள். நாம்தான் மூட வேண்டும். இளைஞர்களை கெடுக்கும் உழைக்கும் மக்களை சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும், குடிமக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் அறவழியில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Wednesday, July 4, 2012

மதுக்கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம்: மக்கள் ஆதரவு தர, ராமதாஸ் வேண்டுகோள்

பா.ம.க. சார்பில் வருகிற 11-ந் தேதி நடைபெறும் மதுக்கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டத்துக்கு அனைத்து மக்களும் ஆதரவு தரவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும், வரும் 11-ந் தேதி பா.ம.க. சார்பில் நடைபெறவுள்ள மதுக்கடைகளுக்கு அடையாள பூட்டுப்போடும் போராட்டம் குறித்து மக்களுக்கு விளக்கும் நோக்குடனும் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் (04.07.2012) விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரிஅனந்தன், சினிமா தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும், டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 11-ந் தேதி பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 6,172 மதுக்கடைகளுக்கும் அடையாள பூட்டுப்போடும் அறவழி போராட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து குற்றங்களுக்கும் தாய் மதுவாகும். மதுஒழிப்பு போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கூட தங்களது வாரிசுகள் இப்பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்பதற்காக இந்த போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். பா.ம.க. சார்பில் நடத்தப்படவிருக்கும் மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஆதரவு தரவேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Tuesday, July 3, 2012

கொலை வழக்கில் கைதான மாஜி எம்.பி. தன்ராஜை புழல் சிறையில் சந்தித்த அன்புமணி!

சென்னை: அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக முன்னாள் எம்.பி. தன்ராஜை முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது வாக்குப்பதிவு தினத்தன்று திண்டிவனத்தில் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டிற்கு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சண்முகம் மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால் அவரது உறவினரும், அதிமுக நிர்வாகியுமான முருகானந்தம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டது. இதனையடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் சகோதரர் சீனுவாசன், சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்ட கருணாநிதி, சீனுவாசன் மகன் சுரேஷ் (36) உள்ளிட்ட 12 பேரை சிபிஐ கைது செய்தது.
மேலும் முன்னாள் பாமக எம்.பி. தன்ராஜையும் சிபிஐ கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. இந்த நிலையில் சிறையில் உள்ள தன்ராஜை முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி சந்தித்து ஆறுதல் கூறினார்.

கல்வி உரிமைச்சட்டம்: உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யவேண்டும்: ராமதாஸ்

கல்வி உரிமைச்சட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்விபெறும் உரிமைச்சட்டத்தின் படி சமூக பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த குழந்தைகளுக்கு வழங்கப்படவேண்டிய 25 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தங்கள் குழந்தைகளுக்கு சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகள் இடம் ஒதுக்க மறுத்துவிட்டதை எதிர்த்து சில பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்ததற்கு தமிழக அரசின் பொறுப்பின்மையும், அக்கறையின்மையுமே காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் இந்த வழக்கில் அரசின் சார்பில் வாதிட தலைமை வழக்கறிஞரையோ அல்லது உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவரையோ அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு அனுப்பி இருந்தால் நீதிமன்றம் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கு விடை அளித்திருக்க முடியும்.
தனியார் பள்ளிகள், தற்போது உயர்நீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பை பயன்படுத்திக்கொண்டு, இனிவரும் காலங்களில் கல்விபெறும் உரிமைச்சட்டத்தை செயல்படுத்த மறுக்கும் வாய்ப்பு உண்டு.
இந்த ஆபத்தை தடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனுதாக்கல் செய்யவேண்டும். அதன் மீதான விசாரணையின் போது உயர்நீதிமன்றம் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்து, ஏழை குழந்தைகளின் கல்விபெறும் உரிமையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவை முடக்க ரகசிய திட்டம்: அதிர்ச்சியில் ராமதாஸ்



சேலம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாமகவை முடக்கிப் போடும் திட்டம் இப்போது முதலே தயாராகி வருகின்றதாம். இதை அறிந்து பாமக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
பாமகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். மே 18ம் தேதி கடலூரில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநாடு நடைபெறும் என அறிவித்தார். ஆனால் அந்த இடத்தில் அரசு பொருள்காட்சி மே 31ம் தேதி வரை நடைபெற்றதால் மாநாடு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஜூன் 24ம் தேதி மாலை 4 மணிக்கு மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநாடு நடைபெறும் என வேல்முருகன் மீண்டும் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது.
அப்போது வேல்முருகன் பேசியதாவது,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதி, சமுதாயத்துக்கான கட்சி அல்ல, ஒட்டு மொத்த தமிழர்களின் வாழ்வுக்காக, உரிமைக்காக தொடங்கப்பட்ட கட்சி.
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலை முன் வைத்து இந்த மாநாடு நடத்தவில்லை. ஓட்டு அரசியலுக்காக உங்களை அழைக்கவில்லை. ஆனால் தேர்தலில் எங்களை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்களைக் காப்பாற்றவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. முள்ளிவாய்க்கால் குறித்து இலங்கை அமைச்சரின் அவதூறான பேச்சை மத்திய அரசு கண்டிக்கவில்லை.
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் இலங்கைத் தமிழர்கள் காரணமில்லாமல் அடைபட்டுக் கிடக்கின்றனர். தமிழகத்தில் எண்ணற்ற பிரச்னைகள் உள்ளன. இவைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்கு சாதி, மதத்தையும், கட்சியையும் தூக்கி எறிந்து களம் காண வேண்டும் என்றார்.
இந்த நிலையில் இந்த தகவல் அப்படியே உளவுத்துறை மூலம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், வேல்முருகனுக்கு வட மாவட்டங்களில் உள்ள செல்வாக்கு, பாமகவுக்கு எதிராக அரசியல் களத்தில் நிற்க முடியுமா, பண பலம், சாதி பலம், அரசியல் பலம் போன்ற தகவல்களை தனியார் சர்வே மூலம் ஒரு பிரபல அரசியல் கட்சி திரட்டி உள்ளதாம்.
வட மாவட்டங்களில் திமுக, அதிமுகவை மீறி பாமக கோலோச்சி வருவதை அங்குள்ள திமுக, அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் ரசிக்கவில்லையாம். இதனையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வட மாவட்டங்களில் பாமகவை முடக்கிப் போடும் திட்டம் இப்போது முதலே தயாராகி வருகின்றதாம். இதை அறிந்து பாமக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
தற்போது சிபிஐ பிடியில் பாமக முக்கியத் தலைவர்கள் சிக்கி இருப்பதால் தான் பாமக அடக்கி வாசிக்கின்றதாம். விசாரணை விவகாரம் எல்லாம் முடியட்டும். அப்புறம் பாருங்கள் எங்கள் பலத்தை என இப்போதே புஜபலம் காட்டுகின்றனர் பாமகவினர்.

மெரீனா கடற்கரையில் டாக்டர் ராமதாஸ் போதை விழிப்புணர்வு பிரசாரம்

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


மதுக்குடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் நாட்டில் மது அரக்கனுக்கு இளைஞர்கள் அடிமையாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லா தீமைகளுக்கும் தாயாக விளங்கும் மதுவை என்ன விலை கொடுத்தாவது ஒழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் மதுவை ஒழித்து மக்களை காக்க வேண்டிய அரசே மதுக்கடைகளை திறந்து, மது என்னும் விஷத்தை விற்று மக்களை கொல்லும் அவலம் அரங்கேறி வருகிறது.

வருகிற 11 ந்தேதி மதுக்கடைகளுக்கு அடையாள பூட்டுப்போடும் அறவழிப்போராட்டம் நடக்க உள்ளது. இந்த போராட்டம் குறித்தும், மதுக்கடைகளை மூட வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே பா.ம.க. சார்பில் நாளை (புதன்கிழமை) விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறவுள்ளது.

அதிகாலை 6 மணிக்கும் பின்னர் மாலை 6 மணிக்கும் நடைபெறவுள்ள இந்த பிரசாரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று கடற்கரையில் நடைபயிற்சிக்காகவும், காற்று வாங்குவதற்காகவும் வரும் மக்களிடையே மதுவின் தீமைகள் மற்றும் மது ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்களை வழங்குவார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: