Thursday, June 28, 2012

பாமக துணை தலைவராக கே.என். சேகர் நியமனம்



பா.ம.க. மாநில துணை தலைவராக அம்பத்தூர் கே.என். சேகரை அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.

பாமகவில் கே.என்.சேகர்  ஏற்கனவே ஒன்றிய செயலாளர்.   10 ஆண்டுகள் திருவள்ளூர் மாவட்ட செயலாளர், அம்பத்தூர் நகரசபை தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த தேர்தலில் கும்மிடிப்பூண்டியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

Wednesday, June 27, 2012

ரணவக்கவும் ராஜபக்சேவும் மன்னிப்பு கேட்க வேண்டும் : ராமதாஸ்



இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
’’ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இலங்கை மின்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இலங்கையில் தமிழீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
 இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித் துள்ளார்.
 தமிழீழத்துக்காக இந்தியா குரல் கொடுத்தால் இலங்கையில் பேரழிவுதான் ஏற்படும். தமிழீழம் அமைக்க தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் முயற்சிக்கக் கூடாது. அவர்களின் விருப்பங்கள் நிறைவேறாது எனக் கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சரின் இந்த பேச்சு  தமிழர்களின் தன்மானத்துக்கு விடப்பட்ட சவால். இதை தமிழக தலைவர்கள் ஒன்று சேர்ந்து கண்டிக்க வேண்டும்.
இந்தியா கண்டனம் தெரிவிக்காததால்தான் தமிழக தலைவர்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற துணிச்சல் சிங்களர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதை இனியும் அனுமதிக்கக்கூடாது. சம்பிக்க ரணவக்கவும் அவரது அரசியல் குருவான ராஜபட்சவும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழக தலைவர்களை விமர்சித்தால் மோசமான விளைவு ஏற்படும் என்று கொழும்பு செல்லும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மூலம் இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Tuesday, June 26, 2012

டாஸ்மாக் என்பதற்கு எண்ணற்ற அர்த்தங்கள்! ராமதாஸ் விளக்கம்!

பாமக மாநில செயற்குழு கூட்டம் கென்னை பெரம்பூர் வியாசர்பாடியில் உள்ள ஜானகி மகால் அரங்கில் இன்று (26.06.2012) நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் கோ.க.மணி தலைமை ஏற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், டாஸ்மாக் என்பதற்கு தமிழக அரசின் அகராதியில் மதுக்கடைகளை நடத்தும் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் என்று பொருள். ஆனால் நடைமுறையில் டாஸ்மாக் என்பதற்கு எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன.

அவற்றின் விவரம் வருமாறு:

டாஸ்மாக் - அகால மரணம்
டாஸ்மாக் - 60 வகை நோய்கள்
டாஸ்மாக் - மானம் இழப்பு
டாஸ்மாக் - ஏழ்மை
டாஸ்மாக் - கல்லாமை
டாஸ்மாக் - சாலை விபத்து
டாஸ்மாக் - ஆண்மை குறைதல்
டாஸ்மாக் - குற்றங்களுக்கு எல்லாம் தாய்
டாஸ்மாக் - இளம் கைம்பெண்களை உருவாக்கும் அரக்கன்

இவ்வாறாக மதுவின் தீமைகளையும், அதனால் ஏழைக்குடும்பங்களுக்கு ஏற்படும் வலிகளையும் பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். குடியும் போதையும் சாத்தானின் இரு ஆயுதங்கள் என்றார் மகாத்மா காந்தி. மதுவிலக்கு சட்டம் அவசியம் தேவை. குடிகாரர்கள் மலிந்த நமது நாட்டில் சட்டம், காவல்துறை ஆகியவற்றின் துணைக்கொண்டு கட்டாயப்படுத்தியாவது மக்களை மதுவின் பிடியில் இருந்து மீட்டாக வேண்டும் என்று அண்ணா கூறினார்.

உலகில் எந்த ஒரு அரசும் தன் சொந்த நாட்டு மக்களை படுகொலை  செய்வதில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களை திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் சாராயத்தை கொடுத்து கொலை செய்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மதுவிற்பனையை பெருக்குவதில் காட்டிய ஆர்வத்தை மின் திட்டங்களை செயல்படுத்துவதில் திராவிடக் கட்சிகள் காட்டியிருந்தால் தமிழகத்தில் இப்படியொரு மோசமான மின்வெட்டு ஏற்பட்டிருக்காது.              

Sunday, June 24, 2012

தமிழகத்தில் 2016ம் ஆண்டு பா.ம.க. ஆட்சியில் அமரும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே. பேட்டையில் திருத்தணி தொகுதி பா.ம.க. இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி கூட்டம் நடைப்பெற்றது. இதில், கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 40 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இங்கு வன்னியர்கள் அதிக அளவில் வசித்தபோதும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் அமைச்சராக வந்தது இல்லை. 2016ல் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும். அப்போது மதுவிலக்கு பைலில் முதல் கையெழுத்து போடப்படும்.

பா.ம.க.வினர் இனி கிராமங்கள் தோறும் சென்று அங்கு உள்ள மக்களிடம் கலந்து பேசி அவர்களை பா.ம.க.விற்கு வாக்களிக்கும் படி செய்ய வேண்டும். கிராமங்களில் இரவு தங்கி அந்த மக்களோடு உணவு அருந்தி அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

சென்னையில் ராமதாஸ் தலைமையில் நாளை பாமக மாநில செயற்குழு கூட்டம்


சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டம் நாளை(26ம் தேதி) சென்னை வியாசர்பாடியில் நடைபெற உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டம் சென்னை பெரம்பூர் வியாசர்பாடி அம்பேத்கார் கலைக்கல்லூரி அருகில் உள்ள ஜானகி மஹால் அரங்கில் ஜூன் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்குகிறார். பாமக தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகிக்கிறார். பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் நடுவண் நலவாழ்வுத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சிறப்புரை ஆற்றுகிறார்.
முக்கியத்துவம் வாய்ந்த செயற்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சி குறித்தும், பிற முக்கிய பிரச்சனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் முருகானந்தம் கொலை வழக்கில் கடந்த சில நாட்களாக அதிவேகம் காட்டி வரும் சிபிஐ, பாமக முன்னாள் எம்.பி. தன்ராஜ் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளை கைது செய்தது. இதனால் இந்த கூட்டத்தில் (திமுக பாணியில்- கனிமொழி கைது விவகாரம்) சிபிஐக்கு கண்டனம் தெரிவிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஜூன் 26ல் பாமக மாநில செயற்குழு கூட்டம்




பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாமக மாநில தலைமை செயற்குழு கூட்டம் சென்னை பெரம்புர் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரி அருகில் உள்ள ஜானகி மகால் அரங்கில் வரும் 26.06.2012 செவ்வாக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இச்செயற்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகிக்கிறார். பாமக தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகிக்கிறார். பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் பாமக பாமக முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

பாமக வளர்சசி குறித்தும், பிற முக்கிய பிரச்சனைகள் குறித்தும் இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

பாமக ஜூலை 9-ல் போராட்டம் : ராமதாஸ் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முடிவுசெய்திருப்பதைக் கண்டித்து பாமக சார்பில் ஜூலை 9-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏழை விவசாயிகளின் உணர்வுகளை மதித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் அரக்கோணம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டைக்காக நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இல்லாவிட்டால் அரக்கோணத்தை அடுத்த சாலை என்ற இடத்தில் ஜூலை 9-ம் தேதி விவசாயி களை திரட்டி தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்துக்கு நானே தலைமை ஏற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

Friday, June 22, 2012

கச்சத்தீவை மீட்க வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து மீன் வளங்களை கொள்ளையடிப்பதாக ராஜபக்சே குற்றம்சாட்டியது கண்டிக்கத்தக்கது. சர்வதேச கடல் சட்டப்படி தமிழக மீனவர்களை கைது செய்து 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கும் நோக்குடன் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார். இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதுடன் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.  

Thursday, June 21, 2012

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 500 லிட்டர் இலவச டீசல் வழங்க வேண்டும் :ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு அடிப்படையில் தண்ணீர் திறந்து  விட கர்நாடக அரசு மறுத்து விட்டது. தென்  மேற்கு பருவ மழை பொய்த்து விட்டது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து ஜுன் மாதம் 12-ந்தேதி திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கப்படவில்லை.
காவிரியை நம்பி உள்ள 13 மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கர்நாடக அரசை வலியுறுத்தி இடர்பாடு நீர் பகிர்வு பெற தமிழக அரசும் தவறி விட்டது.

காவிரி பாசன விவசாயிகளின் நலனை  கருத்தில் கொண்டு 12 மணி நேரம் இலவச மும்முனை மின்சாரம்  வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது வரவேற்கதக்க ஒன்றுதான்.  
இருந்தாலும் காவிரி பாசன விவசாயிகளில் 3-ல் 1 பங்குக்கு குறைவான   விவசாயிகள்தான் இந்த இலவச மின்சாரத்தை பெறுவார்கள். மீதமுள்ள  விவசாயிகள் டீசல் என்ஜின் மோட்டார்களை பயன்படுத்திதான் விவசாயம்  செய்ய வேண்டிய நிலை உள்ளது.
டீசலை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு அதிகம் செலவாகும்.   எனவே அவர்கள் விவசாயம் செய்ய போவதில்லை என தெரிவித்துள்ளனர். எனவே குறுவை சாகுபடி பெற டீசல் என்ஜின் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 500 லிட்டர் டீசலை அரசு இலவசமாக வழங்க வேண்டும். இதனால் அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படாது.
கடந்த  ஆட்சியில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்ட போது   தொழிற்சாலைகளில் பயன்படுத்திய ஜெனரேட்டர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்பட்டது.

கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தொழிற்சாலைகளுக்கு மானியம் வழங்கப்பட்ட நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு டீசல் வழங்கவேண்டும். நெல்  கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருப்பது மிக,மிக குறைவு.
குவிண்டால் ஒன்றுக்கு  ரூ.1750  உயர்த்த வேண்டும். இதில் தமிழக அரசு ஊக்கத்தொகை ரூ.250-ம் வழங்க வேண்டும்.

இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளுங் கட்சி வேட்பாளர் விலை கொடுத்துதான் வெற்றி பெறுகிறார். இதனை கருத்தில் கொண்டுதான் பா.ம.க. இடைத்தேர்தல்களை புறக்கணிக்கிறது’’என்று கூறினார்.

Tuesday, June 19, 2012

எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மீது மட்டும் பொய் புகார்களை பெற்று நடவடிக்கை எடுப்பது சரியல்ல! ராமதாஸ் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நிலப்பறிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் அதிமுக அரசு பதவியேற்றதுமே நில மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது 5 வழக்குகள் தொடரப்பட்டடன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர், அவற்றில் இருந்து பிணையில் வெளிவந்திருந்த நிலையில், சேலத்தில் அவர் இல்லாத போது நடந்த ஒரு நிகழ்வுக்காக அவர் மீது காவல்துறையினர் பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற உத்தரப்படி அவரை சேலம் சிறையில் அடைப்பதற்கு பதிலாக சென்னை, வேலூர், சேலம் என பல நகரங்களுக்கு அலைக்கழித்து பின்னர் மீண்டும் வேலூருக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவர் மீது ஆட்சியாளர்கள் எந்த அளவிற்கு கோபம் கொண்டிருந்தார்கள் என்பதையே காவல்துறையினரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.
நிலப்பறிப்பு வழக்குகளில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை வீரபாண்டி ஆறுமுகம் கடைபிடித்து வந்த நிலையில் அவர் மீத புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒருவர் மீது 6 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் தான் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டே வீரபாண்டி ஆறுமுகம் மீது 6வது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக வீரபாண்டி ஆறுமுகத்தின் பிணை மனு உயர்நீதிமன்றத்தில் இன்று (19.06.2012) விசாரணைக்கு வரவிருந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்ட கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழக ஆட்சியாளர்களின் பழிவாங்கும் உணர்வை புரிந்துகொள்ளமுடியும்.
6 முறை சட்டபேரவை உறுப்பினராகவும், ஒரு முறை சட்டமேலவை உறுப்பினராகவும், 3 முறை அமைச்சராகவும் இருந்த ஒருவரால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி கைது செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. பொதுவாழ்வில் இருப்பவர்களை இதைவிட மோசமாக களங்கப்படுத்த முடியாது.
அதிகாரத்தை பயன்படுத்தியும், ஆள் பலத்தை பயன்படுத்தியும் நிலத்தை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நான் ஒருபோதும் குறைகூறவில்லை. ஆனால் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மீதும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதும் நிலப்பறிப்பு புகார் அளித்தவர்களை மிரட்டி புகார்களை திரும்பபெற செய்யும் காவல்துறையினர், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மீது மட்டும் பொய் புகார்களை பெற்று நடவடிக்கை எடுப்பது சரியல்ல. இத்தகைய போக்கு மாற்றப்பட வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Monday, June 18, 2012

ஜெ.வுக்கு தோஷம், அதனால்தான் 1006 பேருக்கு இலவசக் கல்யாணம்... சொல்கிறார் ராமதாஸ்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு தோஷக் கோளாறு ஏற்பட்டுள்ளதாம். அதைப் போக்குவதற்குத்தான் இப்போது 1006 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு முதல்வர் இன்று இலவசத் திருமணங்களை செய்துவைத்துள்ளார். மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சிக்கா கோடிக்கணக்கில் அரசுப் பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது.
முதல்வரை வரவேற்று சென்னை போயஸ் தோட்டத்தில் தொடங்கி திருவேற்காடு வரை சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை நெடுகிலும் வாழை மரங்களும்,தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. இலவச திருமணம் என்ற பெயரில் ஆடம்பர விழாக்களை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணத்தை வீணாக செலவழிப்பது சரியல்ல.
முதல்வருக்கு ஏற்பட்டுள்ள தோஷக் கோளாறை போக்குவதற்குத்தான் இந்த இலவசத் திருமணம் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகள் எவ்வளவோ உள்ளன. தமிழகத்தில் உள்ள எத்தனையோ கோவில்களில் ஒருவேளை பூஜைக்குக் கூட வழிஇல்லாத நிலையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுவது நியாயம்தானா என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இனியாவது தனி மனிதர்களின் நலனுக்காக இதுபோன்ற வீண் நிகழ்ச்சிகளை நடத்துவதை விட்டுவிட்டு உண்மையான வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Saturday, June 16, 2012

தமிழ்நாட்டை ஆண்டவர்கள் குடியுங்கள் என்கின்றனர்! நாங்கள் படியுங்கள் என்கிறோம்! ராமதாஸ் பேச்சு!

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பா.ம.க. செயல் வீரர்கள் கூட்டம் மறைமலை நகரில் உள்ள பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில துணை பொது செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: 
தமிழ்நாட்டில் உள்ள 2 பெரிய கட்சிகளும், ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை ஓட்டுப்போடவும், கொடி பிடிக்கவும் பயன்படுத்தி வருகிறார்கள். இளைஞர்களுக்கு நல்வழி காட்டக் கூடிய கட்சி பா.ம.க. மட்டும் தான்.
மற்ற கட்சிகள் குடி, புகை பிடிக்க எந்த தடையும் விதிக்கவில்லை. இரண்டு திராவிடக்கட்சிகளும் நாளுக்கு நாள் அதிக குடிமகன்களை உருவாக்கி 25 கோடி வருவாயை அதிக மாக்கி இளைஞர்களை குடிக்க வழிக்காட்டி வருகிறது. நாம் மட்டும்தான் இளைஞர்கள் குடிக்க வேண்டாம் என்று கூறி குழந்தைகளை படிக்க சொல்கிறது.
தமிழ்நாட்டை ஆண்டவர்கள் குடியுங்கள் என்கின்றனர். நாங்கள் படியுங்கள் என்று சொல்லி வருகிறோம். பொது இடத்தில் புகை பிடிக்கக்கூடாது என்று மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் வாதாடி சட்டத்தை கொண்டு வந்தார். இளைஞர்கள்தான் இந்த நாட்டின் சொத்துக்கள், திரைப்படம், புகை, கிரிக்கெட் போன்றவைகளால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். இதை அகற்ற வேண்டும். புதிய அரசியல், புதிய நம்பிக்கைகளை விதைத்து இளைஞர்களிடம் மாற்றம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Thursday, June 14, 2012

தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை அரசே வசூலித்து வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைக்யில்,’’தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் அதில் உள்ள வசதிகளைப் பொறுத்து தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 95 சதவீத பள்ளிகள் இதை கடைப்பிடிக்காமல் தங்களது விருப்பம்போல கட்டணத்தை வசூலிக்கின்றன.

இதேநிலை தொடர்ந்தால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்துக் குழந்தைகளுக்கு தரமான கல்வி என்பது எட்டாக்கனியாகிவிடும்.

எனவே கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து அரசே வசூலித்து பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.
இந்த திட்டத்துக்கு உடன்பட மறுக்கும் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். மேலும் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் 25 விழுக்காடு இடங்களை அப்பகுதியில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் எந்த தனியார் பள்ளியிலும் ஏழைக் குழந்தைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டதாக தெரியவில்லை.
 தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த பள்ளிகளில் எத்தனை ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்’’ என்று  வலியுறுத்தியுள்ளார்.

Sunday, June 10, 2012

இந்தி தேசிய மொழி என்பதா?: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த கல்வி ஆண்டில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திய சமச்சீர் கல்வி சர்ச்சையின் புயல் இந்த ஆண்டும் கூட ஓயாது போல் இருக்கிறது. சமச்சீர் பாடங்களில் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று இடம்பெற்றிருக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்ட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சமச்சீர் கல்வி திட்டத்தின்படி வெளியிடப்பட்டுள்ள 10-ம் வகுப்பு சமூக அறிவியல், 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களில் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகும்.
இந்த பாடத்தை படிக்கும் மாணவர்கள் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று தவறாக புரிந்துக் கொள்ளும் ஆபத்து உள்ளது. தி.மு.க. ஆட்சியில் தயாரிக்கப்பட்ட பாடநூல்களில் பார்த்து பார்த்து திருத்தம் செய்து பல்வேறு பகுதிகளை கடந்த ஆண்டு நீக்கிய அ.தி.மு.க. அரசும் இந்த மிகப்பெரிய வரலாற்று பிழையை கண்டு கெள்ளவோ, திருத்தவோ இல்லை.
இந்தி மொழியை விரட்டியடித்து விட்டதாக மார்த்தட்டிகொள்ளும் திராவிட கட்சிகளின் தமிழ் துரோகமும், இந்தி பாசமும் இதன்மூலம் அம்பலப்பட்டுவிட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, June 8, 2012

டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பூட்டு -அரக்கோணத்தில் ராமதாஸ்



பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர் பட்டதாரி இளைஞர்கள் கலந்தாய்வு கூட்டம் அரக்கோணத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

 பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,   ‘’2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை நோக்கி பா.ம.க. வன்னியர் இளம் பட்டதாரிகள் சங்கம் அமைத்து அதன் மூலம் ஒவ்வொரு கிராமமாக 50 இளம் பட்டதாரிகளை கட்சியில் சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும்போது விஞ்ஞானம் சம்பந்தமான கல்வி, வணிக மேலாண்மை கல்வி சாதா ரண ஏழை மக்களுக்கு கிடைக்கும் வகையில் கல்வியில் பெரும் புரட்சி ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஆளும் கட்சியும், ஏற்கனவே ஆண்ட கட்சியும் மக்களை ஏமாற்றுவதற்காக இலவசங் களை கொடுத்து பிச்சைக்காரர்களாக மாற்றி வருகிறார்கள். இந்த நிலைமை மாறவேண்டும்.

அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பூட்டு போட்டு மூடும் போராட்டம் நடத்த உள்ளோம். செப்டம்பர் மாதம் 17-ந் தேதி வன்னியர் களுக்கு தனிஇட ஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளோம்’’ என்று கூறினார்.

Wednesday, June 6, 2012

மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் : ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,  ’’மதுவின் தீமையில் இருந்து மக்களை விடுவிக்க தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,

வரும் ஜூலை 11-ம் தேதி மதுக்கடைகளை இழுத்துமூடி பூட்டுபோடும் போராட்டம் நடத்துவது என்று சென்னையில் நேற்று எனது தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாகக் குழு கூட்டத்தி்ல் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் உள்ள 6172 மதுக்கடைகள் முன்பும் பாமக சார்பில் பூட்டுபோடும் போராட்டம் நடைபெறும்’’ என்று  குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, June 5, 2012

ராமதாஸ் வழங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்

ராமதாஸ் வழங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்

பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம் பாண்டி பஜாரில் இன்று நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரசாரத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கடை கடையாக விநியோகம் செய்தார்.

பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம்,   ‘’பிளாஸ்டிக் கழிவுகள் மனித உயிர்களுக்கு கேடு விளை விப்பவை. பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை போடலாம் என்கிறார்கள்.
அனைத்து வகை பிளாஸ்டிக் கழிவுகளையும் சாலைபோட பயன்படுத்த முடியாது. அவ்வாறு போடப் படும் சாலைகளும் நூற்றாண்டுகளுக்கும் அழியாது. ஏதோ ஒரு வகையில் அதுவும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக்குகளை முற்றிலுமாக பயன்படுத்தகூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட அதை அமுல்படுத் தவில்லை. பொதுமக்களும் கடைகளில் பொருட்கள் வாங்க துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக்குகள் பயன்படுத்த அரசு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Monday, June 4, 2012

பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்

சுற்றுச்சூழலைக் காக்க பிளாஸ்டிக் பைகள் எனப்படும் நெகிழிப்பைகளை ஒழிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
பிளாஸ்டிக்  பை ஒன்றின் ஆயுள்காலம் 12 நிமிடங்கள்தான் என்றபோதிலும் அந்த பை அழிவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இந்த பைகளை உட்கொண்டு ஆண்டுக்கு ஒரு லட்சம் திமிங்கலங்களும், சீல் போன்ற கடல்வாழ் உயிரினங்களும், 10 லட்சம் பறவைகளும் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு சாலை அமைக்கலாம் என்ற கருத்து தவறானது. சாலை அமைப்பதற்காக மிகக்குறைந்த அளவிலேயே பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தமுடியும். இதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கும் பல தலைமுறைக்கு அழியாமல் இருந்து சுற்றுச்சூழலை கெடுக்கும்.

மனித குலத்துக்கு பெரும் கேட்டை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண முழுமையான பிளாஸ்டிக் குப்பை ஒழிப்பு முறையை தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை தடை செய்தும், கடைகளில் இலவசமாக பிளாஸ்டிக் பைகளை வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
எனவே இனியும் தாமதிக்காமல் தமிழக அரசும், மாநகராட்சிகளும், நகராட்சிகளும் இந்த சட்டவிதிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Sunday, June 3, 2012

சென்னையில் ராமதாஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில பா.ம.க. இளைஞர் அணி, மாநில துணை செயலாளர் பாபு தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் கன்னியப்பன், ஜமுனா கேசவன், பி.ஜே. பாண்டியன், பி.கே. சேகர், பகுதி செயலா ளர்கள் சகாதேவன், மாம்பலம் வினோத், அடையாறு வடிவேல், முத்து குமார், சுரேஷ்குமார், வைகை சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Saturday, June 2, 2012

திமுக,அதிமுகவின் போராட்டம் : ராமதாஸ் தாக்கு

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது டாக்டர் ராமதாஸ், ’’ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்ற 3 ஆண்டுகளில் 18 முறை பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது. ஒரு ஆண்டில் மட்டும் 6 முறை உயர்த்தி இருக்கிறார்கள். எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டுவது மக்களை திசை திருப்பும் செயல். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை லிட்டர் ரூ.34 ஆக உள்ளது. அண்டைநாடான பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 35 ரூபாய், நேபாளத்தில் லிட்டர் ரூ.39, வங்காள தேசத்தில் ரூ.29, இலங்கையில் ரூ.21 ஆக விற்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளான தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகியவை பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏமாற்று வேலை. அ.தி.மு.க. அரசும் கோடிக் கணக்கில் வரியை உயர்த்தி விட்டு போராட்டம் நடத்துகிறது. பெட்ரோலில் எத்தனால் கலந்தால் விலை குறையும். கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு 6-வது இடத்தில் இருந்தும் எத்தனால் எரிபொருள் உற்பத்தி செய்யப்படவில்லை. அனைத்தும் சாராய ஆலைகளுக்கு சென்று விடுவதுதான் இதற்கான காரணம். பெட்ரோலில் எத்தனால் கலப்பதை கட்டாயமாக்க வேண்டும். எண்ணை நிறுவனங்களில் நடக்கும் ஊழல்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் சலுகைகள் போன்றவற்றை சரி செய்தாலே விலையை குறைக்கலாம். சென்னையில் எண்ணை நிறுவன உயர் அதிகாரி ஒருவருக்கு போனசாக மட்டும் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கிறார்கள். மாநில அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டும். மத்திய அரசு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்’’என்று பேசினார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: