Sunday, July 31, 2011

மத்திய அரசு கொண்டுவர உள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவுக்கு பா.ம.க. வரவேற்பு: ராமதாஸ்

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவுக்கு பா.ம.க. வரவேற்பு தெரிவிப்பதாக, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.



இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கடந்த 5 ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வருகிறேன். அதிலும் குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பெரிய நிறுவனங்கள் மறைமுகமான நில வணிகத்தில் ஈடுபடுவதை எதிர்த்தும், இதற்காக ஏழை, எளிய உழவர்களின் வாழ்வாதாரமான நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்றும் ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.



அரசின் நிலம் எடுப்பு கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு அளித்தல் சட்டம் திருத்தப்படும் என்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.



அதற்கான வரைவு சட்டத்தையும் தயாரித்து அரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். எக்காரணத்தை முன்னிட்டும் பாசன வசதி பெறும் நிலங்களோ அல்லது பலவகையான பயிர்கள் விளையும் நிலங்களோ கையகப்படுத்தப்படாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.



தனியார் நிறுவனங்களுக்காக அரசே நிலத்தை கையகப்படுத்தி தராது என்றும், அரசின் திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்த வேண்டுமானால், அதனால் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களில் 80 சதவீதத்தினரின் ஒப்புதலை பெறவேண்டும் என்றும் வரைவு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. இதை பா.ம.க. சார்பில் நான் வரவேற்கிறேன்.



தவிர்க்க முடியாத அவசர திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது, நகர்ப்புறங்களாக இருந்தால் சந்தை மதிப்பைவிட 2 மடங்காகும், கிராமப்புறங்களாக இருந்தால் சந்தை மதிப்பைவிட 6 மடங்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று வரைவுச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல.



கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பைவிட 10 மடங்கு கூடுதல் விலை தரவேண்டும். அதுமட்டுமின்றி, நிலம் தருவோரின் குடும்பங்களுக்கு அவர்களது நிலத்தில் தொடங்கப்படும் நிறுவனத்தில் வேலை வழங்க வேண்டும். லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்க வேண்டும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விளைநிலங்களை கையகப்படுத்துவதால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம்தான் பாதிக்கப்படுகிறதே தவிர, எந்த வகையிலும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. இதை உணர்ந்து விளை நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Thursday, July 7, 2011

வேளாண் துறைக்கு தனியாக, "பட்ஜெட்' தாக்கல்:ராமதாஸ்

வேளாண் துறைக்கு தனியாக, "பட்ஜெட்' தாக்கல் செய்ய வேண்டும் என்பதை, மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தும் வகையில், 4வது வேளாண் நிழல் பட்ஜெட் அறிக்கையை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சென்னையில் நேற்று வெளியிட்டார்.

அரசு ஊழியர்களுக்கு உள்ளதைப் போல, விவசாயிகளுக்கும் ஊதியக் குழு அமைத்து, அவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்தல், பள்ளிகளில் மதிய உணவுடன் வாழைப்பழம், நெல்லிக்காய் கொடுத்தல், பால்,"பூத்'களில் கீரை விற்பனை, நிலத்தடி நீர் மேம்பாட்டிற்காக சிறப்பு ஐந்தாண்டு திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தில், விவசாய வேலைகளையும் சேர்த்தல், விவசாய கடன்களுக்காக 1,000 கோடி ரூபாய் சுழல்நிதி உள்ளிட்ட அம்சங்களுடன், 21 ஆயிரத்து 67 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், வேளாண் நிழல் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. "இதை, தமிழக அரசுக்கு விரைவில் அனுப்ப உள்ளோம்' என, ராமதாஸ் தெரிவித்தார்.

பின், ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்து வருகிறது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிப்போருக்கும், அரசுப் பள்ளிகளில் பயில்வோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். சமச்சீர் கல்வியை மனிதாபிமான அடிப்படையில் பா.ம.க., ஆதரிக்கிறது. தேர்தலில் பணம் விளையாடுவது தற்போது அதிகரித்து வருகிறது. "பூத் ஏஜென்ட்'களுக்கு கட்சிகள் பணம் தருவது இதற்கு முக்கிய காரணம். இனிவரும் தேர்தல்களில், "பூத் ஏஜென்ட்'களுக்கு பா.ம.க., பணம் தராது. மற்ற கட்சிகளும் இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: