Thursday, December 30, 2010

சென்னையைச் சுற்றி 3 புதிய மாநகராட்சிகளை உருவாக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளை சென்னையுடன் சேர்ப்பதற்குப் பதில் திருவொற்றியூர், தாம்பரம், அம்பத்தூர் ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாநகராட்சிகளை உருவாக்கி, அவற்றை சென்னையுடன் போட்டியிடச் செய்து வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை புறநகர்ப் பகுதிகளை சென்னை மாநகராட்சியில் இணைப்பதன் மூலம் 9 நகரமன்றத் தலைவர்களும் 200க்கும் மேற்பட்ட நகராட்சி கவுன்சிலர்களும், 8 பேரூராட்சித் தலைவர்களும், 200க்கும் மேற்பட்ட பேரூராட்சி கவுன்சிலர்களும் உட்பட மொத்தம் 800க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செய்து வரும் பணியினை சென்னை மாநகராட்சியின் வெறும் 93 கவுன்சிலர்களால் நிறைவேற்ற முடியுமா என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே வேலைப்பளுவால் சென்னை மாநகராட்சிப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. இந்நிலையில், மாநகராட்சியை மேலும் விரிவாக்குவதால் அதன் வேலைப்பளு அதிகரிக்கும். மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் இன்னும் காலதாமதமாகும்.

சென்னையில் மழைநீரை அகற்றுவதற்கு முறையான வடிகால்கள் இல்லை. பல்வேறு பகுதிகளில் சாக்கடை நீர் குளம் போல் தேங்கியுள்ளன. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. நகரின் பல்வேறு பகுதிகள் குப்பை மேடாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த குறைகளை எல்லாம் நீக்கி என்றைக்கு சென்னை மாநகரம் அடிப்படைத் தேவை அனைத்தையும் பூர்த்தி செய்கிறதோ அன்றைக்கு நகருக்கு அருகில் மற்றும் தொடர்ச்சியாக உள்ள உள்ளாட்சிப் பகுதிகளிலும் இத்தகைய வசதிகளை செய்து கொடுக்க அவற்றை மாநகராட்சி பகுதியோடு இணைத்தால் அதனை வரவேற்கலாம்.

ஆனால், பெருநகர தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தை சென்னை மாநகரம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அருகில் உள்ள பகுதிகளையும் அதனுடன் இணைப்பதில் என்ன பெருமை உள்ளது? மக்களின் அடிப்படை வசதிகளையும், கட்டமைப்பு வசதிகளையும் நிறைவேற்றுவதில் சென்னை மாநகராட்சி தன்னிறைவு பெற்று முதலிடத்தைப் பிடித்தால் அதில்தான் பெருமை இருக்கிறது.

எனவே, சென்னை மாநகராட்சியுடன் கூடுதல் பகுதிகளை இணைப்பதற்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.

அதற்குப் பதிலாக அம்பத்தூர் சென்னை, திருவொற்றியூர் சென்னை, தாம்பரம் சென்னை என 3 புதிய மாநகராட்சிகளை உருவாக்கி அவற்றில் பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சிப் பகுதிகளை இணைத்து சென்னையோடு போட்டி போட்டு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Wednesday, December 29, 2010

தனித்து நிற்பது பாமகவுக்கு ஒன்றும் புதிதல்ல:ராமதாஸ்

திருவள்ளூர்: தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்பது பாமகவுக்கு ஒன்றும் புதிதல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் பா.ம.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது,

தமிழக மக்கள் தொகையில் இரண்டரை கோடி பேர் வன்னியர்கள். அவர்கள் அனைவரும் ஒரு அணியாகத் திரண்டு வன்னியர் குலத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க அரும்பாடுபட வேண்டும்.

வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தற்போது தெரிவிக்க விரும்பவில்லை. கூட்டணியே இல்லாமல் தனித்து நிற்பதும் நம் கட்சிக்கு ஒன்றும் புதிதன்று.

ஏற்கனவே, கடநத 81, 91, 96 தேர்தல்களில் தனித்து நின்றோம். முதல் முறை 1 எம்.எல்.ஏவும், 2வது முறை 4 எம்எல்ஏவும் பெற்ற நாம் தற்போது 100 எம்எல்ஏக்களை பெற வேண்டும். இதற்கு இளைஞர்கள் வரும் ஜனவரி முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களி்ல் வன்னியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றபோதிலும் பாமக வலுவான நிலையில் உள்ளது. பிற மாவட்டங்களில் இருக்கும் வன்னியர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் நம் பக்கம் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.

Tuesday, December 28, 2010

ஜனவரி 2ல் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்

சென்னை: பாமக சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் வரும் ஜனவரி 2ம் தேதி நடக்கிறது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் தைலாபுரத்தில் இந்தப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும்.

2010ம் ஆண்டில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும். 2011ம் ஆண்டுக்கான கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்.

கட்சியின் இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி உள்ளிட்டோர் கூட்டத்தில் உரையாற்றுவர் என்று கூறப்பட்டுள்ளது.

Wednesday, December 15, 2010

எம்பிபிஎஸ் சேர்க்கை: பொது நுழைவுத் தேர்வு-ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை: மருத்துவப் படிப்பில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தும் உத்தரவை எதிர்த்துப் போராட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவம் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு நடத்தும், இந்திய மருத்துவ கவுன்சில் முடிவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன்மூலம் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் இனி தமிழக மாணவர்கள் சேர விரும்பினால் அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்விக்கான நுழைவுத்தேர்வு 3 ஆண்டுகளுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதன் விளைவாக பின்தங்கிய மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள்.

மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் வகையில், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற முடிவை தமிழகத்தின் மீது கட்டாயமாக திணிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த முடியாத ஆபத்து ஏற்படப் போகிறது.

சமூக நீதிக்கும், இடஒதுக்கீட்டு கொள்கைக்கும் எதிரான இந்த கொள்கைத் திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

பொது நுழைவுத் தேர்வு என்ற இந்த கொள்கை திணிப்பை தமிழக தலைவர்கள் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும், வெற்றி காண வேண்டும்.

முதல்வர் கருணாநிதி, ஆகஸ்ட் மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதி, பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் இப்போது உச்சநீதிமன்றத்தின் அனுமதியோடு இந்த ஆபத்து நுழைய போகிறது.

இந்தத் தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்து, தடையாணை பெற வேண்டும். அத்துடன் பிரதமர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய சுகாதாரத் துறையின் மூலம் தலையிடச் செய்து, அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களின் தனித்தன்மையை எடுத்துக் கூறி, பொது நுழைவுத் தேர்வு முயற்சியை கைவிடச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

முன்பு அன்புமணி இத்துறை அமைச்சராக இருந்தபோது மருத்துவ கவுன்சிலின் இந்த முடிவை தற்காலிகமாக தடுத்து வைத்திருந்தார். இப்போது அதை நிரந்தரமாக தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் நமது கிராமப்புற மாணவர்கள், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், சண்டீகர் போன்ற நகரங்களின் மாணவர்களோடு போட்டி போட முடியாமல், மருத்துவம் மற்றும் மருத்துவ முதுகலை வகுப்புகளில் சேரமுடியாத பேராபத்து ஏற்பட்டுவிடும்.

இந்த ஆபத்தை தடுக்க முதல்வர் தாமதமின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

நாடு முழுவதும் மொத்தமுள்ள 32,000 மருத்துவக் கல்லூரி இடங்களுக்கும் 13,000 உயர் நிலை மருத்துவப் படிப்புகளுக்கும் இனிமேல் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, December 11, 2010

வீரபாண்டி ஆறுமுகத்துடன் பாமக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு

சேலம்: வேளாண்மைத்துறை அமைச்சருடன் மோதல் போக்கில் இருந்து வரும் சேலம் மாவட்ட எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று அவரை சந்தித்துப் பேசினார்.

ஏன் இந்த திடீர் சந்திப்பு என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மேட்டூர் அணையிலிருந்து வெளியாகும் தண்ணீரை சேலம் மாவட்ட பாசனத்திற்கு முறையாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரவே சந்தித்ததாக விளக்கினார் ஜி.கே.மணி.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக எம்.எல்.ஏக்கள் தமிழரசு, காவேரி, கண்ணையன் ஆகியோர் தொடர்ந்து வீரபாண்டியாருடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருபவர்கள். வீரபாண்டி ஆறுமுகத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள். இவர்களது கடுமையான திமுக விரோதப் போக்கு காரணமாகவே கட்சித் தலைமையால் திமுக கூட்டணியுடன் நெருங்கிப் போகமுடியாத நிலை முன்பு இருந்தது.

இந்தநிலையில், இந்த மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வந்தார். அப்போது அதிகாரிகளுடன் மாவட்ட திட்டப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்தார் வீரபாண்டியார்.

பின்னர் அமைச்சருடன் பாமக குழுவினர் தனியாக சந்தித்து ஒரு அரை மணி நேரம் பேசினர். என்ன பேசினார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. என்ன பேசினீர்கள் என்று பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் கேட்டபோது, இது வழக்கமான சந்திப்பு தான். தேர்தல் கூட்டணி பற்றி தி.மு.க. தலைமை முடிவு எடுக்கும். தி.மு.க. தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுபவன் நான் என்றார்.

ஜி.கே.மணியோ வித்தியாசமான பதிலைக் கூறினார். அவர் கூறுகையில், மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வீணாகாமல் தடுப்பதற்காக சேலம் மாவட்ட மக்கள் பயன் அடையும் வகையில் பாசனத்திற்கு திருப்பி விட உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டோம். கூட்டணி பற்றி பேசவில்லை என்றார்.

ஆனால் சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏக்களை, வீரபாண்டி ஆறுமுகத்திடம் சமாதானமாகப் போகுமாறு கட்சி மேலிடம் வலியுறுத்தியதால்தான், மணியே அவர்களை நேரில் கூட்டிக் கொண்டு போய் வீரபாண்டியாரை சந்திக்க வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க உதவுமாறும் வீரபாண்டியாரிடம் வேண்டுதலுடன் கூடிய கோரிக்கையை பாமக வைத்துள்ளதாகவும் தெரிகிறது. வீரபாண்டி ஆறுமுகமும் பாமக மீது தனது பாசத்தையும், பரிவையும் காட்டியதாகவும், இதன் மூலம் பாமக மீண்டும் திமுக கூட்டணிக்குத் திரும்புவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Thursday, December 2, 2010

உயர் நீதிமன்றத்தில் 5 வன்னியர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்-ராமதாஸ்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 10 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும்போது குறைந்தபட்சம் 5 வன்னியர்களையாவது நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 9 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மேலும் ஒரு நீதிபதி, மிக விரைவிலேயே ஓய்வுபெற இருப்பதால் காலியிடங்கள் பத்தாக உயரும். இந்த காலி பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யும்போது இதுவரையில் போதிய அளவிற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாத வகுப்பினருக்கு அதிகளவில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான வன்னியர் வகுப்பைச் சேர்ந்த தகுதி வாய்ந்த வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இப்போது பணியில் உள்ள 51 நீதிபதிகளில் ஒரேயொருவர் மட்டும்தான் வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர்.

மாநிலத்தின் இதர முக்கியப் பிரிவினர் அதிகப் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் மக்கள் தொகையில் 5ல் ஒரு பங்குள்ள வன்னியர் வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களை, அந்தளவிற்கு இல்லாவிட்டாலும் கெளரவமான எண்ணிக்கையில் கூட நீதிபதிகளாக நியமிக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வந்திருப்பது அந்த மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போது காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பிய பின்னர் அடுத்த 3, 4 ஆண்டுகளுக்கு புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்பட இருப்பதுதான் இதற்குக் காரணம்.

எனவே இப்போது காலியாகவுள்ள 10 நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான பெயர்களை பரிந்துரை செய்யும் போது வன்னியர் வகுப்பைச் சேர்ந்த தகுதியுள்ள வழக்கறிஞர்களை தேர்வுக் குழுவினர் பரிந்துரை செய்ய வேண்டும்.

உயர் நீதிமன்றத்திலும், இதர நீதிமன்றங்களிலும் அரசு வழக்கறிஞர்களாகவும், அரசு தரப்பு வழக்குகளில் வாதாடும் குழுக்களிலும் மற்றும் அரசு பொது நிறுவனங்களிலும் பணியாற்றி அனுபவமுள்ள இந்தச் சமூக வழக்கறிஞர்கள் அதிகமாகவே உள்ளனர். அவர்களிலிருந்து குறைந்தபட்சம் 5 பேரையாவது புதிய நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

அதன்மூலம் இச்சமூகத்திற்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதியை துடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Wednesday, December 1, 2010

யாருடைய தயவும் நமக்கு தேவையில்லை : அன்புமணி பேச்சு

மேட்டூர்:""வன்னியர்கள் மட்டும் பா.ம.க.,விற்கு ஓட்டு போட்டால் யாருடைய தயவும் தேவையில்லை,'' என, மாஜி மத்திய அமைச்சர் அன்புமணி பேசினார்.



எடப்பாடி சட்டசபை தொகுதி இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி முகாம் ஜலகண்டபுரத்தில் நேற்று நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். மாஜி மத்திய சுகாதாரதுறை அமைச்சர் அன்புமணி, மாநில தலைவர் ஜி.கே.,மணி, எம்.எல்.ஏ.,க்கள் காவேரி, தமிழரசு, கன்னையன் முன்னிலை வகித்தனர்.



ஜி.கே.,மணி பேசுகையில், ""இளைஞர், இளம் பெண்களுக்கான 21வது முகாம் எடப்பாடி தொகுதியில் நடக்கிறது. இதர கட்சியினர் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என யோசித்து கொண்டிக்கும் நேரத்தில் அடுத்த தலைமுறையினர் நலனுக்காக டாக்டர் ராமதாஸ் மட்டுமே முகாம் நடத்துகிறார்,'' என்றார்.



அன்புமணி பேசியதாவது:தமிழகத்தில் வன்னியர்கள்தான் அதிக அளவில் குடிசையில் வசிக்கின்றனர். ஆடு,மாடு மேய்க்கின்றனர். வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு போராடியது பா.ம.க., மாற்று கட்சி வன்னியர்களும் தற்போது பலனை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். அவர்களால் வன்னியர்களுக்கு என தனியாக போராட முடியாது. வன்னியருக்காக போராடும் கட்சி பா.ம.க., மட்டுமே.



அண்டை மாநிலங்களில் மெஜாரிட்டி இனத்தை சேர்ந்தவர்கள்தான் முதலவராகின்றனர். தமிழகத்தில் மட்டுமே சினிமா துறையை சேர்ந்தவர்கள் முதல்ராகும் அவலம் உள்ளது. இலவசங்களாலும், மதுகடைகளாலும் மக்கள் சீரழிகின்றனர். தமிழகத்தில் மது அருந்துபவர்களின் சராசரி வயது 28 ஆக இருந்தது. தற்போது இந்த வயது 13 ஆக குறைந்து விட்டதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.தமிழகத்தில் இரண்டரை கோடி, ஆந்திராவில் 90 லட்சம், கர்நாடகாவில் 70 லட்சம், கேரளாவில் 40 லட்சம், புதுச்சேரியில் 8 லட்சம், தென்னாப்பிரிக்காவில் 5 லட்சம் என உலகம் முழுவதும் 5 கோடி வன்னியர்கள் உள்ளனர். எடப்பாடியில் 2.34 லட்சம் வாக்காளர் உள்ளனர்.



இதில், வன்னியர் மட்டும் 1.50 லட்சம் பேர். வன்னியர்கள் மட்டும் பா.ம.க.,விற்கு ஓட்டு போட்டால் யாருடைய தயவும் நமக்கு தேவையில்லை. எனவே, பா.ம.க., வினர் தி.மு.க., உள்பட மாற்று கட்சியில் உள்ள வன்னியர் அனைவரையும் நமது கட்சியில் இணைக்க வேண்டும்.பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதற்கும், இரண்டாவது கையெழுத்து ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை அனைவருக்கும் இலவசம் என்பதுதான். நாம் கூட்டணி சேர மாட்டோமா என பிற கட்சியினர் துடித்து கொண்டிருக்கின்றனர், என்றார்.



ராமதாஸ் பேசுகையில், ""குடிக்கும் மக்களை அல்ல. நல்ல குடிமகன்களை உருவாக்க வேண்டும் என்பதே பா.ம.க,வின் நோக்கம். குடிக்க கூடாது. வரதட்சணை வாங்க கூடாது என்பதே பா.ம.க., இளைஞர், இளம்பெண்கள் எடுத்து கொள்ளும் உறுதிமொழியாகும்,'' என்றார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: