Wednesday, October 27, 2010

சட்டத்தின் 'சந்து பொந்துகளில்' புகும் இடஒதுக்கீட்டின் எதிரிகள்: ராமதாஸ்

சென்னை: இடஒதுக்கீட்டின் எதிரிகள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து அதை எப்படியெல்லாம் முடக்கிப் போடலாம் என்று சிந்தித்து வருகின்றனர். இந்த ஆபத்தை தடுத்திட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்தி மாநிலத்தில் இடஒதுக்கீடு சலுகைப் பெற தகுதி படைத்த வகுப்பினர் 69 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுடன் உணர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்ற நிலைமை இருந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் இந்த இடஒதுக்கீட்டுச் சலுகையை மேலும் ஓராண்டு காலத்திற்கு மட்டும் நீட்டித்து கடந்த ஜுலை மாதத்தில் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

அத்துடன் இந்த ஓராண்டு காலத்திற்குள்ளாக மாநிலத்தில் இடஒதுக்கீடு சலுகைப் பெறும் வகுப்பினரை அளவிடக் கூடிய தெளிவான புள்ளி விவரங்களை தயாரித்து அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை மறு ஆய்வு செய்யலாம் என்றும், தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டின் அளவை மேலும் அதிகரித்து புதிதாக சட்டம் இயற்றி கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அனுமதியின்படி நமது மாநிலத்தில் இடஒதுக்கீட்டின் அளவை நமது தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்வதற்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது.

அதற்காக மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

ஆனால் இன்று வரையில் அத்தகைய ஆணை வெளியிடப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இடஒதுக்கீட்டின் எதிரிகள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து அதை எப்படியெல்லாம் முடக்கிப் போடலாம் என்று சிந்திப்பார்கள்.

இந்த ஆபத்தை தடுத்திட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதன் மூலம் மாநிலத்தில் இடஒதுக்கீடு சலுகைப் பெற தகுதி படைத்த வகுப்பினர் 69 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுடன் உணர்த்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை நமது தேவைக்கேற்ப அதிகரித்து புதிதாக சட்டம் இயற்ற வேண்டும்.

இந்தப் பணியை போர்க்கால அடிப்படையில் செய்யத் தவறினால் `முதலுக்கே ஆபத்து' என்பதைப் போல இருக்கின்ற 69 சதவீத சலுகைக்கே ஆபத்து வந்து விடும் என்று கூறியுள்ளார்

Tuesday, October 26, 2010

யாருடன் கூட்டணி வைத்தாலும் 40 தொகுதிகள் கேட்போம்-டாக்டர் ராமதாஸ்

திண்டிவனம்: நாம் யாருடன் கூட்டணி வைத்தாலும் 40 தொகுதிகள் கேட்போம். அதில் நிச்சயம் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

திண்டிவனம் அருகே உள்ள டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் பாமக பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,

நாம் யாருடன் கூட்டணி வைத்தாலும் 40 தொகுதிகள் கேட்போம். நாம் நிச்சயம் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இதற்காக நீங்கள் இப்போதிருந்தே கடுமையாக உழைக்க வேண்டும்

தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க., நம்மை அழைக்கின்றன. 50 சட்டசபை தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அந்த தொகுதிகளில் நாம் தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வகையில், கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.

கட்சி நிர்வாகிகள் கிராமம், கிராமமாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்றார் ராமதாஸ்

Monday, October 25, 2010

அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சியை அமைக்க வேண்டும்-ராமதாஸ்

மேட்டூர்: இரண்டரை கோடி வன்னியர்களைக் கொண்டுள்ளோம். இவர்களின் துணையுடன் அன்புமணி தலைமையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்று பேசியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

மேட்டூரில் நடந்த பாமக இளைஞர், இளம் பெண்களுக்கான பயிற்சி முகாமில்தான் இவ்வாறு பேசினார் ராமதாஸ்.

நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில்,

இன்றைய இளைஞர்கள் சினிமாக்காரர்களுக்கு ஓட்டு போட்டு தறி கெட்டு போகின்றனர். தந்தை, சகோதரர்களுடன் சேர்ந்து மது அருந்துகின்றனர். டிவியில் ஒளிபரப்பும் மாமியாரை பழி வாங்குவது, மருமகளை கொலை செய்வது போன்ற வன்முறை காட்சியைப் பார்த்து கெட்டு போகின்றனர்.

தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். நான் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது, என்னுடன் மூன்று வன்னியர்கள் மட்டுமே படித்தனர். என் மகன் படிக்கும் போது, அவருடன் எட்டு பேர் படித்தனர். தற்போது இடஒதுக்கீடு மற்றும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் மூலம், 250 பேர் மருத்துவப் படிப்பு, 15 ஆயிரம் பேர் இன்ஜினியரிங் படிக்கின்றனர்.

இடஒதுக்கீடுக்காக நடத்திய போராட்டங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியாது. போராட்டம், இடஒதுக்கீட்டால் கிடைக்கும் நன்மைகளையும் விளக்குவதற்காகவே இந்த முகாம் நடத்தப்படுகிறது.

கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளில் பா.ம.க., போட்டியிட்டது. அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு ஏழு தொகுதிகளிலும் மாம்பழத்தை மிதித்து, நசுக்கி, பா.ம.க.வை தோல்வியடைய வைத்து விட்டனர். தமிழகத்தில் பா.ம.க., ஆதரவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

இரண்டரை கோடி வன்னியர்கள் கொண்ட தமிழகத்தில், அன்புமணி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும். அப்போது தான் தமிழ்நாடு வறுமை நீங்கி, புதிய வரலாறு படைக்கும் என்றார் ராமதாஸ்

Sunday, October 24, 2010

எனக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற வெறி பிடித்திருக்கிறது-அன்புமணி

மேட்டூர்: எனக்கு வெறி பிடித்திருக்கிறது. அது, பா.ம.க., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறி. இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ள தமிழகத்தில் பா.ம.க., ஆட்சியை பிடித்தால் மட்டுமே என் வெறி அடங்கும் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.

மேட்டூர், மேச்சேரியில் பாமக சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்டு அன்புமணி பேசுகையில்,

கடந்த 43 ஆண்டுகளாக சினிமாக்காரர்கள் தான் தமிழகத்தை ஆளுகின்றனர். இன்றைய இளைஞர்கள் நடிகர்களின் கட் அவுட்டிற்கு பால், பீர் அபிஷேகம் செய்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். நடிகர்கள் டூப் போட்டு சண்டை போடுகின்றனர். அவர்கள் உண்மையான வீரர்களாக இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதி பார்க்கட்டும்.

கிராமங்களில் பிற கட்சிகளில் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் பிற கட்சிகளில் உள்ள வன்னியர்களை நமது கட்சியில் இணைக்க வேண்டும். கிராமங்களில் பா.ம.க.வை தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக் கூடாது.

நான் ஒன்றரை மாதத்தில் மீண்டும் கிராமங்களுக்கு வருவேன். அப்போது, கட்சிக்காக பாடுபட்ட பழைய நிர்வாகிகளுக்கு சால்வை போர்த்த வேண்டும். நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மீண்டும் பா.ம.க.வில் இணைக்க வேண்டும். அதற்கு கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும்.

மத்தியில் இருந்த 80 அமைச்சர்களில், உலக அளவில் மூன்று விருது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எனக்கு மட்டுமே கிடைத்தது.

தமிழகத்தில் 15 ஆண்டுக்கு முன் 8 கோடி லிட்டர் சாராயம் குடித்தனர். தற்போது 36 கோடி லிட்டர் சாராயம் குடிக்கின்றனர். மது குடித்தே 25 வயதிற்குள் இறந்து போகின்றனர். இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகக் கூடாது. மத்திய சுகாதார அமைச்சராக இருந்து 110 கோடி பேருக்கு திட்டங்கள் வகுத்த என்னால், தமிழகத்தில் 6.5 கோடி மக்களுக்கு எளிதாக திட்டங்கள் வகுக்க முடியும்.

எனக்கு வெறி பிடித்திருக்கிறது. அது, பா.ம.க., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறி. இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ள தமிழகத்தில் பா.ம.க., ஆட்சியை பிடித்தால் மட்டுமே என் வெறி அடங்கும். சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். பா.ம.க. தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார் அவர்.

Thursday, October 21, 2010

பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு! - ராமதாஸ்

சென்னை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம், என பாமக நிறுவனர் டாக்டரக் ராமதால் கூறினார்.

மதுராந்தகம் தொகுதியில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்டம் பா.ம.க. சார்பில் இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

இந்தியாவில் பணக்காரர்களில் முதலிடம் அம்பானி. 234 தொகுதிகளிலும் அவர் கை காட்டும் ஆள் ஜொயிக்க முடியும். அம்பானி சொல்லும் நபர் முதல்வர் ஆக முடியும்.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து பூரண மது விலக்குதான். தமிழகத்தில் மதுவை ஒழிப்பதுதான் அனைத்து சீரழிவுக்கும் வைக்கப்படும் முற்றுப்புள்ளி.

சமச்சீர் கல்வி கட்டணம் ஒரே கல்வி அனை வருக்கும்சம கல்வி. ஆகவே இளைஞர்கள், இளம் பெண்கள் பா.ம.க.வில் சேர்ந்தால் பா.ம.க. கட்சி நிச்சயம் வெற்றி பெறும்..." என்றார்.

அன்புமணி சிறந்த அமைச்சராக செயல்பட்டார்-பர்னாலா புகழாரம்

திண்டிவனம்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது புகைக்கு எதிராக செயல்பட்டார். இதன் மூலம் அவர் ஒரு சிறந்த அமைச்சர் என்பதை நிரூபித்தார் என்று தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா புகழாரம் சூட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனரான, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். அவரது மனைவி சரஸ்வரதி ராமதாஸ் குத்துவிளக்கேற்றினார். கல்லூரியை பர்னாலா திறந்து வைத்தார்.

பின்னர் பர்னாலா பேசுகையில்,கல்வி மற்றும் சமுதாய புரட்சியை ஏற்படுத்துவதற்காக வன்னியர் கல்வி அறக்கட்டளையை தொடங்கியுள்ள டாக்டர் ராமதாசை பாராட்டுகிறேன்.

கிராமப்புற இளைஞர்களுக்கு நல்ல கல்வியை அளிப்பதன் மூலம் சமுதாய மாற்றத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் கொண்டு வர முயலும்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருந்தபோது புகைக்கு எதிராக செயல்பட்டது. அவர் ஒரு மிகச் சிறந்த அமைச்சர் என்பதையே காட்டுகிறது என்றார்

Wednesday, October 13, 2010

கருணாநிதியுடன் சந்திப்பு: அரசியலில் எதுவும் நடக்கலாம்-ராமதாஸ்

சென்னை: அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும் என்று கோரி பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதியை இன்று ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.

அவருடன் யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், தேவர் பேரவைத் தலைவர் ராமகிருஷ்ணன், நாடார் பேரவை பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் மற்றும் முஸ்லீம், கிருஸ்துவர், உள்பட 27 சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அவருடன் முதல்வரை சந்தித்துப் பேசினர்.

சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக தமிழகத்தில் உள்ள 27 சமுதாய சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் முதல்வரை சந்தித்தேன். இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

எப்படி, எந்த வழிமுறைகளில், எந்த நேரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது குறித்து எங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளோம். இது தொடர்பாக பேசிய முதல்வர், இதில் தனக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை என்றும், இதை தானும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

நாங்கள் கொடுத்த மனுவை படித்து பார்த்துவிட்டு, உடனடியாக தமிழக பிற்படுத்தப்பட்ட நல ஆணையர் நீதிபதி ஜனார்த்தனனுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார் என்றார் ராமதாஸ்.

கேள்வி: இந்திய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது தான் தமிழகத்திலும் நடத்த முடியும் என்று முதல்வர் ஏற்கனவே கூறியிருந்தாரே?

ராமதாஸ்: 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தேசிய அளவில் கணக்கெடுப்பு நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்கள். தனியாக ஆணையம் இந்த கணக்கெடுப்பை நடத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதை நம்ப முடியாது. பாதியில் கூட அவர்கள் இதை கைவிட்டு விடலாம்.

மேலும் அந்த கணக்கெடுப்பு சமுக, பொருளாதார நிலைமைகளை உள்ளடக்கியதாக இருக்காது. ஆனால், அப்படிப்பட்ட கணக்கெடுப்பை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதில் ஜாதிவாரியான கணக்கெடுப்பை ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதை முதல்வரிடம் வலியுறுத்தினோம். வெறும் தலைகளை எண்ணும் கணக்கெடுப்பால் பலன் இல்லை என்று தேசிய அளவில் சமுக ஆர்வலர்களும் கூறியிருப்பதையும் முதல்வரிடம் எடுத்துக் கூறினோம். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்.

கேள்வி: இதற்கு கலெக்கெடு எதுவும் நிர்ணயித்திருக்கிறீர்களா?

ராமதாஸ்: 2011ம் ஆண்டு ஜனவரிக்குள், அதாவது நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறோம். நீதிபதி ஜனார்த்தனனுடன் கலந்து பேசி முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்.

கேள்வி: திமுக-பாமக இடையே மீண்டும் கூட்டணி உருவாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளனவே?

ராமதாஸ்: பத்திரிக்கைகளில் தான் அப்படி செய்திகள் வருகின்றன. இன்று நாங்கள் அது பற்றி எதுவும் பேசவில்லை. இந்த சந்திப்பு அதற்காகவும் அல்ல. மிகவும் பின்தங்கிய மற்றும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளை அளிப்பதற்காக நடைபெற்ற சந்திப்பு இது.

கேள்வி: கூட்டணி தொடர்பாக மீண்டும் முதல்வரை நீங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டா?

ராமதாஸ்: அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால், இன்று நடைபெற்ற சந்திப்பு அதற்காக அல்ல என்றார் ராமதாஸ்.

இதற்கு முன் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி ஆன்மிகத் தலைவர்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் ராமதாஸ்.

அவரது கோரிக்கையை ஏற்று, டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 12, 2010

கருணாநிதியை சந்திக்கிறார் ராமதாஸ்-'அப்பாயின்ட்மென்ட்' கிடைத்தது!

சென்னை: திமுக, அதிமுக இரண்டுமே எங்களுக்கு ஒன்றுதான் என்று கூறி சில நாட்களே ஆன நிலையில் தற்போது முதல்வர் கருணாநிதியை சந்திக்கப் போகிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

முதல்வரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியும். ஆனால் ஜெயலலிதாவை சந்திக்க காத்துக் கிடக்க வேண்டும் என்றும் அவர் சமீபத்தில் தனது பேட்டியில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அவர் கூறியது உண்மை என்று நிரூபிப்பதைப் போல இப்போது டாக்டர் ராமதாஸ் சந்திக்க நேரம் வேண்டும் என்று கேட்டவுடன் முதல்வர் கருணாநிதி நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம்.

திமுக கூட்டணியை விட்டு துரத்தப்பட்ட பின்னர் டாக்டர் ராமதாஸ், முதல்வரை சந்திக்கப் போவது இதுவே முதல் முறை என்பதால் இது என்ன மாதிரியான சந்திப்பு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மகன் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தர திமுக இழுத்தடித்து கழுத்தறுத்து விட்டதால் கடும் அதிருப்தி அடைந்த டாக்டர் ராமதாஸ் திமுகவையும், திமுக தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதேசமயம், திமுக தரப்புடன் மறைமுகமாக உறவு வைத்துக் கொள்ளவும் தீவிரமாக முயன்று வந்தார். அதேபோல அதிமுக பக்கமும் நூல் விட்டு வந்தார். ஆனால் இரு தரப்பிலுமிருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை. இதனால் வெறுத்துப் போன நிலையில் உள்ளார் ராமதாஸ்.

இந்தநிலையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தை சாக்காக வைத்து முதல்வரை சந்தித்துப் பேச தீவிரமாக முயன்று வந்தார். தற்போது அவரது கடும் முயற்சிக்குப் பலன் கிடைத்துள்ளது. ராமதாஸ் சந்திக்க முதல்வர் கருணாநிதி அனுமதி அளித்துள்ளாராம்.

நாளை அல்லது நாளை மறுதினம் முதல்வரை ராமதாஸ் சந்திப்பார் என்று தெரிகிறது. அப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை வைக்கவுள்ளார் என்று தெரிகிறது. அதேசமயம், கூட்டணி குறித்தும் ராமதாஸ் பேசக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Friday, October 1, 2010

காங்கிரஸ்-தேமுதிக-பாமக கூட்டணிக்குத் தயார்: ராமதாஸ்

சென்னை: காங்கிரஸ், விஜயகாந்த்தின் தேமுதிக, பாமக ஆகிய மூன்றும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்புக்கள் இருப்பதாக பேசி வருகிறார்கள். ஆனால், இதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சிதான் எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையி்ல்,

காங்கிரஸ் தலைமையில் தனி கூட்டணி அமைய வேண்டும் என்பது எனது அபிப்ராயம் மட்டுமல்ல. சில மூத்த காங்கிரஸ்காரர்களின் கருத்தும் அதுதான். காங்கிரஸ், விஜயகாந்த்தின் தேமுதிக, பாமக மூன்றும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பேசி வருகிறார்கள். ஆனால், இதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சிதான் எடுக்க வேண்டும்.

என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் பேசும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் 40 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தோள்களில் ஏறி தேர்தல் திருவிழாவை பார்க்கிறோம். பக்கத்து மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் கட்சியாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார்கள்.

திராவிட கட்சிகளுக்கு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். காங்கிரஸ் முயற்சி எடுத்தால் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது.

தனியாக நிற்கும் சூழல் வந்தால் அதற்கும் பாமக தயார். எங்கள் கட்சிக்கு செல்வாக்கான 100 தொகுதிகளை தேர்ந்தெடுத்து இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டோம் என்றார்.

குடிகார நாடாகும் தமிழ்நாடு:

முன்னதாக தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழக மக்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பெரும் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

இன்னும் 5 ஆண்டுகளில் குடிக்காத இளைஞர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி, இந்தியாவிலேயே தமிழ்நாடு குடிகார நாடாக மாறப் போகிறது.

பாமக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கிற்கே முதல் கையெழுத்து. ஒரு சொட்டு சாராயம் கூட தமிழத்த்தில் இருக்காது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. முல்லை பெரியாறு, காவேரி, பாலாறு சிக்கல்கள் அரை நூற்றாண்டுகளாக தீர்க்கப்படவில்லை. இதற்கு தமிழகத்தை ஆண்டவர்களும், ஆட்சி செய்துக் கொண்டிருப்பவர்களும் சிந்திக்காததே காரணம்.

5 ஆண்டு பதவியில் நீடித்தாலே போதும் என்ற நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பில் அரசு மெளனம் சாதித்து வருகிறது என்றார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: