Thursday, July 29, 2010

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு: போராட்டம்

காஞ்சிபுரம்: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்ற 1987ம் ஆண்டு நடந்த சாலை மறியல் போராட்டம் போல் மீண்டும் போராட்டம் நடத்த விடாதீர்கள். எங்களை சீண்டி விடாதீர்கள். உணர்ச்சி வசப்பட்டால் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸும் கடும் எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி காஞ்சிபுரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

இங்கு நடைபெறுவது முதல் கட்ட போராட்டம். தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். எங்கள் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்காவிட்டால் தமிழகம் தாங்காது. தயவு செய்து எங்களை அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தள்ளாதீர். நாங்கள் கோரிக்கைகளை வலிறுத்தி அமைதியாகப் போராட்டம் நடத்துகிறோம்.

அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து சொல்ல மாட்டோம். தம்பிகள் எழுச்சி கண்டு ஆங்காங்கே போராட்டம் நடத்தினால், நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். எங்கள் சொந்தங்களை கட்டுப்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளோம். நாங்கள் சலுகை கேட்டு போராடவில்லை.

உரிமை கேட்டு போராடுகிறோம். இது ஜாதி போராட்டம் அல்ல; நீதி கேட்டு போராட்டம். எங்கள் உரிமையைப் பெறுவதற்காக தேவைப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை செல்லவும் தயாராக உள்ளோம்.

கோரிக்கையை நிறைவேற்ற 1987ம் ஆண்டு நடந்த சாலை மறியல் போராட்டம் போல் மீண்டும் போராட்டம் நடத்த விடாதீர்கள். எங்களை சீண்டி விடாதீர்கள். உணர்ச்சி வசப்பட்டால் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்றார் அன்புமணி.

தண்டவாளத்தை பெயர்த்தெடுக்கும் போராட்டம்-காடுவெட்டி:

வன்னியர்களுக்கு ஒழுங்காக 20 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்து விடுங்கள். இல்லாவிட்டால், ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் தண்டவாளங்களைப் பெயர்த்து போராடியதைப் போல வன்னியர்களும் போராட நேரிடும் என வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு பேசினார்.

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு தரக் கோரி நேற்று வன்னியர் சங்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னை சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை முன்பு நடந்த போராட்டத்திற்கு ராமதாஸ் தலைமை தாங்கினார்.

அதேபோல அரியலூரில்நடந்த போராட்டத்திற்கு காடுவெட்டிகுரு தலைமை தாங்கினார். அவரது பேச்சில் அனல் பறந்தது. வன்முறையைத் தூண்டும் வகையிலும் அவர் பேசினார்.

காடுவெட்டி குரு பேசுகையில்,

வன்னியர் சங்கத்தை 1980ல் உருவாக்கிய ராமதாஸ், கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் செய்தார். ஆனால், 107 ஜாதியை ஒருங்கிணைத்து, 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார் முதல்வர் கருணாநிதி. அனைத்து சமுதாய மக்களையும் ஜாதி வாரியாக கணக்கெடுத்து, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஜாதி இல்லை என தமிழக முதல்வர் கருணாநிதி கூறினாலும், ஜாதி வெறியோடு தான் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ள இரண்டரை கோடி வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்தப்படுகிறது. 20 சதவீதம் பிரித்து தரவில்லை என்றால், கருணாநிதி அரசு, மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்களைப் போல, ரயில் மறியல் போராட்டம் நடத்தி, தண்டவாளத்தை பெயர்த்தெடுக்கும் போராட்டம் நடத்தப்படும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில், பெரும்பான்மை ஜாதிக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் மட்டும், கடந்த 63 ஆண்டாக தனி இட ஒதுக்கீடு இல்லை. வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை, எங்கள் போராட்டம் தொடரும் என்றார் காடுவெட்டி.

Friday, July 23, 2010

கூட்டணியை ராமதாஸ் பார்த்துக் கொள்வார்: அன்புமணி

திருப்பத்தூர்: கூட்டணி பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. அதை தலைவர் ராமதாஸ் பார்த்துக் கொள்வார். பாமக இல்லாமல் யாரும் ஆட்சிக்கு யாரும் வரமுடியாது என்று அக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. அதில்
அன்புமணி பேசுகையி்ல்,

பாட்டாளி மக்கள் கட்சி முதன்மை கட்சியாக வரவேண்டும் என பேசிக் கொண்டே இருந்தால் வராது. தொண்டர்கள் கடுமையாக உண்மையாக உழைக்க வேண்டும். கிராமந்தோறும் வீடு வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 4 சட்டமன்ற உறுப்பினர்களையாவது வெல்ல வைக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை தேர்வு செய்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒவ்வொரு தொகுதியிலும் 5 நாட்கள் தங்கி கிராமம் கிராமமாக சென்று மக்களை உற்சாகப்படுத்த உள்ளோம்.

வெறிபிடித்த அடிமட்ட தொண்டர்கள் இருப்பது நமது கட்சியில் மட்டும் தான். நமது கட்சியை அழிப்பதற்கு யாரும் பிறக்கவில்லை. பிறக்கவும் முடியாது. அப்படி நினைத்தால் அவர்கள் தான் அழிந்து போவார்கள்.

பாமக 7 இடங்களில் தோற்றதும் அழிந்து விட்டது, ஒழிந்து விட்டது என்று பலர் கூறினர். பாமகவை யாராலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது.

கட்சி நிர்வாகிகள் பழைய ஆட்களை சென்று பார்க்க வேண்டும். அவர்களது குறைகளை கேட்டு மீண்டும் அவர்களை அழைத்து வரவேண்டும். வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் நமது கட்சியில் சேர்வதற்கு தயாராக உள்ளனர். அவர்களை அணுகி நமது கட்சியில் புதியதாக சேர்க்க வேண்டும்.

இதற்கு முன்பு எப்படி இருந்ததோ தெரியாது. இனி இப்படி தான் இருக்க போகிறோம். கட்சிக்காக முழு நேரத்தை நான் செலவிட போகிறேன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் இனி அந்த இடத்திற்கு நான் வந்து நிற்பேன். நமது கட்சியில் கோஷ்டிகள் இருக்ககூடாது. நாம் அனைவரும் ராமதாஸ் கோஷ்டி தான்.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. பெரிய மாவட்டமாக உள்ள இதனை பிரித்து திருப்பத்தூரை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாவதற்கு சிலர் தடையாக உள்ளனர். சிலரின் சுயநலனுக்காகப் பிரிக்காமல் இருக்காதீர்கள். மாவட்டத்தை பிரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்தபடியாக பாலாறு பிரச்சனை. இதற்காக பலமுறை நமது கட்சி பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளது. இருப்பினும் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டி வருகிறது. எனது தலைமையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் அணையை உடைக்கும் போராட்டம் விரைவில் நடைபெறும்.

கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உயர்ந்த பொறுப்புகள் வழங்கப்படும். பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பென்னாகரம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் நாம் தோற்கடிக்கப்பட்டோம். அது ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட தேர்தல். நாம் பணம் தராமல் இரண்டாவது இடம் பெற்றோம். இனி பென்னாகரம் தேர்தல் பார்முலாவை பயன்படுத்த உள்ளோம்.

கூட்டணி பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. அதை தலைவர் ராமதாஸ் பார்த்துக் கொள்வார். பாமக இல்லாமல் யாரும் ஆட்சிக்கு யாரும் வரமுடியாது.

வாலாஜா ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று சென்றதால் ரயில்வே துறைக்கு ரூ.5 கோடி வரை லாபம் கிடைத்தது. தற்போது எந்த ரயிலும் நிற்பதில்லையாம். இதுகுறித்து 4 முறை மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

தன்னால் முடியாது என்று அமைச்சர் சொல்லட்டும். நான் நிறுத்திக் காட்டுக்கிறேன் என்றார் அன்புமணி.

Thursday, July 22, 2010

பாமக துணையின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி

திருவள்ளூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் துணை இல்லாமல் தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், அக் கட்சியின் இளைஞர் அணி தலைவருமான அன்புமணி கூறினார்.

பாமக பொதுக்குழுக் கூட்டம் திருவள்ளூரில் நடந்தது. அதில் பேசிய அன்புமணி,

கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் எந்த சூழ்நிலையிலும் நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கடும் உழைப்பே என்றென்றும் வெற்றியைத் தரும். ஆகையால் நிர்வாகிகள் கடுமையாக உழைத்தால் பதவியும், பொறுப்புகளும் அவர்களைத் தேடி வரும்.

கட்சியை வலுப்படுத்தும் வகையில் ஒன்றிய அளவில் பொதுக்குழு அமைக்கப்படும்.

ஒன்றியச் செயலாளர்களாக பொறுப்பு வகிப்பவர்களுக்கு அந்தந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைச் செயலாளர்களின் பெயர்களும் தெரிந்திருக்க வேண்டும். தேர்தல் வரும் முன் அந்தந்த பகுதி நிர்வாகிகள் நேரடியாக மக்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பதுடன் கட்சியின் கொள்கைகளையும் பரப்ப வேண்டும்.

ஒரு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றால் கட்சியே அழிந்துவிடும், காணாமல் போய்விடும் என பலர் பேசுகின்றனர். ஆனால் 1991ம் ஆண்டு திமுக ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. 1996ம் ஆண்டு அதிமுக 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

அந்தக் கட்சிகள் வளர்ச்சி அடையவில்லையா?. அதுபோல் பாமகவும் மீண்டு வரும், தேர்தலில் முழு எழுச்சி பெறும். பாமகவின் துணை இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பதை நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் உணர்ந்து ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்றார்.

Wednesday, July 21, 2010

அடுத்த முதல்வர் அன்புமணி-காடுவெட்டி குரு

சீர்காழி: திமுகவிலும், அதிமுகவிலும் ஒரு வன்னியர் கூட இருக்கக் கூடாது. அத்தனை பேரும் அங்கிருந்து விலகிட வேண்டும். அனைத்து வன்னியர்களும் பாமகவுக்கே வாக்களித்தால் அடுத்தமுதல்வர் அன்புமணி தான் என்பதில் சந்தேகம் இல்லை என வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அழைப்பு விடுத்துள்ளார்.

சீர்காழியை அடுத்த பூம்புகாரில் வன்னியர் மகளிர் மாநாடு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மனைவியார் சரஸ்வதி அம்மாள் தலைமையில் நடந்தது. ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, வன்னிய சங்க தலைவர் குரு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, பசுமை தாயகம் தலைவரும், ராமதாஸின் மருமகளுமான சவுமியா அன்புமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காடுவெட்டி குரு பேசுகையில்,

தமிழகத்திலேயே மிகப்பெரிய ஜாதி வன்னிய ஜாதி. ஆனால் இன்று ஒடுக்கபட்டு அரசியல் கட்சியிடம் கையேந்தும் நிலை உள்ளது. 2 கோடி வன்னியர்கள் ராமதாஸ் தலைமையில் அணி திரள வேண்டும்.

1952ல் இருந்து நம் வன்னிய மக்களுக்கு கல்வி, சமூகம், வேலைவாய்ப்பு என இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

அனைவரும் சாதி சங்கம் வைக்கும்போது வன்னியர் சங்கம் வைத்தால் தப்பா? எனவே எந்த வன்னியனும் தி.மு.க., அ.தி.மு.க. என எந்த கட்சியிலும் இருக்கக் கூடாது.

வன்னியர் ஓட்டுகள் பா.ம.க.வுக்கு என்று முடிவு எடுத்தால் அடுத்த முதல்வர் அன்புமணி தான் என்றார் குரு.

Thursday, July 15, 2010

28ம் தேதி வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்-ராமதாஸ்

செஞ்சி: வருகிற28ம் தேதி வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

செஞ்சியில் நடந்த கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராமதாஸ். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு வருகிற 28-ந்தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. நமக்கு போராட்டம் என்பது புதிது அல்ல. 1980-ம் ஆண்டில் இருந்து 30 ஆண்டுகள் போராட்டமே வாழ்க்கையாகி விட்டது. இன்னும் நமக்கு வேண்டியது கிடைக்கவில்லை.

69 சதவீத இடஒதுக்கீடு நீடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நல்ல தீர்ப்பு அதற்கு பா.ம.க.வும் ஒரு காரணமாகும். இது சமூக நீதிக்காக போராடும் கட்சி. ஏழை, பணக்காரன் என்றில்லாமல் அனைவரும் சம உரிமை பெற வேண்டும்.

108 ஜாதிகளுக்கு சேர்த்து வழங்கிய ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10 சதவீதம் கூட கிடைக்கவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வேண்டும். இதற்கு கோரிக்கை வைக்க யாரும் முன் வரவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் 41 சதவீதம் குடிசைகளில் வாழ்பவர்கள் வன்னியர்கள். சுதந்திரம் என்ன ஆனது.

விவசாய நிலங்களை மனைகளாக மாற்றி கூறுபோட்டு விற்கிறார்கள். விவசாயம் பாதிக்கப்படக்கூடாது. நம் மண்ணை, நிலத்தை மார்வாடிகளும், ஆந்திராகாரர்களும் வாங்குகிறார்கள். மண்ணை மட்டும் இழக்கவில்லை, விவசாயத்தையும் இழக்கிறோம். விளை நிலங்கள் கூறுபோடுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

வருகிற 28-ந்தேதி தமிழகம் முழுவதும் வன்னியர்களுக்கு வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் நீங்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

மீண்டும் ஜாதி அரசியலில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கும் பாமக, பல வருட இடைவெளிக்குப் பின்னர் வன்னியர்களுக்காக நடத்தும் முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, July 12, 2010

என்ஜினீயரிங்-அனைத்து பாடப் பிரிவுகளிலும் தமிழ்வழி:ராமதாஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் 100க்கு 70 பேர் வன்னியர்கள் உள்ளனர். ஆனால், மற்ற அரசியல் கட்சிகள் நம்மை கூறுபோட்டு பிரித்து விட்டனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வன்னியர் சமூக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா புதுவை சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

அதில் ராமதாஸ் பேசுகையில், புதுவையில் 100க்கு 70 பேர் வன்னியர்கள் உள்ளனர். ஆனால், மற்ற அரசியல் கட்சிகள் நம்மை கூறுபோட்டு பிரித்து விட்டனர்.

புதுவையில் இளைஞர்களை பாமகவில் அதிகம் சேர்க்க வேண்டும். அவர்களிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும். முதியவர்கள் பல்வேறு கட்சியிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இனிமேல் மீட்க முடியாது.

புதுவையில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இணைந்தால், ஆட்சியை நாம் தான் நடத்துவோம். புதுவையில் ஒரே ஒரு தடவை வன்னியர் ஒருவர் முதல்வராக இருந்தார். அதற்கும் நாம் தான் காரணம். ஆனால், அந்த முதல்வர் வன்னியர் சங்க கூட்டத்தில் வந்து, நான் வன்னியர் என்று கூறுவாரா?. கூறமாட்டார்.

அவர் மட்டுமல்ல, மற்ற கட்சிகளிலும் பொறுப்பு வகிப்பவர்கள் கூட வெளிப்படையாக கூறமாட்டார்கள். காரணம், அவர்கள் கட்சியிலுள்ள ஆதிக்க ஜாதி தலைவர்களை மீறி அவர்களால் பேச முடியாது என்றார்.

நிகழ்ச்சியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியும் பங்கேற்றார்.

என்ஜினீயரிங்-அனைத்து பாடப் பிரிவுகளிலும் தமிழ்வழி:

இதற்கிடையே ராமதாஸ் அறிக்கையில், இந்த ஆண்டு முதல் தமிழ் வழியில் பொறியியல் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் மட்டும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ்வழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளபடி இது தன்னிகரில்லா திட்டம்தான். ஆனால், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் மட்டும் அதுவும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் மட்டும் தமிழ்வழிக் கல்வி வகுப்புகளை தொடங்கி இருப்பது போதாது. தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பொறியியல் படிப்புகளில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் தமிழ் வழி வகுப்புகளை தொடங்க வேண்டும்.

மேலும், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளோடு நின்று விடாமல் மாநிலத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ்வழி கல்வி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக பொறியியல் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே தொடங்கப்பட்ட கல்லூரிகளை தொடர்ந்து நடத்துவதற்கும் தமிழ்வழி கல்வி வகுப்புகளை தொடங்கி நடத்த வேண்டும் என்பதை கட்டாய நிபந்தனையாக விதிக்க வேண்டும்.

அத்துடன் மாணவர்கள் பெருமளவில் தமிழ்வழிக் கல்வி வகுப்புகளில் சேர்வதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டம் பொறியியல் பட்டதாரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக மாநில மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, மாநில அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பணி நியமனத்தில் தமிழ்வழியில் படித்த பொறியியல் பட்டதாரிகளுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இன்னும் ஓரிரு நாட்களில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறோம். அவரின் ஆட்சிக் காலத்தில் தமிழை பயிற்சி மொழியாக கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டமும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டதாக குறிப்புகள் இருக்கின்றன.

எனினும் இன்றைக்கும் அதே திட்டத்தை அறிவிக்கும் நிலைமை இருக்கிறது என்றால், அதிகார வர்க்கமும், ஆங்கில மோகமும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு பெரும் தடையாக இருந்து வந்திருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த தடைகளை தகர்த்தாலொழிய நாம் எதிர்பார்க்கிற பலனை அடைய முடியாது.

தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிப்பதற்கு தனிச் சட்டம் கொண்டு வருவது இந்த தடையை தகர்க்க ஓரளவு துணை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இந்தச் சட்டத்தை தாமதமின்றி கொண்டு வர வேண்டும்.

அடுத்த சட்டப் பேரவை கூட்டத்தொடர் வரும் வரை காத்திருக்காமல் இதை ஓர் அவசரச் சட்டமாக அறிவிக்க வேண்டும். இதன்மூலம் நடப்பு கல்வி ஆண்டிலேயே பொறியியல் பட்டப்படிப்பில் மட்டுமின்றி இதர கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி வகுப்புகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு வழிவகுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Friday, July 9, 2010

பாமக மாநிலத் தலைவராக ஜி.கே. மணி மீண்டும் தேர்வு

சென்னை: பாமக மாநிலத் தலைவராக 7வது முறையாக இன்று ஜி.கே. மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

பாமக தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டம் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று நடந்தது. அதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதில் பாமக மாநிலத் தலைவராக ஜி.கே. மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், துணைப் பொதுச் செயலாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி, பொருளாளராக அக்பர் அலி செய்யது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இளைஞர் அணி தலைவர் அன்புமணி :

மாநில பாமக இளைஞர் அணித் தலைவராக டாக்டர் அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியின் செயலாளர்களாக இரா. அருள், அறிவு செல்வன், செந்தில்,சைதை சிவா, பொதுச் செயலாளராக ஞானசேகரன் ஆகியோர் தேர்வாயினர்.

கூட்டத்தில் தமிழில் படித்தவர்களுக்கு மாநில அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்த திமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

-தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை டாக்டர் ராமதாசுக்கு வழங்குவது.

-மத்திய அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

-மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.

-உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.

-மண்ணெண்ணெய் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். -பெட்ரோலியப் பொருட்கள் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரிகளைக் குறைக்க வேண்டும்.

-இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. அமைத்துள்ள 3 நபர் கொண்ட விசாரணைக் குழுவை பாமக வரவேற்கிறது. ஐ.நா. சபையின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று செயல்படும் இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி இலங்கை அரசிடம் இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

-இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் இந்தியா தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக அரசு உறுதியுடன் வற்புறுத்த வேண்டும்.

-தனியார் பள்ளிகளில் கட்டண சீரமைப்பு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் குழுவினரால் அறிவிக்கப்பட்ட கட்டண விகிதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

-காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு குறித்த சிக்கல் தீர்க்கப்படாத வரை மத்திய மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதனை உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கர்நாடக அணைகளில் இருந்து இடைக்கால தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: