Monday, April 26, 2010

அதிமுக பந்த்: பா.ம.க. பங்கேற்காது- ஜி.கே.மணி

திருநெல்வேலி: நாளை அதிமுக தலைமையிலான கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம் என்று பாமக அறிவித்துள்ளது.

திருநெல்வேலியில் நடந்த யாதவ மகாசபை மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பாமக தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறுகையில்,

நாளை (27ம் தேதி) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க கலந்து கொள்ளாது.

தமிழ்நாட்டில் சட்டமேலவை வருவதை பா.ம.க முழுமையாக ஆதரிக்கிறது. இதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. பாமக உள்ளிட்ட எல்லாரும் அதில் இடம் பெற வாய்ப்புள்ளது.

மேலவையில் சமூகநீதி, மொழி, பண்பாடு மற்றும் மாநில வளர்ச்சியை உள்ளடக்கி பேசுவோர் அதிகம் இடம் பெற வேண்டும் என்பதே பா.ம.கவின் விருப்பம்.

இது தேர்தல் நேரம் இல்லை. எனவே கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது. தமிழ்நாட்டில் 120 சட்டமன்ற தொகுதிகளில் பா.ம.க வலுவாக உள்ளது. இதில் 64 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பும் உள்ளது.

தேர்தல் நேரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தனித்து போட்டியா, கூட்டணி அமைத்து போட்டியா என்பது பற்றி முடிவு செய்யப்படும். வரும் தேர்தல்களில் பென்னாகரம் இடைதேர்தல் 'பார்முலா' அடிப்படையில் பணிகளை மேற்கொள்வோம் என்றார்.

புதிய தமிழகம் ஆதரவு:

அதே நேரத்தில் அதிமுக வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் நிருபர்களிடம் கூறுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் கட்டமாக உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்சாரத்தை பழைய ஒப்பந்தத்தை மாற்றி அமைத்து, முழுவதுமாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களை மிகவும் பாதித்துள்ளது. விலைவாசி உயர்வை மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறிவிட்டன.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாளை நடத்தும் பொதுவேலை நிறுத்தத்துக்கு புதிய தமிழகம் கட்சி தார்மீக ஆதரவை அளிக்கிறது என்றார்.

தமுமுகவும் ஆதரவு:

இந் நிலையில் இந்த பந்துக்கு தமுமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஐபிஎல் கிரிக்கெட் பிரச்சனையில், முன்னாள் அமைச்சர் சசி தரூர் ராஜினாமா என்பது பெயரளவில் தான் நடந்துள்ளது. இதன் மூலம் கிரிக்கெட்டில் பெரிய சூதாட்டம் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரபாகரன் தாயார் சிகிச்சைக்காக சென்னை வந்து திருப்பி அனுப்பியது தமிழக முதல்வருக்கு தெரியாது என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இது மனித நேயத்திற்கு விரோதமான செயல்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக 27ம் தேதி அதிமுக நடத்தும் பந்துக்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம் என்றார்.

Friday, April 23, 2010

'பிரபாகரன் உயிருடன் உள்ளார்'-சட்டசபையில் பாமக எம்எல்ஏ

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் உள்ளார். அவரது மரணத்தை இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என்று பாமக எம்எல்ஏ வேல்முருகன் சட்டப் பேரவையில் கூறினார்.

தமிழகம் வந்த பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து சட்டமன்றத்தில் பேசிய வேல்முருகன்,

"பாகிஸ்தான், சீனா மற்றும் பல நாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருகிறார்கள்.
அவர்களையெல்லாம் அனுமதிக்கும் அரசு தமிழீழ விடுதலைக்காக போராடிவரும் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் தாயாரை அனுமதிக்கவில்லை.

தமிழக மக்களை நம்பி சிகிச்சைக்காக வந்த அந்த வயதான தாயை அனுமதிக்காதது ஒரு மனிதநேயமற்ற, ஈவிரக்கமற்ற செயல், உண்மையாக இது கண்டிக்க தக்க செயல். மனிதநேயமுள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பிரபாகரனின் தாயாருக்கு மருத்துவ சேவை அளிக்க வேண்டும். அந்த செலவை தமிழக அரசே செய்ய வேண்டும் என்றார்.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்தார் வேல்முருகன்.

"பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார். இதுவரை இலங்கை அரசாங்கம் அவரது இறப்புச் சான்றிதழை இந்திய அரசுக்கு அளிக்கவில்லை. அவருடைய பிணக்கூறு ஆய்வு சான்றிதழையும் அளிக்கவில்லை. இந்திய அரசும் அவருடைய இறப்பை இன்னும் அறிவிக்கவோ உறுதி செய்யவோ இல்லை என்றார்.

Wednesday, April 21, 2010

கிராமத்தில் பிறந்தவன் 7 மாதத்திலா பிறந்தான்?: பாமக எம்எல்ஏ

சென்னை: தனியார் மருத்துவமனைகள் கோடிகளை குவிப்பதற்கு உதவும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

சட்டசபையில் மக்கள் நல்வாழ்த்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ டாக்டர் காயத்ரி தேவி கூறுகையில்,

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சைக்கு செல்பவர்களிடம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களின் பரிந்துரை கடிதம் கேட்கிறார்கள். அதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண வியாதிகளுக்கும் அசாதாரண கட்டணம்:

இந்த திட்டத்தில் சில தனியார் மருத்துவமனைகளில் சாதாரண வியாதிகளுக்கும் அசாதாரணமான கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். இதற்கு ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்து எந்தெந்த மருத்துவமனைகள், எந்தெந்த வியாதிகளுக்கு எவ்வகை கட்டணம் பெறுகின்றன என்பதை கண்காணிக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் கோடிகளை குவிப்பதற்கு உதவும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாது.

இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் பல தனியார் மருத்துவமனைகளில் முறையாக பயிற்சி பெறாத டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவியாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற குறைகளைக் களைய வேண்டும்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கான செலவு ரூ. 1.50 லட்சம் வந்தால், மீதமுள்ள ரூ. 50,000த்தை செலுத்த பலர் தயாராக உள்ளனர். ஆனால், இதுபோன்ற நிலை ஏற்படும்போது தகுதியில்லை என்று கூறி மருத்துவமனைகள் திருப்பி அனுப்பி விடுகின்றன.

பரிசோதனை செய்வதில் ஏற்படும் காலதாமதம், சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக அரசு மருத்துவமனைகளுக்கு பலர் செல்வதில்லை.

மக்கள் எப்படி வருவார்கள்?:

சென்னை அரசு பொதுமருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட எலக்ட்ரானிக் மைக்ராஸ்கோப் கருவி பழுதுதடைந்துள்ளது. இதுபோன்ற நிலை இருந்தால் அரசு மருத்துவமனைக்கு மக்கள் எப்படி வருவார்கள்?.

எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் 62,000 செவிலியர்கள் தேவை. ஆனால் 20,000 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும், செவிலியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றும் புரியாத மருத்துவ படிப்புகள்:

மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு தொடர்பில்லாத மருத்துவ உதவியாளர் பயிற்சியை (பிசிஸியன் அசிஸ்டெண்ட் கோர்ஸ்) சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடத்துகிறார்கள். அதேபோல மருத்துவ கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் 6 மாத உதவி செவிலியர் பயிற்சியின் நோக்கம் தான் என்ன? நாடித் துடிப்பை பற்றி அறிந்து கொள்ளக் கூட இந்த 6 மாதம் போதாதே? ஏன் இந்த பயிற்சி இதுபோன்ற ஒன்றும் புரியாத பாடப்பிரிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

பெங்களூரை நம்பியிருப்பது ஏன்?:

திசு சோதனை, நரம்பு நுண் சோதனை போன்ற அதிமுக்கியமான சோதனைகளுக்கு பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையை நம்பியிருப்பது ஏன்?. நிமான்சுக்கு இணையாக ஒரு ஆராய்ச்சி நிலையத்தை தமிழகத்தில் இந்திரா காந்தி பெயரில் உருவாக்க வேண்டும்.

தனியார் செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் `சூப்பர் ஸ்பெஷாலிட்டி கேசஸ்' பயிற்சி பெற அனுமதி மறுப்பது ஏன்? அதேபோல தனியார் ஆஸ்பத்திரிகளில் பயிற்சி பெற செவிலியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க மறுப்பது வேதனைக்குரியதாகும் என்றார் காயத்ரி தேவி.

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் சிகிச்சையா?:

அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் பேசுகையில், தண்ணீரில் கலப்படம், உணவில் கலப்படம், இப்போது மருந்திலும் கலப்படம் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சுகாதாரத் துறையின் நிர்வாக திறமையின்மையே இதற்கு காரணம். இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

(கலைஞர்) காப்பீட்டுத் திட்டமும் சட்டமன்ற கட்டிடம் போல அவசரக் கோலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எத்தனையோ அரசு காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கும் போது தனியார் நிறுவனத்திற்கு கொடுத்திருப்பது ஒரு சிலர் ஆதாயம் பெறுவதற்காகத் தான்.

71,942 பேருக்கு ரூ.205 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 1.44 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்காக கொடுத்த பிரீமியத் தொகை எவ்வளவு என்பதை மட்டும் ஏன் சொல்லவில்லை?.

காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 4 நபர்களுக்கு 4 வருடங்களுக்கு ஒரு முறை காப்பீடு செய்யப்படுகிறது. இதில் 4 வருடங்களில் ஒரு நபர் ரூ.1 லட்சத்துக்கு சிகிச்சை மேற்கொண்டுவிட்டால் மற்ற 3 பேருக்கு திட்ட பலன் கிடைக்காது. அந்த 3 பேர் கதி என்ன?.

இடையில் ஒரு புரோக்கர் ஏன்?:

அதேபோல ஆபரேஷனுக்கு முந்தைய பரிசோதனை, தங்கியிருக்கும் செலவு, தொடர் சிகிச்சை ஆகியவைகளை செலுத்த முடியாமல் பலர் அவதிப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் ஆபரேஷன்களுக்கும் இந்த காப்பீட்டுப் பணம் வழங்கப்படுகிறது. அரசு பணத்தை அரசு மருத்துவமனைக்கு வழங்க இடையில் ஏன் ஒரு புரோக்கர்? என்றார்.

கிராமத்தில் பிறந்தவன் 7 மாதத்திலா பிறந்தான்?:

பாமக எம்எல்ஏ டாக்டர் நெடுஞ்செழியன் பேசுகையில், கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்காக `பேச்சலர் ஆப் ரூரல் மெடிசின் சர்வீஸ்' (பி.ஆர்.எம்.எஸ்.) என்ற மூன்றரை வருட படிப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கிராமத்தில் பிறந்தவன் மட்டும் 7 மாதத்திலா பிறந்தான்?. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்

Saturday, April 17, 2010

திமுக தனித்து நின்றிருந்தால் டெபாசிட் இழந்திருக்கும்: 'காடுவெட்டி' குரு!

விழுப்புரம்: பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டிருந்தால் டெபாசிட் இழந்திருக்கும் என்று வன்னியர் சங்க மாநிலத் தலைவரும் மூத்த பாமக தலைவருமான 'காடுவெட்டி' ஜெ. குரு கூறினார்.

நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டோம். பாமக அழிந்துவிட்டது, வன்னியர்கள் பிரிந்து விட்டனர், இவர்களால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று ஸ்டாலின் பேசினார்.

இந்நிலையில் பென்னாகரம் தொகுதியில் நம்மை டெபாசிட் இழக்க வைக்க பல கோடி வரை செலவு செய்தனர். ஆனால் நமது கட்சியினர் 3 மாதங்களுக்கும் மேல் அங்கு தங்கி, கடுமையாக உழைத்து சமூக உணர்வை ஏற்படுத்தி தேர்தலில் நின்றோம். பணத்தை மூட்டை, மூட்டையாகவும், காவல்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் படை பலத்துடனும், 13 கட்சிகள் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தனர்.

பணமா? இனத்தின் பாசமா? என்று டாக்டர் ராமதாஸ் கேட்டபோது, 2 கோடி வன்னியர்களின் மானத்தை காப்பாற்றியவர்கள் பென்னாகரம் மக்கள்.

நாம் தனித்துப் போட்டியிட்டோம். அதிமுக, தேமுதிக டெபாசிட் இழந்ததுபோல், திமுகவும் தனித்து போட்டியிட்டிருந்தால் டெபாசிட் இழந்திருக்கும். நம்மை ஏளனமாக பேசிய முதல்வர், துணை முதல்வர் மற்றும் திமுகவினருக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளோம். நம்மிடம் பணம் இல்லை, அப்படி இருந்து ஓட்டுக்கு ரூ.500 கொடுத்திருந்தால் நாம்தான் வெற்றி பெற்றிருப்போம்.

தற்போது உண்மையில் வெற்றி பெற்றது பாமகதான். 2011 தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட தயாரா? நாங்கள் தயாராக உள்ளோம். அப்படி போட்டியிட்டால் நாங்கள்தான் முதல்வர். தனி இட ஒதுக்கீட்டுக்காக மீண்டும் ஒரு போராட்டம் நடத்துவோம்.

நமது பலத்தை நிரூபிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்ரா பெளர்ணமி விழாவுக்கு குடும்பத்தோடு திரண்டு வாருங்கள் என்றார் குரு.

Friday, April 16, 2010

ராமதாஸ்-அன்புமணி மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்-பாமக

சென்னை: டாக்டர் ராமதாஸ், அன்புமணி மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ. தமிழரசு சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.

சட்டசபையில் சட்டத்துறை மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்தில் பேசிய அவர் மெட்ராஸ் என்பது சென்னையாகி பல ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் இன்னும் 'மெட்ராஸ் ஐகோர்ட்' என்று பெயர் பலகை உள்ளது. இதனை மாற்ற வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக்கப்பட வேண்டும். விரைவு நீதிமன்றங்களை நியமிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் வன்னியர் ஒருவர் தான் நீதிபதியாக இருக்கிறார். 5 ஆண்டுகளில் 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளதில் எத்தனை வன்னியர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்?.

சட்டத்தின் வழியாகயின்றி அதிகாரவரம்பில் இருப்பவர்கள் தூண்டுதலால் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. கூட்டுறவு தேர்தலின் போது கொலை முயற்சி வழக்கும், மற்றொருவரிடம் வேண்டுமென்றே புகார் பெறப்பட்டு வன்கொடுமை சட்டத்திலும் என் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு தேர்தலின் போது டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்பட எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மீதெல்லாம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவைகளையெல்லாம் வாபஸ் பெற வேண்டும் என்றார்.

Tuesday, April 13, 2010

மேலவை கலைப்பும் நடிகையும்-பாமக

சென்னை: தமிழகத்தில் மேலவைக்கு ஒரு நடிகையும் நியமிக்கப்பட்டார், 'திவாலான' அந்த நடிகையை எப்படி உறுப்பினராக நியமிக்க முடியும் என்று வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் அந்த நடிகை தனது பதவியை விட்டு வெளியேறினார். அதுவும் மேலவை கலைப்புக்கு காரணமாகக் கூறப்படுகிறது என்று பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி கூறினார்.

மீண்டும் மேலவையை அமைப்பது தொடர்பாக நேற்று தமிழக சட்டசபையில் நடந்த விவாதத்தின் முழு விவரம்:
ஜி.கே.மணி (பாமக): அதிமுக ஆட்சிக் காலத்தில் மேலவையைக் கலைப்பதற்கு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, கனத்த இதயத்தோடு நாவலர் நெடுஞ்செழியன் முன்மொழிந்ததாக பலர் கூறக் கேட்டிருக்கிறேன். மேலும் மேலவைக்கு ஒரு நடிகையும் நியமிக்கப்பட்டார், 'திவாலான' அந்த நடிகையை எப்படி உறுப்பினராக நியமிக்க முடியும் என்று வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் அந்த நடிகை தனது பதவியை விட்டு வெளியேறினார். மேலவையில் கலைஞர் இருக்கக் கூடாது என்ற எண்ணத்திலும் அது கலைக்கப்பட்டதாக பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஆக, இவையெல்லாம் மேலவையைக் கலைப்பதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

மேலவையை மீண்டும் அமைக்க முன்மொழியப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை பாமக முழுமனதோடு வரவேற்கிறது.

செங்கோட்டையன் (அதிமுக): மேலவை கலைக்கப்படுவதற்கு நடிகை காரணம் என்று ஜி.கே.மணி பேசினார். நெடுஞ்செழியன் மனபாரத்தோடு இருந்தார் என்றும் அவர் கூறினார். கற்பனை கதையாக அவர் இப்படி கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஜி.கே.மணி: பத்திரிக்கை மூலமாகவும், நாவலருக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவும் கிடைத்த தகவலைக் கூறினேன். இன்னும் பல தகவல்கள் உள்ளன. அவை கலைக்கப்பட்ட போது மேலவையில் வீற்றிருந்த ம.பொ.சி. கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து சபை நீடிக்கும்படி கேட்டார்.

(இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிடவே பதிலுக்கு பாமகவினரும் பதில் தந்தனர். இதனால் இரு கட்சிகளின் எம்எல்ஏக்களும் வாக்குவாதத்தில் இறங்கினர். சபாநாயகர் தலையிட்டு அமைதிப்படுத்தினார்)

ஜி.கே.மணி: சட்டசபையில் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில்தான் பேச முடிகிறது. மேலவையில் அரசியலுக்கு அப்பாற்பட்டும் பேச முடியும்.

பென்னாகரம் பார்முலா அடிப்படையில் 70 தொகுதிகளுக்கு பாமக குறி

சென்னை: பென்னாகரத்தில் திட்டமிட்டு செயல்படுத்திய உத்திகள் வெற்றி பெற்றிருப்பதால் வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டும் வகையில் 70 சட்டசபைத் தொகுதிகளைத் தேர்வு செய்து அங்கு பென்னாகரம் பார்முலாவை அமல்படுத்தப் போகிறதாம் பாமக.

வீழ்ந்து போயிருந்த பாமகவை தூக்கி நிறுத்த பெருமளவில் உதவியிருக்கிறது பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல். அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடித்ததோடு, வன்னியர் வாக்கு வங்கியை முழுமையாக நாங்கள் இழக்கவில்லை என்பதையும் பாமக நிரூபித்துள்ளது.

தோல்வியிலும் இது வெற்றியாகவே பாமக தரப்பில் கருதப்படுகிறது. இதையடுத்து பென்னாகரம் பார்முலாவை தனது ஆதரவு பலம் அதிகம் உள்ள தொகுதிகளில் அமல்படுத்த பாமக திட்டமிட்டுள்ளதாம்.

இதற்காக தமிழகம் முழுவதும் 70 தொகுதிகளை பாமக தேர்வு செய்துள்ளது. அந்த லிஸ்ட்டை ஏ மற்றும் பி என இரு பிரிவாக பிரித்து தயாரித்துள்ளது.

பாமக வலுவாக, அதிக ஆதரவு கொண்ட வாக்கு வங்கியுடன் கூடிய தொகுதிகளை ஏ பட்டியலிலும், ஓரளவு வாக்கு வங்கியுடன் கூடிய தொகுதிகளை பி பிரிவிலும் சேர்த்துள்ளனர்.

ஏ பிரிவில் 40 தொகுதிகளும், பி பிரிவில் 30 தொகுதிகளும் உள்ளனவாம். தேர்ந்தெடுத்துள்ள 70 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்துவதோடு, வாக்கு வங்கியையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கவுள்ளதாம்.

இந்த 70 தொகுதிகளில் பாதிக்குப் பாதி நிச்சயம் நமக்கு வெற்றி தேடித் தரும் என்ற நம்பிக்கையுடன் உள்ளதாம் பாமக.

இது போக பென்னாகரம் இடைத் தேர்தலில் பாமகவின் செயல்பாட்டால் முக்கிய திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதிர்ச்சி அடைந்திருப்பதோடு சமாதானமாகப் போக தூது விட ஆரம்பித்திருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

எல்லாப் பக்கத்திலிருந்தும் எங்களுக்குத் தூது விடுகிறார்கள். ஆனால் எங்களது கவனம் முழுவதும் வருகிற பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவது மட்டுமே. ராஜ்யசபா தேர்தலைப் பற்றிக் கூட நாங்கள் கவலைப்படவில்லை.

70 தொகுதிகளைத் தேர்வு செய்துள்ளோம். அங்கு எங்களது நிலையைப் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளைத் தொடரப் போகிறோம் என்றார் அன்புமணி.

பாமகவுக்குத்தான் உண்மையான வெற்றி:

இதற்கிடையே, பென்னாகரம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அன்புமணி ராமதாஸ் அங்கு வந்துள்ளார். அவருடன் பாமக தலைவர் ஜி.கே.மணி, வேட்பாளர் தமிழக்குமரன் ஆகியோரும் வந்துள்ளனர்.

13 ஊர்களுக்கு நேரில் போய் இவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளனர். சாமிசெட்டிப்பட்டியிலிருந்து நன்றி தெரிவிக்கும் பிரசாரத்தை இவர்கள் தொடங்கினர்.

சாமிசட்டிபட்டியில் இருந்து இவர்கள் நன்றி அறிவிக்கும் பிரச்சாரத்தை துவங்கினர்.

அங்கு அன்புமணி பேசுகையில், திமுக ரூ. 100 கோடி செலவு செய்து 77,669 வாக்குகள் வாங்கியிருக்கிறது. ஆனால் நாம் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் 41,285 வாக்குகள் வாங்கியிருக்கிறோம்.

23 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக டெபாசிட்டையே இழந்துள்ளது.

இதனால் நமக்குத்தான் உண்மையான வெற்றி. இதை உலகமே சொல்கிறது. உலகின் பல நாடுகளில் இருந்தும் இதை தெரிவிக்கிறார்கள். டெல்லியிலும் பாமகவுக்குத்தான் உண்மையான வெற்றி எல்லோரும் சொல்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நன்றி. வன்னிய மக்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து சமுதாயத்தினருக்கும் பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார்.

இன்று இரவு பென்னாகரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதை முடித்துக் கொண்டு பாப்பாரப்பட்டியிலும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதிலும் அன்புமணி பேசுகிறார்.

Monday, April 12, 2010

மேலவை தீர்மானம் நிறைவேறியது: பாமக ஆதரவு:

சென்னை: சட்ட மேலவையை அமைக்கும் தீர்மானம் இன்று சட்டசபையில் 3ல் இரண்டு பங்கு எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்து திமுக, காங்கிரஸ், பாமக எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர். வாக்கெடுப்பில் தேமுதிகவின் ஒரே எம்எல்ஏவான விஜய்காந்த் கலந்து கொள்ளவில்லை.

அதே போல தீர்மானத்தை எதிராக அதிமுக வாக்களித்த நிலையில் அக் கட்சியின் பொதுச் செயலாள்ர் ஜெயலலிதா சட்டசபைக்கு வரவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏவான கோபாலனும் இன்று சட்டசபைக்கு வரவில்லை

இதனால் 155 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு எதிராக 61 வாக்குகள் விழுந்தன.

வாக்களிக்காத அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள்:

அதேபோல திமுக பொதுக்குழுவில் கலந்து கொண்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜேந்திரனும், ராதாகிருஷ்ணனும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதேபோல, உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சந்திராவும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

முன்னதாக இது தொடர்பாக தனி தீர்மானம் கொண்டு வருவதற்காக அனுமதியைக் கோரி அமைச்சர் அன்பழகன் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதையடுத்து தமிழ்நாட்டில் மீண்டும் மேலவை அமைக்கும் தீர்மானத்தை முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்தார். அதில்,

தமிழ்நாடு மாநிலத்தில் சட்டமன்ற மேலவையை தோற்றுவிக்கலாம் என்றும், அதற்குரிய சட்டத்தினை, அந்த சட்டத்தில் வகை முறைகளுக்கு, செயல் விளைவு அளிக்க தேவைப்படுகிற அரசு அமைப்பின் திருத்தத்துக்கான வகை முறைகளையும் மற்றும் நாடாளுமன்றம் தேவை என கருதலாகும் நிறைவுரு, இடைவுரு, மற்றும் விளைவுரு வகை முறைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்திய அரசமைப்பின் 169ம் உறுப்பின் (1ம்) கூறின் கீழ் நிறைவேற்றலாம் என்று இந்த பேரவை தீர்மானிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந் நிலையில் மேலவை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து மேலவை தீர்மானம் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தில் காங்கிரஸ், பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் ஆகிய 3 கட்சிகளும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசின. அதிமுக, மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 3 கட்சிகளும் எதிர்த்து பேசின.

இதையடுத்து இந்தத் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

ஓட்டெடுப்புக்காக அவையில் மணி அடித்ததும் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. அவைக்கு வந்திருந்த எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரது பெயரையும் சட்டமன்ற செயலாளர் செல்வராஜ் பெயர் சொல்லி அழைத்தார். அப்போது ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்தவர்களது ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 161 பேர் ஆதரித்து வாக்களித்தனர்.

அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் 61 பேர் எதிராக வாக்களித்தனர்.

இதையடுத்து ஓட்டெடுப்பு முடிவை சபாநாயகர் அறிவித்தார். அவர் கூறுகையில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவைக்கு வந்திருந்த உறுப்பினர்களில் 3ல் 2 பகுதியினர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே மேலவை அமைப்பதற்கான தனித் தீர்மானம் நிறைவேறியது என்று சபாநாயகர் அறிவி்த்தார்.

இதை திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். ஓட்டெடுப்பு முடிந்த பின் அவைக் கதவுகள் திறக்கப்பட்டன.

தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து சட்டமேலவை, புதிய சட்டமன்ற வளாகத்திலேயே இயங்கும் என்று முதல்வர் அறிவித்தார்.

கடந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், 1986ம் ஆண்டு மேலவை கலைக்கப்பட்டது. அதன் பின்னர் திமுக ஆட்சியில் இரு முறை மீண்டும் மேலவையை கொண்டு வர சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால் அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக தீர்மானத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியது.

இந் நிலையில் தற்போது மீண்டும் மேலவையை உருவாக்க திமுக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. கடந்த புதன்கிழமை சட்டசபையில் பேசிய திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், மீண்டும் சட்ட மேலவையை கொண்டு வர கோரிக்கை விடுத்துப் பேசினார். இதை முதல்வரும் ஏற்று, தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் முழு ஆதரவு தெரிவித்தது.

இந் நிலையில், மேலவை அமைப்பது தொடர்பான தீர்மானம் இன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

முதல்வர் கருணாநிதி மேலவையை மீண்டும் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது எழுந்த சிபிஐ தலைவர் சிவபுண்ணியம், இந்த்த் தீர்மானத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக கூறி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து சிபிஐ உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து வெளியேறினர்.

தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 161 பேர் ஆதரித்து வாக்களித்தனர்.

3ல் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்தத் தீர்மானம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சட்டசபையில் கட்சி நிலவரம்:

திமுக- 100 (சபாநாயகரையும் சேர்த்து)

காங்கிரஸ்- 36

விடுதலைச் சிறுத்தைகள்- 2

அதிமுக- 57

சிபிஎம்- 9

சிபிஐ- 6

மதிமுக- 3

பாமக- 18

தேமுதிக- 1

எந்தக் கட்சியையும் சாராதவர்- 1

Tuesday, April 6, 2010

சமாதானம் பேச கடுமையாக முயன்றது அதிமுக – ஜி.கே.மணி தகவல்

சென்னை: பென்னாகரம் தேர்தலில் சமாதானமாகப் போக அதிமுக தரப்பிலிருந்து தூது விட்டனர். ஆனால் அதை நாங்கள் ஏற்கவில்லை என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

பென்னாகரம் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் பலமுறை எங்களை தொடர்பு கொண்டனர். ஆனால் நாங்கள் தனித்தே நிற்க விரும்புவதாக உறுதியாக கூறி விட்டோம். நாங்கள் எடுத்த நிலைப்பாடு சரிதான் என்பது தேர்தல் முடிவில் தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய பிறகு பென்னாகரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் அ.தி.மு.க. எங்களுடன் பேச்சு வார்த்தைக்கு முன் வந்தது. அதற்காக அ.தி.மு.க. தரப்பில் உத்தரவாதங்களும் தரப்பட்டன.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்துள்ள கொலை வழக்கு தொடர்பான மனுவை வாபஸ்பெற முன் வந்தனர். அடுத்ததாக அன்புமணி ராமதாசுக்கு மேல்சபை எம்.பி. பதவி தரவும் உறுதி அளித்தார்கள்.அ.தி.மு.க. இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் மற்றும் செம்மலை எம்.பி. ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு கட்சியின் உத்தரவாதங்களை தெரிவித்தனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள் கூட போயஸ்கார்டனில் இருந்து எனக்கு போன் வந்தது. டாக்டர் ராமதாசை சமாதானப்படுத்தி மீண்டும் இணைந்து செயல்பட வரும்படி அழைப்பு விடுத்தார்கள். நேரில் போயஸ்கார்டன் வாருங்கள் என்றும் அழைத்தார்கள். அவர்களின் அழைப்பை ஏற்று இருந்தால் அ.தி.மு.க. வேட்பாளரை அறிவித்து இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் அழைப்பை நாங்கள் ஏற்க வில்லை.இப்போது எங்களது கவனம் எல்லாம் பாமகவை பலப்படுத்துவது மட்டுமே. சட்டசபை பொதுத் தேர்தல் குறித்து இப்போது நாங்கள் சிந்திக்கவே இல்லை என்றார் மணி.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: