Thursday, September 24, 2009

சமச்சீர் கல்வி முறையை கொண்டு வராவிட்டால் புரட்சி வெடிக்கும்- ராமதாஸ்

சென்னை: தமிழக அரசு சமச்சீர் கல்வியை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் புரட்சி வெடிக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் துணை வேந்தர் முத்துகுமரன் தலைமையிலான குழு அளித்துள்ள சமச்சீர் கல்வி பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாமகவின் தமிழக மாணவர் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை தொடங்கி வைத்து டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

தமிழக அரசு அறிவித்துள்ள சமச்சீர் கல்வி மாணவர்களுக்கும் புரியவில்லை; பொதுமக்களுக்கும் புரியவில்லை. மற்றவர்கள் யாருக்கு புரியாவிட்டாலும் முதலமைச்சர் கருணாநிதிக்கு இது புரிந்திருக்கும்.

எங்களை பொறுத்தவரை முன்னாள் துணை வேந்தர் முத்துகுமரன் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளின்படி சமச்சீர் கல்வியை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதுதான் கோரிக்கை.

ஆனால் தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள சமச்சீர் கல்வி சமூக நீதிக்கு எதிரானது. இது சமச்சீர் கல்வி அல்ல; சமரச கல்விதான். சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் பல்வேறு அறிஞர் பெருமக்களும் முத்துகுமரன் குழு அறிக்கையை முழுமையாக அமல்படுத்தி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வந்தனர்.

சமச்சீர் கல்வி என்பது பொது பள்ளி திட்டம், அருகமை பள்ளி திட்டம், தாய்மொழி கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இதுதான் உலக நடைமுறை.

ஏழை, நடுத்தர, பணக்கார வர்க்கம் என்று பிரித்தாளும் கல்வி முறை கூடாது. இதனை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. கோத்தாரி கமிஷன் உள்ளிட்ட பல்வேறு கமிஷன்களும் அறிக்கைகளை அளித்துள்ளன. அவை நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அத்தகைய சமச்சீர் கல்வி முறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை ஒரு லட்சம் பேர்தான் மெட்ரிக்குலேஷன் கல்வி முறையில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். மற்ற மாணவர்கள் தாய் மொழியில்தான் பயின்றிருக்கிறார்கள்.

இந்த அரசுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் முக்கியமா? 10 லட்சம் மாணவர்கள் முக்கியமா? என்று எண்ணி பார்க்க வேண்டும். அரசின் இத்தகைய போக்கு தொடர்ந்தால் தமிழ்நாட்டில் மிகப் பெரிய கல்வி புரட்சி வெடிக்கும். புரட்சி என்றதும் ஏதோ இந்த ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி எண்ண வேண்டாம்.

மாணவர்களையும், பெற்றோர்களையும், பொதுமக்களையும் பெருமளவில் திரட்டி தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள சமச்சீர் கல்வியின் குறைபாடுகளை புரிய வைத்து மிகப் பெரிய போராட்டங்களை நடத்துவோம்.

முத்துக்குமரன் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் சமச்சீர் கல்வி முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரை எங்களுடைய போராட்டங்கள் ஓயாது.

எங்களை பொறுத்தவரை தரமான கல்வி, கட்டாய கல்வி, சுமையற்ற கல்வி என எல்லா தரப்பு குழந்தைகளுக்கும் சமச்சீரான கல்வி வழங்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இத்தகைய சமச்சீர் கல்வியை 12 ஆம் வகுப்பு வரை தமிழக அரசு எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்க வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ் .

Tags: dr. ramadoss, uniform education system, agitations, warning, டாக்டர்

Monday, September 21, 2009

ஈழத் தமிழர் அவலம் நீடித்தால் மத்திய அரசு இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும்- ராமதாஸ்

சென்னை: ஈழத் தமிழர்கள் மீதான அவலங்கள் இலங்கையில் நீடித்தால், அங்கு முதலீடு செய்ய மாட்டோம் என மத்திய அரசு உறுதியுடன் அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக தமிழர்களின் ஓர் அங்கமான ஈழத்தமிழர்களின் அவலங்கள் அங்கே போர் முடிந்ததற்கு பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கள பேரினவாத அரசு நடத்திய இனஅழிப்பு போரில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று ஒழிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டவர்களாக முள் கம்பி வேலிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சிறுக சிறுக கொல்லப்பட்டு வருகிறார்கள். அங்கிருந்து சிறை முகாம்களுக்கு மாற்றப்பட்டவர்களும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர்.

மனித உரிமைகள் குறித்தும், இன விடுதலை குறித்தும் உரக்க பேசுகின்ற நாடுகளும், அமைப்புகளும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் மட்டும் அமைதி காக்கின்றன. அண்டை நாடான இந்தியாவும், இந்தியாவில் உள்ள தமிழர்களும் இந்த அவலங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.

சிங்கள பேரினவாத அரசின் தமிழின அழிப்பு போரை தடுத்து நிறுத்துவதற்குத்தான் முடியவில்லை. இப்போது அங்கே போர் முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போருக்கு பின்னால் தொடர்கின்ற அவலங்களையாவது தடுத்து நிறுத்துவதற்கு முன்வாருங்கள் என்று உலகெங்கும் பரவிக் கிடக்கிற தமிழர்கள் ஏங்கி நிற்கிறார்கள். எங்கேயாவது மனித குலம் துன்புற்றால் துடித்துப் போகிற கிறிஸ்தவர்கள், இப்போது இதற்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

இலங்கையில் வதை முகாம்களில் ஆடு, மாடுகளை போன்று அடைத்து அடக்கி ஒடுக்கப்பட்டு வரும், ஈழத் தமிழர்கள் உடனடியாக அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களை பின்பற்றி தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஈழத்தமிழர்களின் அவலங்களை துடைக்க குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

மனித உரிமைகளுக்கு எதிராக முகாம்களில் அடைத்து வதைக்கப்பட்டு வருகிற 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை, விடுதலை செய்து சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் இந்தியா கண்டிப்பான குரலில் எச்சரிக்க வேண்டும் என்று, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலையில் வலியுறுத்த வேண்டும்.

இந்திய அரசோ அல்லது இந்திய தொழில் நிறுவனங்களோ இலங்கையில் எத்தகைய தொழில் முதலீடுகளும் செய்யமாட்டோம் என்று அறிவிக்க செய்ய வேண்டும்.

இந்திய அரசு இப்படியெல்லாம் செயல்படுவதற்கு எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் இந்த கடமையை அவசரகதியில் செயல்பட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்

Monday, September 14, 2009

கவனிக்கிறோம், நடவடிக்கை எடுக்கிறோம்' என்று சொல்லாதீர்கள்..-ராமதாஸ்

சென்னை: இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க கூடாது என்ற உத்தரவைமத்திய அரசுவாபஸ் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க உள்ள மரபுரிமையின்படி அங்கே செல்லும்போது உயிருக்கும், உடமைக்கும்பாதுகாப்புவேண்டும் என்று வலியுறுத்தி 3 வார காலமாக வேலைநிறுத்தம் மேற்கொண்ட ராமேஸ்வரம் பகுதிமீனவர்கள் மாநில அரசு அளித்த வாக்குறுதியை நம்பி போராட்டத்தை கைவிட்டனர்.

அதைத் தொடர்ந்து மீன்பிடிக்கச் சென்ற முதல் நாளிலேயே இலங்கை கடற்படையினரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டமீனவர்கள்காயம் அடைந்துள்ளனர்; அவர்களது 3 விசைப்படகுகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன.மத்திய அரசு்- மாநில அரசும் தலையிட்டு தங்களது உயிருக்கும், உடமைக்கும்பாதுகாப்புஅளிப்பதற்கானநடவடிக்கைை மேற்கொள்ள வேண்டும் என்று கண்ணீர்மல்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது முதல் கடந்த 40 ஆண்டு காலமாக இந்தக் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறியநடவடிக்கைளால் நூற்றுக்கணக்கில் நமதுமீனவர்கள்உயிரிழந்திருக்கிறார்கள்.

இத்தகைய தாக்குதல்கள் நடைபெறும் போதெல்லாம் மத்திய அரசு க்கு மாநில அரசு கடிதம் எழுதுவதும், `கவனிக்கிறோம் -நடவடிக்கைஎடுக்கிறோம்' என்று மத்திய அரசு பதில் கடிதம் எழுதுவதும் ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இனி, கடிதம் எழுதுவது மட்டுமே போதாது. கச்சத்தீவு கடல் பகுதியில் நமது மீனவர்களுக்கு பரம்பரையாக இருந்து வந்த மீன்பிடிக்கும் உரிமை நிலைநிறுத்தப்பட்டாக வேண்டும். இதற்கு 1976ம் ஆண்டில் இந்திய அரசு பிறப்பித்திருக்கும் தடை ஆணை திரும்பப்பெறப்பட வேண்டும்.

1967ம் ஆண்டில் பதவிக்கு வந்ததும் தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளுக்காக ``கோரிக்கை நாள்'' கடைப்பிடிக்க ஆணையிட்டவர் அண்ணா. அவரது நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடும் இந்த சமயத்தில், தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் நிரந்தரப் பாதுகாப்பை தேடித்தரும்நடவடிக்கைளை மேற்கொண்டு இந்திய அரசிடம் அதற்கான உத்தரவாதத்தை பெற்று அண்ணாவின் நினைவிற்கு காணிக்கையாக்க வேண்டும்.

நமது மீனவர்களின் நலனை பாதுகாப்பதற்காக மட்டுமல்லாது, கச்சத்தீவு தொடர்ந்து இலங்கை வசம் இருந்தால், அதன்மூலம் நமது எதிரி நாடுகளிடம் இருந்து நமது பாதுகாப்பிற்கு அதிலும் குறிப்பாக தென்னிந்திய மக்களின் பாதுகாப்பிற்கு ஏற்பட உள்ள அச்சுறுத்தலையும், ஆபத்தையும் உரிய முறையில் எடுத்துக்கூறி கச்சத்தீவு ஒப்பந்தத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வாதாட வேண்டும்.

அதற்கு முதல்படியாக 1976ம் ஆண்டில் இந்திய அரசு பிறப்பித்த தடை ஆணையை விலக்கிக் கொள்ளச் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கை களை மாநில அரசும், முதல்வரும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்

Sunday, September 13, 2009

கிராமங்கள்தோறும் நர்சரிப் பள்ளிகளை அரசு தொடங்க வேண்டும் :ராமதாஸ்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க ஒருவழியாக அப்பாயின்மெண்ட் தரப்பட்டதையடுத்து அவரை சந்தித்தார் பாமக தலைவர் ஜி.கே. மணி.

மக்களவைத் தேர்தலுக்குப் பின் அதிமுக- பாமக தலைவர்களிடையே எந்த சந்திப்பும் நடக்கவில்லை.

அதே போல நாங்கள் சந்திக்கும் இடத்தில் அதிமுக தலைமை இல்லை என்று ஏற்கனவே இடதுசாரிகள் வெளிப்படையாகக் கூறியுள்ளன. அதாவது சந்திக்க முயன்றும் முடியவில்லை என்பதையே அந்தக் கட்சிகள் இவ்வாறு கூறியுள்ளன.

இந் நிலையில் பாமகவின் முக்கிய கோரிக்கைகளான சமச்சீர் கல்வி, வேளாண்மை சட்டத் திருத்தம் ரத்து ஆகியவற்றை முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து முதல்வரை பாராட்ட ஆரம்பித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவரை நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந் நிலையில் தான் இதுவரை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரையும் சந்திக்காமல் இருந்து வந்த ஜெயலலிதா, தன்னை சந்திக்க ஜி.கே.மணிக்கு அப்பாயின்மெண்ட் கொடுத்தார்.

இதையடுத்து நேற்று கொடநாடு சென்ற மணி ஜெயலலிதாவை சந்தித்து அரை மணி நேரம் பேசிவிட்டுத் திரும்பினார். இச்சந்திப்பின்போது பா.ம.க. முன்னாள் எம்.பி. கோ.தன்ராஜும் உடனிருந்தார். இது மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பு என்று அதிமுகவும், பாமகவும் கூறியுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்குப் பின் அதிமுக - பாமக தலைவர்களிடையே எந்த சந்திப்பும் நடக்காத நிலையில் 4 மாதங்களுக்குப் பின் திடீரென இந்தச் சந்திப்பு நடந்துள்ளதற்கு ஜெயலலிதா வின் பயமே காரணம் என்று கருதப்படுகிறது.
பாமக மீண்டும் திமுக பக்கமாக போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகவே இச் சந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது.

அரசு குழு அமைத்தால் பாமக பங்கேற்கும்:

இந் நிலையில் தமிழகத்தில் கிராமங்கள்தோறும் நர்சரிப் பள்ளிகளை அரசு தொடங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் கல்வியாண்டு முதல் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என்றும் 2011-12-ம் ஆண்டில் மற்ற வகுப்புகளுக்கு இது விரிவுபடுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய 3 ஆண்டு பள்ளி முன்பருவக் கல்வியை வசதி படைத்தவர்களின் குழந்தைகள் பெறுகின்றனர். எனவே மழலையர் பள்ளிகளை கிராமங்கள்தோறும் அரசாங்கமே தொடங்கி நடத்த வேண்டும்.

1999ல் தமிழ் பயிற்று மொழி குறித்த முத்துக்குமரன் குழுவின் அறிக்கையை அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும். இது குறித்து அனைத்துக் கட்சி, கல்வியாளர்கள் குழுவை அரசு அமைத்தால் பாமக அதில் பங்கேற்கும் என்றார்.

Saturday, September 12, 2009

சமச்சீர் கல்வி -பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

சேலம்: சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்த முதல்வர் கருணாநிதியை பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சேலத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,

சமச்சீர் கல்வி வர வேண்டும் என பல வருடங்களாக சொல்லி வருகிறேன். இப்போது தமிழக அரசு 1-ம்வகுப்பு, 6-ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே வகையான, தரமான கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

பொது பாடத் திட்டம், பொது பாட நூல்கள் மட்டும் போதாது. சமமான, தரமான கல்வியை செயல்படுத்த பள்ளிக்கூட வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்களது திறமை, பாடநூல்கள் தேர்வு முறை, பள்ளி நிர்வாகம், பள்ளிக் கல்வி நிர்வாகம் ஆகிய அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.

பெருமபாலான பள்ளிகளில் போதிய கட்டிடங்கள் இருப்பது இல்லை. ஆய்வங்களில் கருவிகள் இல்லை. வசதிப்படைத்தவர்களின் குழந்தைகள் கற்கும் பிரிகேஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி. படிப்பை அரசே கிராமப்புற குழந்தைகளுக்கும் கொண்டு வந்து தரமான கல்வியை தரவேண்டும் என்றார்.

சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து மற்ற கட்சியினருடன் முதல்வர் கருணாநிதி கருத்து கேட்க உள்ளதாக கூறுகிறார்களே. அப்படி நடந்தால் அதில் நீங்கள் பங்கேற்பீர்களா என்று கேட்டதற்கு,

கல்வித்துறை நிபுணர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் முதல்வர் கலைஞர் கலந்து பேசி அதை உள்வாங்கி யோசனைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த சமச்சீர் கல்வி பணக்காரர்கள்-ஏழைகளுக்கு இடையிலான பாகுபாட்டை குறைத்துவிடும்.

கல்வி கொள்ளைக்கு வழி வகுக்காது. ஆலோசனை கூட்டம் கூட்டி எனக்கும் அழைப்பு அனுப்பினால் முதல்வரை சந்தித்து பேசி எனது கருத்தை கூறுவேன். சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்ததற்காக நிச்சயம் முதல்வரை பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்று பதிலளித்தார் ராமதாஸ் .

Friday, September 11, 2009

சென்னை: புதிதாக கொண்டுவரப்பட்ட விவசாய சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார

சென்னை: புதிதாக கொண்டுவரப்பட்ட விவசாய சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு மாநில வேளாண்மை சட்டம்-2009 விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என பல்வேறு விவசாய அமைப்புகளும் பொது நல ஆர்வலர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த சட்டத்துக்கு எதிராக ராமதாஸ் சென்னையில் ஒரு கருத்தரங்கமும் நடத்தினார். பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடியால் வேளாண் தொழிலில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையாகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதில் பேசியவர்கள் கூறினர்.

மேலும் இந்தச் சட்டம் இந்தியாவின் பாரம்பரிய விவசாய முறைகளுக்கு எப்படியெல்லாம் சாவு மணி அடிக்கும் என்றும் விளக்கினர்.

முதல்வர் அறிக்கை..

இதையடுத்து இந்த சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பேரவையில் இந்தச் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போதோ, பிறகு விவாதிக்கப்பட்ட போதோ எதிர்க்கட்சிகளின் சார்பிலோ, தோழமைக் கட்சிகளின் சார்பிலோ யாரும் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், அந்த மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

எனினும், பாரம்பரிய விவசாயம் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுள்ள திமுக அரசு விவசாயப் பெருங்குடி மக்களின் எண்ணங்களுக்கும், பத்திரிகையாளர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்திடும் வகையில் `தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம்' நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

ராமதாஸ் வரவேற்பு:

இதை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். தமிழகத்தின் பாரம்பரியமான விவசாயத்திற்கு எதிரானதாகவும், நமது உழவர்களுக்குச் சொந்தமான விளை நிலங்களெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு மாற தூண்டுகோலாகவும் அமையும் என்ற காரணத்தால், இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நானும், அதில் பங்கேற்ற இதர தலைவர்களும் வலியுறுத்தினோம்.

பசுமைத் தாயகம் மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துகளும், முன் வைக்கப்பட்ட விவாதங்களும் நியாயமானவை என்பதை உணர்ந்து இப்போது, இந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க முதல்வர் முன்வந்திருக்கிறார்.

எதிர்காலத்தில், இது போன்ற முக்கிய சட்ட மசோதாக்களை கொண்டு வரும் போது, பேரவையிலும், பேரவைக்கு வெளியிலும் விரிவான விவாதங்களை நடத்துவதற்கு அரசு முன்வர வேண்டும். அப்படி விவாதங்கள் நடைபெறும் போது தெரிவிக்கப்படும் கருத்துகளையும், பரிந்துரைகளையும் உள்ளடக்கி சட்ட மசோதாக்களை கொண்டு வர வேண்டும்.

அப்படி கொண்டு வந்தால், இது போன்ற இடையூறுகளை தவிர்க்க முடியும். பாராளுமன்ற ஜனநாயகத்திலும், விவாதங்களிலும் பெரும் ஈடுபாடு வைத்துள்ள முதல்-அமைச்சர் இதனை நிச்சயம் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கையுடன் இப்போது, போதிய விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பை வரவேற்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கண்டனம் :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேளாண் மன்றச் சட்ட முன்வடிவின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டெல்லிபாபு, அவருக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு சில மணித்துளிகளைப் பயன்படுத்தி கட்சியின் சார்பில் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இந்த உண்மையைத் திரையிடுவது போன்று, முதல்வரின் அறிக்கை அமைந்துள்ளது கண்டனத்துக்கு உரியது என்று கூறியுள்ளார்

Thursday, September 10, 2009

தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடம் இருக்காது-ராமதாஸ்

சென்னை: இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடம் இல்லை என்ற நிலை உருவாகும். சென்னையில் தற்போது தமிழனுக்கு சொந்தமாக இடம் இல்லை. வெளி மாநிலக்காரர்கள் நிலத்தை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். சிற்றூர் முதல் கிராமம் வரை விவசாய நிலங்களை வாங்கிப் போட்டு அதை ஏதோ ஒரு ஆங்கில பெயரில் நகராக மாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கம், தாளாண்மை உழவர் இயக்கம், பசுமைத் தாயகம், காஸா ஆகிய அமைப்புகளின் சார்பில் `தமிழ்நாடு வேளாண்மை மன்ற சட்டமும் மரபு வேளாண்மை அறிவுரிமையும்' என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது.

உழவர் பேரியக்கத்தின் நிறுவனரான ராமதாஸ் பேசுகையில்,

தமிழ்நாடு மாநில வேளாண்மை சட்டம்-2009 தேவையில்லாதது, அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை இந்தக் கருத்தரங்கில் பேசியவர்கள் எடுத்துரைத்தனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து, இந்த சட்டத்தினால் ஏற்படும் தீமையை பற்றி அவர்களுக்கு விளக்குவதற்காக ஒரு கருத்தரங்கிற்கு விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்யலாம். வருகிற சட்டமன்ற உறுப்பினர்கள் வரட்டும்.

அடுத்ததாக, விவசாய பிரதிநிதிகள் சேர்ந்து முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து, இந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகள், தீமைகள், அந்த சட்டத்தால் வேளாண் சமுதாயம் பாதிக்கப்படுவது பற்றி விவாதிக்கலாம். அவரிடம் மனு கொடுக்கலாம்.

அதற்கும் தீர்வு ஏற்படாமல் போனால், அடுத்ததாக அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும்.

இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடம் இல்லை என்ற நிலை உருவாகும். சென்னையில் தற்போது தமிழனுக்கு சொந்தமாக இடம் இல்லை. வெளி மாநிலக்காரர்கள் நிலத்தை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். சிற்றூர் முதல் கிராமம் வரை விவசாய நிலங்களை வாங்கிப் போட்டு அதை ஏதோ ஒரு ஆங்கில பெயரில் நகராக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
எல்லாம் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விளை நிலங்கள் மாற்றப்படுகின்றன. அதற்காகவும் நாம் போராட வேண்டியுள்ளது. இன்னும் நாம் போராட வேண்டிய தளங்கள் ஏராளமாக உள்ளன என்றார்.

இயற்கை விவசாயத்தை அழித்து விட்டனர்:

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசுகையி்ல், அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை மன்ற சட்டத்தின்படி வேளாண் பட்டப்படிப்பு முடித்து ரூ. 1000 கட்டி, அந்த மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்தால்தான் விவசாயம் பற்றிய ஆலோசனைகள் வழங்க முடியும். வேறு யாரும் ஆலோசனைகள் வழஙகினால் முதல் தடவை ரூ.5,000மும், 2வது தடவை ரூ.10,000 மற்றும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்க வழி உள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

ஏற்கனவே பசுமைப்புரட்சி என்ற பெயரில் இயற்கை வேளாண்மையை அழித்து விட்டனர். வாழ்க்கை ஆதாரங்களை அழிக்க தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்கிறார்கள் என்றார்.

விவசாயிகளே இல்லாத நிலை உருவாகும்:

உழவர் பாதுகாப்பு மற்றும் உயிரித் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் தேவிந்தர் சர்மா பேசுகையில், இந்த வேளாண் சட்டம் காரணமாக 2020ம் ஆண்டு தமிழகத்தில் விவசாயிகளே இல்லை என்ற நிலை உருவாகும்.

விவசாயிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடியால் வேளாண் தொழிலில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.

எம்எல்ஏக்களுக்கு எதுவுமே தெரியவில்லை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரன் பேசுகையில்,

தமிழக சட்டப்பேரவையில் கடைசியாக நடந்த கூட்டத் தொடரில் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் எவ்வித விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டன. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது.

குறிப்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை மன்றச் சட்டம் குறித்து விவாதம் நடைபெறாததால், அச்சட்டத்தில் உள்ள அம்சங்கள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. பேரவை உறுப்பினர்களுக்கு எதுவுமே தெரியாத நிலையில் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது பெரும் மோசடியாகும் என்றார்.

சாவு மணி சட்டம்:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், இந்தச் சட்டம் இந்தியாவின் பாரம்பரிய விவசாய முறைகளுக்கு சாவு மணி அடிக்கும் சட்டமாகும். இந்திய விவசாய முறை என்பது 5,000 ஆண்டு கால பாரம்பரிய அறிவின் தொகுப்பாகும். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகளை உருவாக்கிய பெருமைக்குரியவர்கள் நம் விவசாயிகள்.

அத்தகைய பாரம்பரிய அறிவை நாம் ஒரே நாளில் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிவிட முடியாது. பாரம்பரிய விவசாய அறிவின் அடிப்படையில்தான் விவசாயத் துறையை நவீனப்படுத்த வேண்டும். மாறாக பன்னாட்டு பணக்கார நிறுவனங்களின் நலன்களுக்காக, ஒட்டுமொத்த இந்திய விவசாயத்தையும் காவு கொடுப்பதை அனுமதிக்க முடியாது என்றார்.

சட்டம் நிறுத்தி வைப்பு-கருணாநிதி:

இந் நிலையில் விவசா‌யிக‌ளி‌ன் கரு‌த்து‌க்களுக்கு ம‌தி‌ப்பளித்து த‌மி‌ழ்நாடு வேளா‌ண்மை ம‌ன்ற‌ச் ச‌ட்ட‌ம்-2009யை ‌நிறு‌த்‌தி வை‌ப்பதாக முதல்வர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Saturday, September 5, 2009

நெல்லை பாமக பிரமுகரை துப்பாக்கியால் சுட்டவர் கோவையில் கைது

நெல்லை: நெல்லை பாமக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி நேற்று கோயம்புத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை செட்டிகுளத்தை சேர்ந்தவர் நிக்சன். இவர் பாமக மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். கடந்த மாதம் 3ம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பல் இவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிவிட்டது.

இதையடுத்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கினர். இதை தொடர்ந்து எம்கேபி நகர் அசரியா, ஸ்டீபன், தென்கலம் இஸ்ரவேல், ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான பாளையங்கோட்டை செட்டிகுளத்தை சேர்ந்த ரவுடி பாட்ஷா என்ற ஆரோக்கியராஜ் மும்பை தப்பியோடிவிட்டார்.

மற்றொரு குற்றவாளி ராமசந்திரன் எங்கு போனார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையி்ல் கோயம்புத்தூரில் கொள்ளையில் ஈடுபட்ட ராமசந்திரனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஓப்படைத்தனர்.

இதையடுத்து கோயம்புத்தூர் போலீசார் இது குறித்து நெல்லை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவரை அழைத்து வர நெல்லை போலீசார் கோயம்புத்தூர் விரைந்துள்ளனர்

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: