Saturday, August 29, 2009

ராஜப‌‌க்சே, பொ‌‌ன்சேகா ‌மீது போ‌ர்‌க்கு‌ற்ற வழ‌க்கு: ராமதாஸ் வ‌லியு‌றுத்த‌ல்

தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பதறவைக்கும் காட்சிகள் வெளியிட‌ப்ப‌ட்டிரு‌ப்பத‌ன் மூல‌ம் அதிபர் ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே, தளபதி பொன்சேகா ஆகியோர் மீது போர்க்குற்ற வழக்குகள் தொடர ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள் வை‌க்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.


FILEவிழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம், திண்டிவனம் தைலாபுரத்தில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், சமச்சீர் கல்வி அமலாக்கம் கூறித்து முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் அறிவிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீர்க்குமிழி போல் விரைவிலேயே கலைந்து விட்டது.

சமச்சீர் கல்வி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு கொள்கை முடிவு. அதன்படி கல்விமுறையில் மிகப்பெரிய மாற்றங்களை செயல்படுத்த முயலும்போது அதன் தாக்கம் எந்தவொரு பிரிவினருக்கும், பகுதியினருக்கும் பாதகம் ஏற்படுத்தி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் முக்கியமான கடமையாகும்.

ஒரே பாட திட்டம், ஒரே விதமான பாட புத்தகங்கள் என்பனவற்றால் அனைவருக்கும் சமச்சீரான கல்வியை வழங்க முடியாது. அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான, சீரான, ஒரே விதமான கல்வியை வழங்குவதுதான் சமச்சீர் கல்வி. அதற்கு இது வழிவகுக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக பயிற்று மொழியாக தமிழும், தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடரும் என்று அறிவித்திருப்பது சமச்சீர் கல்வி என்ற நடைமுறைக்கு வேட்டு வைப்பதாகும்.

தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிறமொழிகளும் பயிற்றுமொழியாக தொடரும் என்ற அறிவிப்பினால் இப்போது நடைமுறையில் இருந்துவரும் கல்வியில் ஏற்றத்தாழ்வு என்கிற சாபக்கேடு தொடர்ந்து நீடிக்கும்.

சமச்சீர் கல்வி தொடர்பாக முத்துக்குமார் குழு பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இப்போது அறிவித்திருப்பது சமச்சீர் கல்வி திட்டம் அல்ல; இது சமரச கல்வி திட்டம்.

வருகிற 29‌ஆ‌ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலித்து முடிவெடுத்து அறிவிக்கப்போவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்த கால்கிணறு தாண்டும் வேலையை விட்டுவிட்டு எப்படி நுழைவுத்தேர்வை ரத்து செய்வதில் அரசு துணிச்சலோடு முடிவெடுத்ததோ அதைப்போல முத்துக்குமரன் குழுவினரின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தும் முடிவை அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டும்.

உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்த நாட்டின் குடியரசு தலைவருக்கு கிடைக்கின்ற மருத்துவ வசதிகள் மிக சாதாரண குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சி என்ற முறையில் கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் நோக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் இதுபோன்ற பெருந்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரும்போது பொதுவிவாதங்கள் நடத்தி இத்துறை சம்பந்தப்பட்ட அறிஞர்கள், மருத்துவர்கள், மக்கள் நல ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்துப்பேசி அவர்களின் கருத்தை அறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் அண்மைக் காலமாக வன்முறைகளும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான கொலைகளுக்கு ரியல் எஸ்டேட் போட்டிதான் காரணமாக உள்ளது. தமிழகத்தில் 10 ஏக்கருக்கு மேல் யார் நிலம் வாங்கினாலும், விற்றாலும் செல்லாது என்று அறிவிக்க அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். மனை வணிக பேரத்தை ஒழுங்குபடுத்த குழு அமைக்க வேண்டும்.

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற முறையில் தமிழ் இனத்தையே அழித்துக்கொண்டிருக்கும் சிங்கள போர் படையினரின் அட்டூழியங்கள் மற்றும் எல்லையற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இங்கிலாந்து சேனல்-4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆதாரப்பூர்வமான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது. தமிழ் இளைஞர்களை கைது செய்து அவர்களை நிர்வாணமாக்கி கை, கால்கள், கண்களை கட்டி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பதறவைக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அதிபர் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபாய ராஜபக்சே, தளபதி பொன்சேகா ஆகியோர் மீது கொலைக்குற்ற வழக்குகளை தொடர இதைத்தவிர வேறு ஆவணங்கள் தேவையே இல்லை. இந்த ஆதாரங்களை கொண்டு இவர்கள் மீது போர்க்குற்ற வழக்குகள் தொடர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் முதலமைச்சர் வேண்டுகோள் வைக்க வேண்டும் எ‌ன்று ராமதாஸ் கூ‌றினா‌ர்.

Wednesday, August 26, 2009

உண்மையா இது? பாவிகளா...மோசமான உலகம்

http://www.pathivu.com/news/3283/68//d,art_full.aspx

இந்தி திணிப்புக்கு முயற்சி: ராமதாஸ்-வீரமணி

சென்னை: தமிழகத்தில் மீண்டும் இந்தித் திணிப்புக்கான முயற்சி நடப்பதாக
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கூறியுள்ளனர். இதை முதல்வர் கருணாநிதி தடுத்து நிறுத்த வேண்டு்ம் என்றும் கோரியுள்ளனர்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக பதுங்கியிருக்கும் `இந்தி திணிப்பு' என்ற பூதம் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தலைகாட்ட தொடங்கிவிடுகிறது. இந்தி பேசாத மக்கள் மீது இந்தி கட்டாயமாக திணிக்கப்பட மாட்டாது என்று பண்டித நேரு அளித்த உறுதிமொழி, பின்னர் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் போன்ற பிரதமர்களால் உறுதி செய்யப்பட்டு இன்று வரையில் இந்தி திணிப்பு என்கிற ஆபத்து தடுத்து நிறுத்தப்பட்டு வந்திருக்கிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் கல்வி மாநாடு ஒன்றில் பேசியதாக வெளிவந்துள்ள செய்தி, மீண்டும் அந்த ஆபத்து தலைதூக்குகிறதோ என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

''இந்தி தேசிய மொழி; எனவே, நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் அது கற்பிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு இதுதான் சரியான நேரம்'' என்று கபில்சிபல் பேசியிருக்கிறார். இது அவரது சொந்தக் கருத்தா? அல்லது அவர் சாந்துள்ள அரசின் கருத்தா? என்பது தெரியவில்லை.

எதுவாக இருப்பினும், அவர் பேசியிருப்பதைப்போல, நாடு முழுவதும் உள்ளவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட இத்தகைய நடவடிக்கை உதவாது என்பது அவருக்கும், அரசுக்கும் உரிய முறையில் உணர்த்தப்பட வேண்டும்.

மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இந்தியை திணிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் நேருவின் உறுதிமொழியை தொடர்ந்து நிறைவேற்றி வர வேண்டும் என்று தமிழகத்திலிருந்து குரல் எழுப்பப்பட்டு வந்திருக்கிறது.

அதேநேரத்தில், நேரு அளித்த உறுதிமொழியை அரசியல் சட்டத்தில் இடம்பெற செய்வதில் தமிழகம் தவறியிருக்கிறது என்பதும் கசப்பான உண்மையாகும்.

இந்தி திணிப்பை எதிர்த்து எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் போட்டி அரசியலுக்கு பயன்பட்டிருக்கிறதே தவிர, இந்தி திணிப்பு என்ற ஆபத்தை நிரந்தரமாக தடுத்து நிறுத்த உதவவில்லை என்பது இன்றைக்கும் நிதர்சனமான உண்மையாகும். இந்தி திணிப்பு என்கிற ஆபத்தை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கு இப்போது சிறந்ததொரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா விரைவிலேயே கொண்டாடப்பட இருக்கிறது. சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ சிறப்பான காரியங்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும், தமிழ் உள்பட அனைத்து தேசிய மொழிகளும் மத்தியில் ஆட்சி மொழிகளாக்கப்படுகிறது என்கிற அறிவிப்பினை பெற்று, அதன் மூலம் தமிழர்களின் தலைக்குமேல் பல்லாண்டு காலமாக தொங்கிக்கொண்டிருக்கும் `இந்தி திணிப்பு' என்கிற கத்தியை அகற்றிவிட்டோம் என்ற நிலையை ஏற்படுத்தினால் அது அனைத்திற்கும் மேலான சிறப்பாக அமையும். அண்ணாவின் கொள்கையும் நிறைவேறும்.

அதற்கான முயற்சியை தமிழகத்தின் சார்பில் முதல்வர் உடனடியாக மேற்கொண்டு அந்த வெற்றி செய்தியிணை அண்ணா நூற்றாண்டு விழாவில் அறிவிக்கச் செய்து புகழ் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

இந்தி திணிப்பை அனுமதிக்க முடியாது-வீரமணி:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் பேசுகையில்,

மத்திய அமைச்சர் கபில் சிபில் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்தி மொழியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்திருக்கிறார். இது வருத்தமும், வேதனையும் அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

இதன் மூலம் தமிழகத்தில் மறைமுகமாக இந்தி திணிப்பு நடைபெறும். இதை அனுமதிக்க முடியாது. 1926ம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பை பெரியார், அண்ணா உள்ளிட் தலைவர்கள் நடத்தியிருக்கிறார்கள்.

1967ம் ஆண்டு அண்ணா தலைமையிலான ஆட்சி மும்மொழிக் கொள்கையை ரத்து செய்து, தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார். 1967ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு காரணமே தமிழகத்தில் நடந்த மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டம்தான்.

அந்த இந்தி திணிப்பில் காங்கிரஸ் உறுதியாக இருந்ததால் தான் 1967ல் ஆட்சியை பறிகொடுத்து இன்று வரை ஆட்சியை பிடிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம்.

இந்தியை படிக்க விரும்புவர்கள் இந்தி பிரச்சார் சபா உள்ளிட் நிறுவனங்களில் படித்துக் கொள்ளலாம். கட்டாயமாக பள்ளிகளில் புகுத்துவதை அனுமதிக்க முடியாது. தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Saturday, August 15, 2009

சிலைகள் திறப்பு: ராமதாஸ் கருத்து

திண்டிவனம், ஆக. 13: சிலைகள் திறப்பு விழா என்பது, கர்நாடக அணைகளை திறப்பதற்கான முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.


திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:


பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு. சென்னையில் சர்வக்ஞர் சிலை திறப்பு. இவ் விழாக்களை நடத்துவதோடு நின்று விடாமல், கர்நாடகத்தின் அணைகளை திறக்க இவ் விழாக்கள் பயன்பட வேண்டும்.


பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்கப்பட முடியாத பிரச்னையே இல்லை என்றும், தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையே உள்ள பிரச்னைகளை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும், பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தமிழக முதலமைச்சரின் முன்னிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியிருக்கிறார்.


32 முறை பேசி தீர்க்கமுடியாத காவிரி சிக்கலுக்கு இப்போது பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காணும் முயற்சியை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இதற்கு பாமக உறுதுணையாக இருக்கும்.


""இலவசங்கள் என்பது தாற்காலிகமாகத்தான் இருக்க முடியும், அது என்றென்றும் நீடித்தால் சமுதாயத்திற்கு தீங்குதான் ஏற்படும்'' என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய முதல்வர் கருணாநிதி, இலவசங்களை வழங்குவது திமுக அரசின் மகத்தான சாதனைகள் என்று சொல்லிக் கொண்டு அவற்றையே முன்வைத்து வாக்குக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.


ஏழைகள் ஏழைகளாக இருந்தால்தான் இலவசங்களை தொடர முடியும். அதற்காகதான் தெருவெங்கும் மதுக்கடைகளை திறந்து விட்டிருக்கிறார்.


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு செய்து தேர்தல் முடிவை அடியோடு மாற்றிவிட முடியும் என்ற புகாரை செயல்விளக்கம் மூலம் நிருபித்துக் காட்ட பாமகவுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.


சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அன்றைய தினத்தில் பாமக சார்பில் தொழில்நுட்ப நிபுணர்களும், சில நடுநிலையாளர்களும் தேர்தல் ஆணையத்தின் முன் இதனை நிருபித்துக் காட்டுவார்கள்.


ஏழை எளிய மக்கள் பட்டாவிற்கு மனு கொடுத்து காத்திருக்கும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவோ அல்லது வீடு கட்டி தருவதோ தேவையற்றது.


மேலும், பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நல வாரியம் அமைத்து தருவதை அரசு உடனே செய்ய வேண்டும் என்றார் ராமதாஸ்

விலைவாசி உயர்வு-பாமகவின் மும்முனை போராட்டம்

நெல்லை: விலைவாசி உயர்வை, வறட்சி, குடிநீர் பஞ்சம் ஆகியவற்றை கண்டித்து விரைவில் பாமக சார்பில் மும்முனை போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி கூறினார்.

நெல்லையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது,

தென் மாவட்டங்களில் வறட்சியினால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு கடும் குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அரிசி, பருப்பு உள்பட அந்தியவாசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

இப்பிரச்சனைகளை போக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாமக சார்பில் மும்முனை போராட்டம் நடத்தப்படும்.

பம்பை, வைப்பாறு இணைப்பு...

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாக கடலில் கலக்கும் பம்பா, அச்சன்கோவில் ஆறுகளை வைப்பாற்றுடன் இணைத்தால் நெல்லை, தூத்துக்குடி், ராமநாதபுரம், விருதுநகர் உள்பட 5 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி மேம்படும். இத்திட்டத்தின் மூலம் 1000 மெகாவாட் மின்உற்பத்தியும் கிடைக்கும்.

இத்திட்டத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு நீர்வள ஆணையம் ஓப்புதல் அளி்த்தது. ஆனால் கேரள அரசின் முட்டுகட்டையால் இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனை நிறைவேற்ற மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

தமிழகம், கர்நாடக மாநிலங்களில் நல்லெண்ண அடிப்படையில் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு ஒத்துழைக்க வேண்டும்.

எதிர் கட்சியினர் மீது பொய் வழக்கு பதிவு செய்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றார் ஜிகே மணி.

கருணாநிதியை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்-ராமதாஸ் ,நெடுமாறன்

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சே அரசின் அட்டூழியங்களை மறைக்க துணை போகும் வகையில் முதல்வர் கருணாநிதி செயல்படுவதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த கன்னடக் கவிஞர் சர்வஞ்னரின் சிலை திறப்பு விழாவில் பேசிய முதல்வர், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சுமூக நிலை ஏற்பட்டுவிடக் கூடாது எனச் சிலர் விரும்பியதாகவும், இப்போதும்கூட சிலர் அதைக் கிளறி விடுகிறார்கள் என்றும் கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி அமைக்கப்பட்ட வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர், மருந்து இல்லாமல் தினமும் 200 பேருக்கு மேல் இறந்து போகின்றனர்.

தமிழர்களுக்கென தனித் தாயகம் எதுவும் கிடையாது என்று கூறி தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுகின்றனர். இதைத் தான் சுமூக நிலை என்று முதல்வர் குறிப்பிடுகிறாரா?.

இலங்கை அதிபர் ராஜபக்சே அரசின் அட்டூழியங்களை மறைக்க துணை செய்யும் வகையில் கருணாநிதி செயல்படுவதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்:

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராணுவத்தின் தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் தற்போது அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க கடந்த 50 ஆண்டுகளாக போராடி வருகின்ற இயக்கம் திமுக என்று முதல்வர் கருணாநிதி அடிக்கடி கூறுவார்.

இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத்தை உருவாக்கித் தருமானால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே ஆளட்டும். 10 ஆண்டு காலத்திற்கு ஆட்சிக்கு வர திமுக முயற்சி செய்யாது என்றெல்லாம் அன்றைய காலத்தில் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஆனால், காலத்தின் மாற்றம் காரணமாக இதையெல்லாம் இன்றைக்கு அவர் மறந்துவிட்டதன் விளைவாகத்தான் இலங்கையில் சுமூக நிலை திரும்பிவிட்டது என்று துணிந்து சொல்கிறார். மற்றவர்களும் அதை நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

உலகில் உள்ள மற்ற இன மக்களை போல இலங்கைத் தமிழர்கள் தங்களது எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையை என்றைக்குப் பெறுகிறார்களோ அன்றுதான் இலங்கையில் சுமூக நிலை திரும்பிவிட்டது என்று கருத முடியும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Thursday, August 13, 2009

காவிரி-உடனே பேச்சு நடத்த ராமதாஸ் கோரிக்கை

திண்டிவனம்: திருவள்ளுவர்-சர்வஞ்னர் சிலைகள் திறப்பு மூலம் தமிழகம்- கர்நாடகம் இடையே இணக்கமான சூழல் நிலவும் இந்த சூழ்நிலையில் காவிரிப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியை முதல்வர் கருணாநிதி தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திண்டிவனத்தையடுத்த தனது தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,

பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட முடியாத பிரச்சனையே இல்லை என்றும், தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே உள்ள பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா பெங்களூர் வள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தமிழக முதலமைச்சரின் முன்னிலையில் கூறியிருக்கிறார்.

1968ம் ஆண்டு நடந்த முதல் பேச்சுவார்த்தையில் பொதுப்பணித் துறை அமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்ட கருணாநிதி இன்றைக்கும் பொதுப் பணித்துறைக்கும் பொறுப்பு வகிப்பது பொருத்தமானது தான்.

32 முறை பேசி தீர்க்க முடியாத காவிரி சிக்கலுக்கு இப்போது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணும் முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதில் தாமதம் கூடாது. இணைந்த உள்ளங்கள் பிரிவதற்கு முன்பாகவே பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

எதியூரப்பாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பது கூட வேண்டாம். குறைந்தபட்சம் 2001ம் ஆண்டு நடுவர் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின்படி இப்போது உடனடியாக தமிழகத்திற்கு தண்ணீர் பெற வேண்டும்.

இடைக்காலத் தீர்ப்பின்படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 102 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் பெற்றிருக்க வேண்டும். கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளும் இப்போது நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் குறுவை நெல்லை தவறவிட்ட தமிழகத்திற்கு இப்போது மேட்டூரில் இருக்கும் நீர் சம்பா பருவத்திற்கு பற்றாக்குறையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

எனவே, சம்பா பயிரை காக்கவாவது இடைக்காலத் தீர்ப்பின்படி தண்ணீரை திறந்து விடச் செய்வதற்கு எதியூரப்பாவை உடனடியாக சம்மதிக்க வைக்க வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்து தேர்தல் முடிவை அடியோடு மாற்றிவிட முடியும் என்ற புகாரை செயல் விளக்கம் மூலம் நிரூபித்துக் காட்ட பாமகவுக்கு ஆகஸ்ட் 27ம் தேதி வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அன்றைய தினம் பாமக சார்பில் தொழில்நுட்ப நிபுணர்களும் சில நடுநிலையாளர்களும் தேர்தல் ஆணையத்தின் முன் இதை நிரூபித்துக் காட்டுவர் என்றார் ராமதாஸ்.

Saturday, August 8, 2009

ஆணையம் அழைப்பு: ஓடி ஒளியவில்லை-ராமதாஸ்

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நேரில் விளக்குமாறு தேர்தல் ஆணையத்தின் விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், நான் ஓடி ஒளியவில்லை என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று கூறும் ஜெயலலிதா, ராமதாஸ் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று டெல்லிக்குச் சென்று அதை நிரூபிக்க ஏன் தயங்குகின்றனர் என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியும், எனவே அது தேவையற்றது என்று முன்னாள் பிரதமர் வி.பி. சிங் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால்தான் 1989 பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தாமல் தள்ளிப் போடப்பட்டது.

இப்போதும் காங்கிரஸ், திமுக தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் எனக் கூறி வருகின்றன. தேர்தல் ஆணையம் இதனை மறுத்து வருகிறது.

மின்னணு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுப்புவோர் தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்துக்கு வந்து செயல்முறை விளக்கம் அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான அழைப்பு பாமகவுக்கும் வந்துள்ளது. அதனை பாமக ஏற்றுக் கொண்டுள்ளது. முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதைப்போல ஓடி ஒளியவில்லை.

வாக்குப் பதிவு எந்திரங்களை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தாமல் தேர்தல் நடைமுறைகள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே பாமகவின் கோரிக்கை. ஏனெனில் தேர்தலின் நேர்மையே இப்போது கேள்விக்குறியாகி உள்ளது.

தேர்தல் பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருந்தத்தக்கது. இது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

தேர்தல் விதிமுறைகளை மீறி ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு சில கோடி ரூபாய்களை செலவு செய்து, அடிப்பதுபோல அடி, நாங்கள் அழுதுவதுபோல அழுது காரியத்தை சாதித்துக் கொள்கிறோம் என்று சூழ்ச்சியில் ஈடுபட்டு ரூ. 100 முதல் ரூ. 500 வரை பணம் கொடுத்துதான் வெற்றிபெற முடிந்தது என்ற உண்மையாக வாக்களித்தவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும், அவர்களை வாழ்த்தியவர்களுக்கும் தெரியும் என்று ஒரு தேர்தல் தோல்விக்குப் பிறகு அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த கருணாநிதி கூறியுள்ளார்.

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது குற்றம்சாட்டிய கருணாநிதி, இப்போது, தேர்தல் ஆணையம் அரசியல் கட்சி சாராத அமைப்பு என்று உபதேசம் செய்கிறார்.

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை நன்றாக ஆய்வு செய்து பணபலம் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைகளுக்கும் தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இது எதிர்க்கட்சிகளின் பிரச்சனை, நமக்கு இல்லை என்று ஆட்சியில் உள்ளவர்கள் நினைக்கக் கூடாது. நாளை அவர்கள் எதிர்க்கட்சியாக மாறும்போது தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்த முடியாமல் போகும். இதனை உணர்ந்து தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்க வேண்டும். இதற்கான முயற்சிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்

தெற்கு ரயில்வேயைப் பிரிக்க கேரள அதிகாரிகள் முயற்சி - ராமதாஸ்

ஈரோடு: தெற்கு ரயில்வேயைப் பிரித்து, கேரளாவுக்கென்று தனியாக ஒரு ரயில்வேயை உருவாக்க கேரளாவைச் சேர்ந்த மத்திய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இதை தமிழகம் தடுத்து நிறுத்தாவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இதில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழகத்திற்கு இரட்டை ஆபத்து...

தமிழகம் விரைவில் இரட்டை ஆபத்துகளை எதிர்நோக்கி இருக்கிறது.

தெற்கு ரயில்வேயை இரண்டாக பிரித்து கேரளாவுக்கு என்று தனியாக ஒரு ரயில்வே அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் ரகசியமாக நடந்து வருகிறது.

தற்போது கேரளாவை சேர்ந்தவர்கள் டெல்லியின் செல்வாக்கு மிகுந்த அதிகாரிகளாக பதவி வகித்து வருகின்றனர். மத்திய ரயில்வே இணை அமைச்சராக கேரளாவை சேர்ந்த அகமது பொறுப்பேற்று இருக்கிறார். இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி தெற்கு ரயில்வேயை பிரித்து தனியாக ரயில்வேயை தொடங்க ரகசிய திட்டம் போட்டு உள்ளனர்.

தெற்கு ரயில்வேயையே இரண்டாக பிரிக்கும் திட்டம் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் உள்ளது. இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் திமுக வெற்றி பெற வேண்டும்.

அடுத்து பெரியாறு அணை பிரச்சினை. முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டியே தீருவோம் என்று கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சரும், கேரள எம்பிக்களும் டெல்லியில் முகாமிட்டு மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர்.

அதன்பேரில் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து நேரில் வந்து ஆய்வு செய்கிறேன் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்து இருப்பதாக கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேம்சந்திரன் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

பவன்குமார் பன்சாலுக்கு முல்லைப் பெரியாறு அணையில் என்ன வேலை? அவர் பொறியியல் வல்லுநரா? இல்லை நீரியல் வல்லுநரா?.

தமிழக முதல்வர் மத்திய அரசை அறிவுறுத்தி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் ஆபத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டப்படும் என்ற அறிவிப்புதான் வரும் என்றார் ராமதாஸ்.

ஓணம்: சென்னை- திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள்:

இந் நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், கண்ணூர், மங்களூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அடுத்த மாதம் 2ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை-கண்ணூர், கண்ணூர்-சென்னை, சென்னை -மங்களூர், மங்களூர்- சென்னை, சென்னை-திருவனந்தபுரம், திருவனந்தபுரம்-செனனை இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

சென்னையில் 'ஓணம்' விடுமுறை:

இந் நிலையில் ஓணம்' பண்டிகையையொட்டி சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்றும், அதற்கு பதிலாக செப்டம்பர் 12ம் தேதி (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்

Friday, August 7, 2009

18ம் தேதி பெரிய 'தமாஷ்' நடக்க போகுது-ராமதாஸ்

தர்மபுரி: 18ம் தேதி நடக்கப் போகும் இடைத் தேர்தல் மிகப் பெரிய தமாஷ் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

தர்மபுரியில் ஒருங்கிணைந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தேர்தல் நடைமுறை என்பது அண்மை காலமாக கேலிக்கூத்தாகிவிட்டது. இவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அவர்களை கைப்பற்றி வாக்குகளை பெறுகிறார்கள்.

தேர்தல் கமிஷன் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளது. வருகிற இடைத் தேர்தல்கள் கேலி கூத்து வருகிற 18-ந் தேதி ஒரு தமாஷ் நடக்கப்போகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட் டங்களில் உள்ள நிலத்தடி நீரில் புளோரைடு அதிகமாக உள்ளது. இதனால் பாதுகாப்பான குடிநீர் வழங்க கோரி பா.ம.க. பல போராட்டங்களை நடத்தி உள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 2008-ல் பிப்ரவரி மாதம் 26-ந் தேதி தமிழக முதல்வர் கலைஞர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆனால் ஏப்ரல் 5-ந் தேதி திட்டப்பணிகளை நிறுத்தி வைக்குமாறு அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இதுவரை அந்த திட்டம் தொடங்குவதற்கான எந்த அறிவிப்பும் வெளிவர வில்லை. இந்த நிலையில் இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.

உச்சநீதிமன்றம் சென்றால் 50 ஆண்டு காலம் ஆனாலும் கூட முடிவுக்கு வராது.

காவிரி நதிநீர் பங்கீடு திட்டம் 1974-ல் புதுப்பித்து இருக்க வேண்டும். அப்போது இருந்த தி.மு.க. அரசு அதை புதுப்பிக்கவில்லை. இதற்கிடையில் கர்நாடக அரசு பல அணைகளை கட்டி விட்டது. அதற்கு அவர்கள் திட்டமில்லா செலவுகளுக்கான நிதியில் இருந்து அணைகளை கட்டி முடித்துள்ளனர்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 1998-லேயே மத்தியஅரசு தடை இல்லா சான்று வழங்கி உள்ளது. அதே சமயம் பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் மேகதாது குடிநீர் திட்டத்திற்கும் தடை இல்லா சான்று வழங்கியது. ஆனால் கர்நாடக அரசு பெங்களூர் குடிநீர் திட்டத்தை வேகமாக நிறை வேற்றிவிட்டது.

நாம் 11 ஆண்டுகள் ஆகியும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறை வேற்றவில்லை. கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டு உள்ளனர். அதிகாரிகள் மாற்றத்திற்கு காரணம் இந்த திட்டம் தாமதம் ஆகவேண்டும் என்பதே ஆகும் என்றார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: