Wednesday, June 24, 2009

'வணங்காமண்': சட்டசபையில் பாமக வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டசபையிலிருந்து பாமக எம்எல்ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபை இன்று காலை கூடியதும் அதிமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து தாங்கள் கொடுத்திருந்த பல்வேறு தீர்மானங்கள் மீது பேச அனுமதி கேட்டனர்.

ஆனால், இன்று கேள்வி நேரம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால், நேரமில்லா நேரத்தையும் (ஜீரோ அவர்) எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறி பேச அனுமதி மறுத்தார் சபாநாயகர் ஆவுடையப்பன்.

இதையடுத்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 சட்ட திருத்தத் மசோதாக்களை தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்து முடித்ததும் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி எழுந்து, இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட வணங்காமண் நிவாரணப் கப்பலை அந் நாட்டு அரசு விரட்டியடித்தது குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேச முயன்றார்.

ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பாமக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளியே வந்த ஜி.கே.மணி நிருபர்களிடம் பேசுகையில்,

இலங்கை தமிழர்களுக்கு உதவ ஐரோப்பிய தமிழர்கள் 844 டன் அளவுக்கு உணவுப் பொருள், மருந்துகளை வணங்காமண் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இலங்கை அதை திருப்பி அனுப்பி விட்டது. கடந்த 10 நாட்களாக அந்தகப்பல் எங்கே செல்வதென தெரியாமல் சென்னை அருகே நடுக்கடலில் நின்றது. இதில் தமிழக அரசும் மத்திய அரசும் முறையான அக்கறை செலுத்தவில்லை.

அந்த கப்பலில் உள்ள பொருட்களை இலங்கை தமிழர்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.

இலங்கையில் போர் முடிந்து விட்டதாக அந்த நாட்டு அதிபர் கூறி இருக்கிறார். அங்கு எஞ்சியுள்ள தமிழர்களை பசி, பட்டிணியாக சாகடிக்க திட்டமிடுகிறார்களா?.

இது குறித்து சட்டசபை யில் விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும், ஒத்தி வைப்பு தீர்மானமும் கொடுத்து ஒரு வாரம் ஆகி விட்டது. இதை இன்னும் விவாதத்துக்கு எடுக்க வில்லை. இதனால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

இதற்கிடையே சென்னை கடல் எல்லையில் இருந்து விரட்டப்பட்ட அந்தக் கப்பல் இப்போது சர்வதேச கடல் எல்லையில் நின்று கொண்டுள்ளது.

Thursday, June 11, 2009

தமிழன் எங்கே இருக்கிறான்...ராமதாஸ்

சென்னை: தேர்தல் நேரத்தில் பூத் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். பூத் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கண்டுபிடித்தவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சென்னை மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசுகையில்,

தேர்தலில் நாம் வெற்றி பெறவில்லை என்ற வருத்தம் தேவையில்லை. ஆனாலும் இது நமக்கு ஒருபடிப்பினை ஆகும். இனி வரும் காலங்களிலே நாம் எப்படி எல்லாம் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். நமது கட்சி எப்படி அமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்பது பற்றி நான் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பேசிவருகிறேன்.

அடுத்த தேர்தலில் ஒரு ரூபாய் கூட கட்சி செலவு செய்யாது. வேட்பாளரும் செலவு செய்யமாட்டார். இது கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. ஆனால் இது நடக்கப் போகிறது. நடந்து ஆகவேண்டும்.

செருப்பால் அடிக்க வேண்டும்...

தேர்தல் நேரத்தில் பூத் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். பூத் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கண்டுபிடித்தவனை செருப்பால் அடிக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் எந்த சுவரிலும் தேர்தல் விளம்பரம் செய்யக்கூடாது. தமிழ்நாட்டிலும் இதுபோல கொண்டுவர வேண்டும்.

பாமகவில் இளைஞர் அணியினருக்கு என்று தனி உறுப்பினர் அட்டை போட்டு இருக்கிறோம். ஒரு வட்டத்திற்கு 10 இளைஞர்களையும், 5 இளம் பெண்களையும் சேர்க்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது விலை போகாத ஏஜெண்டுகளை நாம் உருவாக்க வேண்டும்.

கொடியில்லாமல் வராதீர்கள்..

சென்னையில் அடிக்கடி போராட்டம் நடைபெறும். இந்த போராட்டங்களில் நான் கலந்து கொள்வேன். அப்போது 500 இளைஞர்கள் கொடியுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். கொடியில்லாமல் யாரும் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது.

ஏ.கே.மூர்த்தி கொடியில்லாமல் வந்தால் கூட அவரை கொடியோடு வாருங்கள் என்று சொல்ல வேண்டும்.

பல்லாவரம் கவுன்சிலர் போல் இருங்கள்...

சென்னை பல்லாவரத்தில் வேணு என்ற கவுன்சிலர் மூன்று முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவர் வீடுவீடாக சென்று ஏதாவது பிரச்சினையா என்று கேட்டு அந்த பிரச்சினையை தீர்த்து வைக்கிறார். இது போன்ற முறையில் செயல்பட்டால் நாம் மேயராக கூட வரலாம்.

சென்னையில் 155 வட்டத்திலும் யார் மன்ற உறுப்பினராக வரப்போகிறோம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இவ்வாறு முடிவு செய்து உங்கள் வேலையை தொடங்குங்கள். அந்த பகுதியில் உள்ள மக்களின் குறைகளை எடுத்துச் சொல்லுங்கள்.

மக்கள் பிரச்சனையை கையில் எடுங்கள்...

அந்த பகுதியில் உள்ள குப்பைகளை வாரத்திற்கு ஒரு முறை அப்புறப்படுத்துங்கள். மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து செயல்படுங்கள். தூக்கணாம் குருவி அற்புதமாக கூட்டை கட்டும்போது நம்மால் ஏன் கட்சியின் கிளைக் கழகங்களில் இளைஞர்களை உருவாக்க முடியாது. நடந்து முடிந்த தேர்தலில் நாம் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளோம்.

10 நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை நான் சென்னை வரும்போது எல்லாம் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். அந்த பொதுக்கூட்டத்தில் ஒவ்வொரு தலைப்பிலும் பேசுகிறேன். முதல்வர் கருணாநிதி இப்போது மாநில சுயாட்சி என்று சொல்லி இருக்கிறார். இது பற்றி நான் பொதுக்கூட்டத்தில் விரிவாக பேசுகிறேன் என்றார் ராமதாஸ்.

தமிழன் எங்கே இருக்கிறான்...

இந் நிலையில் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் 'ஈழ தமிழின அழிப்பில் ஈடுபட்ட, துணை நின்ற இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ராமதாஸ் பேசுகையில்,

ஈழத் தமிழர்களுக்காக பல போராட்டங்களை, பேரணிகளை, உண்ணாவிரதங்களை நடத்தினோம். ஆனால், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. நமது கண் முன்னாலே தமிழினம் அழிக்கப்பட்டது.

தமிழகத்தின் கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு இலங்கை தமிழர் பிரச்சனை என்றால் என்ன என்பது கூட தெரியவில்லை. யாருக்கும் தமிழன் என்ற உணர்வு இல்லாமல் போய்விட்டது. தமிழன், தமிழச்சி எங்கே இருக்கிறார்கள்? .

சினிமா தியோட்டர்களிலும், பார்களிலும் வாழ்க்கையை அழித்து வரும் இளைஞர்களுக்கு எப்படி தமிழ் உணர்வுகளை ஊட்ட போகிறோம். இந்த கொடுமைக்கு எப்போது முடிவு கட்ட போகிறோம்?.

தமிழீழம் மலரும். ஒரு காலத்திற்கு மேல் உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை சாத்தியமாக்குவது குறித்து ஒரு நாள் முழுவதும் உட்கார்ந்து பேசுவோம். தமிழ் ஆர்வலர்களை அழைத்து அவர்களுடன் ஆலோசனை செய்வோம் என்றார்

Wednesday, June 10, 2009

ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் கருணாநிதியுமே காரணம் ‐ ராமதாஸ்

சேலத்தில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உறையாற்றிய ராமதாஸ், இலங்கையில் கடைசி சில நாட்கள் நடந்த போரில் இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட இந்திய அரசும் கருணாநிதியுமே காரணம்.


பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது உலகமே அதற்காக வருந்தியது, கண்டித்தது ஆனால் இந்தியா மௌனமாக இருந்ததோடு பல் வேறு இராணுவ உதவிகளையும் செய்தது. ஆனால் கருணாநிதி இதைத் தட்டிக்கேட்கவில்லை. மாறாக நாடகம் மேல் நாடகமாக நடத்தி தமிழர்கள் காதில் பூ சுற்றிக் கொண்டிருந்தார்.

சமீபத்தில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கூறினார். ஆனால் கிருஷ்ணாவை இலங்கை அரசு கடுமையாக கண்டித்தது. அது குறித்தும் இந்தியா வாய்திறக்க மறுக்கிறது. இனி மேலும் இதை பொறுத்துக் கொள்ள முடியாது.

போர் நடந்து கொண்டிருந்த போது, தமிழகம் கொந்தளித்த போது கருணாநிதி ஈழ மக்கள் தொடர்பாக மத்திய அரசிடம் என்ன பேசினார் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் ராமதாஸ் தெரிவித்தார். இந்நிலையில் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்க இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை சார்பில் கலந்துரையாடல் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

Tuesday, June 9, 2009

சீக்கியர்களுக்கு ஒரு நியாயம் தமிழர்களுக்கு ஒரு நியாயமமா?

பெற்ற தாயாக நினைத்து காங்கிரஸை தமிழர்கள் நேசிக்கின்றனர். ஆனால் மாற்றான் தாயாக தமிழர்களை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது. தமிழக மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்” என்று ஆவேசமாய்ச் சொல்கிறார் தமிழருவி மணியன்.

”ஈழத் தமிழர்களுக்கு எதிரான வேலையை 1948லேயே காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது. அப்போது அங்கு தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்-பட்டபோது, `இலங்கை உள்நாட்டு பிரச்னையில் இந்தியா தலையிடாது’ என்று நேரு ஒதுங்கிக் கொண்டார்.


ஸ்ரீமாவோவின் ஆட்சியில் தமிழர்கள் இன்னல்பட்டபோது அப்போதைய இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோவுடன் ஒப்பந்தம் செய்த லால்பகதூர் சாஸ்திரி இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வழி செய்தார்.

ஈழத் தமிழர்களுக்காக இந்திராகாந்தி அக்கறை காட்டியதும், ராஜீவ்காந்தி நடவடிக்கை எடுக்க முனைந்ததும் மறுக்கமுடியாத உண்மைகள். இந்திராகாந்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக புலிகளை ஆதரித்தது உண்மை. ராஜீவ்காந்தி புலிகளை வற்புறுத்தி ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனேவுடன் உருவாக்கினார்.

அந்த ஒப்பந்தம் இலங்கை அரசிற்கும் ஈழத் தமிழருக்கும் இடையில்தான் நடந்து இருக்கவேண்டும். அதிலேயும் தவறு.போனவையெல்லாம் போகட்டும். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, ஐந்து மாதங்கள் தமிழ் இனத்தையே முற்றாக ஒழிப்பது என ராஜபக்ஷே அரசு தன் ராணுவத்தைக் கொண்டு ஒரு ஈவு இரக்கமற்ற போரை நடத்தியபோது மன்மோகன்சிங்கின் இந்திய அரசு அதற்குத் துணை நின்றது. இது எந்த வகையில் நியாயம்?

விடுதலைப்புலிகளுக்காகவோ, பிரபாகரனுக் காகவோ இந்திய அரசு போராடியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு சர்வதேச போர் விதிகளும் மீறப்பட்டு, அரக்கத்தனமாக ஈழத்தமிழர்களை முற்றாக அழிக்க ராஜபக்ஷே முனைந்தபோது சோனியா காந்தியோ மன்மோகன்சிங்கோ ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசவில்லை.

ராஜபக்ஷேவுடன் தொடர்பு கொண்டு போரை நிறுத்த வழி செய்யவில்லை.ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள உகாண்டாவில் வணிகம் செய்யச் சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை நடந்த அடுத்த கணமே இந்திய அரசு துடித்தது.

பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிஸில் வாழும் சீக்கியர்கள் தலைப்பாகைகள் அணியக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மன்மோகன்சிங் அந்த ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.இன்று வியன்னாவில் சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் விளைவாக செய்தி வந்து சேர்ந்த அந்தக் கணமே பஞ்சாப் எரியத் தொடங்கியது.

ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்கள் போராட்டக் களமாக மாறின. உடனே பிரதமர் மன்மோகன்சிங் அமைதி காக்க வேண்டுமென்று சீக்கியர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கிறார். புதிதாக அயல்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாக ஆஸ்திரியாவிலிருக்கும் இந்தியத் தூதரகத்தோடு தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை நடத்துகிறார்.

வியன்னாவில் ஒரு உயிர் பறிக்கப்பட்டது. 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அதற்கே மத்திய அரசு துடிதுடிக்கிறது. ஆனால் தமிழகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இலங்கைத் தீவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உறுப்பு இழந்தார்கள். உறவு இழந்தார்கள். ஈழப்பகுதியே மயானம் ஆகிவிட்டது.

எங்கும் தமிழர்களின் பிணக்குவியல். திசையெல்லாம் தமிழர்களின் மரண ஓலம்.ஐக்கிய நாடுகளுடைய செயலாளர் `பான் கீ மூன்’ நேரில் சென்று இலங்கை நிலவரங்களைக் கண்டு நெஞ்சம் துடித்தார். இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இன்றி மரணத்தோடு போராடுகிற நிலையையும், வன்னிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதையும் கருத்தில் கொண்டு

இலங்கை அரசு போர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் மனித உரிமை அமைப்பின் சிறப்பு விவாதத்தில் கொண்டு வரவேண்டுமென்று பிரிட்டனும், டென்மார்க்கும் செயல்பட்டன. இந்த சிறப்பு விவாதத்தைத் தடுப்பதற்காக சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும், கியூபாவும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்கிறது இந்தியா. என்ன அநியாயம்?

நமது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காமல், ராஜபக்ஷே அரசுக்குத் துதி பாடுகிறது காங்கிரஸ் அரசு. மனித உரிமை சபையில் சிறப்பு விவாதம் நடக்க வேண்டுமென்றால் 16 நாடுகளின் ஆதரவு தேவை. இந்த ஆதரவைத் திரட்டுவதற்கு சோனியாகாந்திக்கும், மன்மோகன்சிங்கிற்கும் மனசாட்சி ஒன்று இருந்தால் காங்கிரஸ்காரர்களுக்கு தமிழ் இனத்தின் மீது பற்றும் பாசமும் இருந்திருந்தால் இந்த ஆதரவை இந்தியா முன்னின்று திரட்டியிருக்கவேண்டும்.

ஆனால் எங்கேயோ இருக்கும் டென்மார்க் தன் சொந்த முயற்சியால் பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டி சிறப்பு விவாதம் நடப்பதற்கு வழிவகுத்து இருக்கிறது. இதைத் தடுக்க இந்தியா எல்லா வகையிலும் பாகிஸ்தானோடு சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயல்படுகிறது

பெண்களுக்கான இட ஒதுக்கீடு:டாக்டர் ராமதாஸ்

கிருஷ்ணகிரி: பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வரவேண்டும். இந்த விஷயத்தில் சரத் யாதவ், முலாயம் சிங், லாலு ஆகியோர் கூறுவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கையை சேர்ந்த ஆறுமுக தொண்டைமான் மற்றும் சிவலிங்கம் ஆகிய எம்பிக்கள் திமுக எம்பி கனிமொழியை சந்தித்து, இலங்கை பிரச்னை குறித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்த இருவரும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக பாடுபட்டவர்கள் அல்ல. இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியில் இவர்கள் அமைச்சர்களாக இருப்பர். விரைவில் இலங்கையில் தேர்தல் வர இருப்பதால் இவர்கள் நாடகம் ஆட ஆரம்பித்துள்ளனர்.

அதே போல உள்துறை அமைச்சர் சிதம்பரம் , முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த இருவரும் தேர்தல் நேரத்தில், இலங்கையில் சண்டையை நிறுத்திவிட்டோம் என்று கூறி நாடகமாடியதை தமிழக மக்கள் மறக்கவில்லை.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து கொள்வது குறித்து கருத்து தெரிவித்ததற்கு, இலங்கை ராணுவத்துறை செயலாளரும் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோதபய, இலங்கை விஷயத்தில் தலையிட நீ யார் என்று இந்தியாவை கேள்வி கேட்டுள்ளார். ராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை குப்பையில் தூக்கி எறிவோம் என்றும் கூறியிருக்கிறார்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வரவேண்டும். இந்த விஷயத்தில் சரத் யாதவ், முலாயம் சிங், லாலு ஆகியோர் கூறுவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். உள் ஒதுக்கீடு இல்லாமல் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற கூடாது.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வரும் 10ம் தேதி சென்னையில் கூடி முடிவெடுக்கவுள்ளோம். தற்போது, இந்த இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை.

தேர்தலில் தோற்று விட்டதாக பாமகவை திமுகவினர் ஏளனம் செய்கின்றனர். லோக்சபா தேர்தல் வெற்றி உண்மையானதல்ல. அது பணம் கொடுத்தும், மோசடி வேலை செய்து பெற்ற வெற்றி. வரும் 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்.

தேர்தலில் வெற்றி-தோல்வி சகஜம். கடந்த 1977ம் ஆண்டு முதல் 95ம் ஆண்டு வரை 7 தேர்தல்கள் நடைபெற்றன. அதில் 5 தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்துள்ளது. இரண்டு தேர்தலில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது.

பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். அவர் உரிய நேரத்தில் வெளியே வருவார் என்றார் ராமதாஸ்.

பணமில்லாமல் தேர்தலை சந்தி்க்க..

பின்னர் தர்மபுரி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,

நடந்து முடிந்த தேர்தலில் திமுக பண பலத்தால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து முதல்வர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் கூறுகையில் பாமகவை போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோற்கடித்து விட்டோம் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பணத்தை அள்ளி வீசி ஓட்டை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெற்றுள்ளனர்.

பணத்தால் சாதித்தது மட்டுமல்லாமல் சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் திட்டமிட்டு சில தில்லு முல்லுகளை செய்து வெற்றி பெற்றுள்ளனர்.

இனி வரும் காலங்களில் பணமில்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டுமானால் இப்போதே இளைஞர்களை தயார்படுத்த வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் மகளிர் கல்லூரி தொடங்கப்படும். அதற்கான இடம் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே 15 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

மேலும் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் கோனேரி குப்பத்தில் கல்விக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் என்ஜினீயரிங், சட்டம், விஷூவல் கம்யூனிகேசன் போன்ற பாடப் பிரிவுகள் கொண்டுவரப்பட உள்ளன.

அதில் தங்களது குழந்தைகளை சேர்த்து பயன் பெறலாம். விடுதி முதல் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்றார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: